Saturday, March 24, 2012

பணியிடத்தில் கிடைக்கும் பாராட்டு அல்லது விமர்சனம்

புகழ்ச்சி - இகழ்ச்சி, இன்பம் - துன்பம், ஏற்றம் - இறக்கம் என வாழ்க்கையில் மாறி மாறி வருகின்ற விஷயங்களை நடுநிலையோடு கையாளக் கற்றுக் கொண்டோமெனில், வாழ்க்கை தெளிந்த நீரோடையைப் போல இருக்கும். இது ஒன்றும் தத்துவார்த்தமான விளக்கமல்ல, அனுபவப்பூர்வமான உண்மை.

தேபோல பணி இடத்தில் பிறர் நம்மை பாராட்டும்போதோ அல்லது குறை சொல்லும்போதோ அதை எப்படி ஏற்றுக் கொள்கிறோம், அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம் தன்னம்பிக்கையும், பணியில் வளர்ச்சியும் அமையும்.

பணியிடத்தில் கிடைக்கும் பாராட்டு அல்லது விமர்சனம் இவை இரண்டையுமே பிறர் நமக்கு தரும் ஃபீட்பேக் ஆகத்தான் பார்க்க வேண்டும். இப்படி பார்த்தால் மட்டுமே அவற்றால் நாம் பாதிக்கப்படாமல் நல்ல பாடங்களை கற்றுக் கொள்ள முடியும்.

விமர்சனங்களை கையாள்வதுதான் கடினம், பாராட்டுகளை கையாள என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். நிறைய சூழ்நிலைகளில் பாராட்டுகள் நேரடியாகவோ அல்லது சரியான விதத்திலோ கிடைப்பதில்லை. உதாரணத்திற்கு, நீங்கள் குழு முயற்சியோடும் கவனத்தோடும் தயாரித்த அறிக்கையைப் படித்துவிட்டு உங்கள் மேலதிகாரி 'குட்' என்று ஒரே வார்த்தையில் அவர் பாராட்டை தெரிவிக்கக்கூடும். இந்த பாராட்டு மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். ஆனால், அந்த அறிக்கையில் அவரை கவர்ந்த விஷயங்கள் என்னென்ன? உங்கள் எழுத்துத்திறனா? தகவல்களை ஒருங்கிணைத்த விதமா? தெளிவான கருத்தாக்கமா? என்பதை அறிந்தால் மட்டுமே உங்கள் பலம் என்ன? அதை மேலும் வளர்த்துக் கொள்வது எப்படி? என்று புரிந்து கொள்ள முடியும்.

தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்வது எவ்வளவு அவசியமானதோ, அதே அளவு வெற்றிகளில் இருந்தும் பாடங்களை கற்றுக்கொள்வது அவசியம். பிறர் நம்மை பாராட்டும்போது அதை காது கொடுத்துக் கேட்டு, அவர்களை கவர்ந்த நம் குணங்கள், திறன்கள் என்ன? என்பதை அறிந்து கொண்டால் மட்டுமே இது சாத்தியம்.


ஆனால், சில சமயங்களில் தன்னடக்கம் என்ற போர்வையில் நமக்கு கிடைக்கும் பாராட்டுகளை ஏற்றுக்கொள்ள தயங்குகிறோம். பாராட்டுகள், நம் முயற்சிகளை, செயல்திறனை அதிகரிக்கும் ஊக்கிகள் போல. எனவே, உங்கள் மேலதிகாரியோ அல்லது சகபணியாளரோ உங்களை பாராட்டினால் அதை புன்னகையோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அந்த பாராட்டு உங்கள் செயல்திறனுக்கு ஒரு ஊக்கி என்று கூறி நன்றி சொல்லுங்கள். அந்த செயலை மேலும் சிறப்பாகச் செய்து முடிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்கள் கருத்துக்களையும் கேட்டறியலாம்.

