Saturday, October 8, 2011

30 வகை சுண்டல்!


பீச் சுண்டல்

தேவையானவை: காய்ந்த பட்டாணி - ஒரு கப், பொடியாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன். இஞ்சித் துருவல் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பட்டாணியை ஊற வைத்து, வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் விழுது, இஞ்சித் துருவல், மாங்காய்த் துண்டுகள் சேர்த்து தாளிக்கவும். வெந்த பட்டாணி, உப்பு சேர்த்து நன்கு கலக்கி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால்... சுவையான 'பீச் சுண்டல்' தயார்!

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்

தேவையானவை: முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 3, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய கொண்டைக்கடலையை குக்கரில் 4-5 விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். அதில் வெந்த கடலை, தேவையான உப்பு போட்டு கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறவும். சத்தான சுண்டல் ரெடி!

குறிப்பு: கடலையை வேக வைக்கும்போது சோடா உப்பு சேர்க்கக்  கூடாது. வேக வைத்த தண்ணீரை கீழே கொட்டாமல், புளி ஊற வைக்க, குழம்பில் ஊற்ற, சப்பாத்தி மாவு பிசைய பயன்படுத்தலாம்.

கறுப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

தேவையானவை: கறுப்பு கொண்டைக்கடலை - ஒரு கப், சோம்பு - கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, புதினா - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 3, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலையை 6-8 மணி நேரம் ஊறவிட்டு, குக்கரில் வேக வைக்கவும். வெந்த கடலையை தண்ணீரை வடியவிட்டு எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, காய்ந்த மிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, புதினா சேர்த்து வதக்கவும். இதனுடன் வெந்த கடலை, தேவையான உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய் துருவலை தூவி இறக்கினால்.... மசாலா சுண்டல் தயார். விருப்பப்பட்டால் கரம் மசாலாத்தூளும் சேர்க்கலாம்.

காராமணி இனிப்பு சுண்டல்

தேவையானவை: வெள்ளை காராமணி - ஒரு கப், வெல்லம் - அரை கப், நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வெள்ளை காராமணியை 6 மணி நேரம் ஊறவிட்டு, வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, காராமணியை சேர்க்கவும். கூடவே, காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சுண்டல் இது.

வேர்க்கடலை சுண்டல்


தேவையானவை: பச்சை வேர்க்கடலை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 3, தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: பச்சை வேர்க்கடலையை 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு,  உப்பு சேர்த்து வேகவிடவும். மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, வெந்த வேர்க்கடலை, வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லி, தேங்காய் துருவல் தூவி மேலும் சிறிது நேரம் கிளறி இறக்கவும்.

மசாலா வாசனை விரும்புபவர்கள்... கரம் மசாலாத்தூள் அல்லது பட்டை, சோம்பு சேர்த்துக் கொள்ளலாம்.

கொள்ளு சுண்டல்

தேவையானவை: முளைகட்டிய கொள்ளு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை:  முளைகட்டிய கொள்ளுவை குக்கரில் வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெந்த கொள்ளு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

மக்காச்சோள சுண்டல்

தேவையானவை: மக்காச்சோளம் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

அரைக்க: இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய், பூண்டு பல் - தலா 2, சோம்பு - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: மக்காச் சோளத்தை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, குக்கரில் வேக வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை  தாளித்து... வெந்த சோளம், அரைத்த மசாலா, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து நன்கு கிளறி விடவும். 2 நிமிடம் கழித்து தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

பாசிப்பருப்பு சுண்டல்

தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின் அதை மலர வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி...கடுகு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள்  தாளித்து, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு சுண்டல் ரெடி. 

பூம்பருப்பு சுண்டல்

தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், கீறிய பச்சை மிளகாய் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 2, இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும் ( ஒரு மணி நேரம் ஊற வைத்து செய்வதானால், பாத்திரத்தில் வேக வைக்கவும். பருப்பை குழையாமல் மலர வேக வைக்கவும்). வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் தாளித்து, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவல், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கினால், பூம்பருப்பு சுண்டல் தயார்.

