Sunday, August 3, 2014

தாய்ப்பாலே தடுப்பூசிதான்!

பெற்ற குழந்தைக்கு உற்ற மருந்தென்று தாய்ப்பால் மிஞ்சிடத் தரணியில் ஏதும் உண்டோ? தாய்க்கும் சிசுவுக்குமான தன்னிகரில்லா உறவுப் பிணைப்பான தாய்ப்பாலின் சிறப்புகளையும், மருத்துவப் பலன்களையும் விரிவாகப் பேசுகிறார், மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் பொன்னி.

'தன் குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதுதான் எல்லாத் தாய்மார்களின் பிரார்த்தனையும். பெண் கருத்தரித்தவுடன், தாய்ப்பாலின் மகத்துவம் பற்றி அறிவுறுத்துவதுடன், ஒவ்வொரு மாதப் பரிசோதனையின்போதும், அதன் முக்கியத்துவத்தைப் புரியவைப்பது எங்கள் கடமை.

சீம்பால் (Colostrum)

மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில், பிசுபிசுப்பாகச் சுரக்கும் சீம்பால்தான் குழந்தையின் முதல் உணவு. குழந்தை விரும்பிக் குடிக்கும் அளவுக்கு சீம்பால் தித்திப்பாக இருக்கும். சீம்பாலில் ஐ.ஜி.ஏ (Immunoglobulin A) என்ற 'நோய் எதிர்ப்பொருள்' (Antibodies) உள்ளது. இது குழந்தைக்கு எந்தவிதமான நோய்த்தொற்றும் ஏற்படாமல் காப்பதுடன், நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கச் செய்யும். சீம்பாலில் ரத்த வெள்ளை அணுக்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதால், குழந்தைகளுக்கு ரத்தப் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

புகட்டும் முறை

சீம்பாலைத் தொடர்ந்து சுரக்கும் தாய்ப்பாலை இரு மார்பகங்களிலும் மாற்றி மாற்றிக் கொடுக்க வேண்டும். ஒரே பக்கமாக பால் கொடுக்கக் கூடாது. அதேபோல் படுத்துக்கொண்டு பால் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால் குழந்தையின் வாயில் இருந்து மூக்குக்குள் பால் செல்லக்கூடிய அபாயம் இருக்கிறது.

பால் கொடுக்கும் முன்பு, மார்புக் காம்புகளை சுத்தம் செய்யவேண்டும்.  தண்ணீரால் சுத்தம் செய்வதைவிட, சில சொட்டுக்கள் தாய்ப்பால் எடுத்து, அதைத் தடவியே சுத்தம் செய்துகொள்ளலாம். இதனால், எந்தத் தொற்றும் குழந்தையை அண்டாது. முதலில் 5 நிமிடங்கள், பிறகு 10 நிமிடங்கள் எனக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்.

தாய்ப்பால் தருமே பலம்!

தாய்ப்பால் குடிப்பதால், குழந்தைகள் பெறும் நலன்களைப் பட்டியலிடுகிறார், சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவர் ரமா சந்திரமோகன்.

  ''குழந்தைக்கு இயற்கை அளிக்கும் முதல் தடுப்பூசி, சீம்பால்தான். நோய் எதிர்ப்பு குணங்கள் அனைத்தும் அதில் அடங்கியுள்ளது. குழந்தை பிறந்ததும், முதல் அரை மணி நேரத்துக்கு பயங்கர சுறுசுறுப்பாக இருக்கும். அந்த நேரத்தில் சீம்பால் கொடுக்கப்பட்டுவிட வேண்டும். அதே போல் தாய்ப்பாலில் 88 சதவிகிதம், தண்ணீர்தான். அதுவே தாகத்தையும் தணித்துவிடும் என்பதால், குழந்தைக்குத் தனியாகத் தண்ணீர் தரத் தேவை இல்லை. குழந்தை பிறந்து முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப் பால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.

  குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் தாய்ப்பாலில் உள்ளன. பாலில் இருக்கும் சத்துக்களே குழந்தையின் நோய்த் தடுப்பாற்றலை கட்டமைக்கப் போதுமானது.

  அம்மாவுடனான பிணைப்பு அதிகரிப்பதுடன், பாதுகாப்பாகவும் உணர்கிறது குழந்தை. குழந்தை முழுமுனைப்போடு தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க, அதன் கன்னங்கள் செழுமையாகும். பற்கள் ஒழுங்காக முளைத்து, வளரும்.

  சில குழந்தைகளுக்கு, பால் குடித்த பிறகு நாக்கில் ஒரு வெள்ளைப் படலம் இருக்கும். சுத்தமான துணியை, வெந்நீரில் நனைத்தெடுத்து, நாக்கைத் துடைத்துவிட வேண்டும்.

  தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் எடை ஒவ்வொரு மாதமும் 800 கிராம் முதல் ஒரு கிலோ வரை ஏறவேண்டும். பால் குடித்த பிறகு 2 - 3 மணி நேரம் தூங்க வேண்டும். ஒரு நாளைக்கு 6 - 8 முறை சிறுநீர் கழிக்க வேண்டும். மலம் கழிக்கும்போது, கட்டியாக, கல் போல இல்லாமல், சகஜமாகப் போகவேண்டும். இவையெல்லாம் இருந்தால், குழந்தை போதுமான அளவு தாய்ப்பால் அருந்துகிறது என்று அர்த்தம்.'

தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் நல்லதே

  பிரசவத்துக்குப் பின், பால் கொடுக்கும் தாய்க்கும் கர்ப்பப்பை சுருங்கி, பழைய நிலைக்குத் திரும்புகிறது. பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் உதிரப்போக்கும் கட்டுப்படுத்தப்படுகிறது.

  தொடர்ச்சியாகத் தாய்ப்பால் கொடுத்துவந்தால், கொடுக்கும் காலங்களில் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு.