Sunday, December 11, 2016

உங்கள் மருத்துவரிடம் இந்தக் கேள்விகள் எல்லாம் கேட்டிருக்கிறீர்களா?


மருத்துவர்களுக்கும் மக்களுக்குமான பிணைப்பு இந்தியாவில் இன்னும் குறைவாகவே இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் மருத்துவர்களும், மக்களும் சகஜமாக பழகுவதில்லை.  மருத்துவர்களைப் பார்த்து பயப்படுவதும், தெய்வமாகப் பார்ப்பதும் இந்தியாவில் காலங்காலமாக  நடந்து கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் எந்தவொரு சந்தேகத்தையும் மருத்துவர்களிடம் நேரடியாகக் கேட்பது கிடையாது. அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் போது கூட சிலர் எந்த கேள்வியும் கேட்பதில்லை 

பல இடங்களில்  கூட்டம் காரணமாக மக்களிடம், மருத்துவர்களும் விரிவாக அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் பற்றிப் பேசுவது கிடையாது. சில இடங்களில் மக்களை அசட்டைச் செய்து, அவர்களின் எந்தக் கேள்விக்கும் சில மருத்துவர்கள் ஒழுங்காகப் பதில் சொல்லாமல் இருப்பதும் நடக்கத் தான் செய்கிறது. இந்தியாவில் இன்னமும் மக்கள் தொகைக்கு ஏற்ப  மருத்துவர்களின் எண்ணிக்கை கிடையாது என்பதால், அதிக வேலைப்பளு காரணமாகவும் சில சமயங்களில் மருத்துவர்களால் மக்களிடம் விரிவாகப் பேசமுடிவது இல்லை.

 இதனால் மருத்துவம் பற்றிய புரிதல் மக்களுக்கு இருப்பதில்லை, மருத்துவம் பற்றிய முழுமையான தகவல்களை தெரியாத நண்பர்களின் அனுபவங்களையும், கட்டுக்கதைகளையும் நம்பிக்குழம்பிவிடுகின்றனர். 

அறுவை சிகிச்சை

நீங்கள் எப்போது மருத்துவமனைக்குச் சென்றாலும், உங்களுக்கு எப்படிப்பட்ட நோய் இருந்தாலும், உங்குடைய சந்தேகங்கள் அனைத்தையும் மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு சிகிச்சை எடுப்பது தான் சிறந்தது. கைராசியான மருத்துவர், நன்றாக சர்ஜரி செய்யும் மருத்துவர் என்பதற்காக அவரிடம் சந்தேகங்களை கேட்டுத் தெளிவுபெறாமல் அரைகுறையாக அறுவை சிகிச்சைப்  செய்வதற்கு ஓகே சொல்லிவிட்டு பின்னர் வருத்தப்படக்கூடாது. 

 மருத்துவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்  என்பதற்காகத் தேவையற்ற கேள்விகளையோ, இணையத்தில் படித்துவிட்டு அதிமேதாவித்தனமான கேள்விகளை, அவர்களை பரிசோதிப்பது போன்ற  தொனியிலோ கேட்க வேண்டாம். மருத்துவரிடம் கன்சல்டிங் செய்யும் போது உங்களின் நியாயமான  சந்தேகங்களை  தெளிவாக கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்.

மருத்துவர்களிடம் சர்ஜரி செய்து கொள்வதற்கு முன்பாக கேட்க வேண்டிய எட்டுக்  கேள்விகள்  பற்றிப் பார்ப்போம். 

1. ஏன் எனக்கு சர்ஜரி செய்ய வேண்டும் ? 

மூட்டு மாற்று அறுவை சிகிச்சையோ, கண்களுக்கான  கண்புரை அறுவை சிகிச்சையோ , உடலின்  எந்வொரு பகுதி பாதிக்கப்பட்டாலும் சர்ஜரி தேவைப்படுகிறது எனில், மருத்துவர்களிடம் ஏன் எனக்கு சர்ஜரிசெய்தே ஆக வேண்டும்?  எப்போது செய்து கொள்ள வேண்டும்?  உடனே செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருப்பின் அதற்கான அவசியம் என்ன என்பதைக்  கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். 

