Monday, February 2, 2015

நமக்கு நம் உடலைப் பொறுப்பாக முறையாக இயக்கத் தெரியவில்லை என்பது பெரிய கொடுமை!

சாதாரண களிமண்ணை பொம்மையாக உருவாக்குவதைப் போல, ஒன்றும் தெரியாதவர்களுக்கும் எப்படியாவது எடுத்துச் சொல்லிப் புரியவைத்து, அவர்களை நேர்வழிப்படுத்திவிடலாம்! ஆனால், அரைகுறையாகத் தெரிந்து வைத்திருப்பவர்கள், எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் ஏற்கமாட்டார்கள்; இவர்கள் தாங்கள் குழம்புவதோடு, மற்றவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்திவிடுவார்கள்.

 நம் நிலையும் இதுதான். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதேதோ தெரிந்து வைத்திருக்கிறோம். புதிதாக ஏதேனும் நல்லதைப் படித்தாலோ கேட்டாலோ, ஏற்கெனவே தெரிந்து வைத்திருப்பதை இதனுடன் கலந்து, மேலும் குழப்பத்தில் ஆழ்வோம். சுவையான பாயசத்தில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பைப் போட்டுக் கலக்கி அருந்திவிட்டுப் பாயசம் சரியில்லை எனக் குறை சொல்வது என்ன நியாயம்?

இப்படித்தான்... 'நம் உடலே எல்லாம். உடலைத் தவிர வேறு எதுவும் இல்லை' என்ற எண்ணம் கொண்டு, குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் சீடனுக்கு குரு உபதேசம் செய்யத் தொடங்கினார்.

''சீடனே! உடலைத் தவிர வேறு எதுவும் (அந்த உடம்பை சரீரத்தைத் தாங்கும் சரீரி) இல்லை என்கிறாய். அப்படியென்றால், தூங்கும்போது கனவு கண்டவன் யார்? 'ஆழ்ந்து தூங்கினேன்' என்கிறாயே. அது யார்? விழிப்பு நிலையில் இருப்பது யார்?'' என்று கேட்டார்.

சீடன் யோசித்தான். தினமும் விழிப்பு நிலையில் பார்த்ததும், கனவு கண்டதும், ஆழ்ந்த உறக்க நிலையில் அனுபவித்ததுமாக உணரும்போது... சரீரத்துக்குள்ளே 'சரீரி', அதாவது தேகத்துக்குள்ளே 'தேகி' என்றொருவன் இருக்கிறான் என்பது ஏதோ புரிந்தாற்போல இருந்தது. இன்னும் தெளிவு பெற வேண்டி, ''ஸ்வாமி, தேகி என்பதன் உண்மை நிலையை விளக்குங்கள்'' என்று வேண்டினான் சீடன்.

அந்தச் சீடன் வேறு யாருமல்ல... நாம்தான்!

உடல் என்பது அனைவருக்குமே மிக முக்கியமானது. ஒவ்வொரு பொருளின் உபயோகத்தையும் தெரிந்துகொள்ளும் நாம், அவற்றைச் சக்கையாகிற வரை அனுபவிப்பது வழக்கம். அதைப் போல அருமையான, அபூர்வமான பொருளான நம் உடலின் உபயோகத்தைத் தெரிந்துகொண்டு, அதைச் சக்கையாகப் பிழிந்து வேலை வாங்குகிறோம்.

ஒரு பொருளின் பயன் முடிந்துவிட்டால், அல்லது சீர் செய்ய முடியாதபடி பழுதடைந்துவிட்டால், அதை பழைய சாமான்கள் வாங்கும் கடையில் போட்டு, கொஞ்சம் காசு பார்ப்போம். ஆனால், சீர் செய்ய முடியாதபடி நம் உடம்பு பழுதடைந்துவிட்டால், அதை இனாமாக வாங்கக்கூட யாரும் முன்வரமாட்டார்கள்.

கடுமையான, விவேகமில்லாத செயல்பாடு களின் காரணமாக இளம் வயதிலேயே நமது உடம்பும் அதன் பாகங்களும் பலமிழந்து விடுகின்றன. 400 ரூபாய் கொடுத்து வாங்கும் 'பென் ட்ரைவ்,' 30 ரூபாய்க்குக் கிடைக்கும் 'கார்ட் ரீடர்' போன்றவற்றை எல்லாம் பொறுப்பாக, முறையாக இயக்கத் தெரிந்த நமக்கு, விலைமதிப்பில்லாத நம் உடலைப் பொறுப்பாகவும் முறையாகவும் இயக்கத் தெரியவில்லை என்பது எத்தனை பெரிய கொடுமை!

