Wednesday, September 18, 2013

ஆயிரத்தில் ஒருவனுக்குத்தான் நம்பிக்கை இருக்கிறது.

வரவர் பாவங்களால் அவரவர்களும் கஷ்டப்படுகிறார்கள் என்று ஈசன் கூறியதால், மேலும் அதிர்ச்சியானாள் பார்வதிதேவி. ''பாவமா..? அதைப் போக்கத்தான் கங்கையை பாயச் செய்துள்ளீர்களே? அதில்தான் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் நீராடிக்கொண்டு இருக்கிறார்களே! அதில் நீராடினால்தான் பாவமெல்லாம் போய் புண்ணியராகி விடுவரே! அப்படி இருக்க, பாவிகள் எப்படி பூவுலகில் அதிகரிக்க முடியும்? ஒருவேளை... என் சக்களத்தியான கங்கை தன் கடமையைச் சரியாகச் செய்யாமல் எனக்கென்ன என்று கிடக்கிறாளோ?'' என்று கேட்டாள்.

பார்வதிதேவியின் கேள்வியைக் கேட்டு நகைத்தார் சிவபெருமான்.

''இப்படி நீங்கள் சிரிப்பதற்கு என்ன பொருள்..? நுட்பமாய் ஏதோ எனக்குப் புரிய வில்லை என்பதுதானே?'' - பார்வதி மெல்லிய கோபம் தொனிக்கக் கேட்டாள்.

''சக்தி, உனக்கா புரியாது? உனக்கு இதற்கான விடை தெரிந்திருந்தும், தெரியாதது போல என்னிடம் வினவுகிறாய்...'' என்றார் பரமன்.

''விடை எதுவாக இருந்தாலும், அதை நாம் சோதித்தே உணரலாமே?''

''எப்படி சோதித்து உணரலாம் என்கிறாய்?''

''உடனே என்னோடு புறப்படுங்கள் காசியம்பதிக்கு..!''

''உத்தரவு!''

பரமனும் பார்வதியும் அடுத்த நொடியே காசியம்பதியின் கங்கைக் கரையோரம் ஒரு மரத்தடியில், நலிந்த வயோதிகத் தம்பதியராகக் காட்சியளித்தனர். பரமனால் நிற்கக்கூட முடியவில்லை. கட்டைவிரல் நுனியில் நின்று ஆனந்த தாண்டவம் ஆடமுடிந்தவர், ஒரு திருவிளையாடலுக்காகத் தம்மை அப்படி ஆக்கிக்கொண்டுவிட்டார்.

உடம்பெல்லாம் நடுக்கம். வாயிலில் எச்சில் ஒழுக்கு (அதுதான் அமுதம் என்று எத்தனை பேருக்குத் தெரியும்?). அருகில் நின்றிருக்கும் பார்வதியிடமும் நல்ல நடுக்கம். அவர்கள் எதிரில், கங்கை நோக்கிப் போவோரும் வருவோருமாக பலப் பலர். பார்வதி அவர் களைப் பார்த்து ஈனசுரத்தில் கெஞ்சலானாள்...

''புண்ணியவான்களே! சற்று நின்று எனக்கு உதவுங்கள். என் கணவரால் ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியவில்லை. அவரை யாராவது சுமந்துவந்து கங்கைக்கரையில் விட்டுவிடுங்கள். நான் எப்படியாவது நடந்து வந்துவிடுகிறேன். இதனை இலவசமாகச் செய்யவேண்டாம். நான் அதற்குச் சுமைகூலியாக நூறு பொன் தருகிறேன்'' என்றாள்.

நூறு பொன் என்றதும், பலர் வேகமாய் முன்வந்தனர். அப்படி வந்தவர்களிடம் பொன் மூட்டையைக் காட்டியவள், 'உங்களிடம் இன்னொரு முக்கிய விஷயத்தையும் கூற வேண்டும்' என்றாள். தொடர்ந்து, 'இவரை யார் தீண்டினாலும், இவர் செய்த பாவங்கள் அனைத்தும் தீண்டுபவரைச் சேர்ந்துவிடும். இப்படி ஒரு வரத்தை இவர் பெற்றிருக்கிறார். இதை நான் மறைத்துப் பாவம் செய்ய விரும்பவில்லை' என்றாள்.

அதைக் கேட்ட விநாடியே, நெருங்கி வந்தவர்கள் முகங்கள் இருண்டன. 'நீ நூறு பொன் தருவதாகக் கூறும்போதே நினைத்தேன்... இப்படி இடக்கு முடக்காக ஏதாவது இருக்கும் என்று..!' என்றான் ஒருவன்.

'நான் செய்த பாவத்தையே என்னால் சுமக்கமுடியவில்லை இதில், இந்தக் கிழவனின் பாவம் வேறா?' என்று கேட்டு, நடையைக் கட்டினான் இன்னொருவன்.

'இந்தக் கிழவனால் இவ்வளவு தூரம் வர முடிந்தும், கங்கையை அடைய முடியவில்லை என்றால், நிச்சயம் இவன் பெரும் பாவியாகத்தான் இருக்க வேண்டும். ஆளை விடு தாயே..!' என்று ஓட்டம் பிடித்தான் மூன்றாமவன்.