 சோயாபீன்ஸ் சுண்டல்

தேவையானவை: வெள்ளை சோயா பீன்ஸ் - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, புதினா - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: சோயா பீன்ஸை முதல் நாளே ஊற வைக்கவும்.  மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து... கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வேக வைத்த சோயா பீன்ஸ், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். மசாலா நன்கு கலந்தவுடன் புதினா, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால்... சத்துமிக்க மசாலா சோயாபீன்ஸ் சுண்டல் ரெடி!

பட்டாணி மசாலா சுண்டல்

தேவையானவை: காய்ந்த பட்டாணி - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, சீரகம் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  

வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் - 3, பட்டை - சிறிய துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று, சோம்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை: காய்ந்த பட்டாணியை 8 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, குக்கரில் போட்டு வேக வைக்கவும். பொடிக்க வேண்டியவற்றை வெறும் வாண  லியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், தாளித்து... புதினா, கொத்தமல்லி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் வெந்த பட்டாணி, உப்பு, வறுத்தப் பொடித்த பொடி சேர்த்து நன்கு கிளறவும். கொஞ்சம் நீர் தெளித்துக் கிளறி (விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் தூவி) இறக்கவும்.

 பச்சைப்பயறு சுண்டல்

தேவையானவை: முளைகட்டிய  பச்சைப்பயறு - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன், இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய பச்சைப்பயறை குக்கரில் வேக வைத்து எடுக்கவும் வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, காய்ந்த மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்க்கவும். வேகவைத்த பயறு, உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். சத்தான பச்சைப்பயிறு சுண்டல் ரெடி!

நவதானிய சுண்டல்

தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை, காராமணி, பாசிப்பயிறு, கொள்ளு, மொச்சை, சிவப்பு சோயா, ராஜ்மா, காய்ந்த பட்டாணி (அனைத்தும் முளைகட்டியது) - தலா 4 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

அரைக்க: தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, சோம்பு - கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, இஞ்சி - சிறிய துண்டு.

செய்முறை: முளைகட்டிய தானியங்கள் அனைத்தையும்  ஒன்றாக சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெந்த தானியம், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, அரைத்த விழுது சேர்த்துக் கிளறவும். பச்சை வாசனை போனதும், (விருப்பப்பட்டால்) தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கினால், நவதானிய சுண்டல் தயார்.

தக்காளி  சோயா பீன்ஸ் சுண்டல்

தேவையானவை: சோயா பீன்ஸ் - ஒரு கப், தக்காளிச் சாறு - கால் கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, புதினா - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  

செய்முறை: சோயா பீன்ஸை 10 மணி நேரம் ஊற வைத்து, பிறகு குக்கரில் வேக விடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி சீரகம், கறிவேப்பிலை, புதினா தாளிக்கவும். தக்காளிச் சாறு, மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். இதில் வெந்த பீன்ஸ், உப்பு சேர்க்கவும். நன்கு கலந்து வந்ததும் தேங்காய் துருவல் தூவி இறக்கவும். தக்காளி சுவையுடன் வித்தியாசமான சுண்டல் தயார்!

முளைகட்டிய வெந்தய சுண்டல்

தேவையானவை: முளைகட்டிய வெந்தயம் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பொடித்த வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய வெந்தயத்தை 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் வேக வைத்த வெந்தயம், உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் தூவி இறக்கவும்.

சுகர் பிராப்ளம் உள்ளவர்களுக்கும் ஏற்ற சுண்டல் இது.

ராஜ்மா கட்டா மிட்டா

தேவையானவை: கறுப்பு ராஜ்மா - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, வெல்லம் - சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: ராஜ்மாவை 10-12 மணி நேரம் ஊற வைத்து,  குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கீறிய பச்சைமிளகாய் சேர்த்து தாளிக்கவும். வெந்த ராஜ்மா, உப்பு சேர்க்கவும். வெல்லத்தை சிறிது நீரில் கரைத்து, வடிகட்டி சேர்க்கவும். எல்லாம் நன்கு கலந்தவுடன் கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கினால்... புளிப்பும், இனிப்பும் கலந்த கட்டா மிட்டா சுண்டல் ரெடி!.

