நாள்தோறும் பத்திரிகைகளில் இடம்பெறும் செய்திகளில் கணிசமான பகுதி, கொலை- கொள்ளை பற்றியது என்றால், இன்னொரு கணிசமான பகுதி, தற்கொலை பற்றியது. கொலை நிகழக் காரணம் பொருளாசை அல்லது மன்னிக்கும் பெருந்தன்மை இல்லாததால் விளைந்த கோபம்.
சரி, தற்கொலை ஏன் நிகழ்கிறது? எல்லாத் தற்கொலைகளுக்கும் காரணம் ஒன்றுதான். எதையும் தாங்கி வாழவேண்டும் என்கிற மன உறுதி இல்லாததாலேயே தற்கொலைகள் நேர்கின்றன. இளம்வயதினர்தான் அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் எனப் புள்ளி விவரங்கள் அறிவிக்கின்றன.
என்ன அவமானம் வந்தால் என்ன, அதைத் தாங்கி வாழ்வை ஜெயிப்போம்; என்ன துயரம் வந்தால் என்ன, நீந்திக் கடப்போம் என்று இளம்வயதினர் நினைப்பதில்லை. சட்டென்று மனம் உடைந்து விடுகிறார்கள். ஆசிரியர் திட்டியதால் தற்கொலை, பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை, தேர்வில் தோற்றதால் தற்கொலை எனத் தற்கொலைக்கான காரணங்கள் உப்புப் பெறாதவை. ஆசிரியர் திட்டாத வகையில் இனி நடந்துகொள் வோம், பெற்றோரே வியக்கும் வகையில் முன்னேறுவோம், அடுத்த முறை நன்கு படித்துத் தேர்வில் தேறுவோம், தேர்வில் தேறாவிட்டாலும் வாழ்வில் முன்னேறிக் காட்டுவோம் என்றல்லவா திட சித்தம் உள்ளவர்கள் உறுதி மேற்கொள்ள வேண்டும்? அத்தகைய வலுவான இரும்பு மனத்தைப் பெற அல்லவா இளைஞர்கள் முயல வேண்டும்?
'இவனுக்குப் படிப்பே வராது. தமிழ் இலக்கணத்தை முறையாகக் கற்காமல் கவி பாடுகிறான். இவன் உருப்பட மாட்டான்' என்று ஆசிரியரால் கைவிடப்பட்ட பிள்ளைதான் ராமலிங்கம். தாயற்ற அந்தப் பிள்ளைக்கு அண்ணி சாப்பாடு போட்டபோது, 'பள்ளிக்குப் போகாத பிள்ளைக்குச் சாப்பாடு போடாதே' என்று அண்ணன் சபாபதி தடுத்தார். ஆனால், புத்தியில்லாத பிள்ளை என்று ஊரும் உறவும் தவறாகக் கணித்த அந்த ராமலிங்கத்தைதான் இன்று மாபெரும் தமிழ்க் கவிஞர் வள்ளலார் என்று உலகமே வியந்து வழிபடுகிறது.
வீரர்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை. ஆனால், கொலை செய்கிறார்கள்! போரில் எதிரியைக் கொலை செய்பவர்கள்தானே வீரர்கள்? இளைஞர்கள் ஒவ்வொருவரும் கொலை செய்ய வேண்டும். ஆனால், மனிதர்களை அல்ல; அவரவர் மனத்தில் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை, பலவீனமான மனப்போக்கை நெஞ்சுரத்தோடு நசுக்கிக் கொல்ல வேண்டும். அத்தகைய எதிர்மறைக்குணங்களே இளைஞர்களின் உட்பகை. அதை முழுவதுமாக அழித்துவிட்டால், வெளிப்பகை நம்மை ஒன்றும் செய்யாது.
நம் இரும்பு மனத்தில் நமது வாழ்வை நாம் ஜெயித்துக் காட்டுவோம் என்ற தன்னுறுதி தோன்றும்.
மாண்டவ்யர் என்றொரு முனிவர், தவத்தில் ஆழ்ந்திருந்தார். அரண்மனைப் பொருளைத் திருடிய கள்வர்கள் சிலர், காவலர்கள் துரத்தி வர மாண்டவ்யரின் ஆஸ்ரமத்துக்கு ஓடி வந்தனர். பொருட்களை அங்கே பதுக்கி வைத்துச் சென்றனர். நடந்தது தெரியாமல் தவத்தில் ஆழ்ந்திருந்த மாண்டவ்யரைக் கள்வர் எனக் காவலர்கள் பிடித்துச் சென்றனர். அவரைக் கழுவிலேற்ற உத்தரவிட்டான் மன்னன்.