பாராட்டுகள் உற்சாகம் தரும் ஊக்க மருந்து என்றால், விமர்சனங்கள் நம்மை உறுதியாக்கும் நோய் எதிர்ப்பு மருந்துகள் போல. இப்படிச் சொல்வதன் மூலம் நம்மை நோக்கி வரும் எல்லா விமர்சனங்களும் நியாயமானவை என்றோ, அவற்றைக் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ அர்த்தமில்லை. எல்லா விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்க வேண்டும், அவ்வளவுதான்.

பெரும்பாலான சமயங்களில் விமர்சனங்களை நாம் கேட்க விரும்பாததன் காரணம், அவை நமக்கு கசப்புணர்வையும் தாழ்வு மனப்பான்மையையும் தருவதினால்தான். ஆனால், உண்மை என்ன தெரியுமா? விமர்சனங்களைக் கேட்பதினால் அல்ல, அவற்றை நம் ஆழ்மனது ஏற்றுக் கொள்வதினால்தான் இத்தகைய உணர்வுகள் ஏற்படுகின்றன.

விமர்சனங்களை கண்டு ஓடுபவர்கள் ஒரு வகை என்றால், எல்லா விமர்சனங்களையும் உடனே ஏற்றுக்கொள்கிறவர்கள் இன்னொரு வகை. இவை இரண்டுமே தவறுதான். சரி, விமர்சனங்களை சரியானபடி கையாள நாம் என்ன செய்ய வேண்டும்?

முதலில் விமர்சனங்களை கண்டு ஒளியாமல் அவற்றைத் துணிவோடு எதிர்கொள்ளுங்கள். பிறர் உங்கள் திறன் பற்றியோ, செயல்கள் பற்றியோ  விமர்சிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வுகளை கவனியுங்கள். உங்களுக்குள் ஏற்படும் அந்த உணர்வு என்ன? அது கோபமா? கவலையா? எரிச்சலா? துக்கமா? என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த உணர்வைப் புரிந்து கொள்வதின் மூலம் விமர்சனங்களை இன்னும் துணிச்சலாக உங்களால் எதிர்கொள்ள முடியும். சலனமில்லாமல் புரிந்துகொள்ளவும் உதவும்.

பெரும்பாலான சமயங்களில் உங்கள் மேலதிகாரியின் விமர்சனத்திற்கான உங்கள் செயல் திருத்தத்தை (Corrective Action) விட உங்கள் ரியாக்ஷனே முக்கியமானதாகக் கருதப்படும். எனவே, அத்தருணத்தில் உங்கள் ரியாக்ஷனை கட்டுப்படுத்த உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்துவது அவசியம்.

விமர்சனங்கள் சில சமயங்களில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லாமல் உங்கள் சுயமரியாதையைப் பாதிக்கும் வகையில் இருக்கக்கூடும். அந்த சமயங்களில்கூட உணர்ச்சி வசப்படாமல் அந்த விமர்சனங்களின் மையக் கருத்து என்ன? அதை கூறுபவரின் நோக்கம் என்ன? என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். விமர்சனங்களை பொறுமையாக கேட்ட பின், தனிமையில் அந்த விமர்சனங்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அவற்றில் நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்களையும், நிராகரிக்க வேண்டிய விஷயங்களையும் பட்டியலிடுங்கள். அவற்றை உங்கள் நம்பகமான நண்பரிடமோ, வழிகாட்டியிடமோ பகிர்ந்து கொண்டு அவர்களது கருத்தைக் கேட்டு அறியுங்கள்.

கடுமையான விமர்சனங்கள் நியாயமானதாக இருக்கும்போது, அவை நம்மிடம் தோல்வி மனப்பான்மையை ஏற்படுத்தக்கூடும். இதை தவிர்க்க ஒரே வழி, 'இந்த உலகில் முழுமையானவர்கள் என்று யாருமே இல்லை' என்று புரிந்துகொள்வதுதான். அதேசமயம் 'மாற்ற முடியாத குறைபாடு என்று எதுவுமே இல்லை' என்பதை நினைவில் கொண்டால், எந்த சூழ்நிலையிலும் தாழ்வுமனப்பான்மை வராது.

