'ஸ்லோ அண்டு ஸ்டெடி வின்ஸ் த ரேஸ்' - ஆமை, முயலை ஜெயித்த கதையைக் கேட்டிருக்கிறீர்களா? இதுவும் சாத்தியம்தான் என்று நமக்கு உணர்த்துகிற இந்தக் கதையிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்ன? சுறுசுறுப்பான முயல் சற்று தூரம் ஓடிச் சென்று சோம்பேறித்தனமாக தூங்கியதால் ஆமை வென்றது என்று சொல்வதைவிட, ஆமை தொடர்ந்து கவனம் சிதறாமல் சிறுகச் சிறுக முன்னேறியதால் வெற்றி பெற்றது என்பதுதான் முக்கியமாக நாம் அறிந்துகொள்ளவேண்டிய படிப்பினை. வாழ்க்கைக்கு உண்டான முன்னேற்றத்தின் ரகசியமும் இதுதான் என்று எடுத்த எடுப்பிலேயே நமக்கு எளிதாக உணர்த்திவிடுகிறார் 'த காம்பவுண்ட் எஃபெக்ட்' புத்தகத்தின் ஆசிரியர்.
வங்கியில் தொடர்ந்து டெபாசிட் செய்யப்படும் மிகச் சிறிய அளவிலான தொகை பல வருடங்கள் கழித்து காம்பவுண்ட் எஃபெக்ட் காரணமாக எப்படி கோடி ரூபாயாக மாறுகின்றதோ, அதேபோல், வாழ்க்கையில் வெற்றியைத் தரும் 'காம்பவுண்ட் எஃபெக்ட்' என்பது நம்முடைய முன்னேற்றத்திற்குத் தேவையான சிறுசிறு புத்திசாலித்தனமான தேர்வுகளைச் செய்து, அதைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்தால், பின்னாளில் மிகப் பெரிய வெற்றியை நிச்சயம் தரும் என்பதைச் சொல்வதுதான் இந்தப் புத்தகம்.
''தொடர்ச்சியாக நாம் சேர்க்கும் தொகை கோடியாகப் பெருகுகிற மாதிரி, பல ஆண்டுகள் கழித்து எண்ணிப்பார்க்க முடியாதப் பெரும் வெற்றியை அடைய இன்றைக்கு நாம் செய்யப் போகும் சிறு செயல்கள் பேருதவி செய்வதாக இருக்கும். இந்தச் செயல்களைச் செய்ய மிகுந்த பிரயத்தனம் ஏதும் எடுக்கவேண்டியதாயிருக்காது. சிறு சிறு புத்திசாலித்தனமான செயல்களை எந்த ஒரு சூழலிலும் நிறுத்திவிடாமல் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குச் செய்துவந்தால் மிகப் பெரிய மாற்றத்தைச் சந்திக்க முடியும்'' என்று அடித்துச் சொல்கின்றார் ஆசிரியர்.
மூன்று நண்பர்களின் கதையை லாவகமாகச் சொல்லி இந்தத் தத்துவத்தைப் புரியவைக்க முயல்கின்றார் ஆசிரியர். லேரி, ஸ்காட், பிராட் என்ற மூன்று பேரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள். திருமணமானவர்கள். லேரி எப்பவுமே செய்வதையே செக்குமாடுபோல் திரும்பத் திரும்பச் செய்பவர். அவ்வப்போது என்ன வாழ்க்கை! போரடிக்குது என்று சொல்லிவிட்டு, மீண்டும் அவர் எப்போதும் வழக்கமாகச் செய்வதையே செய்பவர்.