கோதுமை சுண்டல்

தேவையானவை: முளைகட்டிய கோதுமை - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2,  தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய கோதுமையை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். வெந்த கோதுமை, உப்பு சேர்த்து, (விருப்பப்பட்டால்) தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

டயாபடீஸ் உள்ளவர்களுக்கும்  ஏற்ற சுண்டல் இது.

மிக்ஸ்டு வெஜ் சுண்டல்

தேவையானவை: முளைகட்டிய ஏதேனும் ஒரு பயறு - ஒரு கப், கேரட் - ஒன்று (துருவிக் கொள்ளவும்),  வெள்ளரித் துண்டுகள் - கால் கப், வேக வைத்த உருளைகிழங்கு துண்டுகள் - கால் கப், தக்காளி  - ஒன்று (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்),  பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முளை கட்டிய பயறை ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கறிவேப்பிலை தாளித்து, காய்கறிகளை சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வேக வைத்த பயறு, உப்பு, பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். சத்துகள் மிகுந்த வெஜ் சுண்டல் ரெடி!

கறுப்பு உளுந்து சுண்டல்

தேவையானவை: கறுப்பு முழு உளுந்து - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, சீரகம், கடுகு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: இஞ்சி, பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். உளுந்தை 8 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, குக்கரில் போட்டு வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து... வெந்த உளுந்து, அரைத்த இஞ்சி விழுது, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பச்சை வாசனை போனதும், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இந்த சுண்டல் இடுப்பு எலும்புக்கு பலம் தரும். பெண்களுக்கு ஏற்ற சத்தான சுண்டல் இது.

 ஸ்வீட் கார்ன் சுண்டல்

தேவையானவை: ஸ்வீட் கார்ன் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, சோம்பு - கால் டீஸ்பூன், உப்பு, தேங்காய் துருவல் - 3  டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: ஸ்வீட் கார்னை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சோம்பு, கீறிய பச்சை மிளகாய் தாளித்து... வெந்த கார்ன், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, நறுக்கிய கொத்தமல்லி, புதினா, தேங்காய் சேர்த்துக் கிளறி இறக்கினால்... டேஸ்டி கார்ன் சுண்டல் தயார்.

சாபுதானா சுண்டல்

தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், முளை கட்டிய பச்சைப் பயறு - முக்கால் கப், கீறிய பச்சை மிளகாய் - 2, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கேரட் - ஒன்று (துருவிக் கொளவும்), நெய் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் அல்லது மிருவாதுவாகும் வரை ஊற வைக்கவும். முளைகட்டிய பயறை ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், ஊற வைத்த ஜவ்வரிசி, வெந்த பயறு, உப்பு சேர்த்துக் கிளறவும். துருவிய கேரட் சேர்க்கவும். கொத்தமல்லி தூவி, (விருப்பப்பட்டால்) தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.

கொண்டைக்கடலை  ஃப்ரூட் சுண்டல்

தேவையானவை: முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப், ஆப்பிள் (சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்) - ஒன்று, மாதுளை முத்துக்கள் - 2 டேபிள்ஸ்பூன், திராட்சைப்பழம் - 20, வாழைப்பழம் (சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்) - ஒன்று, சாட் மசாலா - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய கொண்டைக் கடலையை சிறிதளவு உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து ஆவியில் வேக விடவும். ஒரு பாத்திரத்தில் வெந்த கடலை, நறுக்கிய ஆப்பிள் துண்டுகள், வாழைப்பழத் துண்டுகள், மாதுளை முத்துக்கள், திராட்சை, சாட் மசாலா, எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து நன்கு கலக்கினால்... டேஸ்டி கொண்டைக்கடலை - ப்ரூட் சுண்டல் ரெடி.

