Sunday, November 4, 2012

இன்ஷூரன்ஸ் பாலிசி, மதிப்பெண் பட்டியல், ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, கிரயப் பத்திரம், கிரெடிட்/டெபிட் கார்டு, மனைப் பட்டா, பாஸ்போர்ட் தொலைந்தால்...

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

இன்ஷூரன்ஸ் பாலிசி!

யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த     15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.  

நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.  

மதிப்பெண் பட்டியல்!

யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்?  

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.

மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.  

கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை' என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

ரேஷன் கார்டு!

யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.  

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை  

எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த  45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை:  சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை  அனுப்பி வைக்கப்படும்.

டிரைவிங் லைசென்ஸ்!

யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.

எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

பான் கார்டு!

யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு      45 நாட்கள்.

நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.  

பங்குச் சந்தை ஆவணம்!

யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.  

எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

கிரயப் பத்திரம்!

யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

டெபிட் கார்டு!

யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

கணக்குத் தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100.

கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

மனைப் பட்டா!

யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?

நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.20.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.  

பாஸ்போர்ட்!

யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.4,000.

கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

கிரெடிட் கார்டு!

யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை: 15 வேலை நாட்கள்.

நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும். 

Thursday, November 1, 2012

மனைவியின் அழகு விழிகளை தாண்டி என்ன இருக்கிறது போதை வஸ்துவில்?


போன வாரம் என்னிடம் ஒரு தண்ணி பார்ட்டி வந்தார். 32 வயசுதான் இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை ஆசாமி. பசையான வேலை. அவர் வந்து  உட்காரும்போதே ஏதோ பெயர் தெரியாத பழத்தின் வாசனை மூக்கில் அறைந்தது.
வந்த அதே வேகத்தில்... ''சார் இப்பல்லாம் என்னால் செக்ஸ்ல முழுமையா ஈடுபட முடியலை. அதான் உங்கக் கிட்டே வந்தேன்'' என்றார்.
நானும் எடுத்த எடுப்பிலேயே, ''உங்களுக்கு எப்படி போதைப் பழக்கம் வந்தது'' என்று கேட்டேன். கொஞ்சம்போல அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துக்கு உள்ளானவர் நிதானமாய்ப் பேச ஆரம்பித்தார்.
''போதையில் ரொம்ப நேரம் என்ஜாய் பண்ணலாம்னு என் நண்பன் ஒருத்தன் கல்யாணம் ஆன புதுசுல சொன்னான். அப்ப ஏற்பட்ட பழக்கம். இப்போ அது இல்லாம முடியலை சார்'' என்றார்.
எல்லாம் உள்ளதும் போச்சடா நொள்ளக்கண்ணா கதைதான்!
இன்று செக்ஸுக்கு நெருக்கமான விஷயமாகப் பலரும் போதைப் பொருட்களைத்தான் நாடுகின்றனர். தன்னுடைய உணர்வுகளைத் தணித்துக்கொள்ள நினைக்கும் பலர் பெண்ணை நாடுவதற்கு முன்பு தேடுவது போதை வஸ்துகளைத்தான். மும்பை போன்ற பெருநகரங்களில் இப்போது எல்லாம் 'ரேவ் பார்ட்டிகள்' என்கிற சட்டத்துக்குப் புறம்பான கொண்டாட்டங்கள் சகஜமாகிவிட்டன. இத்தகைய பார்டிகளின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? சரளமாகப் புரண்டோடும் போதை வஸ்துகள்!
இன்றைய தலைமுறை இளைஞர்கள் இத்தகைய பார்ட்டிகளுக்குச் சொல்லும் காரணம். ''வேலைப் பளு சார். ஓவர் ஸ்ட்ரெஸ்... சும்மா ரிலாக்சேஷனுக்காகத்தான்...'' இன்னும் பலர் சமூகத்துடனான விசாலமானத் தொடர்புகளுக்கு இதுபோன்ற பார்ட்டிகள் மிகப் பெரிய வாசலாக அமைகின்றன என்றும் சொல்கிறார்கள். எப்படி எல்லாம் பேசுகின்றன நாக்குகள்? மனிதனுக்குக் காரணம் சொல்லக் கற்றுக்கொடுக்கவா வேண்டும்?
உண்மையில், போதைச் சமாச்சாரங்களை உட்கொண்டால் அதிக நேரம் உறவுகொள்ள முடியும் என்பது ஒரு மூட நம்பிக்கை. போதைப் பொருட்களை உட்கொள்வது உடலுறவுத் திறனை எந்த விதத்திலும் அதிகரிக்காது. அதே சமயம் தன்னுடைய இணையிடம் வரம்பு மீறி நடந்துகொள்ளத் தூண்டும். தன் மீது உயிரையே வைத்திருக்கிறவள் என்கிற நல்லெண்ணத்தை எல்லாம் துடைத்து,  வக்கிரப் புத்தியைக் கொடுக்கும். அது மட்டும் அல்ல; நாளடைவில் செக்ஸ் மீது உள்ள ஆர்வத்தையே அது துண்டித்துவிடும். அடுத்து ஆண்களுக்கு விறைப்புத் தன்மையில் பிரச்னையை ஏற்படுத்தும். கூடவே ஹார்மோன் குறைபாட்டையும் உருவாக்கும். குடிக்கு அடிமையான பல ஆண்களுக்கு, ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட உயிரணுக்களே விந்தில் இருக்கும். போதைப் பழக்கம் உள்ள பெண்ணாக இருந்தால் மாதவிடாய்ச் சுழற்சியில் சிக்கலும் கருமுட்டை வெளியாவதில் பாதிப்பும் ஏற்படும்.
பொதுவாக, போதைக்கு அடிமையாவதை ஒரு நோயாகத்தான் குடும்பத்தினர் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டும்.
நண்பர்களே, உறவுக்கும் மனிதர்களுக்கும்  இடையில் உணர்வுதான் இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் போதைப் பொருள் இருக்கக் கூடாது. போதைக்கு அடிமையானவர்கள் ஒரு நிமிஷம் யோசித்துப் பாருங்கள்... உங்களையே நம்பி ஆசை ஆசையாக அன்பை அள்ளித் தரும் உங்கள் மனைவியின் ஆசை மொழிகளையும் அழகு விழிகளையும் தாண்டி அப்படி என்ன இருக்கிறது போதை வஸ்துவில்?

