Monday, October 29, 2012

அணுகுமுறைதான் வெற்றியை நிர்ணயிக்கிறது.

ந்துப் புராணங்களின்படி, இந்தப் பிரபஞ்ச வெளியைக் காத்து வருபவர் ஸ்ரீமகாவிஷ்ணு. அந்த பாகத்தை அவர் ஏற்றுக்கொண்டிருப்பதால், அடிக்கடி அவர் பலருடன் போராட வேண்டியிருக்கிறது. குறிப்பாக, அசுரர்களிடம்! ஏன்... சில நேரங்களில் மனிதர்களிடமும்தான்! அவர், ஒவ்வொரு போரையும் ஒவ்வொரு வகையான அரக்கர்களுடன் செய்ய வேண்டியிருந்தது. அதனால், அவரும் அதற்குத் தகுந்த மாதிரி வெவ்வேறு வடிவங்கள், அவதாரங்கள் எடுக்க வேண்டியிருந்தது.


ஹிரண்யாட்சன் பூமியைக் கடலுக்கு அடியில் இழுத்துக்கொண்டு போனபோது, வராக அவதாரம் எடுத்தார் விஷ்ணு. கடலுக்குள் நுழைந்து அந்த அசுரனை அழித்து, பூமிப் பந்தை தன் கொம்பில் வைத்துத் தூக்கிக்கொண்டு வந்து, பழையபடி அதன் இடத்தில் வைத்தார். இந்தப் போராட்டம் முழுக்க முழுக்க உடல் திறனால் மட்டுமே முடிந்தது.


ஹிரண்யகசிபு வேறு மாதிரியான அசுரன். அவன் பெற்று வந்த வரம் விசித்திரமானது. தன்னை யாரும் அழிக்கக்கூடாது என்பதற்காக வாங்கிவந்த வரம் அது. அவன் போட்ட பட்டியலைப் பாருங்கள்:


மனிதனோ, மிருகமோ அழிக்க முடியாது;
பகலிலோ, இரவிலோ அழிவு வரக்கூடாது;
இருப்பிடத்தின் உள்ளேயோ, வெளியேயோ அழிக்கக் கூடாது;
தரையிலோ அதன் மேலோ அழிவு நிகழக்கூடாது;
எந்த ஆயுதமும், கருவியும் உபயோகிக்கக் கூடாது.


- இப்படியெல்லாம் வரம் கேட்ட அந்த அசுரனை அழிக்க, நரசிம்மராக அவதாரம் எடுத்தார் விஷ்ணு. பாதி மனிதன், பாதி மிருகம் கலந்த உருவம்; சந்தியா காலம் - பகலும் இரவும் சந்திக்கும் நேரம்; இருப்பிடத்தின் உள்ளேயுமல்ல, வெளியேயுமல்ல; வாசற்படியில்; தரையிலோ, மேலோ அல்ல; தன் தொடையிலேயே! எந்த ஆயுதமோ, கருவியோ இல்லாமல் தன் விரல் நகங்களையே ஆயுதமாக்கி, அவனை அழித்தார் விஷ்ணு.ஹிரண்யகசிபு போட்ட எந்த நிபந்தனையையும் விஷ்ணு மீறவில்லை. புத்திசாலித்தனத்தால் இந்தப் போரில் அவனை வென்றார்.

அப்புறம் வந்தார், மகாபலி சக்ரவர்த்தி என்ற அசுரர். அவர் புனிதமானவர்; வாரி வழங்குபவர். அவருடைய ராஜ்யம் எல்லையற்றுப் பரந்து விரிந்திருந்தது. வானமும் பூமியும் அவர் வசம் இருந்தன. அவரை அவருக்குரிய இடத்தில் வைக்க வேண்டும் என்பதற்காகவே மகாவிஷ்ணு வாமன வடிவம் எடுத்தார்.  மகாபலியிடம் மூன்றே மூன்று அடி இடம்தான் கேட்டார். மகாபலியும் அதைக் கொடுக்க இசைந்தார். வாமன அவதாரம் எடுத்திருந்த விஷ்ணு, விஸ்வரூபம் எடுத்து ஆகாயத்தையும், பூமியையும் இரண்டே அடிகளில் அளந்துவிட்டு, மூன்றாவது அடி வைக்க இடம் கேட்டார். இந்தப் போராட்டத்தில், மகாவிஷ்ணுவுக்கு எதிரியைத் தோற்கடிப்பது என்ற அடிப்படை இல்லை. ஒருவருக்கே பிரபஞ்சம் முழுக்க உரிமையானதாக இருப்பதை மாற்றி, உலகில் சமநிலையை உருவாக்க, தன்னை ஒரு வடிவில் இருந்து இன்னொரு வடிவுக்கு மாற்றுவது அவருக்கு முக்கியமானதாக இருந்தது.   போர்களின் கோணத்தில் இருந்து பார்த்தால், விஷ்ணுவின் அவதாரங்கள் எல்லாம், அவர் எவ்வாறு சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு உத்திகளை மாற்றிக்கொண்டே இருந்தார் என்பதைக் காண்பிக்கும். முதலில் வராகத்தில் இருந்து நரசிம்மருக்கு! அடுத்து நரசிம்மரில் இருந்து வாமனருக்கு! முதலில் ஆக்ரோஷமான சக்தியைப் பயன்படுத்தியவர், அடுத்து புத்தியைப் பயன்படுத்தினார். முடிவில், புத்தியை உபயோகிப்பதைவிட உருவத்தையே மாற்றிக்கொள்வது நல்லது என்று வடிவத்தை மாற்றிக்கொண்டார். அவருக்குத் தெரியும்; அசுரர்கள் கெட்டிக்காரர்கள், விஷயத்தைச் சிக்கலாக்கி விடுவார்கள் என்று!


ஹிரண்யாட்சன் வன்முறையாளன். ஹிரண்யகசிபு புத்திசாலி. மகாபலி எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும், அவனுடைய நல்ல குணம் பிரபஞ்சவெளியின் சமநிலையை பாதித்தது.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் விஷ்ணுவை மாறச் செய்தார்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறை உதவாது.  ஒவ்வோர் அணுகுமுறையும் 'கஸ்டமைஸ்ட்' என்பார்களே, அது போல ஒவ்வொருவருக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். அதைப் புறக்கணித்தால் தோல்விதான்! இதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன?


அணுகுமுறை மாறுபாடுதான் வாழ்க்கை, வணிகம், போர் என எல்லாவற்றிலும் வெற்றியை நிர்ணயிக்கிறது.


Source: Sakthi Vikatan