Sunday, January 8, 2017

இதயத்தை காக்கும் மீன் எண்ணெய்

இன்று மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன மீன் எண்ணெய் மாத்திரைகள். இவற்றை பெரியவர், சிறியவர் என அனைவரும் எடுத்துக்கொள்கின்றனர். என்ன பலன் கிடைக்கிறது எனத் தெரியாவிட்டாலும், `உடலுக்கு நல்லது' என்ற பொதுவான அபிப்பிராயத்தில் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள்தான் அதிகம். 

  அந்தக் காலத்தில் வடக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த மக்கள், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், அதிகப்படியான குளிரைத் தாங்கிக்கொள்ளவும் மீன் எண்ணெயைப் பயன்படுத்தினர்.  இன்று உலகம் முழுவதும் இந்த மீன் எண்ணெய் மாத்திரை உட்கொள்வது ஆரோக்கியம் சார்ந்த விஷயமாகப் பார்க்கப்படுகிறது. மீன் எண்ணெய் மாத்திரை என்றால் என்ன, எதற்கு உட்கொள்ள வேண்டும், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் யார் வேண்டுமானாலும் உட்கொள்ளலாமா?

"மீன் எண்ணெய் மாத்திரை என்றால் என்ன?"

"நம் உடலுக்கு மிகவும் அவசியமான, அதேநேரம் இயற்கையாக எளிதில் கிடைக்காத பல வகைச் சத்துக்கள், திமிங்கலம் போன்ற மிகப்பெரிய மீன்களில் இருக்கின்றன. இந்த மீன்களை நம்மால் சமைத்துச் சாப்பிட முடியாது. இந்த மீன்களின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், பல கட்ட சுத்திகரிப்புக்குப் பிறகு, கேப்ஸ்யூல்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. 'காட் லிவர் ஆயில்' (Cod liver oil) என்ற பெயரில் மீன் எண்ணெய் மாத்திரைகள் அனைத்து மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்."

"மீன் எண்ணெயில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?"

"ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் டி மற்றும் ஏ உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் மீன் எண்ணெயில் நிறைவாக உள்ளன. இது உடலுக்குத் தேவையான நல்ல கொலஸ்ட்ரால். இ.பி.ஏ மற்றும் டி.ஹெச்.ஏ எனப்படும் அமிலங்களும் இந்த மீன் எண்ணெயில் உள்ளன. மீன் வகைகளை எப்போதும்போல உணவில் சேர்த்துக் கொண்டாலும், இந்தச் சத்துக்கள் உடலில் சேரும். சொல்லப்போனால் இ.பி.ஏ மற்றும் டி.ஹெச்.ஏ போன்ற சத்து அமிலங்கள் மீன் எண்ணெயைவிட மீன்களை நேரடியாக உண்ணும்போது உடலில் அதிகமாகச் சேரும் என்கின்றன ஆய்வுகள். ஆயினும், மீன் எண்ணெய் பல கட்டங்களாகப் பதப்படுத்தப்பட்ட பிறகு மாத்திரைகளில் கிடைப்பதால், இதய நோய், மூட்டு வலி போன்ற பிரச்னை கொண்டவர்களுக்கு உணவோடு கூடிய சத்து மாத்திரையாகப் பரிந்துரைக்கபடுகிறது."

"மீன் எண்ணெய் மாத்திரைகளை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாமா?"

"சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் அவசியம் மருத்துவர்களின் பரிந்துரைக்குப் பின்தான் இந்த மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மீன்கள் சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படுபவர்கள், இந்த மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது. 


ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்துத்தான் இந்த மாத்திரைகளை தினமும் உட்கொள்ளலாமா அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளலாமா என்று முடிவெடுக்க முடியும். எனவே, மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தொடங்கும் முன், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. அதோடு, என்னதான் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டாலும் இறைச்சி, சமைக்கப்பட்ட மீன், பச்சைக் காய்கறிகள், பால், பழங்கள் என உண்டு இயற்கையாகக் கிடைக்கும் சத்துக்களே என்றைக்கும் உடலுக்கு நல்லது. அதனால், உங்கள் உடலின் சத்துத் தேவைக்கு மீன் எண்ணெய் மாத்திரைகளை மட்டுமே முழுக்க முழுக்க நம்பி இருக்க வேண்டாம்."

