Monday, January 2, 2017

சித்திரை முதல் பங்குனி வரை எந்தக் கீரை கூடாது?

கீரை என்றாலே நம்மில் பலர் முகம் சுளிப்பது உண்டு. குழந்தைகளோ, `கீரையா? அய்யோ... ஆளை விடுங்கப்பா!' என தலைதெறிக்க ஓட்டம் பிடிப்பார்கள். உணவுப் பட்டியலில் அன்றாடம் சேர்த்துக்கொள்ளவேண்டிய உணவுகளில் கீரைகளுக்கு முக்கியமான இடம் உண்டு. காய்கறிகளை பூ, காய், தண்டு, இலை, கிழங்கு என்று ஐந்து வகையாகப் பிரிக்கலாம். இவற்றில், எளிதாகவும் விரைவாகவும் செரிமானம் ஆவது கீரைகள்தான். அதோடு, கீரைகளில் ஏராளமான சத்துக்களும் பலன்களும் கொட்டிக்கிடக்கின்றன.  

எந்தக் கீரை கூடாது

 

கீரைகளில் இரும்பு, கால்சியம், பீட்டாகரோட்டின், வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் ஆகியவை அதிகம் உள்ளன. இவற்றில், பச்சையம் நிறைந்து உள்ளது. லெசித்தின் (Lecithin), கரோட்டினாய்டு (Carotenoid), ஆல்கலாய்டு (Alkaloid) மற்றும் ஆக்சாலிக் அமிலம் (Oxalic Acid), சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம் போன்ற கனிமங்களும் நிறைந்து உள்ளன. கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கும்.

நோய்களிடம் இருந்து நம்மை, `வருமுன் காக்கும் உணவு' என்று கீரைகளைச் சொல்லலாம். மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கக்கூடியவை. உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் தேவையான அனைத்துச் சத்துக்களும் இவற்றில் உள்ளன.

நாம் உண்ணும் உணவில் உள்ள ஒரு பகுதி உடல் வளர்ச்சிக்கும், ஒரு பகுதி செரிமானத்துக்கும் உதவுகிறது. மற்றொரு பகுதி சத்தாக மாறி, உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. மீதி உள்ள பகுதி உடலில் உள்ள நச்சுப்பொருட்களை, மலமாக வெளியேற்றுகிறது.

உடல் வளர்ச்சி மற்றும் உடலுக்குத் தேவையான எனர்ஜி!

ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு சத்து உள்ளது. தினமும் கீரை சாப்பிடுவது சாத்தியமற்றது என்றால், அவ்வப்போது கிடைக்கும் விதவிதமான கீரைகளைக் சாப்பிடலாம். பதினைந்து நாட்களாவது கீரைகளை, காலையில் தனி உணவாகச் சாப்பிடுவது நல்லது. அவற்றில் உள்ள சத்துக்கள் உடல் வளர்ச்சிக்கும், உடலுக்குத் தேவையான எனர்ஜியைப் பெறவும் உதவுகின்றன.

இரவில் கீரையை சாப்பிடக் கூடாது? ஏன்?

இரவில் தூக்கத்தாலும் குளிராலும் செரிமான சக்தி குறைவாக இருக்கும். இரவில் கீரை சாப்பிட்டால், வயிற்றில் பூச்சிகள் உண்டாகலாம். செரிமானக் கோளாறு, வயிற்று எரிச்சல், வயிற்று மந்தம் போன்றவை ஏற்படலாம். செரிமானம் ஆக, மலத்தை வெளியேற்ற, வெறும் கீரைகள் மட்டும் உதவுவது இல்லை. எனவே, கீரைகளை ஏதேனும் காய்கறிகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால், செரிமானக் கோளாறு ஏற்படாமல் இருக்கும். `கீரைகளைத் தனியாக உண்பதால், பல நன்மைகள் கிடைக்கின்றன' என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.


 

கீரைகளை வாங்குவதற்கு முன்னர் கவனிக்கவேண்டியவை...

புதிதாகவும் பசுமையாகவும் இருக்க வேண்டும்.

இலைகள் மஞ்சள் நிறமாக இருந்தால், அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

இலைகள் வாடி, வதங்கி இருக்கக் கூடாது. அதிகம் ஓட்டை உள்ள இலைகளாக இருந்தால், அந்தக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.

பூச்சியால் அதிகம் தாக்கப்பட்ட கீரைகளை வாங்கக் கூடாது. ஆர்கானிக் கீரைகளாக பார்த்து வாங்குவது நல்லது.


எந்தப் பருவத்துக்கு, எந்தக் கீரை கூடாது?

