Thursday, May 23, 2013

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு

ஆசிரியராக பணிபுரியத் தேவையான தகுதிகளைச் சோதித்தறியவும், திறனுள்ள ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும் ஆசிரியர் தகுதித் தேர்வை அரசு நடத்துகிறது. (அண்மைத் தகவல்: ஆக.17, 18-ல் ஆசிரியர் தகுதித் தேர்வு; ஜூன் 17 முதல் விண்ணப்பம்)

தேசிய அளவிலான தேர்வை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் நடத்துகிறது. மாநில அளவிலான தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலுள்ள கல்வி வாரியம் நடத்துகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. 1-5 ஆம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு முதல் தாள் ஆகும். 6-8ஆம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு இரண்டாம் தாள் ஆகும். 1-8 ஆம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் முதல் மற்றும் இரண்டாம் தாள் இரண்டையுமே எழுதலாம்.

இடைநிலை ஆசிரியர்கள் (Secondary Grade) என அழைக்கப்படும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானத் தகுதித் தேர்வுக்கு ஆசிரியர் பட்டய படிப்பை முடித்திருக்க வேண்டும்.

ஐந்து முதல் எட்டாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரன்டாம் தாளை எழுத ஏதேனும் இளநிலை பட்டப் படிப்போடு (B.Sc) இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பும் (B.ed) படித்திருக்க வேண்டும். ஆசிரியர் பட்டய படிப்பு இறுதியாண்டு மற்றும் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டிருப்பவர்களும் தேர்வு எழுதலாம்.

இரண்டு தாள்களுமே கொள்குறி வகை வினாக்களைக் கொண்டவை. இரண்டு தாள்களுமே 150 வினாக்களைக் கொண்டவை. ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் கொண்டவை. தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படுவதில்லை.

முதல் தாளில் கேள்விகள் பின்வரும் ஐந்து பிரிவுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை
மொழித்தாள்-I
மொழித்தாள்-II
கணிதம்
சுற்றுச்சூழலியல்

ஒவ்வொரு பிரிவிலும் 30 வினாக்கள் கொண்டிருக்கும்.

இரண்டாம் தாளில் வினாக்கள் நான்கு பிரிவுகளின் அடிப்படையில் இருக்கும்

குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை
மொழித்தாள்-I
மொழித்தாள்-II
(அ) கணிதம் மற்றும் அறிவியல் (கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்)
(ஆ) சமூகவியல் - (சமூகவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்)
(இ) பிற ஆசிரியர்கள் இதில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதினால் போதுமானது.

முதல் மூன்று பிரிவுகளும் ஒவ்வொன்றும் 30 மதிப்பெண்களையும் கொண்டிருக்கும். நான்காவது பிரிவு 60 வினாக்களைக் கொண்டிருக்கும்.

அறுபது சதவிகித மதிப்பெண்கள் அதாவது 90 மதிப்பெண்களைப் பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இந்தத் தகுதிச் சான்றிதழ் ஏழு ஆண்டுகளுக்குச் செல்லக்கூடியது.

ஒரு தேர்வர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வுகளை எழுதலாம். ஏற்கனவே தேர்ச்சி பெற்ற தேர்வர், தனது மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள மீண்டும் தேர்வுகள் எழுதலாம். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதாலேயே அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்கப்படுவார்கள் என்பதற்கு உறுதியில்லை, ஆசிரியர் பதவிக்கு தகுதியுடையவர் என்பது மட்டுமே பொருளாகும். இத்தகுதிச் சான்றிதழை வைத்து அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணிபுரிய பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாநிலங்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்றவர்கள், அந்தந்த மாநிலங்களில் மட்டுமே ஆசிரியராகப் பணிபுரியத் தகுதியுடையவர்கள், பிற மாநிலங்களில் சென்று பணிபுரிய முடியாது.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவித்தது முதலே பல விமர்சனங்களைச் சந்தித்து வந்தது. முதல் தேர்விலேயே தேர்ச்சியடைந்தவர்களின் எண்ணிக்கை கவலைக்குரியதாக இருந்ததால், மீண்டும் துணைத் தேர்வு நடத்தப்பட்டது. முதல் தேர்வில் தேர்ச்சி விழுக்காடு குறைந்ததற்குக் காரணம் நேரக்குறைவே எனப் பலரால் குற்றம்சாட்டப்பட்டது. அது அடுத்து நடந்த துணைத் தேர்வில் பிரதிபலித்தது, நேரம் இரட்டிப்பாக்கப்பட்டது. 90 நிமிடங்களில் 150 வினாக்களுக்கு விடையளிப்பது எல்லாம் சாத்தியமே இல்லை என்பதை உணர்ந்தே அத்தகைய மாற்றம் அறிவிக்கப்ப்பட்டது.

இனிவரும் அடுத்தடுத்த தேர்வுகளில் தகுதி பெறுவதற்கான மதிப்பெண் விழுக்காடு குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கலாம். அதேபோல எல்லா பிரிவினருக்கும் ஒரே தேர்ச்சி அளவு என்பதையும் பலரும் விமர்சித்திருக்கிறார்கள். தேசியத் தகுதித் தேர்வைப் போல தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கும் ஒவ்வொரு தேர்ச்சி அளவை நிர்ணயிப்பது போன்ற மாற்றங்களையும் அடுத்தடுத்த தேர்வுகளில் எதிர்பார்க்கலாம்.

கீழ்காணும் சுட்டியில் மாதிரி வினா விடை, தேர்வுபயிற்சிமுறைகள் உள்ளது. அந்த இணைப்பை சொடுக்கி வலைதளத்தில் நுழையலாம்.