"மீன் எண்ணெய் மாத்திரைக்குப் பதிலாக வேறு மாற்று இல்லையா?"


``மீன் எண்ணெய் மாத்திரைகளில் கிடைக்கும் நல்ல கொழுப்பை, ஃபிளக்ஸ் சீட், பாதாம், வெண்ணெய், சோயாபீன்ஸ் உட்கொள்வதன் மூலமும் பெறலாம்.''



மீன் எண்ணெய் மாத்திரையின் பயன்கள் 

மீன் எண்ணெயை உட்கொள்வதன் மூலம் மூட்டு வலி, மறதி நோயான அல்சைமர், கண் நோய்களைக் கட்டுப்படுத்துவதோடு இதயத்துக்குப் பாதிப்புகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். 

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். மாரடைப்பு ஏற்பட்டவர்களும் மீன் எண்ணெயால் பயன் பெறலாம். 

இதய ரத்தக் குழாய்களில் மாறுதல் ஏற்படுத்தும் டிரைகிளிசரைட்ஸ், மற்றும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

சருமப் பாதுகாப்புக்கும் மீன் எண்ணெய் முக்கியமானது. காயங்களை விரைவில் ஆற்றும்.

மேலும், எப்போதும் டென்ஷன், மனஅழுத்தம் எனப் படபடப்பாகவே இருப்பவர்களையும் இந்த மீன் எண்ணெயில் உள்ள சத்துக்கள் அமைதிப்படுத்தும். 

மனநிலை பாதிப்பு மற்றும் உளவியல்ரீதியான  பிரச்னை கொண்டவர்களுக்கு, மீன் எண்ணெயில் உள்ள சத்துக்கள் பக்கவிளைவுகள் இல்லாமல் நிவாரணம் தரவல்லவை.

அலுவலகம் செல்வோருக்கான 5 பயிற்சிகள்!


அலுவலகத்தில், ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் இருக்கையிலேயே அமர்ந்து வேலை செய்கின்றோம். சிலர் மதிய உணவுக்காககூட இருக்கையை விட்டு எழுவது இல்லை. இதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பல. ஆரோக்கியம் காக்கும் ஐந்து எளிய வழிகள் இங்கே...

20-40 இன்ச் இடைவெளி

கம்ப்யூட்டர் திரையில் இருந்து 20-40 இன்ச் தொலைவில் அமர்வது நல்லது. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கம்ப்யூட்டர் திரையில் இருந்து பார்வையை எடுத்து, 20 விநாடிகள் கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டும்.

5-10 விநாடிகள்

கைகளை  தலைக்கு மேல் கோத்து, நன்கு உயர்த்தவும். இதனால் கைகள், தோள்பட்டை வலுவாகும்.

30 விநாடிகள்

எழுந்து நின்று பின்புற இடுப்பில் கையைவைத்து, உடலை முன்னை வளைத்து ஸ்ட்ரெச் செய்யவும். இதனால் மேற்புற உடல் வலுவாகும்.

5-10 விநாடிகள்

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தலையை இடது, வலது புறமாகவும், மேலும், கீழுமாகவும் ஸ்ட்ரெச் செய்ய வேண்டும். இதனால் கழுத்து எலும்புகள் காக்கப்படும்.

40-60 விநாடிகள்

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, சூரிய வெளிச்சத்தையோ, மரத்தையோ பார்க்கலாம்.

கவனமிருக்கட்டும்! ஒபாமா உங்களைக் கண்காணிக்கலாம்..!

கணினி

ஆண்டிப்பட்டியில் இருக்கும் அந்தோணி என்கிற விவசாயி பற்றி அமெரிக்க ஜனாதிபதிக்குத் தெரிந்திருக்க... அந்தோணி, அவரிடம் அறிமுகம் ஆகியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தபட்சம் அந்தோணியின் கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். ஆனால், அந்தோணியைப் பற்றி அமெரிக்க அதிபர் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? இதே கேள்விதான், அந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஏஜென்சியின் எட்வார்ட் ஸ்னோடன் பில்லியன் கணக்கிலான அமெரிக்கர்களை, அவர்களது செல்போன் வழியாக ஏஜென்சி கண்காணித்தது என்கிற செய்தியை வெளியட்டபோதும் எழுந்தது. அமெரிக்காவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிஸான் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது கஸ்டமர்கள் பற்றிய தகவல்களைத் தேசியப் பாதுகாப்பு ஏஜென்சியிடம் பகிர்ந்துவந்தது, எட்வர்ட் ஸ்னோடன் வழியாக அம்பலமானது. இது மட்டுமல்லாமல், அந்த ஏஜென்சி... பல்வேறு வகைகளில் பொதுமக்களின் சமூகத் தொடர்புகள் மற்றும் 122 நாட்டுத் தலைவர்களின் தொடர்புகளையும் கண்காணித்து வந்ததும் தெரியவந்தது.