( Source:- Dr. D. Narayana Reddy in Doctor Vikatan)


Click the title to read the message given below:


கொஞ்சமா குடிச்சா தப்பில்லையாமே




.




நிமோனியா யாரை தாக்கும், அறிகுறிகள், சிகிச்சை


ச்சிளம் குழந்தைகளையே பெரும்பாலும் தாக்கும் ஒரு கொடிய நோய் நிமோனியா. இது சாதாரண காய்ச்சல் போலத் தெரிந்தாலும், இதன் தாக்கம் அதிகம். 

நிமோனியா சில சமயம் பெரியவர்களையும் ஆட்டிப்படைக்கும். நிமோனியா காய்ச்சலின் பாதிப்புகளையும் அதில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிகளையும் நமக்கு நினைவூட்டும் விதமாக 'நிமோனியா தினம்' நவம்பர் 12-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

நிமோனியா குறித்த தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவம¬னையின் நுரையீரல் மற்றும் சுவாச நோய் நிபுணர் டாக்டர்  எஸ்.கல்பனா.

நிமோனியா எப்படி ஏற்படுகிறது?

காற்றின் மூலமாக நுரையீரலில் சில கிருமிகள் பரவுவதால் ஏற்படும் ஒருவகைத் தொற்று இது. இந்தக் கிருமிகள் நுரையீரலைத் தாண்டி, ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுவதும் பரவிவிடும் ஆபத்து இருக்கிறது. இதனால், அதிகக் காய்ச்சல் ஏற்படும். ஆரம்பத்தில் சாதாரண சளித் தொந்தரவு போலத் தோன்றினாலும், தொடர்ந்து காய்ச்சல், இருமல், நெஞ்சு வலி, மூச்சுவிடுதலில் சிரமம் ஆகியவை ஏற்பட்டு, கிருமிகளின் ஆதிக்கம் கட்டுக்கடங்காமல் போய், பாதிப்புக்கு உள்ளானவர்களைக் கவலைக்கிடமாக்கிவிடும்.

நிமோனியா யார் யாரையெல்லாம் தாக்கும்?

