Monday, April 2, 2012

மகராசனப் பயிற்சி -உடலில் ஓட்டங்கள் சீராக இயங்கினால்தான் சிறப்பாக வாழ முடியும்!


'வேலைக்குக் கிளம்பி, பஸ்லயோ டூவீலர்லயோ ஆயிரத்தெட்டு சிக்னல்களைக் கடந்து, ஆபீசுக்குப் போய் வேலையைச் செய்யறதே பெரும்பாடா இருக்குது. அதிலேயும் பஸ் நெரிசல்ல, கூட்டத்துல நசுங்கி, புழுங்கி, கீழே இறங்கும்போது, வியர்வை ஆறா வழியும். இதுவே மிகப் பெரிய உடற்பயிற்சிதானே..?'' என்று சென்னையில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் வேடிக்கையும் ஆதங்கமுமாகக் கேட்டார்.

அவரிடம் சிரித்தபடி சொன்னேன்... ''பேருந்தில் கூட்டத்தில் பயணம் செய்கிறீர்கள். இடம் கிடைக்கவில்லை. நின்றுகொண்டு வருகிறீர்கள். அப்போது நீங்கள் ஒரு பக்கமும், உங்கள் கை பிடித்திருக்கும் இடம் ஒரு பக்கமும் என பக்கவாட்டிலோ சாய்வாகவோ நின்றிருப்பீர்கள். அப்போது அருகில் இருப்பவர் தடாலென்று உங்கள் மீது சாய்வார். அல்லது, திடீர் பிரேக் போடுகிற வேளையில், நீங்கள் எந்தப் பக்கத்திலேனும் அப்படியே சாய்வீர்கள். அந்த வேளையில், கழுத்து வேறு பக்கமாகப் பார்த்தபடி இருந்திருக்கலாம். உங்கள் இடுப்பு சட்டென்று பிடித்துக் கொள்ளலாம். மேலே பிடித்தபடி இருந்த உங்கள் கை லேசாக வேறு பக்கமாக முறுக்கித் திரும்பலாம்.

அதாவது ஒரு நிலையில், ஓர் ஒழுங்கில் இல்லாமல் உடலுறுப்புகள் இப்படி நிலை மாறுகிறபோது, அதனால் உங்களுக்கு உடலில் வலியும் அயர்ச்சியும்தான் இருக்குமே தவிர, அது எப்படி உடற்பயிற்சி செய்ததாக அமையும்?!

மழையில் நனைந்துவிட்டால், அது குளித்ததாக ஆகிவிடுமா? என்னதான் மழையில் நனைந்து, சொட்டச் சொட்ட வீட்டுக்கு வந்தாலும், ஒரு இரண்டு சொம்பு தண்ணீரை எடுத்துவிட்டுக் கொண்டால்தானே நீராடிய திருப்தி கிடைக்கும்! அப்படித்தான்... உடம்புக்கு அதிக வேலை கொடுத்திருக்கிறோம், உடம்பில் இருந்து அதிகமாக வியர்வை வழிந்தோடுகிறது என்பதாலேயே, அது உடற்பயிற்சி செய்ததற்கு ஈடாகிவிடாது.

முறைப்படி, கால்களையும் கைகளையும் உடலையும் முதுகையும் ஒழுங்குக்குக் கொண்டு வந்து, முறையாக வைத்துக்கொண்டு பயிற்சியில் ஈடுபட்டால்தான், அந்தந்த உறுப்புகளுக்குப் பலன்கள் போய்ச் சேரும்'' என்று விவரித்தேன்.

அந்த அன்பர் புரிந்துகொண்டு, பயிற்சியில் இறங்கினார். குறிப்பிட்ட காலத்துக்குள் அவரிடமும் அவரது உடலிலும் நிறையவே மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. அந்த மாற்றங்களுக்கு மிக முக்கியமான காரணம்... மனவளக்கலைப் பயிற்சிகளில் உள்ள மகராசனப் பயிற்சிதான்!

அந்தப் பயிற்சியின் அடுத்த நிலையைப் பார்ப்போமா?

இந்தப் பயிற்சியில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும் என்பது நினைவிருக்கிறதுதானே?! இரண்டு கைகளை, இரண்டு பக்கமும் நீட்டியபடி குப்புறப் படுத்துக் கொள்ளுங்கள். வலது காலின் பெருவிரல் மற்றும் அடுத்த விரல் ஆகியவற்றைக் கொண்டு, மற்றொரு காலின் குதிகால் பகுதியைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஏற்கெனவே செய்ததுபோல், வலது பக்கமாகத் திரும்புங்கள். அப்போது கால்களும் வலது பக்கமாகவே திரும்பட்டும். அடுத்து இடது பக்கமாக கழுத்தைத் திருப்பிச் செய்கிறபோது, கால்கள் அப்படியே இடது பக்கமாகத் திரும்பட்டும். அப்படிச் செய்கிறபோது, முந்தைய பயிற்சிகளின்போது கைகளை எப்படித் திருப்பி வைத்துக் கொண்டீர்களோ அதே போல் திருப்பி வையுங்கள்.