1987 தொடங்கி தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் பல்வேறு ரகசிய ஆவணங்களைத் தொடர்ந்து ஹேக் செய்துவந்த ஜூலியன் அசான்ஜே, பின்னாளில் விக்கிலீக்ஸ் என்னும் நிறுவனத்தைத் தொடங்கி, 2015 வரை 10 மில்லியன் ரகசிய ஆவணங்களை வெளியிட்டார். அவரைப் பொறுத்தவரையில், அவை அத்தனையுமே உலகின் அடி ஆழத்தில் பதுக்கிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள். ஆப்கான் போர், அமெரிக்காவின் நாசா, இந்தியப் பிரதமர் மோடி என அவர் முக்கியப் புள்ளிகள் பற்றியும் முக்கியச் சம்பவங்கள் பற்றியும் இன்றளவும் தனது விக்கிலீக்ஸ் தளத்தில் தொடர்ந்து தகவல்களை மாபெரும் நூலகம்போலச் சேமித்து வருகிறார்.

சமீபத்தில் பத்திரிகையாளர் சுவாதி சதுர்வேதி எழுதி வெளியான, 'I am a troll' புத்தகத்தில் 2014 மக்களவைத் தேர்தல் சமயங்களில் தற்போது மத்தியில் இருக்கும் அரசு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற எந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்பதை விவரிக்கிறார். பி.ஜே.பி. கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மோடிக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் பேசுபவர்களையும் செயல்படுபவர்களையும் எப்படிச் சமூக வலைதளங்களின் வழியாக ஒரு பெருங்குழுவாக இயங்கித் தாக்கினார்கள் என்பதை அந்தப் புத்தகம் கூறுகிறது. தாக்குதலுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் முக்கியப் புள்ளிகள். பர்காதத், அமீர்கான், ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் அவர்களில் அடக்கம். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே நிகழ்த்திய இந்த சைபர் க்ரைமினை அந்தக் கட்சியின் முன்னாள் தொண்டர் ஒருவரே இந்தப் புத்தகத்தின் ஒரு பகுதியில் ஒப்புதல் வாக்குமூலமாகக் கூறி இருக்கிறார். 

கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் அதன் செயற்பாட்டாளர் எஸ்.பி.உதயகுமார் மீது... அவர், 'ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து பணம் பெற்றுக்கொண்டு நாட்டுக்கு எதிராக வேண்டுமென்றே செயல்படுகிறார்' என்பது போன்ற குற்றச்சாட்டுகளை காவல் துறையினரும்... அவருக்கு எதிரானவர்களும் முன்வைத்தார்கள். உதயகுமாரின் மின்னஞ்சலை அந்தச் சமயத்தில் நிபுணர்கள் ஹேக் செய்திருந்தார்கள். 

கணினி

சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவரது ஃபேஸ்புக் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டது. போலீஸ், அவரது ஃபேஸ்புக் டேட்டாவைத் தரவிறக்கிவிட்டு முற்றிலுமாக அவரது அக்கவுன்டை அழித்தது. எலெக்ட்ரானிக் மீடியாக்கள் சூழ் உலகத்தில் நம்மையும் நம் சுயத்தையும் பாதுகாத்துக்கொண்டு அன்றாட வாழ்வை நகர்த்திச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நொடிக்கு ஒருமுறை ஃபேஸ்புக்கில் சர்ஃப் செய்வதும் வாட்ஸ் அப்பில் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் செய்துகொள்வதும் யாரோ ஒருவரால் நிச்சயம் கண்காணிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. நாம் கணினியின் முன்பு அமர்ந்திருந்தால் மறுமுனையிலிருந்து நம்மை லட்சம் கண்கள் நாமே அறியாமல் உற்றுநோக்குகின்றன என்பதே நிதர்சனம்.  ''உங்களுடைய லேப்டாப்பில் இருக்கும் முன்பக்க கேமராவை ஆன் செய்யாவிட்டாலும், ஒரு டேப் போட்டு மறைத்துவைத்திருங்கள்'' என்று அறிவுறுத்துகிறார் தமிழ்நாடு ஃப்ரீ சாஃப்ட்வேர் குழுமத்தைச் சேர்ந்த யோகேஷ். 