இரும்பாலாகிய சூலத்தால் செய்யப்பட்ட கழுவில் ஏற்றப் பட்டார் அவர். சூலம் அவரைத் துளைத்துச் சென்றது. ஆனால், பல நாட்களாகியும் அவர் சாகவில்லை. கடும் வேதனையைப் பொறுத்துக்கொண்டு, இறைநாமத்தை உச்சரித்தவாறு இருந்தார். அவர் சாகாதது அறிந்து மன்னன் பதறினான். அவர் உண்மையான துறவி என்பதை உணர்ந்து, ஓடோடி வந்து வணங்கினான். அவரைக் கழுவில் இருந்து விடுவித்து மன்னிப்பு வேண்டினான். மலர்ந்து சிரித்தவாறே அவனுக்கு ஆசி கூறினார் அவர். தனக்கு இந்த வேதனை முன் ஜன்ம வினையால் வந்ததாகத்தான் இருக்க வேண்டும்; இதற்கு மன்னனைக் கோபித்து என்ன பயன் என்று அவரது பக்குவப்பட்ட மனம் நினைத்தது.
சூலத்தை அவர் உடலிலிருந்து பிடுங் கியும், சூலம் முழுதும் வெளிவராமல் உடைந்து, கால் பகுதி உடலின் உள்ளேயே தங்கி, அதன் தொடர்ச்சியாக இன்னொரு கால் பகுதி வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. நல்லதாய்ப் போயிற்று என்று வெளியே நீட்டிக் கொண்டிருந்த இரும்புப் பகுதியில், தான் பூஜைக்காக மலர்கொய்யும் பூக்குடலையை மாட்டிக்கொண்டு ஆனந்தமாக நடமாடிக் கொண்டிருந்தார் அவர் (அணீ என்றால் சூல முனை. அதோடு வாழ்ந்ததால், அவர் அணீமாண்டவ்யர் எனப்பட்டார்).
தனக்கு இந்தத் தண்டனை கிட்டக் காரணம் என்ன என்றறிய வேண்டி, கடும் தவம் செய்து, எமதர்மராஜனை நேரில் சந்தித்துக் கேள்வி கேட்டார். 'நீங்கள் குழந்தைப் பருவத்தில் தும்பிகளின் உடலுக்குப் பின்னால் முள்ளால் குத்தி வேதனைப் படுத்தினீர்களே... அதற்கான தண்டனைதான் இது!' என்றான் எமன்.
'அறியாப் பருவத்தில் எது செய்தாலும் குற்றமல்லவே? அறிந்து செய்ததல்லவே அது? பதினான்கு வயது வரை எது செய்தாலும் அதற்கு இனி தண்டனை தரக் கூடாது!' என்று எமனுக்குப் புதிய விதி வகுத்துத் தந்தார் முனிவர் (அதனால்தான் இன்றும் 14 வயதுக்கு உள்பட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனை தராமல் அவர்களைச் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்புகிறோம். இந்த வழக்கத்தை ஏற்படுத்திய முன்னோடி நீதிபதி அணீமாண்டவ்யர்தான்).
இப்போது, அறியாமல் குற்றம் செய்ததற்குக் கடும் தண்டனை தந்தானே எமதர்மன், அவனைத் தண்டிக்க வேண்டாமா? அணீமாண்டவ்யர் 'நீ மனிதனாகப் பிறக்கக் கடவாய்!' என்று சபித்தார். அப்படித்தான் எமன் மகாபாரத காலத்தில் விதுரராகப் பிறந்தான்.
இரும்புச் சூலம் உடலைத் துளைத்தபோதும், இரும்பைவிட வலிமையான மன உறுதியால் கடும் வேதனையைத் தாங்கினார் முனிவர். அதன் காரணத்தைக் கண்டறிந்து புதிய விதி வகுக்கப்படவும்காரணமானார். இவரை அல்லவா நாம் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்?
