Monday, November 29, 2010

தெளிவு பிறந்தது

ண்பன் நாராயணனின் பேரன் ரகு, கொல்கத்தா சென்றிருந்தான். அவன் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் கெட்டிக் காரன். அவன் வீட்டு அலமாரியில் ஏராளமான வெற்றிக் கோப்பைகளை அடுக்கி வைத்திருப்பான். இத்தனைக்கும் வயது பன்னிரண்டுக்குள்தான்!

டென்னிஸ் பந்தயங்களில் ஒரு பாயின்ட் கிடைத்தவுடன், வெற்றி பெற்ற ஆட்டக்காரர் செய்யும் சேட்டையைப் பார்த்திருப்பீர்கள். எதிரியை நசுக்கிப் பொடிப் பொடியாக்கிவிட்டது போல் கையைக் குத்தி அபிநயிப்பார்கள். இதுவாவது பரவாயில்லை; கால்பந்தாட்டக் களிப்புதான் பரம பயங்கரம். கோல் போட்ட வீரன் பைத்தியம் மாதிரி நினைத்த திசையில் எல்லாம் ஓடுவான். அணியின் மற்ற வீரர்கள் அவனைத் துரத்திச் சென்று (பாராட்டத்தான்), கீழே தள்ளி, மல்லாத்தி, அவனைப் பஞ்சாமிர்தம் செய்துவிடுவார்கள். வெற்றியை இத்தனை உணர்ச்சிவசப்பட்டு பயங்கரமாகக் கொண்டாட வேண்டுமா?

இப்படியெல்லாம் ரகு ஒரு நாளும் செய்து நான் பார்த்ததில்லை.

சரி, கொல்கத்தா விஷயத்துக்கு வருகி றேன். அங்கே ரகு கலந்துகொண்ட பந்தயத்தில் அவனுக்கு வெற்றி கிட்டவில்லை. அங்கு நடந்த பல பந்தயங்களில் வென் றாலும், இறுதிப் பந்தயத்தில் தோற்று, ரன்னர்-அப் இடமே கிடைத்தது.

ரகு விம்மி விம்மி அழுதுவிட்டானாம். அவனைத் தேற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டுவிட்டார்களாம். சென்னை திரும்பிய பின்பும், அவன் சோகம் தணியவில்லை. யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை; சாப்பிடவில்லை. அவனைச் சமாதானப்படுத்த நாராயணன் என்னைக் கூப்பிட்டிருந்தான். சென்றிருந்தேன்.

ரகுவை அணைத்துக்கொண்டு பக்குவமாகக் கூறினேன்... ''ரகு! கண் ணைத் திறந்து, எதிரேயுள்ள அலமாரியைப் பார். பந்தயங்களில் நீ வென்ற கோப்பைகளைப் பார். எண்ணினால் நூறுக்கு மேல் இருக்கும். இத்தனை வெற்றிகள் குறித்து நீ கும்மாளமிட்டதில்லை. ஆனால், ஒரே ஒரு தோல்வியில் துவண்டுவிட்டாய். தோல்வியின்போது நீ அடைந்த கடந்த கால வெற்றிகளை எண்ணிப் பார்க்கவேண்டும். அதை நினைவுபடுத் தத்தான் பரிசுக் கோப்பைகள் தரப்படுகின்றன. கண்ணாடி அலமாரியில் அலங்காரமாக வைத்து, வெறுமே அவற்றை அழகு பார்க்க அல்ல!

சுழற்கோப்பை (ரோலிங் கப்) வழங்குகிறார்கள். ஒரே கோப்பைதான். 'இந்த ஆண்டு சுழற்கோப்பை என்னிடம் உள்ளதால், எப்போதும் அது என் அணியிடமே இருக்கும்; அது என்னுடையது' என்று யாரும் உரிமை கோர முடியாது. அடுத்த ஆண்டு, வேறு அணி திறமையாக ஆடினால், அந்த அணிக்கு இந்த வெற்றிக் கோப்பை சென்றுவிடும்.

ஸூக து:க்கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாப-மவாப்ஸ்யஸி

'சுகமும் துக்கமும், லாபமும் நஷ்டமும், வெற்றியும் தோல்வியும் சமமென்று நினைத்து, போருக்காகவே போர் செய்' என்கிறது கீதை. விளையாடுவது, விளையாட்டுக்காகவே! அதனுடைய வெற்றி தோல்வி நம்மைப் பாதித்துவிடக்கூடாது!''

ரகு பொறுமையாகக் கேட்டுக்கொண்டான். கண்களை அழுந்தத் துடைத் துக் கொண்டான். தெளிவு பிறந்ததுபோலும்! ''ஸாரி அங்கிள்! நான் கொஞ்சம் பாலன்ஸ் தவறிட்டேன்'' என்றான் பெரிய மனுஷன்போல.

தன்னை உணர்ந்துகொள்ளும் எவனும் பெரிய மனுஷன்தானே!