குழந்தை பிறந்து வளரும்போது, தவழ்வது, நடப்பது பேசுவது என ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் இவ்வுலகில் வாழ உதவுகின்ற பல்வேறு திறன்களையும் அது கற்றுக்கொள்கிறது. இத்திறன்பாடுகள் 'வளர் மைல்கற்கள் (Developmental Milestones)' என மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது. குழந்தைகள் வளரும்போது கற்கும் பல்வேறு திறன்களைப் பற்றி கூறுகிறார், உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.
வளர் மைல்கற்கள் திறன்களை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம்.
* மொத்த இயக்கத் திறன்கள் (உட்கார்வது, தவழ்வது, ஓடுவது...)
* நேர்த்தியான இயக்கத் திறன்கள் (கைகளைக் கொண்டு சாப்பிடுவது, வரைவது...)
* சமூகத் திறன்கள் (சிரிப்பது, பாசம் காட்டுவது, குடும்ப நபர்களுடன் உறவாடுவது, உணர்ச்சிகளை வெளிக்காட்டுவது மற்றும் புரிந்துகொள்வது...)
* பேச்சு/மொழித் திறன்கள் (வார்த்தைகளை உபயோகப்படுத்துவது, சைகை செய்வது, மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வது...)
* அறிவுத் திறன்கள் (பகுத்தறிவு, நினைவாற்றல், சிந்தனை மேம்பாடு...)
மைல்கற்களுக்குரிய மாற்றங்கள், வளர்ச்சியை அந்தந்த வயதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எதிர்பார்ப்பார்கள். அதற்கேற்ப பொதுவாக எல்லா குழந்தைகளும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள், மேலே குறிப்பிட்டுள்ள திறன்களைக் கற்றுக்கொண்டு வளர்ச்சியடைவார்கள்.
சில குழந்தைகள் தாமதமாக மைல்கற்களை அடையலாம், அல்லது அடையாமலேயே போகும் வாய்ப்பும் உள்ளது. சில குழந்தைகளுக்கு குறிப்பிட்ட ஒரு திறன் வளர்ச்சியில் மட்டும் தாமதம் ஏற்படலாம்; அல்லது பல திறன்பாடுகளிலும் ஒருசேரத் தாமதம் ஏற்படலாம்.
உதாரணத்துக்கு, பேச்சு/மொழித் திறனில் தாமதம் ஏற்பட்டால், கூடவே, அறிவு மற்றும் சமூகத் திறன்களிலும் தாமதம் ஏற்படலாம். குழந்தை வளர்ச்சியில் ஏற்படும் இவ்வித தாமதம், பல்வேறு நரம்பியல் வளர்ச்சி சார்ந்த (Neuro Developmental Disorders) பிரச்னைகளுக்கான அறிகுறிகளாக இருக்கலாம். அவை, கற்றல் குறைபாடு (Learning Disorders), அறிவுத்திறன் குறைபாடு (Intellectual Disability), இயக்கத்திறன் குறைபாடு (Motor Disorders), பேச்சுத்திறன் குறைபாடு (Communications Disorder), ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு (Autism Spectrum disorders) என பல்வேறு வகைப்படும்.
எனவே, தங்கள் குழந்தையின் வளர்ச்சியில் தாமதம் தெரிந்தாலோ அல்லது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டாலோ, குழந்தை நல மருத்துவரையோ உளவியல் நிபுணரையோ ஆலோசிக்க வேண்டியது அவசியம். அவர்கள் குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சையைப் பரிந்துரை செய்வதன் மூலம் அக்குழந்தை பயனடைய முடியும்.
வளர்ச்சியில் தாமதம் ஏன் ஏற்படுகிறது?
பொதுவாக, கீழ்வரும் காரணங்களால் குழந்தையின் வளர்ச்சியில் தாமதம் ஏற்படுகிறது (முதல் இரண்டு காரணங்கள் பிரதானமானவை).
* மரபணு
* மரபணு அல்லது குரோமோசோம் குறைபாடுகள் (டவுன்ஸ் சிண்ட்ரோம்/ஃப்ரஜில் 'X' சிண்ட்ரோம்)
* சுற்றுச்சூழல்
* குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது, அல்லது பிறந்தவுடன் அது எதிர்கொள்ள நேரிடும், தீங்கு விளைவிக்கும் நச்சு பொருட்களின் தாக்குதல் (Lead poisoning)
* நரம்பு மண்டல நோய்த்தொற்று
* குறைப்பிரசவம்
* கர்ப்பகால சிக்கல்கள்
* கடுமையான வறுமை
* மோசமான ஊட்டச்சத்து
* அக்கறையின்மை
ஏன் வேண்டும் ஆரம்பகால சிகிச்சை (Early Intervention)?
