எம்.பி.ஏ.வோ அல்லது எம்.பி.பி.எஸ். படிப்போ, அதை எந்த கல்லூரியில் படிக்கிறோம் என்பது முக்கியம். கல்விக் கடன் கிடைப்பது முதல் எதிர்காலத்தில் வேலை கிடைப்பது வரை நாம் பயிலும் கல்லூரியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. எனவே, எல்லாவகையிலும் சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது ஒரு மாணவனின் கடமை. அதனை அக்கறையோடு செய்துதரவேண்டியது பெற்றோர்களின் பொறுப்பு. சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி? எதன் அடிப்படையில் அந்தக் கல்லூரி நிறுவனம் சிறந்தது என்பதைத் தீர்மானிப்பது?
மூன்று விஷயங்கள்!
''இன்றைய பெற்றோர்களில் பெரும்பாலானவர்கள், தொலைக்காட்சியில் வரும் கல்லூரிகள் தொடர்பான விளம்பரங்களைப் பார்த்தோ, உறவினர்களின் கட்டாயத்தின் அடிப்படையிலோதான் தங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியைத் தீர்மானிக்கிறார்கள். இது முற்றிலும் தவறு.
பொதுவாக, கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது முக்கியமான மூன்று விஷயங்களைக் கவனிக்கவேண்டும். கல்லூரி ஏ.ஐ.சி.டி.இ-யிடம் (All India Council for Technical Education - AICTE) அனுமதி பெற்றிருக்கிறதா?, கல்லூரிகளில் உள்ள வசதிகளை ஆய்வு செய்து பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கி இருக்கிறதா?, கல்லூரிகளில் சிறப்பு வசதிகள் ஏதேனும் இருந்து அதற்கான சிறப்பு அங்கீகாரத்தை கல்லூரிகள் பெற்றிருக்கிறதா? என்பதைக் கவனிக்கவேண்டும்.
கல்லூரியில் உள்ள லேப் வசதி, போதுமான ஆசிரியர்கள், அடிப்படை வசதிகளை ஆராய்ந்து பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கியிருந்தால் மட்டுமே பல்கலைக்கழகம் தேர்வுகளை நடத்தும். படித்து முடித்தவுடன் பல்கலைக்கழகப் பட்டமும் வழங்கும். எனவே, இது மிக முக்கியம்''
வெளிப்படையான விஷயங்கள்! (Moderate Disclosure)
ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பு, கல்லூரி சம்பந்தப்பட்ட சில முக்கியமான தகவல்களை கல்லூரி நிர்வாகத்தின் இணையதளத்திலோ அல்லது ஆண்டு மலரிலோ வெளிப்படையாக, தெளிவாக குறிப்பிடவேண்டும் என்று சொல்லி இருக்கிறது. சில கல்லூரிகள் மட்டுமே இந்த விவரங்களை முழுமையாக தருகின்றன. பல கல்வி நிறுவனங்கள் இவ்விவரங்களை தராமலே தவிர்த்துவிடுகின்றன.
* ஏ.ஐ.சி.டி.இ.-யிடம் அனுமதி பெற்ற கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. நம்பர் வழங்கப்படும். அந்த நம்பரை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
* ஒரு கல்லூரியில் என்னென்ன துறை சார்ந்த படிப்புகள் இருக்கின்றன, துறை வாரியாக பேராசிரியர்களின் விவரங்களையும் தெரிவிக்கவேண்டும். (பேராசிரியர்களின் பெயர்கள், அவர்களின் புகைப்படங்கள், படிப்பு விவரங்கள், அவர்கள் படித்த கல்லூரி, அனுபவம், ஆராய்ச்சி பற்றிய தகவல்களை தெளிவாகத் தெரியப்படுத்துவது அவசியம்).
* கல்லூரி நிர்வாகக் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் யார் என்பதையும், அவர்களின் விவரங்களையும் குறிப்பிடுவது அவசியம்.
* மூன்று ஆண்டுகளாக எவ்வளவு பேர் கல்லூரியில் படிக்கிறார்கள் (துறைவாரியாக பிரித்துக் குறிப்பிடுவது அவசியம்), அவர்களில் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகளை கல்லூரி நிறுவனம் அமைத்து தந்திருக்கிறது என்கிற விவரங்களை தெரியப்படுத்தவேண்டும்.
* எதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்லவேண்டும்.
* கல்லூரி வளாகத்திற்குள் எத்தனை வகுப்பறைகள் இருக்கின்றன, மாணவ, மாணவிகளின் தங்கும் விடுதியில் எத்தனை ரூம்கள் இருக்கின்றன என்கிற விவரங்களும் சொல்லப்பட்டிருக்கவேண்டும்.
எப்படி தேர்வு செய்வது?
துண்டு பிரசுரங்களிலோ அல்லது கல்லூரியின் இணையதளத்திலோ வெளியிடப்பட்டிருக்கும் கட்டட படங்களைப் பார்த்தோ, அவர்களின் சிறப்பம்சங்கள் என்று சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை இணையதளத்தில் படிப்பதால் மட்டுமே, எந்த ஒரு கல்லூரியையும் தேர்வு செய்யக்கூடாது. படத்தில் உள்ள கட்டடங்கள் வேறு எங்கோ எடுக்கப்பட்டதாககூட இருக்கலாம். அல்லது நீங்கள் செலுத்தப் போகும் கல்லூரிக் கட்டணத்தினால்கூட கட்டப்படலாம். தவிர, கல்லூரியின் இணையதளத்தில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் சரியானதுதானா என்று உறுதி செய்துகொள்ளுங்கள். அந்தக் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களையோ அல்லது அந்தக் கல்லூரியில் படித்து முடித்த மாணவர் களில் சிலரிடமோ விவரங்களைக் கேட்டு தெரிந்துகொள்வது அவசியம்.
சாய்ஸ் வேண்டும்!
நீங்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது, ஒரே ஒரு கல்லூரியை மட்டும் தேர்வு செய்யாதீர்கள். மூன்று கல்லூரிகளைத் தேர்வு செய்து வைத்துக்கொண்டால்தான், ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியும். நீங்கள் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனால், சோர்ந்து போகாதீர்கள். நீங்கள் தேர்வு செய்துள்ள கல்லூரி உலகிலேயே சிறந்தது; நீங்கள் தேர்வு செய்துள்ள படிப்பு உலகிலேயே சிறந்தது என்கிற நம்பிக்கையோடு படிக்க ஆரம்பியுங்கள்.
ஏமாற வேண்டாம்!
முன்பெல்லாம் கல்லூரி என்பது கல்வி பயிற்றுவிக்கும் இடமாக இருந்தது. இன்றைக்கு அது பணம் சம்பாதிக்கும் பொருளாக மாறிவிட்டது. அதுமாதிரியான கல்வி நிறுவனங்களில் சிக்கிவிடக் கூடாது என்பதில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும்''
பெற்றோரும், குழந்தைகளும் கொஞ்சம் விழிப்பு உணர்வோடு தேடினால், நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தரும் சிறந்த கல்லூரிகளை நிச்சயம் தேர்வு செய்ய முடியும்.