Tuesday, December 31, 2013

ஹோண்டாவோட பிரம்மாண்டமான வளர்ச்சி - அயராத தன்னம்பிக்கை, உழைப்பு, பாஸிடிவ் திங்கிங்

ஸோய்சிரோ ஹோண்டா (Soichiro Honda)

1906 நவம்பர் 17ல் ஜப்பானில் சைக்கிள் ரிப்பேர் செய்யும் தந்தைக்கும், நெசவாளியான தாய்க்கும் பிறந்த சோய்சிரோ ஹோண்டோவின் இளமைப் பருவத்தில் குறிப்பிடும்படி ஒன்றுமில்லீங்க. இளைஞன் ஹோண்டா வசதிக்குறைவாக இருந்தாலும் என்னைப் போல மிகத் திறமைசாலியாக இருந்தாருங்கோ. (ஹி... ஹி...) தன் 15வது வயதிலேயே படிப்பை நிறுத்திட்டு... (அவரா எங்க நிறுத்தினாரு? அது மண்டைல ஏறாததால விட்டுட்டாரு) வேலை தேடி டோக்கியோ வந்தாரு.

ஒரு காரேஜில் மெக்கானிக்காகச் சேர்ந்து தொழில் கத்துக்கிட்டாரு. காங்கிரசும் கோ்ஷ்டிப் பூசலும் மாதிரி எதையும் ஆராய்ஞ்சு பாக்கறது அவரோட இணைஞ்ச தனிக்குணம். மோட்டார் பைக்குகளை அக்கக்கா பிரிச்சு மறுபடி சேர்க்கற அளவுக்கு தொழில் கத்துக்கிட்டாரு. அங்க ஆறு வருஷம் வேலை பாத்தாரு. அப்புறமென்ன...  தனிக்கட்சி ஆரம்பிக்க... ச்சே... தனியா ஆட்டோமோபைல் ஆரம்பிக்கணும்னு அங்கருந்து விலகினாரு. ஆறு வருஷம் கழிச்சு தன் 22வது வயதில் 1928-ம் ஆண்டு தனியாக ஆட்டோமொபைல் காரேஜ் வைத்து நடத்த ஆரம்பிச்சுட்டாரு.

ஹோண்டா தனக்கிருந்த ஆராய்ச்சி அறிவின் காரணமாக, ஒரு பிஸ்டனைக் கண்டுபிடிச்சிருந்தாருங்க. அதை கார்கள்ல பொருத்தினா வேகமாக இயங்க உதவுவதுடன், எரிபொருள் சேமிப்புக்கும் உதவுவதை டெஸ்ட் பண்ணிப் பாத்து தெரிஞ்சுக்கிட்டாரு. அதை டொயோட்டோ கம்பெனியில் வித்துரணும்னு விரும்பி அணுகினார். மிகப்பெரிய நிறுவனமான டொயோட்டோவின் இன்ஜினியர் குழுவைச் சந்தித்து தன் பிஸ்டனைப் பற்றி விளக்க முயற்சி பண்ணினாரு.

அந்த இன்ஜினியருங்க எல்லாம் இவர் சொல்றதை காது கொடுத்துக் கேக்கவே தயாராயில்லை. சிலர் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. சிலர் உஷாரா விழாம சேரைப் புடிச்சுக்கிட்டு உக்காந்துட்டு சிரிச்சாங்க. அப்புறம், ''போய் புள்ளைகுட்டிங்களைப் படிக்க வைய்யா...'' என்று அவரை அவமானப்படுத்தி விரட்டினாங்க.

தன் முயற்சியில சற்றும் மனம் தளராத.... விக்கிரமாதித்தனில்லை, ஹோண்டா மீண்டும் மீண்டும் டொயோட்டாவின் மீது படையெடுத்தாருங்க. ஒரு வாரமில்ல... ஒரு மாசமில்ல... ஒரு வருஷம்! கடைசில இன்ஜினியர் குழு இவர் சொல்றதுக்கு காது குடுத்தது (வேற என்னத்தப் பண்ண? இவர் தொல்லை விட்டா சரின்னுதான்...). இவர் பொறுமையா தன் பிஸ்டனோட சிறப்பம்சங்களை விளக்கி டெமோ காட்டவும் அசந்துட்டாங்க. மேலிடத்துல பேசி, அவருக்கு பிஸ்டன் தயாரிச்சுத் தர்ற கான்ட்ராக்ட் தந்தாங்க.

இங்கதாங்க ஆரம்பிக்குது ‌ஹோண்டாவின் வியக்க வைக்கும் 'விஸ்வரூப'க் கதை! பிஸ்டன்கள் தயாரிக்கறதுக்காக ஒரு ஃபாக்டரியை நிர்மாணிக்க ஆரம்பிச்சாரு ஹோண்டா. ஃபாக்டரி முக்கால்வாசி கட்டப்பட்ட நிலையில தானா இரண்டாம் உலகப் போர் ஏற்படணும்? அதுல ஜப்பான் மீது வீசப்பட்ட பல குண்டுகள்ல ஒண்ணு சரியா இவர் ஃபாக்டரி மேலயா விழுந்து வைக்கணும்? முற்றிலுமாக அழிஞ்சு போனது ஃபாக்டரி. ஹோண்டா கொஞ்சம் அப்செட்டானாருங்க...

