Saturday, June 1, 2013

பருக்களற்ற பொலிவான முகம் இனி உங்கள் சாய்ஸ்!

டீன்ஏஜ் பருவத்தில், கண்ணாடியின் முன் நின்று 'அழகாக இருக்கிறோமா...' என்று அடிக்கடி முகம் பார்ப்பது சகஜம். முகத்தில் சிறு புள்ளி தெரிந்தாலும், சிணுங்கத் தொடங்கிவிடுவார்கள். தமிழகமெங்கும், வெயிலின் உக்கிரம் உலுக்கி எடுத்ததன் விளைவு பெரும்பாலான 'பரு'வப் பெண்களின் முகத்தில் பருக்கள் தோன்றி, முக வாட்டத்தை அதிகரித்துவிட்டது.  பருக்கள் ஏன் வருகிறது? வந்தால் தடுக்க என்ன வழி? 

 பருக்கள் உருவாகக் காரணங்கள்:

 பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும், வயதானவர்களுக்கும்கூட பருக்கள் தோன்றலாம்.  

 உடலில் இருக்கின்ற கழிவு, அதிகப்படியான உள்ளிடை சுரப்பு போன்றவற்றால் பருக்கள் உருவாகிறது.

 அதிகப்படியான ஹார்மோன் சுரக்கையில், அது தோலின் வழியே வெளியேற முற்படும்போது பருக்கள் ஏற்படுகிறது.

 பித்தம் அதிகரிப்பதாலும் பருக்கள் வரும்.  

 அதிக நேரம் வெயிலில் அலைவதால் ஏற்படும் உஷ்ணம், தூசி கலந்து பருக்களை உண்டாகலாம்.

 எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதால், பருக்கள் வரலாம்.

 சருமத்தை சுத்தமாக வைத்திருக்காவிட்டால், பருக்கள் வரும்.  

 பெரும்பாலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உடலில் உஷ்ணம் அதிகரிப்பதாலும் பருக்கள் வரலாம்.

 தடுக்க சில வழிமுறைகள்:

 நம் பாரம்பரிய வழக்கப்படி, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுதான் இதற்கு சிறப்பான தீர்வு

 நல்லெண்ணெயை உச்சந் தலை, தொப்புள் மற்றும் கால் பெருவிரல் இரண்டிலும் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்த பின் குளிக்கவேண்டும்.

 அதிக சூடு உள்ளவர்கள் சந்தனாதி தைலம் மற்றும் வில்வப்பழத் தைல எண்ணெய்களைப் பயன்படுத்திக் குளிக்கலாம்.

 நீராகாரம், இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை அடிக்கடி குடிக்க வேண்டும். எலுமிச்சை, இஞ்சி, தேன் சேர்த்த சாறுடன் பருக வேண்டும்.

 சின்ன வெங்காயத்தை மோருடன் கலந்து தினமும் மதியம் பருகலாம்.  

 நிறையப் பிஞ்சு வெள்ளரியை அடிக்கடி சாப்பிடுங்கள்.  

 நுங்கு நீரை பருக்கள் இருக்கும் இடத்தில் தடவிவர வேண்டும்.

 சங்கை எலுமிச்சைச் சாறில் இழைத்து பரு உள்ள இடங்களில் பூச வேண்டும். சங்கு கிடைக்காவிட்டால் சங்குபஸ்பம் என்று நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும், அதையும் பயன்படுத்தலாம்.

 சந்தனத்தை நன்றாக இழைத்துப் பூசிவர, பரு காய்ந்துபோகும்.

 குப்பைமேனிக் கீரையுடன் பூசுமஞ்சளை அரைத்து முகத்தில் தேய்க்க, பரு மறைந்துவிடும்.

 சந்தனம், வெட்டிவேர், விலாமிச்சை வேர், கோரைக்கிழங்கு, பாசிப்பருப்பு போன்றவற்றால் தயாரிக்கப்படும் நலுங்கு மாவால்  முகம் கழுவினால், பருவின் வீரியம் கட்டுப்படும்.

 தவிர்க்க வேண்டியவை:

 புளிப்பு, கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளைத் தவிருங்கள்..  

 காரத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.  