கண், காது, மூக்கு, வாய், மனது, அறிவு, உடம்பு என அனைத்திலும், மேலும் மேலும் போட்டுத் திணிக்கிறோம். 5 கிலோ மட்டுமே பிடிக்கும் பையில் 500 கிலோவைப் போட்டுத் திணித்தால், பை கிழிந்துதான் போகும். அது போலவே, நமக்குள் வேண்டாததையெல்லாம் அளவின்றித் திணித்துக்கொண்டு, ஆற்றமாட்டாமல் அழுது துடிக்கிறோம். இந்த நிலையிலும், 'நல்வழி காட்டும் குருவைத் தேடுவோம்; தெளிவைப் பெறுவோம்' என்ற எண்ணம்கூட இல்லாமல், கண்களை மூடிக் கொண்டு இருட்டு அறையில் துழாவிக் கொண்டிருக்கிறோம். அந்த இருட்டில் ஒரு தீக்குச்சியையாவது கொளுத்தி, ஏதோ ஒரு சிறிய அளவு வெளிச்சத்தையாவது காட்ட முயல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

'உடலே நான்' என்று நினைத்திருந்த சீடன், குருநாதரின் வார்த்தைகளைக் கேட்டு, உடலில் இருக்கும் தேகியின் இயல்பான வடிவத்தை விளக்கி அருளும்படிக் கேட்க, குருநாதர் தொடங்குகிறார்...

இங்கே, கைவல்லிய நவநீதம் ஒரு தகவலை எளிமையாக விவரிக்கிறது. உடலுக்குள் இருக்கும் ஞான வடிவத்தின் நிலையைச் சொல்லத் தொடங்கும் குருநாதர், சடமான உடம்பின் இலக்கணங்களை முதலில் சொல்லி, அதன் பிறகே 'தேகி'யின் இலக்கணம் கூறுகிறார். ஏன் அப்படி?

தெரிந்ததைச் சொல்லித் தெரியாததைப் புரிய வைப்பது என்பது ஒரு வழி. உதாரணமாக, இரவில் ஆகாயத்தில் உலா வரும் மூன்றாம் பிறை 'பளிச்' என்று பார்வைக்குத் தெரியாது. அதை நமக்குக் காட்டுவதற்காக, ''அதோ, அந்த மரத்தின் இந்தப் பக்கத்துக் கிளையின் நுனியில் தெரிகிறது பார், மூன்றாம் பிறை நிலா!'' என்று சொல்லுவார்கள். இதில் 'மரம்' என்பது ஒரு கருவியே தவிர, நோக்கமோ அல்லது முடிந்த முடிவோ அது அல்ல! 'மூன்றாம் பிறை'யே முக்கியம். அதே போல், நட்சத்திரங்கள் அனைத்தையும் காட்டி, ''அதோ! அந்த நட்சத்திரங்களின் வரிசையில் சற்று மங்கலாக ஒளிர்கிறதே, அதுதான் அருந்ததி நட்சத்திரம்!'' எனக் காட்டுவார்கள். அதாவது, தெரிந்ததைக் காட்டித் தெரியாததை உணரச் செய்வார்கள். அதேபோல, ஸ்தூலமாக (நமக்கெல்லாம் நன்கு தெரிந்த) உள்ள உடம்பையும், அதில் உள்ள தத்துவங்களையும் சொல்லி, அணுவுக்குள் அணுவான (தேகியை) காரணத்தைத் தரிசிக்கச் செய்வதற்காகவே குருநாதர் முதலில் உடல் குறித்துச் சொல்லத் தொடங்கினார்.

தாலத்தின் மரங்கள் காட்டித்

தனிப்பிறை காட்டுவார் போல்

ஆலத்தின் உடுக்கள் காட்டி

அருந்ததி காட்டுவார் போல்

தூலத்தை முன்பு காட்டிச்

சூக்கும் சொரூபமான

மூலத்தைப் பின்பு காட்ட

முனிவரர் தொடங்கினாரே.

(கைவல்லிய நவநீதம்  தத்துவ விளக்கப்படலம்: 18)

முதலில் கண்களுக்குத் தெரியும் ஸ்தூலத்தைக் காட்டி, பிறகு சூட்சுமத்தைக் காட்டுகிறார் குருநாதர்.

ஒன்றை வேறொன்றாக, கற்பனையாக நினைப்பது பந்தத்தைக் கொடுக்கும். அனைத்தையும் படைத்த ஒன்றான, ஞானப்பிரகாசமாக விளங்கும் பரப்பிரம்மத்தை உணர்ந்தால், அது முக்தியைக் கொடுக்கும். இருட்டு வேளையில் கயிறு, பாம்பாகத் தோன்றும்; மரக்கட்டை குழந்தையாகத் தோன்றும். பகலில் கானல், நீராகத் தோன்றும்.

நார் ஊடு பணியாத் தோன்றல்

நரனாகத் தறியில் தோன்றல்

நீர் ஊடு கானல் தோன்றல்

(கைவல்லிய நவநீதம்20)

இந்த மூன்றை மட்டும் ஆத்மார்த்தமாக உணர்ந்து, மனதில் பதிய வைத்துக் கொண்டால், பிரச்னைகளே இருக்காதே!

இருட்டு விலகிவிட்டால் அல்லது ஒரு விளக்கைக் கொண்டு வந்து பார்த்தால், அது பாம்பு அல்ல, கயிறு என்பது தெரியும்; பயம் நீங்கும். அது போல, அறியாமை என்னும் இருள் நம்மை மூடியிருக்கிறது. ஒவ்வொன்றையும் வேறொன்றாக நினைத்துக் கொண்டு, பதறியடித்துப் பயந்துகொண்டிருக்கிறோம்.

இருட்டு வேளையில், அதாவது அறியாமை இருள் சூழ்ந்திருக்கும்போது இப்படியென்றால், பகல் வேளையில்..?!

அது இன்னும் சுவாரஸ்யம்!