வங்கிக் கடன்: கட்டாயம் கிடைக்க 10 ரகசியங்கள்!


தமிழகத்தில் சமீப காலமாக வங்கிகளின் வாராக் கடன் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக, கல்விக் கடனும், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்களும் வாராக் கடனாக மாறி வருகிறது. இந்நிலையில், இனி யார் கடன் கேட்டு வந்தாலும் அவர்களின் பின்னணியை முழுமையாக விசாரித்தபிறகே, கடன் தருவது என்கிற முடிவுக்கு வங்கிகள் வந்துள்ளன.

ந்த இக்கட்டான நிலையில் நீங்கள் கடன் கேட்டு விண்ணப்பித்தால், உங்கள் கடன் மனு தள்ளுபடி ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. உங்கள் கடன் மனுவை வங்கிகள் தள்ளுபடி செய்யாமல் இருக்க, உங்களுக்கு கட்டாயம் கடன் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:

1. இதற்கு முன் வங்கி கிரெடிட் கார்டு அல்லது வேறு ஏதாவது கடனுக்கான மாதத் தவணையை சரியான தேதியில் கட்டாமல் அபராதத்துடன் கட்டியிருந்தால், உங்கள் கடன் மனு தள்ளுபடி ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இதற்கு நியாயமான காரணத்தை எடுத்துச் சொன்னால், உங்களுக்கு நிச்சயம் கடன் கிடைக்கும்.

2. உங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகை, சரிவர பராமரிக்கப்படவில்லை என்று தெரியவந்தால், காசோலை கொடுத்து பணம் இல்லாமல் திரும்பி இருந்தால் உங்களுக்கு கடன் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. இங்கேயும் நியாயமான காரணம் இருந்தால் எடுத்துச் சொல்லி, கடன் பெறுவதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்.  

3. எந்த வங்கியில் கடன் வாங்கியிருந்தாலும், எந்த கிரெடிட் கார்டு கடன் இருந்தாலும் அவற்றை நீங்கள் சரியாகத் திரும்ப கட்டாத பட்சத்தில் உங்கள் பெயர் சிபிலில் இடம் பெற்றுவிடும். சிபிலில் உங்கள் பெயர் வந்து விட்டால், உங்கள் கடன் மனு நூறு சதவிகிதம் தள்ளுபடி ஆகும். முதலில் அந்த கடனை கட்டி, சிபிலில் இருந்து வெளியே வந்தால் மட்டுமே மீண்டும் உங்களுக்கு கடன் கிடைக்க வாய்ப்புண்டு.

4. கடந்த மூன்றாண்டு களில் நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனில், உங்கள் கடன் மனு நிராகரிக் கப்படும். எனவே, வரித் தாக்கல் செய்துவிட்டு, வங்கி வாசலை மிதிப்பதே சரி.    

5. ஒருவருடைய சம்பாத்தியத்தில்       40 சதவிகிதம் மாதத் தவணை கட்டும் அளவுக்கு மட்டுமே கடன் கிடைக்கும். நீங்கள் ஏற்கெனவே வேறு சில கடன் வாங்கியிருந்து, அதற்கு மாதத் தவணையாகப் பெரும் பணம் செலுத்தும் பட்சத்தில் உங்களுக்கு கடன் கிடைக்காது. எனவே, மற்ற கடன்களை முதலில் அடைத்துவிட்டு, புதிய கடனை கேட்டால் நிச்சயம் கிடைக்கும்.

6. அதிக தொகை கடனாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, மனைவி அல்லது மகன்/மகளை இணை விண்ணப்பத்தாரராக (சிஷீணீஜீஜீவீறீநீணீஸீt) காட்டுகிறார்கள் பலர். இவர்களில் யாரேனும் ஒருவர், வாங்கிய கடனை சரியாக திரும்பக் கட்டவில்லை என்கிற விவரம் சிபில் அறிக்கை மூலம் தெரிய வந்தால், உங்கள் கடன் மனு தள்ளுபடியாகும். எனவே, உங்கள் இணை விண்ணப்பத்தாரர் ஏற்கெனவே வாங்கிய கடனை சரியாகத் திரும்ப கட்டியிருக்கிறாரா என்று பாருங்கள்.  

