பெரும்பாலான பெண்கள், தங்கள் காதலனை/கணவனை உள்ளது உள்ளபடி காண்பதே இல்லை. அவர்கள் வாழ்வில் அதுவரை சந்தித்த மற்ற ஆண்களின் நன்னடத்தைகள் எல்லாமே அவனிடம் இருந்தே ஆகவேண்டும் என்கிற, எதிர்பார்ப்பு எனும் கண்ணாடி வழியாகத்தான் பார்க்கிறார்கள்.
உதாரணத்துக்கு தேவியை எடுத்துக் கொள்வோம். தேவி, தன் கணவனிடம் எதிர்பார்த்தது யார் யாரைத் தெரியுமா?
அவளுடைய ஃபேவரைட் சினிமா கதாநாயகனின் தோற்றக் கவர்ச்சி.
அவளுடைய அப்பாவின் அன்புகாட்டும் பாணி.
அவளுடைய சிநேகிதியின் காதலன் செய்யும் அதே டைப்பான ரொமான்ஸ்.
அவள் உயர் அதிகாரியைப் போன்ற பக்குவம்.
அவளுடைய ஆண் நண்பர்களைப் போன்ற நகைச்சுவை உணர்வு.
அவளுடைய அக்காளின் மகனைப் போன்ற கள்ளம் கபடமற்ற மனசு.
நீங்களே சொல்லுங்கள்... இது கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா? அதெப்படி ஒருவன் 'ரெடிமேடா'கவே இவ்வளவு சிறப்பம்சங்களும் பெற்றவனாக இருப்பான்?
ஏன் உங்கள் ஃபேவரைட் சினிமா கதாநாயகனும்கூட ஒரே நாளில், எடுத்த எடுப்பிலேயே மிகவும் கச்சிதமாகவா இருந்தான்? இல்லையே..! பல சமயங்களில் ஆரம்ப காலத்தில் ஹீரோக்கள் எல்லோருமே கோமாளித்தனங்கள் பலவும் செய்து, பிறகு கற்று உணர்ந்து தெளிந்து, தமக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக்கொண்டு ஜெயிக்கிறார்கள். ஆக, ஆரம்பத்தில் அவர் எப்படி இருந்தார் என்பதை வைத்து, நாம் அவரை எடை போடுவதில்லை, போகப் போக எப்படி டெவலப் ஆகிறார் என்பதை வைத்துதான் மரியாதையே.
அவ்வளவு ஏன்... நீங்கள் 'ஆஹா ஓஹோ' என்று புகழ்ந்து வியக்கும் உங்கள் அப்பாவை எடுத்துக் கொள்ளுங்களேன். தனக்குத் திருமணமான முதல் நாளே அவர் அத்தனை புரிதலும் அன்பும் சொட்ட சொட்டவா இருந்தார்? உங்கள் அம்மாவைக் கேட்டுப் பாருங்கள்... அல்லது தாய்வழிப் பாட்டியைக் கேட்டுப் பாருங்கள்.
''அந்தக் காலத்துல உங்க அப்பன் ஆடுன ஆட்டம் இருக்கே, என் பொண்ணை என்ன பாடு படுத்தினான் இந்த மனுஷன்! இப்ப என்னவோ யோக்கியனாட்டம் இருக்கான்'' என்று உங்கள் அப்பாவின் வண்டவாளத்தை எல்லாம், தண்டவாளம் ஏற்றிவிடுவார் பாட்டி. அப்போதுதான் உங்களுக்குத் தெரிய வரும், உங்கள் ஆதர்ச ஆண்மகனான உங்கள் அப்பாவுமே ஆரம்பத்தில் அசமந்தமாக இருந்து, பிறகு பட்டு திருந்தி, மகளிடமாவது ஒழுங்காக பழகக் கற்றுக் கொண்ட ஒரு சராசரி ஆசாமி என்று.
உங்கள் தோழியின் காதலன் ஆகட்டும், தித்திக்க தித்திக்க பேசி வேலைகளை வாங்கிக் கொள்ளும் உங்கள் பாஸ் ஆகட்டும்... எல்லா ஆண்களுமே பிறவியில் சூப்பர்மேன்கள் இல்லை. அவர்கள் வாழ்வில் வந்த பெண்களின் பக்குவமாக்குதல் படலத்தால், காலப்போக்கில் இப்படி மாறியவர்களே!
அதனால் எடுத்த எடுப்பிலேயே உங்கள் காதலன்/கணவன் உங்கள் எல்லா எதிர்பார்ப்புகளையும் நீங்கள் சொல்லாமலேயே புரிந்துகொண்டு, உங்களோடு நகமும் சதையுமாக இருப்பான் என்று கனவு கண்டு காலத்தை வீணடிக்காதீர்கள். அவன் ஆரம்பத்தில் அரைகுறையாகத்தான் இருப்பான். ஆனால், நீங்கள் சளைக்காமல் பாராட்டி, ஊக்குவித்து, அவன் குறைகளை நாசூக்காக கையாண்டு, அவனுடைய ஆண் ஈகோவை சேதம் செய்யாமல், அவனை மென்மையாக கையாண்டீர்கள் என்றால்... அவனால் ஆகாதது எதுவுமே இல்லை.
அப்படி தொடர்ந்து நீங்கள் அவனை லாகவமாக கையாண்டு வந்தால்... திடீரென்று ஒரு நாள், அவன் நீங்கள் எதிர்பார்த்த குணங்கள் அனைத்தும் நிரம்பிய ஆணாக மாறி நிற்பான். அதுவரை, ஒரு ரிங் மாஸ்டர் கொஞ்சம்கூட அலுத்துக் கொள்ளாமல், தனக்கு கொடுக்கப்பட்ட சிங்கத்தை மெள்ள மெள்ள பழக்கி, சாகசங்களைப் புரிய பயிற்றுவிப்பது போல, நீங்களும் 'அவன் இப்படித்தான். அதற்காக அவனை கோபித்துக் கொள்ளக் கூடாது. குறை சொல்லிக்கொண்டே இருந்து அவனுடைய மென்மையான மனதை காயப்படுத்தக் கூடாது' என்கிற புரிதலுடனும், 'சரி, இவனை எப்படி மாற்றி எனக்குப் பிடித்தது மாதிரி ஆக்கிக்கொள்வது, மாறாத குணங்களை எப்படி சலனமில்லாமல் ஏற்றுக்கொள்வது..?' என்று முதிர்ச்சியோடும் சிந்தித்தால் போதும்... அநாவசிய சண்டை... சச்சரவு எதுவுமே எட்டிப்பார்க்காது. அதன் பிறகு, குடும்பத்தின் பிற உறுப்பினர்கள்... நண்பர்கள் நாட்டாமைகளாக வந்து நின்று நடத்தும் பஞ்சாயத்துகளும் தேவையேபடாது!