2. எப்படி சர்ஜரி செய்யப்படுகிறது ? 

நாளுக்கு நாள் தொழில்நுட்பம் முன்னேறி வரும் சூழ்நிலையில்சர்ஜரி முறையிலும் பல மாற்றங்கள் வந்துவிட்டன. வயிற்றைப் பெரியளவில் கிழித்துச் செய்யப்படும் சர்ஜரி தற்போது பெரும்பாலான இடங்களில் மாறிவிட்டது. மினிமலி இன்வெசிவ் எனச் சொல்லப்படும் சிறு துளை சர்ஜரி, லேசர், எண்டோஸ்கோப்பி என பல்வேறு விதமான முறைகள் உள்ளது. இதில் எந்த முறையிலான அறுவை சிகிச்சையை  மருத்துவர் உங்களுக்குச் செய்யப்போகிறார் என கேட்டுத் தெளிவுபெறுங்கள். குறிப்பிட்ட முறையில் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபரின் அனுபவங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கும், உங்களது வசதிக்கும், மருத்துவர் வசதிக்கும் ஏற்ற முறை எது என பேசித் தெரிந்துகொள்ளுங்கள்.

3. மாற்றுச்  சிகிச்சை இருக்கிறதா? 

இந்தியாவில் மருத்துவ சிகிச்சைகளுக்கு பஞ்சமே கிடையாது, அல்லோபதி, ஹோமியோபதி.நேச்சுரோபதி, சித்தா, ஆயுர்வேதா, அக்கு எனப்படும்  தொடுவழி சிகிச்சை  எனப் பல சிகிச்சை முறைகள் உள்ளது. அறுவை சிகிச்சை செய்து கொள்ள நினைப்பவர்கள், மாற்று மருத்துவத்தில் குறிப்பிட்ட நோய்களுக்கு ஏதேனும் தீர்வு இருக்கிறதா, அது உங்களின்  தற்போதைய உடலின் சூழ்நிலைக்கு சரியாக இருக்குமா என உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெளிவுபெருங்கள்.

 சர்ஜரிக்கு பதில் மாத்திரை,மருந்துகள், வாழ்வியல் முறை மாற்றம் போன்றவற்றால் அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியுமா? அல்லது சர்ஜரியை குறிப்பிட்ட காலம் தள்ளிப் போட முடியுமா? அப்படித் தள்ளிப் போட்டால் என்னென்ன விளைவுகள் நடக்கும்? அது நல்லதா இல்லையா? என்பதையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். 

4. சர்ஜரியின் பலன், ரிஸ்க், பக்கவிளைவுகள்  என்னென்ன? 

சர்ஜரி செய்வதால் உடலுக்கு  என்னென்ன பலன்கள் கிடைக்கும். சர்ஜரி செய்து கொண்டால் அதற்குப் பின்  மீண்டும் தொல்லை எதாவது வருமா? சர்ஜரிக்கு பின்னர் முழுமையாக மீண்டு விட முடியுமா?, அறுவை சிகிச்சை செய்து கொள்வதால் என்ன பக்கவிளைவுகள் வரும், அதனை எப்படிக் கையாளுவது?  அறுவை சிகிச்சை நிரந்த தீர்வு தருமா, தற்காலிக தீர்வா  போன்றவற்றைத்  தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள் .

5.  சர்ஜரிக்கு  முன்னர் என்ன மாதிரியான விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்? 

ஒவ்வொரு விதமான சர்ஜரிக்கு முன்பும் நோயாளிகள் அன்றைய தினமோ, அதற்கு முந்தைய வாரமோ சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதிகள் உண்டு.  உதாரணமாக வயிறு பகுதியில் செய்யப்படும் சர்ஜரிக்கு, சர்ஜரி செய்யும் நாளில் சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். அது போல உங்களுக்கான சர்ஜரிக்கு என்ன மாதிரியான பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும், ஏதேனும் டயட் தேவையா, வாழ்வியல் முறை மாற்றம் தேவையா என்பது போன்றவற்றை கேட்டுத்தெளியவும். 