7. இணை விண்ணப் பத்தாரர் சகோதரர், சகோதரி, நண்பராக இருந்தாலும் உங்கள் கடன் மனு தள்ளுபடியாக வாய்ப்பிருக் கிறது. மனைவி, கணவர், பெற்றோரை மட்டுமே இணை விண்ணப்பத்தாரராக வங்கிகள் ஏற்றுக் கொள்ளும்.

8. ஒருவர் ஒரு வேலைக்குச் சேர்ந்து மிகச் சில ஆண்டுகளே ஆகியிருந்தாலும் கடன் மனு தள்ளுபடி ஆவதற்கு வாய்ப்புள்ளது. பணி நிரந்தரமாகி மூன்றாண்டுகள் கடந்திருந்தால் மட்டுமே கடன் கிடைக்கும்.

9. நண்பர்கள் அல்லது உறவினர்கள் என யாராவது வாங்கிய கடனுக்கு நீங்கள் கேரண்டர் கையெழுத்து போட்டு, அவர் அந்த கடனை சரியாக கட்டவில்லை எனில், உங்களுக்கு கடன் கிடைக்காது. நீங்கள் கேரண்டர் கையெழுத்து போட்டவர் கடனைத் திரும்பக் கட்டினால் மட்டுமே உங்களுக்கு கடன் கிடைக்கும்.  

10. ஏற்கெனவே கடன் வாங்கி சரியாக திரும்பக் கட்டாமல் போன ஒருவரின் வீட்டு முகவரியும், உங்கள் வீட்டு முகவரியும் ஒன்றாக இருந்தால் உங்களுக்கு கடன் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. இப்படி ஒரு குழப்பம் நடந்திருப்பது உங்களுக்குத் தெரிந்தால், அதை ஆதாரத்தோடு எடுத்துச் சொல்லுங்கள். அப்போதுதான் உங்களுக்கு கடன் கிடைக்கும்.

விஷயங்களைச் சொல்லி விட்டோம், இனி சரிப்படுத்திக் கொள்ள வேண்டியது நீங்கள்தான்!

இன்வெர்ட்டர்: என்னென்ன கவனிக்க வேண்டும்?

மின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் இச்சமயத்தில், இன்வெர்ட்டர்களை விற்கும் நிறுவனங்களும், வியாபாரிகளும் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், ஒரு மாதத்தில் 15 இன்வெர்ட்டர்களே விற்பனையான கடையில், இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட இன்வெர்ட்டர்கள் விற்பனையாகிறது. இந்நிலையில் புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் அதை எப்படி பராமரிப்பது என்பது குறித்து இன்வெர்ட்டர் இன்ஜினீயரும் கொங்கு இன்ஜினீயர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான கே.பெரியசாமியிடம் கேட்டோம்.

''இன்வெர்ட்டர்களில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, சைன் வேவ் இன்வெர்ட்டர். இரண்டாவது, ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர். இந்த இரண்டு வகையிலும் குறைந்த பட்சம் 250 வாட்ஸ், 400 வாட்ஸ் என இரண்டு வகை உண்டு. 250வாட்ஸில் ஒரு விளக்கு, ஒரு ஃபேன் இயங்கும். 400 வாட்ஸில் இரண்டு விளக்கு, இரண்டு ஃபேன் இயங்கும்.

இந்த இரண்டுமே பெரும்பாலும் இப்போது நடைமுறையில் இல்லை. இப்போது இருப்பது 650 வாட்ஸ் இன்வெர்ட்டர்கள்தான். இதில் ஒரு ஃபேன், ஒரு விளக்கு, ஒரு டி.வி. இயங்கும். 850 வாட்ஸ் கொண்ட இன்வெர்ட்டர்தான் நடுத்தர மக்களுக்கும், சிறுதொழில் செய்பவர்களுக்கும்  அதிகம் பயன்படும். இன்றைய நிலையில் அதிகம் விற்பனை ஆகக்கூடிய இன்வெர்ட்டரும் இதுதான். இதில் ஐந்து விளக்குகள், நாலு ஃபேன் அல்லது டி.வி. அல்லது கம்ப்யூட்டர் அல்லது மிக்ஸியை இயக்கலாம்.  