 அடுத்தவர் பயன்படுத்திய சோப், டவல் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

 பருக்களை நகத்தினால் கிள்ளக் கூடாது. அப்படிச் செய்தால், பருக்கள் இன்னும் அதிகமாகப் பரவிவிடும்.

 தலையில் பொடுகு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 எளிதாக ஜீரணிக்கக்கூடிய உணவு வகைகளை சாப்பிட வேண்டும்

 அசைவு உணவுகளை இந்தக் காலக்கட்டத்தில் தவிர்க்க வேண்டும். மீன் சாப்பிடலாம்.

   பருக்களற்ற பொலிவான முகம் இனி உங்கள் சாய்ஸ்!

ஊட்டச்சத்து பானத்தால் உயரத்தைக் கூட்ட முடியாது

'அசத்தலான உயரம், ஆரோக்கியமான உடற்கட்டுனு என் பையன் எப்படி வாட்டசாட்டமா இருக்கான் பாரு' என்று உச்சி முகர்ந்து மெச்சும் அளவுக்கு பிள்ளைகள் வளர்வதைப் பார்த்துப் பூரிக்கிறோம். 

பெற்றோர்களின் இந்த எதிர்பார்ப்பை வைத்தே, ''உங்க குழந்தை உயரமா வளரனுமா? எங்க கம்பெனி ஊட்டச்சத்து பானத்தைக் கொடுங்க'' என்ற வகை  விளம்பரங்கள் வருகின்றன. ''எந்த ஒரு ஊட்டச்சத்து பானத்தாலும் உயரத்தைக் கூட்ட முடியாது என்பதுதான் உண்மை.'' 

''உயரத்தை நிர்ணயிக்கும் ஹார்மோன் குறைவாக சுரக்கும்போது குழந்தைகளின் உயரம் குறைகிறது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் மட்டுமே ஓரளவுக்கு சராசரி உயரத்தை அடைய முடியும்.

பல முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்யும், முக்கிய சுரப்பிகளைக் கட்டுப்படுத்தும் மாஸ்டர் சுரப்பி பிட்யூட்டரி. தைராய்டு, பாலின வளர்ச்சி போன்றவை பிட்யூட்டரி பை(கை)யில்தான் உள்ளன. மூளைக்கு கீழே பீன்ஸ் விதை அளவுக்கு பிட்யூட்டரி சுரப்பி இருக்கும்.  தைராய்டு, அட்ரினல், பெண்களுக்கு சினைப்பை, பால் சுரப்பு, ஆண்களுக்கு உயிரணு உற்பத்தியைத் தூண்டுவது உள்பட எட்டு வகையான ஹார்மோன் பிட்யூட்டரியில் இருந்துதான் சுரக்கின்றன. பிட்யூட்டரியை முன் பாகம், பின் பாகம் என இரண்டாகப் பிரிக்கலாம். முன் பாகத்தில் இருந்து ஆறு ஹார்மோன்களும், பின் பக்கத்தில் இருந்து இரண்டு ஹார்மோன்களும் சுரக்கின்றன. ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும்போது பிட்யூட்டரி சுரப்பியில் அதைக் கட்டுப்படுத்த மாத்திரைகள், அறுவை சிகிச்சைகள் உள்ளன. ஆனால், குறைவாக சுரக்கும்போது, ஹார்மோன் ஊசி எடுத்துக்கொள்வது மட்டுமே தீர்வாக உள்ளது.