''மொபைலின் சிம் கார்டு, மெமரி கார்டு, கேமரா, மைக்ரோபோன் அதேபோல மடிக்கணினியின் கேமரா, மைக்ரோபோன் உள்ளிட்டவை நம்மைக் கண்காணிக்க நேரடியாக உபயோகப்படுத்தப்படும் மீடியம்கள். இது தவிர்த்து, நம்முடைய இன்னும் தனிப்பட்ட பெர்சனல் பக்கங்களைத் திருடி எடுக்க குறைந்தபட்சம் நமது பெயரே போதுமானதாக இருக்கிறது. நாம் உபயோகிக்கும் மொபைல்கள் பெரும்பாலும் பாதுகாப்பு மேம்படுத்தப்படாத சி.டி.எம்.ஏ மற்றும் ஜி.எஸ்.எம் மாடல் வகையறாக்கள். அதில். நாம் பேசுவதை எளிதில் ஒட்டுக்கேட்டுவிட முடியும். அதைவிட, ஆபத்தானவை நம்மிடம் இருக்கும் ஆண்ட்ராய்டு வகையறா ஸ்மார்ட்போன்கள். கூகுளின் மெயில், ட்ரைவ், முகநூல், ட்விட்டர் தொடங்கி அத்தனையும் அதிலேயே ஒருங்கிணைத்து இருப்பதால் நம்மைப் பற்றித் தகவல் அறிய ஹேக் செய்வது இன்னும் எளிது. அதனால் நமது ஸ்மார்ட்போன்களை என்க்ரிப்ட் செய்வது அவசியம். வாட்ஸ் அப் போன்ற தகவல் பரிமாற்றத் தளங்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்டது என்று கூறப்பட்டாலும் அது நம்பகத்தன்மையுடைய தகவல் இல்லை. அதற்குப் பதிலாக SIGNAL போன்ற தகவல் பரிமாற்ற மென்பொருள் சாதனங்களை உபயோகிக்கலாம்'' என்று அறிவுறுத்துகிறார் யோகேஷ். 

''நம் கணினிகளுக்கு WINDOWS இயங்குதளத்தை உபயோகிக்கக் கூடாது'' என்பதுதான் யோகேஷ் கூறும் முதன்மையான் அறிவுரை. Linux போன்ற பாதுகாப்புக் கட்டமைப்புள்ள ஆபரேடிங் சிஸ்டம் உபயோகிக்கப் பரிந்துரைக்கிறார். 

அண்மையில் பிரபல ஊடகவியலாளர் பர்காதத்தின் மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டது நினைவில் இருக்கலாம். ஜெயலலிதாவின் இறப்புப் பற்றிய தகவலை, ஹேக் செய்தவர்கள் வெளியிட்டிருந்தார்கள். பிரபல ஊடகவியலாளருக்கே இங்கே இணையத்தில் பாதுகாப்பற்றச் சூழல் என்றால், தனிநபர்களின் பாதுகாப்பு இன்னும் தொடக்கப்புள்ளியில்கூடச் சிந்திக்கப்படவில்லை என்பதே உண்மை. பெரும் ஊடக நிறுவனங்களே தங்களது மின்னஞ்சலைப் பாதுகாக்கத் தவறிவிட்டதா என்கிற கேள்வியும் எழுகிறது. அதே சமயம், ஊடகத்துறை சார்ந்த மற்ற நபர்களும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்கிற எச்சரிக்கை அலாரத்தை அனைவருக்குள்ளும் ஒலிக்கச் செய்கிறது. 15 ஜி.பி-க்கள் வரை நமக்கு இலவசமாகத் தரும் ஜிமெயில் போன்ற மின்னஞ்சல் சேவையை எளிதில் ஹேக் செய்துவிடமுடியும். அதே சமயம், இதுவரை நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்காத 'Tutanote' மற்றும் 'Protonmail' உள்ளிட்டவை எதிராளி ஹேக் செய்ய முடியாதவகையில் பாதுகாப்பானவை. இவற்றை ஹேக் செய்ய எதிராளி முக்கியமாகக் கருதும் ஆயுதம் நமது பாஸ்வோர்டு.