விவேகானந்தர், காசியில் துர்கை கோயிலிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். திடீரென்று பத்துப் பதினைந்து குரங்குகள் அவரைத் துரத்த ஆரம்பித்தன. சுவாமிஜி ஓடலானார். குரங்குகள் அவரை விரட்டிக்கொண்டு வந்தன. அங்கே முதிய துறவி ஒருவர், விவேகானந்தரை நோக்கிக் குரல் கொடுத்தார்: 'ஓடாதீர்கள். நில்லுங்கள். குரங்குகளை நோக்கித் திரும்புங்கள். அவற்றைப் பார்த்தவாறே உறுதியுடன் அவற்றை நோக்கி முன்னேறுங்கள். இப்போது என்ன நடக்கிறது பாருங்கள்!'
சுவாமிஜி நின்றார். திரும்பி குரங்குகளை நோக்கி நடக்கத் தொடங்கினார். குரங்குகள் திகைப்படைந்தன. மெள்ளப் பின்வாங்கின. பிறகு அச்சத்தோடு ஓடி மறைந்தே போய்விட்டன. பல்லாண்டுகளுக்குப் பின் இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்த சுவாமிஜி சொன்னார்: 'துன்பங்களும் பிரச்னைகளும் குரங்குகளைப் போன்றவை. பிரச்னைகள், அடிப்படையில் கோழைகள். பயந்து ஓடினால் நம்மைத் துரத்தும். திரும்பி எதிர்கொண்டால், ஓடியே போய்விடும். இளைஞர்களே! பிரச்னைகளைக் கண்டு அஞ்சாதீர்கள். அவற்றை எதிர்கொள்ளுங்கள்!'
உலகில் எத்தனையோ பேர், உன்னதமான சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பிரச்னை இல்லாத வாழ்க்கையே அருளப்பட்டதா என்ன?
எந்தத் துன்பமுமே படாமலா அவர்கள் சாதனை படைத்தார்கள்? அப்படியெல்லாம் இல்லை. பிரச்னை வரும்போதுதான், அதையும் மீறி சாதிக்கவேண்டும் என்ற உணர்வு வரும். வர வேண்டும். நாம் எதையும் சாதிக்காமல் இருப்பதற்கு நமக்குப் பல பிரச்னைகள் இருப்பதுதான் காரணம் என்று நினைத்துக் கொள்கிறோம். உண்மை அதுவல்ல.
நமக்குச் சோம்பேறித்தனம். நம் சோம்பேறித்தனத்துக்கு, நம் மனத்துக்கு ஒத்தடம் கொடுப்பது மாதிரி ஏதாவது சால்ஜாப்பு தேவை அல்லவா? அதனால் நினைத்துக் கொள்கிறோம், 'எனக்குப் பல பிரச்னைகள், அதனால்தான் ஏதும் சாதிக்கவில்லை' என்று. நமது பிரச்னையே, பிரச்னை இருப்பதாக நாம் நினைத்துக்கொள்வதுதான்.
ஹெலன்கெல்லர் பிறவியிலேயே மூன்று ஊனங்களை உடையவர். கண் பார்வையற்றவர். காது கேளாதவர். வாய் பேசாதவர். தம் வாழ்நாள் முழுவதையும் ஊனமுற்றோர் நலனுக்காகவே அர்ப்பணித்தார். பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தான் வாழ்ந்த காலத்திலேயே தன்னைப் பற்றி எடுக்கப்பட்ட மௌனப் படம் ஒன்றில் தோன்றினார். அவரது வாழ்க்கை, நாடகங்களாகவும் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டது. ஹெலன்கெல்லர் பெயரில் உலகெங்கும் மருத்துவமனைகளும் சமூகசேவை நிறுவனங்களும் தோன்றின. மூன்று ஊனங்கள் கொண்ட அவரால் இந்த அரும்பெரும் சாதனையை எப்படிச் சாதிக்க முடிந்தது? காரணம், அவர் ஊனங்களைப் பொருட்படுத்தாமல் உழைப்பே வாழ்வாக வாழ்ந்ததுதான்.
சாதிக்க நினைப்பவர்கள் சலுகைகளை எதிர்பார்க்கமாட்டார்கள். சால்ஜாப்பு களைத் தேட மாட்டார்கள். தொடர்ந்து கடின உழைப்பில் ஈடுபடுவார்கள். பிரச்னை இருப்பவர்களால்தான் அதிகம் சாதிக்க முடியும். பிரச்னை இல்லாதவர்களுக்குத் தூங்கத்தான் தோன்றும். வாழ்வில் முன்னேற கடின உழைப்பு என்ற நேர்ப் பாதையைத் தவிர, வேறு குறுக்கு வழியே கிடையாது.
உழைப்போம்; உயர்வோம்; உயர்ந்தே தீருவோம்!