ஸ்காட்டோ வேறு மாதிரி. யோசித்து யோசித்து தன்னுடைய செய்கைகளில் மாறுதல்களைக் கொண்டுவந்து அதைத் தொடர்ந்து செய்பவர். சமீபத்தில் அவர் தினமும் ஒரு பத்து பக்கமாவது ஒரு புத்தகத்தில் படிக்கவேண்டும், பிடித்த மியூசிக்கையோ அல்லது ஒரு பாசிட்டிவ் விஷயத்தை போதிக்கும் சிடியையோ அலுவலகத்துக்கு தினமும் போகும்போது கேட்கவேண்டும் என்ற கொள்கையைக்கொண்டு அதை செயல்படுத்தி வருபவர். இப்படி நாளுக்கு பத்து பக்கம் ஒரு புத்தகத்தில் படிக்கும்போது ஒருநாள் ஒரு ஹெல்த் புத்தகத்தைப் படிக்கும்போது, நீங்கள் தினசரி 125 கலோரியை உணவில் குறைத்தால் நாளடைவில் உடம்பு மிகவும் ஃபிட்டாக இருக்கும் என்று படித்து, அவருடைய உணவுமுறையை ஆராய்ந்து சில மாற்றங்களைச் செய்து தினமும் 125 கலோரியைக் குறைத்து உட்கொள்ள ஆரம்பித்தவர், தொடர்ந்து அதைச் செய்தும் வந்தார்.
பிராட் ரொம்பவும் சிந்தித்து செயல்பட மாட்டார். தற்சமயம் அவர் ஒரு பெரிய சைஸ் எல்.சி.டி. டிவியை வாங்கியுள்ளார். அவருக்கு டிவி பார்ப்பது என்றால் கொள்ளைப் பிரியம். அதிலும் சமையல் குறிப்புகளைக் கேட்டு அவர் கையாலேயே சமைத்து ருசிப்பார். இப்படி அன்றாடம் சமைத்து குத்துமதிப்பாக 125 கலோரியைச் சேர்த்து ருசித்தார் என்று வைத்துக்கொள்வோம். அவர் வீட்டில் ஒரு மினிபாரும் உண்டு. ஆனால், வாரத்துக்கு ஒரு நாள் மட்டும்தான் குடிப்பார். இன்றிலிருந்து பத்து மாதத்திற்கு இந்த மூன்று நபர்களை ட்ராக் செய்தால் பெரியதொரு வித்தியாசம் இருக்காது. 18 மாதம் கழித்து இவர்களுக்கு இடையே சிறியதொரு மாறுதல் தெரியும். 31 மாதங்கள் கழித்து மாறுதல்கள் பெரிதாகும். பிராட் தினமும் 125 கலோரிகள் சேர்த்துதான் சாப்பிட்டார். அதனால், 31 மாத முடிவில் அவர் கிட்டத்தட்ட 15 கிலோ எடை கூடியிருப்பார். 15 கிலோ ஒன்றுமில்லை! குறைச்சுக்கலாம் என்கின்றீர்களா?
பிராடின் எடையை ஸ்காட்டின் எடையுடன் ஒப்பிட்டால், ஸ்காட்டைவிட பிராட் 30 கிலோ அதிகம் இருப்பார். ஸ்காட் எடையையும் குறைத்து, படித்தப் புத்தகத்தையும் கேட்ட சொற்பொழிவுகளினால் கிடைத்த அறிவையும் வைத்து ஆபீஸில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு புரமோஷன் வாங்கி பதவி உயர்ந்தார். பிராடோ ஓவர் வெயிட்டாகி, ஆபீஸில் சோம்பேறி என்ற பட்டம் வாங்கி வீட்டுக்கு வந்து, டிவியே கதி என்று கிடந்ததால் மனைவியும் சண்டை போட்டு விவாகரத்தும் வாங்கிப் போய்விட்டாள்.
லேரி என்ன ஆனார் என்கின்றீர் களா? அவர் வழக்கம்போல இருக்கின்றார். அவ்வப்போது புலம்பிக்கொண்டு! அதே இடத்தில்!
இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களாகிய கலோரி குறைப்பு, புத்தகப் படிப்பு, சொற்பொழிவுக் கேட்பு போன்றவைதான் நாளடைவில் நம்முடைய முன்னோக்கிய பயணத்தையோ அல்லது அதே இடத்தில் நிற்பதையோ அல்லது பின்னோக்கிய பயணத்தையோ முடிவு செய்கின்றது என்று சொல்கின்றார் ஆசிரியர். காம்பவுண்ட் எஃபெக்ட் உங்களுக்குள்ளும் வேலை செய்யவேண்டும் என்று நீங்கள் ஆசைப் பட்டால் நீங்கள் செய்யவேண்டியது என்ன என்று ஆசிரியர் பட்டியலிடுகின்றார்.
1) நீங்கள் உங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் விஷயம் என்று அடிக்கடி சொல்லிப் புலம்பும் விஷயங்களை
பட்டியலிடுங்கள். (ஸ்மார்ட்டா இல்லை, அனுபவம் இல்லை, சரியாக வளர்க்கவில்லை!, அப்பா நல்ல ஸ்கூலில் சேர்க்கவில்லை!). இதில் ஏதாவது ஒன்றை மாற்றியமைக்க இப்போது என்ன செய்யவேண்டும் என்று யோசித்து சிறுகச் சிறுக அதைச் செயல்படுத்துங்கள்.
2) உதாரணத்தில் சொன்ன, ஸ்காட் மாதிரி இருங்கள். எப்போதுமே கையில் அரை டஜன் சின்னச் சின்ன பெரிய முயற்சியோ, கஷ்டமோ படவேண்டாத முன்னேற்றச் செயல்பாடுகளை வைத்து செயல்படுங்கள்.
3) பிராட் போல் வாழாதீர்கள். எந்தெந்த விஷயங்கள் உங்களைப் பின்னோக்கி எடுத்துச் செல்கின்றது என்பதைப் பட்டியலிட்டு அதைச் செய்வதைத் தவிருங்கள் (டிவி, சாப்பாடு போன்றவை).
4) கடந்த காலத்தில் எந்தெந்த விஷயங்களில் நீங்கள் சிறந்த செயல்பாட்டை கொண்டவர் என்று பட்டியலிடுங்கள். அந்த சிறப்பு செயல்பாட்டு விஷயங்களை நீங்கள் எந்த விதத்தில் தற்போது கையாளுகிறீர்கள் என்று பாருங்கள். இதெல்லாம் நாம லெஃப்ட் ஹேண்டில் செய்கின்ற வேலை என்று அசால்டாக இருக்கின்றீர்களா? அல்லது அந்த ஸ்கில்லை இம்ப்ரூவ் பண்ண எதையாவது செய்து வருகின்றீர்களா என்று பார்த்து அசால்டாக இருந்தால் இம்ப்ரூவ் பண்ண முயற்சியுங்கள்.
அதிர்ஷ்டம் வாய்ந்த மனிதனாக இருக்க ஒரு முழுமையான ஃபார்முலாவையும் இந்தப் புத்தகத்தில் தந்துள்ளார் ஆசிரியர். மிகச் சாதாரணமாக நாம் பார்க்கும் கைப்பிடி போர்வெல் பம்ப்பை உதாரணம் காட்டி ஆசிரியர் அசத்தலான விளக்கத்தைத் தருகின்றார். போர்வெல்லில் பாதாளத்தில் உள்ள நீரை இறைக்க அடிபம்ப்பில் சிறிய ஃபோர்ஸ் கொண்டு தொடர்ந்து சீரான வேகத்தில் இயக்கவேண்டியுள்ளதோ, அதேபோல்தான் வாழ்க்கையில் வெற்றி பெற மிகச் சிறிய முயற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும் என்கின்றார்.
எதிர்பாராத விஷயங்களைச் செய்யுங்கள். எதிர்பாராத பலன் பெறுவீர்கள் என்று சொல்லும் ஆசிரியர் பொதுவாக அனைவரும் செய்யும் விஷயங்களைச் செய்வதன் மூலம் அனைவரும் அடையும் பலனையே அடைய முடியும் என்கின்றார்.
முன்னேற்றத்தை இலகுவாகப் பெறவிரும்பும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் இது! Download this useful book at the following link: