Friday, June 29, 2012

கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில்

அவன் ஒரு வியாபாரி. எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது.

 

மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓடவிட்டான். வியாபாரத்தில் தோற்றுப்போன அவலம் அவனை அழுத்தியது. பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள், நம்பவைத்துக் கழுத்தறுத்தார்கள் என்று எண்ணியெண்ணி வேதனையில் மூழ்கினான்.


தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம்... குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறோம் போன்ற எதிர்காலக் கவலைகள் வேறு ஒருபுறம் எழுந்து அடங்கின. இந்தச் சிந்தனையினூடே அவன் வலக்கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத் தட்டுப்பட்ட சிறு சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் இருந்தது. இப்படியாக அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான்.


பொழுது விடிய ஆரம்பித்தது! வெளிச்சம் பரவியது. ஆற்றிலே வீசுவதற்கு அவனைச் சுற்றி இருந்த கற்கள் எல்லாம் தீர்ந்து போய்விட்டன. அவன் தன் கையில் இருந்த கடைசிக் கல்லைப் பார்த்தான். பிரமித்துவிட்டான். காரணம் - அது சாதாரண கூழாங்கல் இல்லை. விலை உயர்ந்த வைரக்கல்.

 

யாரோ கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்து வந்த வைரக்கற்களை ஆற்றங்கரையிலேயே தவறவிட்டு விட்டு ஓடியிருக்கிறார்கள். அவற்றைத்தான் அவன் இருட்டில் இன்னதென்று அறியாமல் எடுத்து வீசியிருக்கிறான்.


ஒருவகையில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வியாபாரி மாதிரிதான். கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்