பொதுவாக இன்வெர்ட்டர்கள் எல்லாமே தானாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம் தானாகவே நின்று விடும். இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால், மின்சாரத் திலிருந்து அதுவாகவே சார்ஜ் ஆகிக் கொள்ளும். இதனால் இன்வெர்ட்டர், பேட்டரி இரண்டையுமே கரன்ட் கனெக்ஷனில்தான் வைத்திருக்க வேண்டும்'' என்றவர், இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டார்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

தேவைக்குத் தகுந்தபடி இன்வெர்ட்டர் மாடல்களை தேர்வு செய்ய வேண்டும்.  

மூன்று மணி நேரம் கரன்ட் கட் ஆகிற பகுதிகளில், அதற்கு ஏற்றார்போல மின்சாரத்தை சேமிக்கக் கூடிய பேட்டரிகளை தேர்வு செய்வது நல்லது.

இன்வெர்ட்டருக்கு அதிக டிமாண்ட் நிலவும் இச்சமயத்தில் இன்வெர்ட்டருக்கான பேட்டரி என்று சொல்லி, வேறு ஏதாவது ஒரு பேட்டரியை நம் தலையில் கட்டிவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, கவனமாக இருப்பது அவசியம்.  

நீண்ட காலமாக இன்வெர்ட்டர் தயாரித்து வரும் நிறுவனங்களின் இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரிகளை வாங்கலாம்.  

இன்வெர்ட்டர் வாங்கும் போது அந்த நிறுவனத்தின் சர்வீஸ் எப்படி இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்கள் வாங்குவதைவிட சைன்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்குவது நல்லது. ஏனெனில், சைன்வேவ் இன்வெர்ட்டர் நம் வீட்டுக்குத் தேவையான அளவு மின்சாரத்தை முழுமையாகத்  தரும். இதனால், எலெக்ட்ரானிக் பொருட்கள் கெட்டுப் போகாது. ஆனால், ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்கி பயன்படுத்தும்போது ஃபேன், மிக்ஸி மாதிரியான எலெக்ட்ரானிக் பொருட்களில் இரைச்சலான சத்தம் வரும். இதனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது.

பராமரிப்பது எப்படி?

இப்போது மின்தட்டுப்பாடு அதிகமிருந்தாலும், இந்த பிரச்னை இன்னும் சில மாதம் கழித்து கொஞ்சம் தணியலாம். அந்த சமயத்தில், இன்வெர்ட்டரை பூட்டி, அப்படி ஒரு ஓரத்தில் வைத்து விடக் கூடாது.  மாதம் ஒருமுறையேனும் கிடைக்கும் மின்சாரத்தை நிறுத்திவிட்டு, இன்வெட்டர் மின்சாரத்தை பயன்படுத்தினால் இன்வெட்டரும் பேட்டரியும் பழுதடையாமல் இருக்கும்.

பேட்டரியில் இருக்கும் டிஸ்டில்ட் வாட்டர் குறையும் பட்சத்தில், அதை கட்டாயம் நிரப்பி வைக்க வேண்டும். இதை செய்யாவிட்டால், இன்வெட்டர் இயங்காது. பேட்டரிகளில் டியூப்ளர் மற்றும் ஃப்ளாட் பிளேட்னு இரண்டு வகை இருக்கிறது. இதில்  டியூப்ளர் பேட்டரி பயன்படுத்துவது நல்லது. இது நீண்ட காலத்துக்கு உழைக்கும். மற்ற பேட்டரிகளைவிட பராமரிப்புச் செலவும் குறைவுதான்'' என்றார்.

இன்வெர்ட்டர் பற்றிய அடிப்படை விஷயங்களைச் சொல்லிவிட்டோம். இனி இதை பின்பற்ற வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்!