6. சர்ஜரிக்கு  பிந்தைய நடைமுறைகள் என்ன? 

சர்ஜரி  செய்து கொண்ட பின்னர் எந்த உணவை   உண்ண வேண்டும் என்பதில் ஆரம்பித்து எப்படிச் செயலாற்ற வேண்டும் என்பது வரை பல கட்டுப்பாடுகள் இருக்கும். சர்ஜரி முடிந்து கண் விழித்த பிறகு மருத்துவர் சொல்லும் நடைமுறைகளைக்  கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கேற்ப மன தளவிலும், பொருளாதார அளவிலும் தயாராக வேண்டும். உதாரணமாகப் பல்  சர்ஜரிசெய்யப்பட்டால் அடுத்து சில நாட்களில் குறிப்பிட்ட பொருட்களைச் சாப்பிடக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் இருக்கும்

7.  நீங்கள் எத்தனை சர்ஜரி செய்துள்ளீர்கள் டாக்டர் ? 

 உங்களுக்கு சர்ஜரி செய்யப்போகும் மருத்துவரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது நலம், அந்த மருத்துவரிடம் சென்று  அவர் இதற்கு முன்னர் எத்தனை சர்ஜரி செய்திருக்கிறார் என்பதைக் கேட்டு தெளியவும். உங்களுக்குச் செய்யப்படும் சர்ஜரிமுறையில் அவர் தேர்ந்தவரா, எங்கே பயிற்சி பெற்றிருக்கிறார்? அவனது அனுபவம் என்ன ? என்பது போன்ற சந்தேகங்களைக் கூச்சப்படாமல்  கேட்கவும்.

8. சர்ஜரிக்கு எவ்வளவு செலவாகும்? இன்சுரன்ஸ் கிளைம் கிடைக்குமா?

உங்களுக்குச் செய்யப்படும் சர்ஜரிக்கு  எந்தெந்த காரணங்களுக்காக எவ்வளவு செலவாகும்? ஒட்டுமொத்தமாகத்தோராயமாக எவ்வளவு பில் வரும்?  நீங்கள் இன்சுரன்ஸ் எடுத்திருந்தால் உங்களுக்கு இன்சூரன்சில் கிளைம் கிடைக்குமா?  அதிகபட்சம் எவ்வளவு கிளைம் கிடைக்கும், கிளைம் கிடக்க என்னென்ன செய்ய வேண்டும். இன்சுரன்ஸ் கிளைம் போக மீதி எவ்வளவு பணம் செலவாகும். சர்ஜரி முடிந்த பின்னர் என்னென்ன மாத்திரை, மருந்துகளைச் சாப்பிட வேண்டும் , அம்மருந்துகளுக்கு எவ்வளவு செலவாகும் உள்ளிட்டவற்றைக் கேட்டு தெளிவு பெறுங்கள். சர்ஜரி முடிந்ததற்குப் பிறகு எத்தனை முறை ஃபாலோ அப் வர வேண்டியதிருக்கும் என்பன போன்றவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள். 

குறிப்பு :- 

நோயாளிகளின்  நேர்மையான சந்தேகங்களுக்கு பதில் சொல்ல வேண்டியது மருத்துவர்களின் கடமை. அதை அவர்கள் கனிவோடு அணுக வேண்டும். 

இந்த எட்டு கேள்விகளும்  முன்கூட்டி திட்டமிட்டு செய்யப்படும் சர்ஜரிகளுக்கு மட்டுமே பொருந்தும். விபத்து போன்ற சூழ்நிலைகளில், அவசர அவசிய  சிகிச்சை எடுக்கும் சமயங்களில் இந்தக்  கேள்விகளை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது போன்ற சமயங்களில் உறவினர்கள், நண்பர்கள் , தொடர்புடைய மருத்துவர்களிடம்   சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.