வலது, இடது என மும்மூன்று முறை இந்தப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

இதையடுத்து, கால்களை மாற்றிக்கொண்டு பயிற்சியைச் செய்ய வேண்டும். அதாவது, வலது கால் பெருவிரலைக் கொண்டு இடது காலைப் பிடித்துக்கொண்டு பயிற்சி செய்தீர்கள் அல்லவா? இப்போது, இடது காலின் பெருவிரல் மற்றும் அதன் அடுத்த விரல் ஆகியவற்றின் உதவியுடன் வலது காலின் குதிகாலைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

கழுத்தை இடது பக்கமாகத் திருப்பும்போது கால்கள் உட்பட மற்ற பாகங்களும் அப்படியே இடது பக்கத்தில் திரும்பட்டும். பிறகு வலது பக்கம் எனில், வலது பக்கமாகத் திருப்புங்கள். இதையும் மூன்று மூன்று முறை செய்யுங்கள்.

அடுத்து, இரண்டு பக்கமும் நீட்டியபடி வைத்திருந்த கைகளை மடக்கிக் கொள்ளுங்கள். இரண்டு கை விரல்களையும் நீட்டிக் கொண்டு, ஒன்றையன்று பார்ப்பது போலவும் தொடுவது போலவுமாக வைத்துக் கொள்ளுங்கள். விரல்களும் விரல்களும் தொட்டுக்கொண்டிருக்க... அவற்றை முகத்துக்குக் கீழே வைத்துக் கொள்ளுங்கள். அதாவது, குப்புறப்படுத்த நிலையில் இருந்து மாறாமல், உங்களின் முகத்துக்குக் கீழே இப்படி கைகளை வைத்துக் கொண்டு, தலையையும் கைகளையும் தரையை விட்டு லேசாகத் தூக்கி வைத்தபடி இருங்கள்.

இப்போது உடலின் மொத்தப் பளு முழுவதும் வயிற்றில் இருக்கும்படியாக, நெஞ்சுப் பகுதியை லேசாக தரையில் இருந்து தூக்கிக் கொள்ளுங்கள். இதையடுத்து உடலை வலது புறமாக அப்படியே திருப்புங்கள். கைகளையும் வலது புறத்தின் பக்கவாட்டுக்குக் கொண்டு செல்லுங்கள். அப்படி வலது பக்கமாக உடலைத் திருப்புகிறபோது, வலது காலின் கெண்டைக்கால், தொடைப் பகுதிக்கு மேலாக வரும்படி காலை மடக்கிக் கொள்ளுங்கள்.  

பிறகு உடலை பழையபடி நேராக வைத்துக் கொண்டு, இடது பக்கமாகத் திருப்புங்கள். அதாவது, இடது கன்னம் தரையில் அழுந்தியபடி இருக்க, வலது உள்ளங்கையை தரையில் கவிழ்ந்தபடி தலைப் பகுதிக்கு நேராக வைத்துக்கொண்டு, வலது முழங்காலை லேசாக மடக்கி, இடது காலை நன்றாகத் தளர்த்திக் கொள்ளுங்கள். இடது உள்ளங்கையை மேல்புறமாக விரித்தபடி உடலுடன் ஒட்டி, தரையில் வைத்துக் கொள்ளுங்கள். கண்களை மெள்ள மூடிய நிலையில், சிறிது ஓய்வெடுங்கள்.

ஓய்வு... ஓய்வு... ஓய்வு..!

மகராசனத்தில் உள்ள முக்கியமான இந்தப் பயிற்சிகளின் நிறைவாக, இந்த பயிற்சியைச் செய்து முடிக்க... உடம்பு மொத்தமும் தக்கையாகும். மனசு முழுவதும் பளிச்சென்றாகியிருக்கும். தேவையற்ற சதைகள், மெள்ள மெள்ளக் குறையத் துவங்கியிருக்கும்.

உங்களால் எந்த வேலையையும் செய்வதற்கு உடலில் தெம்பும், மனதில் ஒன்றிப் போகிற நிலையும் வந்துவிடும். ஒருநாளில் எத்தனை வேலைகளைச் செய்ததாலும் புத்துணர்ச்சியுடன் செய்து முடிப்பதற்கான வகையில் உடலும் உடலின் பாகங்கள் மொத்தமும் தயாராக இருந்து துணை நிற்கும்!

இந்தப் பயிற்சிகளை தினமும் செய்து வந்தால், உடல் சோர்வு என்பதே இருக்காது. கால்களில் வலுவேறியிருக்கும். ஊளைச் சதை முற்றிலுமாகக் குறைந்திருக்கும். ஆண் அல்லது பெண்ணுக்கு இருந்த மலட்டுத் தன்மை நீங்கிவிடும். குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அமையப் பெறும்.

முதுகெலும்பில் இருந்து உடல் முழுவதும் செல்கிற நரம்பு மண்டலம் அனைத்தும் பலம் பெற்றுவிடும். தண்டு வடத்தில் வலியோ நரம்புத் தளர்ச்சியோ இருக்காது.

உடல் முழுவதும் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் மற்றும் உயிரோட்டம் ஆகியவை சீராகப் பாயத் துவங்கும்.

ஓட்டம் ஓட்டம் என்று இருக்கிற இந்த உலக வாழ்க்கையில், உடலில் இந்த ஓட்டங்கள் அனைத்தும் சீராக இயங்கினால்தான், நாம் சிறப்பாக வாழ முடியும்!

காசு - பணம் இல்லாமல்கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை, நோயுடன் குடித்தனம் செய்கிற வாழ்க்கை... மிகக் கொடுமையானது. என்ன... புரிகிறதா அன்பர்களே!