Tuesday, February 7, 2012

சதை கரைந்து, உடல் எடை குறைந்தது.


ந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள சிறப்புகளில் முக்கியமானதுஎது தெரியுமா?

பிள்ளைப் பாசம்! தனக்குத் தேவையானது கிடைக்காவிட்டால்கூடப் பரவாயில்லை. தனக்கு மிகப் பெரிய அவமானம் நேர்ந்துவிட்டால்கூட, அதை பல்லைக் கடித்துத் தாங்கிக் கொள்வார்கள். உடலில் ஏதும் பிரச்னை என்றால் கூட அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், தன் பிள்ளைகளுக்கு ஒரு சிறு துரும்பளவு பிரச்னையோ, வலியோ, வேதனையோ வந்து விட்டால், அதைத் தாங்கிக் கொள்ளவே மாட்டார்கள், பெற்றோர்கள்!

இங்கே, திருமணத்துக்குப் பிறகு கணவன்- மனைவி என்று வாழத் துவங்குபவர்கள், பிறகு குழந்தை பிறந்ததும் பெற்றோர்கள் ஆகிவிடுகிறார்கள். பெற்றவர்கள் ஆகிவிட்டவுடனேயே, தன் குழந்தை என்னென்ன சந்தோஷங்களையெல்லாம் பெற வேண்டும் என்று பட்டியல் போடத் துவங்கிவிடுகிறார்கள்.

குழந்தைகளின் பேச்சு, சிரிப்பு, ஓட்டம், ஆட்டம், கோபம், அழுகை எனச் சகலத்தையும் ரசித்து ரசித்து வாழ்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு நாளின் விடியலும் குழந்தையிடம் இருந்து துவங்கி, அன்றைய பொழுது குழந்தையிடமே நிறைவுறுகிறது.

கடைவீதிகளில், கடைகளில், உணவகங்களில்... எந்தப் பொருளைப் பார்த்தாலும், எந்த உணவைப் பார்த்தாலும் சட்டென்று பிள்ளைகளின் நினைவில் மூழ்குகிற தகப்பன்களும் தாயார்களும் நிறைந்திருக்கிற பூமி இது! அந்த அன்பு எனும் சக்திதான், மரம் செடி கொடிகளிலும், காற்றிலும் மழையிலுமாகப் பரவி, இந்த உலகைச் செழிக்கச் செய்துகொண்டிருக்கிறது. அன்பு எனும் மந்திரம், சொல்லவொண்ணா சக்தி கொண்டது!

பார்க்கிற பொருளையும் பண்டங்களையும் வாங்கிக் கொடுத்து, அதைக் குழந்தைகள் சாப்பிடுவதைப் பார்த்துப் பரவசப்படுகிற ஜீவன்கள், பெற்றோர்கள்.

அப்படியான அன்பான பெற்றோர், சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருந்து வந்திருந்தனர். கூடவே, அவர்களின் மகனும் வந்திருந்தார்.

''எங்க பையன் பிளஸ் டூ படிக்கிறான். படிப்புல கவனம் செலுத்த முடியலை. ரெண்டாவது மாடியில அவனுக்கு கிளாஸ் ரூம். சாப்பிட, தண்ணி குடிக்கன்னு கீழே வந்துட்டு, மாடியேறிப் போனா, மூச்சு வாங்குது. ரொம்பவே கஷ்டப்படுறான் சுவாமி. சீக்கிரமே டயர்டாயிடுறான். இத்தனைக்கும் குழந்தை, கண்டபடி எதுவும் சாப்பிடுறதே இல்லை'' என்று சொல்லிக் கண்ணீர் விட்டார் அந்தத் தாய்.

''ஏழு மணிக்கெல்லாம் தூங்கிடுறான் சுவாமி. எழுப்பி, சாப்பாட்டை ஊட்டி விட்டாத்தான் உண்டு. இல்லாட்டா, சாப்பிடாம அப்படியே தூங்கிடுவான். இப்படி அதிகம் சாப்பிடாதபோதே, இத்தனை வெயிட் போட்டிருக்கானேன்னு டாக்டர்ங்க கிட்டே காட்டினா, 'இது இயல்பா அமைஞ்ச விஷயம். போகப் போக சரியாயிடும்'னு சொல்லிட்டாங்க. இந்தப் பிளஸ் டூல கவனமா படிச்சு நல்ல மார்க் எடுத்தால்தான், அடுத்த கட்டமா நல்ல காலேஜ்ல இடம் கிடைச்சு, நல்ல விதமாப் படிச்சு, முன்னுக்கு வரமுடியும். இப்படிச் சுருண்டு சுருண்டு படுக்கறவனைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு சுவாமி!'' என்று அந்தப் பையனின் அப்பா, கலக்கமான முகத்துடன் சொல்லி முடித்தார்.

விஷயம் இதுதான். ஒரே பிள்ளை என்று மிகுந்த பிரியத்துடன், அவன் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அவன் கேட்காத உணவையும் வாங்கித் தந்திருக்கிறார்கள். எல்லாமே எண்ணெய்ப் பதார்த்தங்கள். ஒரு பக்கம் தின்பண்டங்களால் நிரம்பிய வயிறு, சாதத்தையும் காய்கறிகளையும் ஏற்க மறுத்ததன் விளைவு... அந்தப் பையன் குண்டாகிவிட்டதுடன் உணவைப் பார்த்தாலே வெறுக்கத் துவங்கினான்.