குரோத் ஹார்மோன்

பிட்யூட்டரியில் இருந்து சுரக்கும் முக்கிய ஹார்மோன் குரோத் ஹார்மோன் எனப்படும் வளர்ச்சியை நிர்ணயிக்கும் ஹார்மோன். ஒருவர் உயரமாக இருக்கவும், உயரம் குறைவானவராக இருக்கவும் முக்கியக் காரணம் இந்த ஹார்மோன்தான். இது பிறவிக்குறைபாடாகவோ, அல்லது பல்வேறு காரணங்களால் இடையிலோ ஏற்படலாம். இந்த ஹார்மோன் குறைபாடானது உயரத்தை மட்டும் பாதிக்காமல், சருமத்தில் மாற்றம், உடல் பருமன் போன்றவற்றையும் ஏற்படுத்தும். மேலும், எதிர்காலத்தில் சர்க்கரை நோய், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. ஒருவர் அந்தந்த வயதுக்குரிய உயரத்தை அடையவில்லை எனில், உடனடியாக மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை செய்து வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டைக் கண்டறிய வேண்டும். இவர்கள், தொடர்ந்து  வளர்ச்சி ஹார்மோனை எடுத்துக்கொள்வதன் மூலம் ஓரளவுக்கு சராசரி உயரத்தை அடைய முடியும். வளர்ச்சி முடியும் காலத்தில் இத்தகைய சிகிச்சைகள் பலன் அளிக்காது. வளர்ச்சி ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது மிகப் பெரிய உதடு, மூக்கு என உடல் அமைப்பே மிகப் பிரமாண்டமாக மாறிவிடும். குரலும் கடினப்பட்டுவிடும். மிக உயரமாக இருப்பார்கள். வளர்ச்சி ஹார்மோனை டைனமிக் ரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். இதை மருந்து மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி, மூளைக் கட்டி, புற்றுநோய்க்கு எடுக்கும் கதிர்வீச்சு சிகிச்சை போன்ற காரணங்களால் பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்படும்.

ப்ரோலாக்டின் ஹார்மோன்

இந்த ஹார்மோன் பேறுகாலத்துக்குப் பிறகு பால் சுரப்பைத் தூண்டுகின்றன. இந்த ஹார்மோன் அதிகம் சுரப்பதால் பெண்களுக்கு குழந்தைப் பேரின்மை, மாதவிலக்கு வராமை, அதிக அளவில் பால் சுரப்பு போன்றவை ஏற்படுகின்றன. எளிய ரத்தப் பரிசோதனையின் மூலம் ப்ரோலாக்டின் அளவைக்  கண்டறிந்து, மருந்து மாத்திரைகள் மூலம் 98 சதவிகிதம் வரை கட்டுப்படுத்தலாம்.

டிஎஸ்எச்

தைராய்டு ஹார்மோன் சுரப்பைத் தூண்டும் ஹார்மோனுக்கு தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் என்று பெயர். இந்த சுரப்பில் குறைபாடு ஏற்படும்போது தைராய்டு ஹார்மோன் சுரப்பு கூடுதலாகவோ, குறைவாகவோ சுரக்கின்றது. இதை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து, மாத்திரை மூலம் சரிப்படுத்தலாம்.

ஃபாலிக்கிள் ஸ்டிமுலேட் ஹார்மோன்

இரு பாலினத்துக்கும் பொதுவான ஹார்மோன் இது. ஆண்களுக்கு இது விதைப்பையில் விந்தணு உருவாக்கத்துக்கும், பெண்களுக்கு சினைப்பையில் முட்டை உருவாக்கத்துக்கும் உதவி புரிகிறது. இந்த ஹார்மோன் குறைவாக சுரக்கும்போது வழக்கமான பாலின வளர்ச்சி இருக்காது. பூப்பெய்தல் மிகவும் தாமதம் ஆகும். உயரம் அதிகரிக்கும். குழந்தையின்மைப் பிரச்னை வரும். இதை ஊசி மருந்துகள் செலுத்துவதன் மூலம் சராசரி அளவுக்குக் கொண்டுவரலாம்.

குழந்தைப் பருவ பற்கள் பராமரிப்பு

குழந்தைப் பருவத்திலேயே பற்களைச் சரியாகப் பராமரித்துவிட்டால், வாலிப வயதில் வசீகர அழகும், ஆரோக்கியமான வாழ்வும் நிச்சயம்.

  குழந்தைகள் பிறந்த ஆறு முதல் ஏழு மாதங்களில் பால் பற்கள் வளருவதால், அவர்களுக்கு ஈறு பகுதியில் எரிச்சலாக இருக்கும். அந்த நேரத்தில், பெரும்பாலான குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.  இந்தப் பால் பற்களின் வளர்ச்சி ஏழாம் வயதில்தான் முடிவடையும். அந்த நேரத்தில் குறைந்தது 20 பற்களாவது குழந்தைகளுக்கு முளைத்திருக்க வேண்டும். ஏழாம் வயதின் முடிவில்தான் பால் பற்கள் விழ ஆரம்பித்து நிரந்தரமான பற்களின் வருகை ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் குழந்தைகளின் தாடை மற்றும் பற்களின் வேர் நன்றாகக் கடினமாக ஆரம்பிக்கும்.