இப்படி ஆளுக்கு ஆள் கேலியும் கிண்டலும் செய்துவிட்டு ஓட்டம் பிடித்தனரே தவிர, ஒருவர்கூட பரமனைச் சுமக்க முன்வரவில்லை.

மாலை வேளை வந்துவிட்டது. இரவு வரப் போகிறது. அதற்குள் கங்கையில் நீராடுவதே புண்ணியம். இரவில் நதிகளில் மனிதர்கள் நீராட சாஸ்திரம் அனுமதிப்பதில்லை. அதிலும் நள்ளிரவு நேரம் தேவர்கள், கந்தர்வர்கள், யட்சர்கள் முதலானவர்களுக்கான காலம். அதிகாலையில் இருந்து மனிதர்கள் திரும்பவும் நீராடலாம்.

பார்வதி தவிக்க ஆரம்பித்தாள். பரமன் அந்தக் கிழட்டு நடுக்கத் திலும், 'இந்த மனிதர்களுக்குத்தான் பாவம் என்றால் எவ்வளவு பயம்?' என்று கிண்டலாகக் கேட்டார்.

'இப்படி அச்சமும் சுயநலமும் இருந்தால், அங்கே எப்படி க்ஷேம நலன்கள் இருக்க முடியும்' என்று பார்வதியும் திருப்பிக் கேட்டாள்.

''நம் திருவிளையாட்டால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்றே தோன்றுகிறது. நீ என்ன நினைக்கிறாய்?'

'இல்லை; எனக்கு நம்பிக்கை இருக்கிறது' என்றாள் பார்வதி.

அவள் நம்பிக்கைக்கு ஏற்ப ஒருவன் வந்தான். பார்வதிக்கு உதவவும் தயாரானான். பாவம் பற்றிக்கொள்ளும் என்றாள்.

''அதனால் என்ன?'' என்று அவன் திருப்பிக்கேட்டான். ''அதனால் என்னவா? பாவம் போக்கவே கங்கைப் புலத்துக்கு நீ வந்திருக்கிறாய். போக்க வந்த இடத்தில் இவர் பாவத்தையும் சேர்த் துக் கொள்வதை எண்ணி அச்சமடையவில்லையா?'

''எதற்கம்மா அச்சம்? என் பாவம், இவர் பாவம், அவ்வளவு ஏன்... உங்கள் பாவம், இந்த ஊரின் பாவம் என எல்லாமே என்னைச் சேரட்டும். அதை எல்லாம்தான் கங்கா மாதா போக்கிவிடுவாளே?'

''ஓ... கங்கை அத்தனை சக்தி வாய்ந்தவளா?''

''இது என்னம்மா கேள்வி... நம்பிக்கை இல்லாமலா நீங்கள் கங்கையில் நீராட வந்துள்ளீர்கள்?''

அவனிடம் பார்வதியும் பரமனும் அதற்கு மேல் விவாதிக்கவில்லை. தங்கள் திவ்ய சொரூபத்தைக் காண்பித்து, அங்கேயே அவனுக்கு முக்தியும் அளித்தனர்.

பின், பரமன் பார்வதியைப் பார்த்தார். பார்வதிக்கும் புரிந்தது.

''அப்படி பார்க்காதீர்கள். இன்று முழுக்க ஆயிரம் பேராவது நீராடச் சென்றிருப்பார்கள். ஒருவன் மட்டும் தான், கங்கையில் மூழ்கினால் தன் பாவம் நிச்சயம் நீங்கும் என்று உறுதியாக நம்பினான். ஆயிரத்தில் ஒருவனுக்குத்தான் நம்பிக்கை இருக்கிறது. மற்றவர்களின் பாவங்கள் ஏன் நீங்கவில்லை என்பதற்குக் காரணம் புரிந்து விட்டது' என்றாள் பார்வதி.

''சரியாகச் சொன்னாய். நம்பிக்கை முக்கியம். மூடிய பாத்திரம் எத்தனை ஆழமான கடலில் விழுந்தாலும், அதனுள் ஒரு துளி நீர்கூடச் செல்லாது. ஆனால், கரை மேல் கிடக்கும் கிளிஞ்சல் திறந்திருப்பதால் தன் உட்குழிவுக்குள் நீரை வாங்கிக்கொள்ளும். செயலைவிட, அதனுள் இருக்கும் நோக்கமே பெரிது. உன் மாயா சக்தியே மனிதர்களை இப்படி நம்பியும் நம்பாமலும் ஆட்டிப் படைக்கிறது'' என்ற பரமனைச் சற்று கோபமாகப் பார்த்த பார்வதி, 'குறை சொல்வதில் நீங்களும் மனிதர்களை விஞ்சிவிடுவீர்கள்போல் தெரிகிறதே..!' என்று சிடுசிடுத்தாள். 'எல்லாம் பூவுலகில் கால்பட்ட தோஷம்!' என்று சிரித்தார் பரமன்.

இந்த கதை, நம்பிக்கை என்பது எப்படிப்பட்டது என்பதைத் திட்டமாய் விளக்கி விடுகிறது.