கோடைகாலத்தில் ( சித்திரை, வைகாசி) அரைக்கீரை ம ற்றும் புளிச்சகீரையைத் தவிர்க்க வேண்டும்.

காற்று அதிகம் உள்ள காலங்களில் (ஆனி, ஆடி) அரைக்கீரை, கீரைத்தண்டு, சிறுகீரை, பருப்புக்கீரை மற்றும் முள்ளங்கிக்கீரை போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

முன் மழைக்காலங்களில் (ஆவணி, புரட்டாசி) சிறுகீரை, பருப்புக்கீரை, வெந்தயக்கீரை, முள்ளங்கிக்கீரை மற்றும் பசலைக்கீரை ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.

பின் மழைகாலங்களில் ( ஐப்பசி, கார்த்திகை) அகத்திக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை மற்றும் கீரைத்தண்டு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

முன் பனிக்காலங்களில் (மார்கழி, தை) அகத்திக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை மற்றும் முள்ளங்கிக்கீரை ஆகியவை வேண்டாம்.

பின் பனிக்காலங்களில் ( மாசி, பங்குனி) சிறுகீரை, பசலைக்கீரை மற்றும் பருப்புக்கீரையைத் தவிர்க்கலாம்.

பொன்னாங்கண்ணிக்கீரை, கொத்தமல்லிக்கீரை, புதினா, முருங்கைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை போன்றவற்றை எல்லாப் பருவங்களிலும் சாப்பிடலாம்.


 

எந்த நேரத்தில், யாருக்கு கீரை ஆகாது?

இரவில் உண்ணக் கூடாது.

தலைக்குக் குளித்த நாட்களில் சளி, ஆஸ்துமா மற்றும் சைனஸ் உள்ளவர்கள், கீரையை உணவாக எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

கீரையை அசைவ உணவுகளுடன் சேர்த்து உண்ணக் கூடாது. மலச்சிக்கல், செரிமானக் கோளாறு ஏற்படும்.

கபநோய் உள்ளவர்கள் எல்லாப் பருவங்களிலும் கீரை வகைகளைத் தவிர்ப்பது நல்லது.


 

செய்யவேண்டியவை...

தினசரி 50-100 கிராம் அளவு கீரை வகைகளை நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் தினமும் கீரையை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

கீரைகளைச் சமைக்கும் முன்னர், இலைகளை ஆய்ந்து, சுத்தமான குளிர்ந்த நீரில் நன்கு அலச வேண்டும். நீரை வடிகட்டி, பின் பயன்படுத்த வேண்டும்.

கீரையை வேகவைக்க குறைந்த அளவு நீரைப் பயன்படுத்த வேண்டும்.

கீரையை சோடா பவுடர் உடன் சேர்த்துச் சமைக்கக் கூடாது. மாறாக, சிறிதளவு புளித் தண்ணீர் தெளித்துப் பயன்படுத்தலாம்.


உங்களுடைய டவுன்லோடு ஹிஸ்டரியை யார் நினைத்தாலும் பார்க்க முடியும்

சாதாரணமா பக்கத்துல இருக்குற ஒருத்தர் போன கொடுத்துட்டு போனாலே வாட்ஸ் அப் ஓப்பன் பண்ணி கேர்ள் ஃப்ரெண்டுக்கு அனுப்புன மெஸேஜ படிச்சுடுவாங்களோனு பயப்புடுறோம். நம்மளோட டவுன்லோட் ஹிஸ்ட்ரி ஒருத்தருக்கு தெரிஞ்சா? அப்படியே ஷாக் ஆக மாட்டோம். ஓசி வை-பைல படம் டவுன்லோட் பண்றது, ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ டோரன்ட்ல தான் பாப்பேன்னு அடம்பிடிக்குறவங்க எல்லாரும் கொஞ்சம் உஷாரா இருங்க. உங்களோட டவுன்லோட் ஹிஸ்ட்ரிய அசால்ட்டா எடுத்து காட்டுது iknowwhatyoudownload.com 

ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒரு தனி IP Address கொடுக்கப்பட்டிருக்கும் அதை வைத்து தான் உங்களோட டவுன்லோட் ஹிஸ்ட்ரியா ஹேக் பண்ண முடியுமாம். இதன் மூலம் நீங்கள் பிட் டோரன்ட்டை பயன்படுத்தி டவுன்லோட் செய்யும் தரவுகளை எளிதில் பெற முடியும். என்ன டவுன்லோட் செய்தீர்கள் என்பதை அறிய முடியும். உங்கள் ஐ.பி அட்ரஸை இந்த தளத்தை திறந்தாலே எடுத்துவிடும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

 டவுன்லோட்  ஹிஸ்டரியை எப்படி பெறுவது?

