'என்னங்க, இந்த நேரத்திலேயே இவ்வளவு புழுக்கமா கசகசன்னு இருக்கே! இந்த வருஷம் முழுக்க இதே சென்னை, சிம்லா போல ஜிலுஜிலுனு இருக்கும்படியா வரம் கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்!' - மெரீனா கடற்கரையில் 'வாக்கிங்' போனபோது மாதப்பன் என்னிடம் கேட்டார்.
'இயற்கைக்கு மாறாக எந்த வரமும் கிடைக்காதுங்க. அப்படியே கிடைச்சாலும், அதனால பிரயோஜனம் ஒண்ணும் இருக்காது. இயற்கையோடு அனுசரிச்சு வாழ முயற்சி பண்றதுதான் என்னிக்குமே நல்லது!' என்ற நான், தண்ணீரின் மேல் நடக்க வரம் வாங்கிய தண்டபாணியின் கதையை அவருக்குச் சொன்னேன்.
''ரொம்ப காலத்துக்கு முன்னால, தண்டபாணி என்பவனுக்குத் தண்ணீரின் மேல் நடக்கணும்னு ஆசை வந்துடுச்சு. சாப்பிடாம, தூங்காம பல காலம் கடவுளை நோக்கித் தவம் செஞ்சான். ஒருநாள், கடவுள் அவன் முன்னால தோன்றி, 'என்ன வரம் வேண்டும், கேள்!' அப்படின்னாரு. 'தண்ணீர் மேல நடக்கிற வரம் வேணும்'னு கேட்டான் தண்டபாணி.
'கண்டிப்பா தரேன்! ஆனா, இந்த வரத்தை வைச்சு நீ என்ன செய்யப் போறேன்னு தெரிஞ்சுக்கலாமா?' என்றார் கடவுள்.
'சாமி! எல்லார் முன்னாடியும் தண்ணி மேல நடந்து காண்பிச்சு, ஆச்சரியப்பட வைப்பேன்.'
'மத்தவங்களை ஆச்சரியப்பட வைக்கிறதுக்கா இத்தனை நாள் தவம் செஞ்சே? கயிறு மேல நடக்கிற கழைக்கூத்தாடியும்தான் மத்தவங்களை ஆச்சரியப்பட வைக்கிறான். வேற உருப்படியான காரணம் ஏதாச்சும் இருக்கா?'
'சாமி! தண்ணி மேல நடந்தே, இந்த ஆற்றைக் கடந்து அக்கரைக்குப் போயிடுவேனே!'.
'அட, என்னப்பா நீ! பத்து ரூபா கொடுத்தா, ஓடக்காரனே உன்னை அக்கரைக்குக் கொண்டு விடப்போறான். இந்த அல்ப விஷயத்துக்கா நீ இவ்ளோ கடுமையா தவம் பண்ணினே?' என்றார் கடவுள்.
தண்டபாணி தயங்கித் தயங்கி, 'அதில்லை பகவானே... இந்த மாதிரி ஏதாவது அதிசயம் செஞ்சா, மக்கள் என்னை மகான்னு நம்பி, வழிபடுவாங்க இல்லியா?'
'அவங்க உன்னை வழிபடுறதால உனக்கென்ன லாபம்?' என்றார் கடவுள்.
'அவங்களுக்கு நல்லவழி காண்பிக்க பெரிய ஆன்மிக குருவா மாறி, உலகத்துக்கே தொண்டு செய்வேனே!'
கடவுள் பகபகவெனச் சிரித்தார். 'பக்தா! மக்களுக்குத் தொண்டுசெய்ய நல்ல மனசும், சமூக அக்கறையும், சேவை மனப்பான்மையும்தானே முக்கியம்? தண்ணியில் நடந்து காண்பிச்சா, உன்னை வித்தைக்காரன்னுதானே நினைப்பாங்க?' என்றார்.
தண்டபாணி தீவிரமா யோசித்தான். அவனுக்கு வேற என்ன வரம் கேட்கிறதுன்னு தெரியலை.
'என்னப்பா... என்கிட்டே என்ன கேக்கறதுன்னு புரியலையா? சரி, நானே தரேன். மக்களுக்குச் சேவை செய்யணும்கிற நல்ல மனசு உன் கிட்ட இருக்கு. உடனடியா அதுக் கான முயற்சிகள்ல இறங்கு. உனக்குத் தேவையான உதவிகள், உடல் ஆரோக்கியம் எல்லாம் கிடைக்கும்' என்றார் கடவுள்.
கடவுள் சித்தப்படியே மக்களுக்குச் சேவை செய்து 'தண்டபாணி சுவாமிகள்' என மக்களின் மதிப்பில் உயர்ந்தார் அவர். கூடவே, இயற்கைக்கு மாறாக எதுவும் செய்ய முடியாது; அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதையும் புரிந்துகொண்டார். மக்களுக்கும் அதைப் போதித்தார். தண்ணீர்ச் சாமியாரின் கதையை நான் சொல்லி முடித்ததும், ''சரிங்க ஐயா! இப்ப நான் ஜில்லுனு ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிட்டு கசகசப்பைப் போக்கிக்கலாம்னு இருக்கேன். இதாவது இயற்கைக்கு உட்பட்டதுன்னு ஒப்புக்குவீங்களா?'' என்றார் மாதப்பன்.
''ஐஸ்க்ரீம் ஏன்..? எளநி சாப்பிடுவோம், வாங்க! அதான் இயற்கையானது. உடம்புக்கும் நல்லது!'' என்றேன்.