  சிறு வயதில் பால் பற்களின்  வளர்ச்சி மற்றும் அதன் வடிவமைப்பு  ஒழுங்காக அமையாததன் விளைவால் ஒழுங்கற்ற அமைப்பு, பலம் இழப்பு, அடிக்கடி பல் விழுதல் போன்ற பிரச்னைகள் உண்டாகும்.

  சிறு வயதில் வளரக்கூடிய பால் பற்களின் வளர்ச்சியைப் பொறுத்துதான் ஏழு வயதிற்கு மேல் வளரக்கூடிய நிரந்தரப் பற்களின் வளர்ச்சியும் அமையும்.

  குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததும், அலட்சியமாக இருக்காமல், பெற்றோர்கள் குழந்தையின் பற்களை தங்கள் விரலால் துலக்கி சுத்தம் செய்ய வேண்டும். அதோடு, குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக விற்கப்படும் பற்பசையையும், பிரஷையும் வாங்கித் தந்து, அதைப் பயன்படுத்தச் சொல்லி பழக்கவேண்டும்.  அவர்கள் பயன்படுத்தும் பற்பசையில் கால்சியம் மற்றும் ஃப்ளூரைடின் அளவும் அதிகமாக இருக்க வேண்டும்.

 பல் துலக்கும்போது 20 ஸ்ட்ரோக்கை மீறாமலும், இரண்டு நிமிடங்களுக்கு மேல் மிகாமலும், பல் துலக்கும் பழக்கத்தைச் சொல்லித்தர வேண்டும். குறைந்த நேரத்தில் பல் துலக்கி, அதிக நேரம் வாய் கொப்பளிக்க வேண்டும்.

 கை சூப்பும் பழக்கம் உள்ள குழந்தைகளை,  ஒரு வயதிற்குள் அந்தப் பழக்கத்தை மறக்கச் செய்யவேண்டும்.  

  குழந்தைகளை சாக்லேட் சாப்பிட அதிரடியாகத் தடை போடாமல், சாப்பிடுகிற எண்ணிக்கையை மெதுவாகக் குறைக்க வேண்டும்.

 அதிகப்படியான இனிப்பு உண்பதால் சொத்தைப் பல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதுபோன்ற கிருமிகளுக்குப் பல்லை இரையாக்காமல் இருக்க, சாப்பிட்டவுடன் நிறையத் தண்ணீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். அதே நேரத்தில் நிறையத் தண்ணீரும் அருந்த வேண்டும்.

  இரவு படுக்கும் முன் பாலில் சர்க்கரைச் சேர்க்காமல் கொடுங்கள். காரணம், சர்க்கரையில் உள்ள இனிப்பு பற்களில் தங்கி, சொத்தைப் பற்களை உருவாக்கிவிடும்.

 படுக்கும் முன்பு பல் துலக்குவது அவசியம்.

 பற்கள் பாதுகாப்புடன் இருக்க, ஆறு மாத இடைவெளியில் பல் மருத்துவரை அணுகுங்கள். மறதி, வேலை உள்ளிட்ட காரணங்களால் இதைச் செய்ய முடியாவிட்டால், ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பற்களைக் காட்டலாம்.

 பற்கள் பளிச்!

 உணவுகளை மென்று அசைபோட்டுச் சாப்பிடும் பழக்கத்தைச் சொல்லிக் கொடுங்கள்.  இதனால், கன்னப் பகுதியும் ஒட்டிப் போகாமல் அழகாக இருக்கும்.  

 

 குழந்தைகள் விளையாடும்போது பல் உடைந்து போக வாய்ப்புகள் அதிகம். இதனைத் தவிர்க்க கடுமையான பயிற்சியில் ஈடுபடும்போது, குத்துச் சண்டை விளையாட்டில் பயன்படுத்தும் மௌத் கார்டினைப் பயன்படுத்தச் சொல்லலாம்.

 பற்களின் வளர்ச்சிக்கு கால்சியம்  நிறைந்த உணவு முக்கியம். தினமும் உணவில் கீரை வகைகள், பட்டாணி, சுண்டல், ஆப்பிள், பச்சைக் காய்கறிகள், திணை வகைகள் போன்றவற்றை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்