குழந்தையின் 3 வயதுக்குள் இப்படிப்பட்ட நரம்பியல் வளர்ச்சி சார்ந்த (Neuro Developmental Disorders) குறைபாடுகளைக் கண்டறிவதன் மூலம், அக்குழந்தை தகுந்த சிகிச்சை பெற்று நலம் பெறும் வாய்ப்பு அதிகரிக்கிறது. குழந்தைகளின் தன்மைக்கேற்ப, அவர்களுக்கு பேச்சு சிகிச்சை (speech therapy), தொழில்சார் சிகிச்சை (occupational therapy), உடல் மற்றும் நடத்தை சிகிச்சை (physical and behavioral therapy) அளிக்கப்படுகிறது.
ஆட்டிஸம், ஏ.டஹெச்.டி (Attention Deficit Hyperactive Disorder - ADHD), அறிவுத்திறன் குறைபாடு (Intellectual Disability) போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பல குழந்தைகளுக்கு, சிறு வயதில் வளர்ச்சியில் தாமத அறிகுறிகள் (Developmental delay) இருந்திருக்கும். ஆனால், அதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்கப்படாததால், அக்குழந்தையின் வளர்ச்சியில் முன்னேற்றம் இல்லாமலேயே போகும் வாய்ப்பு உண்டாகியிருக்கும்.
அதே நேரம், ஆரம்ப நிலையிலேயே இவ்வித சிகிச்சைகள் கொடுக்கப்படும்போது, பாதிக்கப்பட்ட குழந்தை தன்னுடைய அதிகபட்ச செயல்பாட்டை அடைந்து வீட்டில் மற்றும் சமூகத்தில் ஒன்றிவாழ முடியும். மேலும், குழந்தையின் குடும்பத்துக்கும் அந்த சிகிச்சை ஆதரவு மற்றும் வழிகாட்டுதலை வழங்கும். ஒவ்வொரு குழந்தையின் இயல்பும் பிரச்னையின் தன்மைக்கேற்ப வேறுபடும். சிலர் யாருடைய உதவியும் இன்றி செயல்படலாம், சிலர் ஓரளவு உதவியுடன் வாழலாம், இன்னும் சிலருக்கு அதிகபட்ச உதவி தேவைப்படலாம். மொத்தத்தில், ஆரம்ப கால சிகிச்சை குழந்தையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
வளர் மைல்கற்கள்: குழந்தையிடம் ஒரு வயது முதல் இரண்டு வயது வரை எதிர்ப்பார்க்கக் கூடிய வளர்ச்சி நிலைகள் இங்கே...
18 மாதங்கள்:
* பொருட்களை தள்ள, இழுக்க விரும்பும்.
* குறைந்தபட்சம் 6 வார்த்தைகளைச் சொல்லும்.
* பிறர் சொல்லும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றும்.
* ஷு, சாக்ஸ், கையுறைகளைப் பிடித்து இழுக்கத் தெரியும்.
* விலங்கு, பறவைகள் என பெயரைச் சொன்னால், புத்தகத்தில் அதற்குரிய படத்தைச் சுட்டிக்காட்டும்.
* தானே உண்ணும்.
* க்ரையான்ஸை (crayons) வைத்து காகிதத்தில் கோடு போடும்.
* உதவியின்றி நடக்கும்.
* பின்னோக்கி நடக்கும்.
* தனக்கு வேண்டிய விஷயத்தை சுட்டிக்காட்டிக் கேட்கும் மற்றும் வார்த்தைகளைப் பயன்படுத்தி தனக்கு வேண்டிய விஷயத்தை கேட்க முயற்சி செய்யும்.
2 வயது:
* இரண்டு வார்த்தைகள் அடங்கிய சொற்றொடர்களை உருவாக்கி, பயன்படுத்தும்.
* அதிக வார்த்தைகளைப் பேசும்.
* பழக்கப்பட்ட படங்களை அடையாளம் கண்டுகொள்ளும்.
* பந்தை முன்னோக்கி உதைக்கும்.
* ஸ்பூபோனை (spoon) உபயோகித்து ஒரளவிற்கு தானே உண்ணும்.
* மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க அதிகம் முயற்சிக்கும்.
* புத்தகத்தை வைத்து விளையாடும்போது அதிலுள்ள பக்கங்களைத் (இரண்டு/மூன்றாக) திருப்பும்.
* உடம்பின் நடுப்பகுதியை (கண், காது, மூக்கு, வயிறு) சுட்டிக் காட்டி அடையாளம் கண்டுகொள்ளும்.
* பாசத்தை வெளிப்படுத்தும்.
இந்த இயல்பான நடவடிக்கைகளில் இரண்டு, மூன்று மாதங்கள் தாமதம் நேரலாம். ஆனால், இயல்புக்கு மீறிய தாமதம் அல்லது முடக்கம் இருந்தால், மருத்துவ ஆலோசனை அவசியம்!"