ஆனாலும் மனம் தளராம மறுபடி பணம் திரட்டி, ஃபாக்டரியை மீண்டும் நிர்மாணிக்க ஆரம்பிச்சாரு. இந்த முறை ஃபாக்டரி முழுமையாக உருவெடுத்து, இன்னும் ரெண்டு நாள்ல உற்பத்திய ஆரம்பிச்சுடலாம்னு இருக்கற சூழ்நிலையில வந்துச்சுங்க அடுத்த சோதனை. ஜ்ப்பானுக்கு அடிக்கடி விருந்தாளியா வந்து பாடாப் படுத்தற நிலநடுக்கம் ஏற்பட, ஹோண்டாவோட ஃபாக்டரி முழுவதுமா இடிஞ்சு விழுந்துடுச்சு.

அடுத்தடுத்து இப்படி மெகா சோதனைகளை சந்திச்சிருந்தா நாமளாயிருந்தா, 'கடவுளே நீ இல்ல. ஆனா இருந்தா நல்லாயிருக்கும்'னு கடவுளைத் திட்டியிருப்போம். இல்லாட்டி, மனசு உடைஞ்சு போயி, பாருக்கோ, டாஸ்மாக்குக்கோ ஓடியிருப்போம். அங்கதான் நிக்கிறாரு ஹோண்டா. மனசைத் தேத்திக்கிட்டு, தன் நண்பர்கள், தெரிந்தவர்களிடமெல்லாமிருந்து பணம் திரட்டி, தன்கிட்ட இருந்த சொற்ப சொத்துக்களையும் வித்து மீண்டும் ஃபாக்டரியை எழுப்பினாரு. இவ்வளவுக்கப்புறம் இவரை இயற்கை சோதிக்கலை. இந்த முறை ஃபாக்டரி முழுசா தயாராச்சு.

உற்பத்தி ஆரம்பிச்சு, டொயோட்டோ கம்பெனிக்கு பிஸ்டன்கள் சப்ளை பண்ண ஆரம்பிச்சாரு. சில காலம் கழிச்சு தன் கம்பெனியை 450,000 யென்னுக்கு டொயோட்டோ நிறுவனத்து கிட்டயே வித்துட்டாருங்க. அந்தப் பணத்தை வெச்சு 1946-ல ‌'ஹோண்டா டெக்னிகல் ரிஸர்ச் இன்ஸ்டிட்யூட்'ங்கற நிறுவனத்தை ஏற்படுத்தினாரு. அதன் பின்னர் 1948ம் ஆண்டுல 'ஹோண்டா மோட்டார் கம்பெனி' தயாரிச்ச மோட்டார் பைக்குகள் விற்பனைக்கு வந்தன.

அப்புறமென்னங்க... அண்ணாமலை ரஜினி அப்படியே லிஃப்டில ஏறுற நேரத்துல வாழ்க்கைல மேல ஏறுவாரே... அதுமாதிரி தாங்க... அதுக்கப்புறம் ஹோண்டாவோட பிரம்மாண்டமான வளர்ச்சி நிறுத்த முடியாததாயிடுச்சு. ஒரு கட்டத்துல டொயோட்டோவையே மிஞ்சி கார் சந்தையில முத்திரை பதிச்சது ஹோண்டா நிறுவனம். இன்னிக்கு இன்டர்நேஷனல் மார்ககெட்டில ஹோண்டா நிறுவனத்தின் கார்களும், பைக்குகளும் என்ன மதிப்பில இருக்குங்கறது உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரிஞ்ச விஷயம். 

1973ம் ஆண்டு ரிடையராகும் வரை ஹோண்டா நிறுவனத்தின் பிரஸிடெண்ட்டா இருந்த அவர், அதன் பி்ன், 'சுப்ரீம் அட்வைஸர்' என்கிற உச்சப் அந்தஸ்துல ஹோண்டா நிறுவனத்துல தொடர்ந்தார். 'PEOPLE' பத்திரிகை 1980ல் அவரை '25 Most Intriguing People of the Year' என்ற பட்டியல்ல முதலிடம் அளிச்சும், 'ஜப்பானியர்களின் ஹென்றிபோர்ட்' என்று புகழ்ந்தும் கெளரவிச்சது. கல்லீரல் செயலிழந்ததன் காரணமா 5, ஆகஸ்ட்1991ல ஹோண்ட காலமானாரு.

போண்டான்னா விரும்பிச் சாப்பிடற நாம எல்லாரும் இந்த ஹோண்டா கிட்ட இருந்து அயராத தன்னம்பிக்கையையும், உழைப்பையும், பாஸிடிவ் திங்கிங்கையும் கைப்பற்றிக்கணும்ங்கறது என்னோட விருப்பம்! நீங்க என்ன நினைக்கறீங்க...?