அதிக எடை அவனுக்குச் சோர்வைத்தான் கொடுத்தது. அந்தச் சோர்வு, எதன் மீதும் ஒட்டாத மனநிலையைத் தந்தது. அந்த மனதுடன், அவனால் படிக்க முடியவில்லை. படிப்பு வேம்பாகக் கசந்தது. பள்ளி விட்டு வீட்டுக்கு வந்ததும், தின்பண்டங்களைத் தின்று முடித்து, ஏழு மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்று விட... அதீத தூக்கமும் ஒரு வகை நோய் என்பதை அந்த வீடு புரிந்து கொள்ளவில்லை.

அந்தப் பையனுக்கு மனவளக் கலைப் பயிற்சி கொடுக்கப்பட்டது. குறிப்பாக, மகராசனப் பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. அந்தப் பயிற்சியின் அடுத்தடுத்த நிலைகளை மேற்கொள்ள... உடல் முழுவதும் ரத்த ஓட்டமும் வெப்ப ஓட்டமும் காற்றோட்டமும் உயிரோட்டமும் சீராகத் துவங்கின. சதை கரைந்து, உடல் எடை மெள்ள மெள்ளக் குறைந்தது.

எடை குறையத் துவங்கியதும், சுரப்பிகளின் பணிகள் ஒழுங்குக்கு வந்தன. தங்கு தடையின்றி, செவ்வனே தங்களது கடமைகளைச் செய்யத் துவங்கின. தொப்பைப் பகுதியில் ஒட்டிக் கொண்டிருந்த சதைகள் கரைந்து, தட்டையான வயிற்றுடன் அந்தப் பையனைப் பார்க்கவே ஸ்லிம்மாக, அத்தனை அழகாக இருந்தது.

கால்களிலும் வயிற்றுப் பகுதிகளிலும் சிறுகச் சிறுக பலம் கூடிக் கொண்டே வந்தது. எடை குறைந்து, கால்களின் பலமும் கூடியபோது, அந்தப் பையனால் மிக எளிதாகப் படியேறவும் ஓடவும் முடிந்தது. படிப்பில் கவனம் செலுத்தி, அதிக மதிப்பெண் எடுத்து, வீட்டையே மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்.

மகராசனத்தின் ஒவ்வொரு பயிற்சியும் உன்னதமானது. மொத்த உடலின் பாகங்களையும் பரிசுத்தமாக்கக் கூடியது. மகராசனம் போல் படுத்துக்கொண்டு, கால்களை நன்றாக நீட்டிக்கொண்டு, வலது பாதத்தை இடது பாதத்தில் கணுக்காலுக்குக் குறுக்கே வைத்துக் கொள்ளுங்கள். கைகள் வழக்கம் போல், சின் முத்திரையுடன் உடலில் இருந்து 45 டிகிரி கோணத்தில் தள்ளியே இருக்கட்டும். இந்த நிலையில் இருந்தபடி, வலது பக்கம்- இடது பக்கம் என மூன்று முறை உடலை அப்படியே திருப்புங்கள்.

அதேபோல், அடுத்ததாக... இடது பாதத்தை வலது பாதத்தின் கணுக்காலுக்குக் குறுக்கே வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, வலது பக்கம்- இடது பக்கம் என மூன்று முறை மாறி மாறி, உடலைத் திருப்புங்கள்.

இந்த இரண்டு பயிற்சிகளிலும் தலை நேராகவே இருக்கட்டும். கைகள் சின் முத்திரையுடனே இருக்கட்டும். வலது பக்கம் கால்கள் திருப்புகிறபோது, தலையை இடது பக்கமாகவும், கால்களை இடது பக்கம் திருப்புகிற வேளையில், தலையை வலது பக்கமாகவும் திருப்புங்கள்.

கழுத்து நரம்பு முதல் கணுக்கால்களில் பரவிக்கிடக்கிற நரம்பு வரைக்கும் செயல்பாடுகளில் ஒருவித மாற்றம் கிடைப்பதை உங்களால் உணர முடியும்.

'ச்சே... பாழாப் போன இந்த உடம்பைத் தூக்கிட்டு நடக்கறதைப் போல கொடுமையான விஷயம் எதுவுமே இல்லை' என்று தன் உடம்பு குறித்து வெகுவாக அலுத்துக்கொள்கிற அன்பர்கள், இந்தப் பயிற்சியை அவசியம் செய்ய வேண்டும்.

பல நிலைகள் கொண்டது மகராசனப் பயிற்சி. இந்தப் பயிற்சிகளைச் செவ்வனே செய்தால், இந்த உடலுக்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போன்று உணர்வீர்கள்!

உடலை மறந்து வாழ்வது என்பது ஆன்மிகத்தின் மிக அருமையான, உன்னத நிலை என்பது தெரியும்தானே, உங்களுக்கு?!