போதுமான காலம் தாய்ப் பால் குடிக்காத குழந்தைகள், சத்துக் குறைபாடு, குறிப்பாக 'வைட்டமின்' ஏ குறைபாடு உள்ள குழந்தைகள், பிறக்கும்போதே எடைக் குறைவுடன் பிறக்கும் குழந்தைகள், அதிக நெருக்கடியான பகுதிகளிலும் மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகள், சிகரெட், விறகு அடுப்பு போன்றவற்றில் இருந்து வரும் புகையை அதிகமாக சுவாசிக்கும் குழந்தைகள் ஆகியோரை நிமோனியா தாக்கும்.

பெரியவர்களையும் நிமோனியா தாக்கும். புகை மற்றும் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்தவர்கள், சர்க்கரை நோய் மற்றும் எய்ட்ஸ் உள்ளவர்கள் ஆகியோர் நிமோனியா தாக்குதலுக்கு ஆளாகக்கூடும்.

மாசுபாடான காற்றை சுவாசித்தாலும் நிமோனியா நோய் தாக்கும்.

அறிகுறிகள்!

இருமல், காய்ச்சல், வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத் திணறல், உதடுகள் வெளிறிப்போதல் அல்லது நீலம் பூத்தல், நடுக்கத்துடன் குளிர், நெஞ்சு வலி, பசியின்மை, சோர்வு, சாப்பிட இயலாமை, இவை எல்லாம் நிமோனியாவின் அறிகுறிகள்.

சிகிச்சை!

நிமோனியாவை அதன் தாக்கத்தின் அடிப்படையில் இரு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று நிமோனியா, மற்றொன்று தீவிர நிமோனியா. முதல் வகை நிமோனியா பாதிப்புக்கு உள்ளானவர்கள் மருத்துவரைச் சந்தித்து ஐந்து நாட்கள் வீட்டில் இருந்தபடியே முறைப்படி சரியான நேரத்தில் மருந்துகளைச் சாப்பிட்டால், உடனடியாகக் குணம் கிடைக்கும். அப்படி குணமாகவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை மீண்டும் அணுகி அடுத்த கட்ட சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

தீவிர நிமோனியா தாக்குதலுக்கு உள்ளானவர்களை, அவர்களின் ரத்த நாளங்களில் 'ஆன்டிபயாடிக்' மருந்துகளைச் செலுத்தியும் பிராண வாயு சிகிச்சை முறை மூலமாகவும் குணப்படுத்திவிடலாம்.

பொதுவாக நிமோனியா பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிகமான நீர் வறட்சி ஏற்படும். அதை ஈடு செய்யும் விதமாக, அவர்களுக்கு அதிகமான திரவ உணவுகளை வழங்க வேண்டும்.

நிமோனியா வராமல் காப்பது எப்படி?

பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் கட்டாயமாகத் தாய்ப் பால் கொடுக்கப்பட வேண்டும்.

அதன் பிறகு இரண்டு வயது வரை தாய்ப் பாலோடு சத்து நிறைந்த திட உணவுகளையும் சீராகக் கொடுக்க வேண்டும்.

பிறந்த குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பு ஊசி உள்ளது. குழந்தை பிறந்து, ஒன்றரை மாத, இரண்டரை மாத மற்றும் மூன்றரை மாத இடைவேளையில் அந்த தடுப்பு ஊசிகளைத் தவறாமல் போட வேண்டும்

வைட்டமின் ஏ மற்றும் ஸிங்க் ஆகிய சத்து மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் இருக்கும் வீட்டில் யாரும் சிகரெட் பிடிக்கக் கூடாது.

சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் குழந்தைகளைக் கொஞ்சக் கூடாது.அவ்வப்போது குழந்தை வயதுக்கு ஏற்ற சரியான எடையுடன் இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.இது எல்லோருக்குமே பொருந்தும். குறிப்பாகக் கைக்குழந்தைகள் இருக்கும் வீட்டில் உணவு சமைக்கும் முன்பும், சாப்பிடப்போகும் முன்பும் தவறாமல் கைகளை சோப் போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். கண்ட இடங்களில் எச்சில் துப்பக் கூடாது.

தும்மும்போதும் இருமும்போதும் கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும்.

நிமோனியாவைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டாலே போதும். நிமோனியாவுக்கு எதிரான போரில் நாம் பாதி ஜெயித்த மாதிரி!


(Source: Doctor Vikatan)