 நாம், நமது கணினிக்கோ அல்லது மின்னஞ்சலுக்கோ தரும் பாஸ்வேர்டு குறைந்தபட்சம் எட்டு எழுத்துருக்களும்... அதிகபட்சம் 10 அல்லது 16 எழுத்துருக்களும் இருக்கும். ஆனால், குறைந்தபட்சம் எவ்வளவு எழுத்துருக்கள் நமது பாஸ்வேர்டுக்கு இருக்க வேண்டும் தெரியுமா? 34 என்றால் ஆச்சர்யப்படுவீர்கள். அதுவும் நமக்குத் தொடர்பில்லாத பெர்சனல் தகவல்கள் இல்லாத பாஸ்வேர்டாக இருப்பது உத்தமம். உங்களுக்குப் பிடித்த பாடல் வரி, புத்தகத்தின் பக்கங்களில் கண்கள் சட்டென நிலைத்துவிடும் ஏதோ ஒரு வரி என எதுவாகவும் இருக்கலாம் அல்லது அவற்றை யோசிப்பது கடினமாக இருக்கிறதா? நமக்கான பாஸ்வேர்டினை, தானே உருவாக்கித் தரும் KeepassX உள்ளிட்ட மென்பொருட்களை உபயோகிக்கலாம்.

தானே பாஸ்வேர்டு உருவாக்குவது மட்டுமில்லாமல், அதனைப் பத்திரப்படுத்தவும் உதவுகிறது இந்த மென்பொருள். அதுபோலவே நாம் அதிகம் பயன்படுத்தும் அத்தனை சாஃப்ட்வேர்களுக்கும் 'நோ' சொல்லிவிட்டுப் பாதுகாப்புக் கட்டமைப்புள்ள, அதிகம் விளம்பரப்படுத்தப்படாத சாஃப்ட்வேர்களைப் பரிந்துரைக்கிறார், யோகேஷ். வீடியோ தொடர்புக்கு ஸ்கைப்புக்குப் பதிலாக மீட் ஜிட் எனப்படும் மென்பொருள்; க்ரோம் அல்லது மொசில்லாவுக்குப் பதிலாக டார்; எலெக்ட்ரானிக் உலகில் நமக்கான பாதுகாப்புக்கான நடமாட்டத்துக்கு இத்தனையையும் பரிந்துரைக்கிறார், அவர். மேலும் விரல் ரேகை, கண் விழி உள்ளிட்டவற்றை பயோமெட்ரிக் பாஸ்வேர்டாக உபயோகிப்பதும் ஒருவகையில் ஆபத்தே. கைவிரல் ரேகை திருடப்பட்டால் நிமிட நேரத்தில் யாரோ ஒருவர், நீங்களாக மாறலாம். 

இவ்வளவும் படித்தபின் நாம் இத்தனை பாதுகாப்பற்றச் சூழலில் இருக்கிறோமோ, என்கிற அதிர்ச்சியும் அயர்ச்சியும் நிச்சயம் உங்களுக்குள் எழலாம். ஆனால், இணையம் சூழ் உலகில் இன்றைய நிலை இதுதான். உங்களின் அந்தரங்கம் தொடங்கி பொதுவெளியில் உங்கள் ஒற்றைக் கண் அசைவைக்கூட இன்டர்நெட் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது. இணையமற்ற உலகம் என்கிற நிலையை ஏற்படுத்திவிட்டால் இதிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைத்தால், அது தவறு. உதாரணத்துக்கு, உங்கள் முகநூல் பக்கத்தை அழித்தால் உங்களது மொத்தக் கணக்குகளும் அழிந்துவிடும் என்கிற அர்த்தமில்லை. உங்களைப் பற்றிய தகவல்கள் முகநூல் அலுவலகத்தின் தகவல் சேமிப்புக் கிடங்கில் அப்படியேதான் இருக்கும். ஒருமுறை நுழைந்துவிட்டால், மீளமுடியாத சக்கரவியூகம்தான் இந்த இணையம். 

அடுத்த முறை புது போன் வாங்குவதற்கு முன்பும்... உங்கள் மடிகணினியைத் திறப்பதற்கு முன்பும் இதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளவும். நீங்களே அறியாமல்... உங்களைக் குற்றவாளி ஆக்கும் வல்லமை இணையத்துக்கு உண்டு.