அன்று காலை கணவர் ஆபீஸ் கிளம்பும்போது எனக்கு எக்கச்சக்க தலைசுற்றல், லேசான ஜுரம். ''வெயிலில் எங்கும் போகாதே. என்ன வேலையாக இருந்தாலும் சரியானதும் பார்த்துக்கலாம்'' என்று அன்பான கண்டிப்போடு சொல்லிவிட்டுப் போயிருந்தார். இருந்தாலும், என் எதிர் ஃப்ளாட் தோழி கூப்பிட்டாளே என்று, அவளோடு சேர்ந்து நகைக் கடைக்குப் போயிருந்தேன். அந்த நேரம் பார்த்து கணவர் எங்க வீட்டு லேண்ட் லைனில் அழைத்திருக்கிறார். அடுத்து, என் செல்போனிலும் கூப்பிட்டு இருக்கிறார். நகைக்கடை இரைச்சலில் அது காதில் விழவில்லை.
உடம்பு சரியில்லாதவளாச்சே... என்ன ஆச்சோ என்ற பயத்தில், எங்கள் அபார்ட்மென்ட் வாட்ச்மேனின் செல்போனை தொடர்புகொண்டு, ''எங்க வீட்டு மேடத்தை பேசச் சொல்லுங்க'' என்று கூறியிருக்கிறார். அந்தப் பக்கம் வாட்ச்மேன் போய் பார்த்துவிட்டு, வீட்டுக் கதவு வெளியே தாழ் போட்டிருப்பதாக என் கணவருக்குச் சொல்ல... இந்தப் பக்கம் தற்செயலாக செல்லைப் பார்த்துவிட்டு நான் இவருக்குப் போன் போட... ''இப்ப நீ எங்கேதான் இருக்கே? நான் வாட்ச்மேனை விட்டுப் பார்த்தா, நீ வீட்டுல இல்லை போலிருக்கே...'' என்று படபடப்போடு கணவர் கேட்டார். நகைக்கடைக்கு வந்த விஷயத்தை நான் சொல்லி முடிப்பதற்குள் பட்டென்று போனை 'கட்' செய்துவிட்டார்.
விஷயத்தைக் கேட்டுக்கொண்ட எதிர் ஃப்ளாட் அம்மணி, ''பார்த்தீங்களா... இப்படியெல்லாமா வாட்ச்மேனை விட்டு வேவு பார்க்கிறது? என் மேலேயே சந்தேகமானு ஒரு எஸ்.எம்.எஸ். குடுங்க உங்க புருஷனுக்கு. அப்பதான் இந்த ஆம்பளைங்களுக்கு உறைக்கும்'' என்று விஷ அட்வைஸ் கொடுத்தார். நானும், கணவரின் போன் குரலால் கடுப்பேறிப் போய் அப்படியே எஸ்.எம்.எஸ். கொடுக்க...
அன்று இரவு அவர் வீட்டுக்கு வந்தபோது இறுக்கம், புழுக்கம், கலக்கம் என்று நரகமாகக் கழிந்தது வெகுநேரம். அத்தனை வருட தாம்பத்தியத்தில் உண்டாகி இருந்த புரிதல் காரணமாக ஒருவழியாக பரஸ்பர அக்கறையின் ஆழம் பரிமாறப்பட்டு... ஊடல் பறந்து, வீட்டுக்குள் கலகலப்பு திரும்பியது.
கணவரிடம் எதைப் பேசுவது, கூடாது என்ற விஷயத்தில் அடுத்தவர் அட்வைஸுக்கு நான் காது கொடுத்த முதலும் கடைசியுமான அனுபவம் அதுதான்!