உங்களுக்கு தேவைப்படுபவரின் IP Address தெரிந்தால் போதும் அவர் பிட் டோரன்ட்டில் டவுன்லோட் செய்த அனைத்து விவரங்களையும் பெற முடியும். உதாரணமாக ஒருவர் அலுவலகத்தில் எதாவது ஒரு படத்தை வேலைக்கு நடுவே டவுன்லோட் செய்கிறார் என்றால் எத்தனை மணிக்கு எந்த படத்தை எத்தனை மெமரியில் டவுன்லோட் செய்துள்ளார் என்பதை காட்டிவிடும்.

அவரது IP Address தெரியவில்லை என்றால் எதாவது ஒரு பாடல் அல்லது செய்தியின் லின்க்கை எடுங்கள். அதனை இந்த தளத்தில் உள்ள ட்ராக் IP Address  பகுதியில் ட்ரான்ஸ்ஃபார்ம் செய்யுங்கள். அது ஒரு சுருக்கப்பட்ட லின்க்கை தரும் அந்த லின்க்கை உங்கள் நண்பருக்கு அனுப்பி வைய்யுங்கள். அதன் மூலம் உங்கள் நண்பரது IP Address கிடைத்துவிடும்.

கிடைத்த IP Address மூலமாக பிட் டோரன்ட்டில் உங்கள் நண்பர் டவுன்லோட் செய்த படம், பாடல், வீடியோ என அனைத்து தகவலும் கிடைத்துவிடும். பிட் டோரன்ட் உங்கள் IP Address ஐ உங்களது ஒவ்வொரு டவுன்லோடுடன் மேட்ச் செய்து வைத்திருக்கும். அதன் மூலம் ஈஸியாக உங்களது டவுன்லோட் விவரங்களை அள்ளித்தருகிறது. 

டவுன்லோட் ஹிஸ்ட்ரி

என்ன ஆபத்து?

1. இந்த தளத்தில் இருந்து தரப்படும் லின்க் உங்கள் டவுன்லோட் ஹிஸ்டரியை தருகிறது என்றாலும் இவர்களும் ஹேக்கர்களே. மற்ற ஹேக்கர்களும் உங்கள் IP Address-க்குள் நுழைந்து உங்களது பர்சனல் தகவல்களை திருட வாய்ப்புள்ளது. 

2. டோரன்ட் டவுன்லோட் செய்திருந்தால் மட்டுமே உங்கள் டவுன்லோட் ஹிஸ்டரி தெரியும். ஆனால் உங்களது IP Address ஐ எந்த ரிஸ்க்கும் இல்லாமல் இந்த தளம் கொடுத்துவிடுகிறது. இதுவும் சற்று ஆபத்தானது தான்.

3. சிலரது வங்கி கணக்கு, பர்சனல் வீடியோக்கள் கூட இதன் மூலம் இழக்க வாய்ப்புள்ளது. 

தடுப்பது எப்படி?

நம்பகத்தன்மையான நபரிடம் இருந்து வந்தாலும் அவசரப்பட்டு க்ளிக் செய்யாதீர்கள் எந்த தகவலாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ தளத்தை அணுகி பெறுங்கள். ஒற்றை க்ளிக்கில் உங்கள் தகவல்களை இழக்காதீர்கள். டோரன்ட் போன்ற தளங்கள் மூலம் டவுன்லோட் செய்வதை தவிருங்கள். உங்கள் பர்சனல் பர்சனலாகவே இருக்கும்.

iknowwhatyoudownload.com இந்த தளம் ஒரு ஸ்பை தளமாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய டூல் உங்கள் மற்றும் உங்கள் நண்பரின் டவுன்லோட் ஹிஸ்டரியை வெளிச்சம் போட்டு காட்டிவிடும். பார்த்து உஷாரா இருங்க பாஸ்! VPN போன்றவற்றின் மூலம், இதில் இருந்து நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

முதுகுவலியை உண்டாக்கும் அந்த 10 தவறுகள்!