இது, டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு.

 சிவப்பு சோயா சுண்டல்

தேவையானவை: உரித்த சிவப்பு சோயா பீன்ஸ் - ஒரு கப், இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, சோம்பு - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உரித்த சிவப்பு சோயா பீன்ஸை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, சோம்பு, பச்சை மிளகாய் தாளித்து... இஞ்சித் துருவல், வெந்த சோயா பீன்ஸ் சேர்த்துக் கிளறவும். கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

 பட்டர் பீன்ஸ் சுண்டல் 

தேவையானவை: உரித்த பட்டர் பீன்ஸ் - ஒரு கப், சோம்பு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  

செய்முறை: உரித்த பட்டர் பீன்ஸை உப்பு சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் தாளித்து... வெந்த பட்டர் பீன்ஸ், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

சிவப்பு காராமணி சுண்டல்

தேவையானவை: முளைகட்டிய சிவப்பு காராமணி - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய காராமணியை குக்கரில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த காராமணியை சேர்க்கவும். மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். சிறிது தண்ணீர் தெளித்து (ஒரு ஸ்பூன் அளவு) நன்கு கலக்கவும். தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்க வும்.

சிவப்பு ராஜ்மா சுண்டல்

தேவையானவை: சிவப்பு ராஜ்மா - ஒரு கப், கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் - 3, தனியா - கால் டீஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு.

செய்முறை: ராஜ்மாவை 10-12 மணி நேரம் ஊறவிடவும். பிறகு குக்கரில் வேகவிடவும். வறுத்துப் பொடிக்க வேண்டியதை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து... வெந்த ராஜ்மா, உப்பு சேர்த்துக் கிளறவும். இதனுடன் செய்து வைத்துள்ள பொடி, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

டிரை ஃப்ரூட்ஸ் சுண்டல்

 தேவையானவை: முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப், நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை - தலா  ஒரு டேபிள்ஸ்பூன்,  தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பேரீச்சை - 10, உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய பாசிப்பயறை உப்பு சேர்த்து,  தண்ணீர் தெளித்து, ஆவியில் வேக வைக்கவும். வெந்த பயறுடன் முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, நறுக்கிய பேரீச்சை துண்டுகள் சேர்த்து நன்கு கலக்கவும். தேங்காய் துருவல் தூவி அலங்கரிக்கவும்.

மொச்சை சுண்டல்

தேவையானவை: மொச்சை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 3, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்,  பெருங்காயத்தூள்  - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: மொச்சையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் போட்டு வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து... வேக வைத்த மொச்சை, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.

பச்சைப்பயறு  பனீர் சுண்டல்

தேவையானவை: முளைகட்டிய பச்சைப்பயறு - ஒரு கப், பனீர் துருவல் - முக்கால் கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள்- ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, சீரகம் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய பயறை ஆவியில் வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், காய்ந்த மிளகாய் தாளித்து, இஞ்சித் துருவல் சேர்க்கவும். வெந்த பாசிப்பயறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். கரம் மசாலாத்தூள், பனீர் துருவல் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

 பார்லி  வேர்க்கடலை சுண்டல்

தேவையானவை: பார்லி - ஒரு கப், வறுத்த வேர்க்கடலை - அரை கப், சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, இஞ்சி துருவல் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு மணி நேரம் ஊற வைத்த பார்லி, வறுத்த வேர்க்கடலையை உப்பு சேர்த்து ஆவியில் வேக வைக்கவும். எண்ணெயை சூடாக்கி, சீரகம், சோம்பு, பச்சை மிளகாய் தாளிக்கவும். இதனுடன் இஞ்சித் துருவல், வெந்த பார்லி, வேர்க்கடலை சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லி, (விருப்பப்பட்டால்) தேங்காய் துருவல் சேர்க்கவும்.

கர்ப்பிணி பெண்களுக்கும், நீர் பிரியாமல் சிரமப்படுபவர்களுக்கும் ஏற்ற சுண்டல் இது.