இன்று பல பேருக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை முதுகுவலி. அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள், மார்க்கெட்டிங் வேலையில் இருப்பவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் பருமனானவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் தாக்குகிறது இந்தப் பிரச்னை. நமது அன்றாட வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்றிக்கொண்டு, சில ஆரோக்கியமான பழக்கங்களைக் கடைப்பிடித்தாலே, இந்தப் பிரச்னையில் இருந்து விடுபடலாம். முதுகுவலி ஏற்படக் காரணங்கள் என்னென்ன, இதனைப் போக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிதல்

பெண்கள் ஹைஹீல்ஸ் கொண்ட காலணிகள் அணிவதால், இடுப்புத் தசை அழுத்தப்பட்டு அடிமுதுகில் வலி ஏற்படுகிறது. எனவே, ஹை ஹீல் காலணிகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

பின்பாக்கெட்டில் வைக்கப்படும் பர்ஸ்

பெரும்பாலான ஆண்கள் தங்களது பேன்ட்டின் பின்பாக்கெட்டில் மணிபர்ஸை வைக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். இதனால் தண்டுவடத்தின் ஒரு பக்க டிஸ்க்குகள் அழுத்தப்பட்டு முதுகுவலி ஏற்படுகிறது.

குடல் மற்றும் இரைப்பை பிரச்னைகள்

செரிமானக் கோளாறு, குடல் சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்கள் நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைபார்த்தால் முதுகுவலி எற்பட வாய்ப்பு உள்ளது. இதனைத் தவிர்க்க, குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும்.

நீண்ட நேரம் வாகனம் ஓட்டுதல்

பல மணி நேரம் தொடர்ந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதால், முதுகுத் தண்டுவட டிஸ்க்குகளின் நெகிழ்வு த்தன்மை குறைந்து இறுக்கமாகிறது. இதனாலும் முதுகுவலி ஏற்படலாம். இரு சக்கர வாகனத்தின் பின்சக்கர ஷாக் அப்ஸர்பர்கள் நன்கு செயல்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் மேடு, பள்ளங்களில் பயணிக்கும்போது முதுகுத் தண்டுவட டிஸ்க் ஓரளவு பாதுகாக்கப்படும்.

புகை பிடித்தல்

புகைபிடிப்பதால், முதுகுத்தசை உறுதிக்கு உதவும் ஊட்டச்சத்துகள் அங்கு சென்று சேராமல், முதுகுத்தசை வலுவிழந்துவிடுகிறது. புகைப்பழக்கத்தைக் கைவிட்டவர்களுக்கு நாள்பட்ட முதுகுவலி குணமாகி உள்ளது.

இறுக்கமான ஜீன்ஸ் அணிதல்

இறுக்கமான ஜீன்ஸ் பேன்ட் அணிவதால், அடிமுதுகு மற்றும் புட்டத் தசைகளுக்கு ரத்த ஓட்டம் இல்லாமல் அடிமுதுகு வலி மற்றும் மரத்துப்போகும் உணர்வு ஏற்படுகிறது.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்

எந்தவித சத்துக்களும் இல்லாத நொறுக்குத் தீனிகளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் விளைவாக அடிமுதுகு உட்பட உடலில் பல பாகங்களில் வீக்கம், வலி ஏற்படுகிறது. குறிப்பாக, முதுகுவலி இருப்பவர்கள் வெள்ளை சர்க்கரையை கைவிட்டாலே நல்ல பலன் கிடைப்பதை அனுபவபூர்வமாக உணர முடியும்.

மனஅழுத்தம்

அலுவலக வேலை சுமை, வீட்டுப் பிரச்னைகளால் ஏற்படும் மனஅழுத்தத்தின் விளைவாக முதுகுவலி ஏற்படலாம். தினசரி காலை யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி, முதுகுத் தண்டுவடப் பாதுகாப்புக்கான உடற்பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலமாக முதுகுவலியைப் போக்கலாம்.

குஷன் வைத்த இருக்கை, மெத்தை பயன்படுத்துதல்

அமரும்போதும் படுக்கும்போதும் தண்டுவடம் நேராக இருக்க வேண்டியது அவசியம். குஷன் மெத்தைகள் தண்டுவடத்தை வளையச்செய்யும். மேலும் அசாதாரண நிலைகளில் அமரும்போதும், படுக்கும்போதும் முதுகுவலி ஏற்படுகிறது. முதுகுவலி உள்ளவர்கள் கடினமான படுக்கையில் சிறிய தலையணை வைத்துப் படுப்பது நல்லது. அலுவலகத்தில் காற்றோட்டமான பிரம்பு, தகரம் அல்லது மர நாற்காலியில் அமர்ந்து பணிபுரியலாம்.

கால்சியம் பற்றாக்குறை

மெனோபாஸ் அடைந்த 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு எலும்பு அடர்த்திக் குறைவதால், ஆஸ்ட்ரியோபொரோசிஸ் நோய் அதிகமாகத் தாக்குகிறது. இதனால் தண்டுவடம் வலுவிழக்கிறது. இவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் நீண்டநேரம் நின்று, அமர்ந்து பணிபுரிவதால் முதுகுவலி ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க இவர்கள், தினமும் கால்சியம் நிறைந்த பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.