Thursday, May 2, 2013

கோடையைக் கொண்டாடுவோம்!

டலின் உள்உறுப்புகளைக் குளிர்ச்சியாக வைத்திருக்க தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர் மட்டுமே! அதையும் தாண்டி வெயில் நம்மை வேதனைப்படுத்தாமல் இருக்க என்னவெல்லாம் செய்யலாம்... செய்யக் கூடாது 

செய்யலாம்

அதிகமாக விளையாடும் குழந்தைகளுக்கு எடைக்கு ஏற்றவாறு ஒன்று முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்தவைக்க வேண்டும்.

 நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களைப் பழச்சாறாக இல்லாமல், பழமாகவே சாப்பிட வேண்டும்.

 சுரைக்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற நீர்க் காய்கறிகள், நன்னாரி சர்பத், வெண்ணெய் எடுத்த தாளித்த நீர் மோர், சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சுப் பழச்சாறுகள் போன்றவற்றை அடிக்கடி உட்கொள்வது உடல் உஷ்ணத்தை வெகுவாகத் தணிக்கும்.

 குடிநீரில் சீரகம் கலந்து கொதிக்கவைத்து ஆறிய பின் அருந்தலாம்.

 நன்னாரி வேர், வெட்டி வேர் போன்றவற்றைக் குளிக்கும் நீரில் போட்டு உச்சந்தலையில் ஊற்றி, உள்ளங்கால் வரை வழியவைத்துக் குளிக்க வேண்டும்.

 குளிர் தாமரைத் தைலம் என்று சித்த மருத்துவக் கடைகளிலும், காதிவஸ்திராலயத்திலும் கிடைக்கும். இதனுடன் 50 மி.லி. ‑நல்லெண்ணெய் கலந்து உடலில் தடவி அரை மணி நேரத்துக்குப் பிறகு குளித்தால், கண் எரிச்சல் குறைந்து குளிர்ச்சியாக இருக்கும்.

செய்யக் கூடாது  

 முதியவர்களின் உடலில் கோடைக் காலத்தில் நீர்ச்சத்து மிக வேகமாகக் குறையும் என்பதால், வெயிலில் அலையவே கூடாது. இது 'சன் ஸ்ட்ரோக்' எனும் வெப்பத்தாக்குதல் அபாயத்தில் இருந்து தப்ப உதவும்.

 கோடை விடுமுறை சமயம் என்பதால், குழந்தைகள் களைப்பு மறந்து வெயிலில் விளையாடிக்கொண்டே இருப்பார்கள். அந்த அதீத சூடு அம்மை நோயை வரவழைக்கும் என்பதால், குழந்தைகளைப் பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரையில் நேரடி வெயிலில் விளையாட அனுமதிக்காதீர்கள்.

 குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஃப்ரிஜ்ஜில் வைத்த குளிர் நீர் கொடுக்கவே கூடாது. அதீத உஷ்ணத்தின்போது திடீர் ஜிலீர் குளிர்ச்சி தொண்டையில் தொற்றுநோயை உண்டாக்கும்.

 கோடை முடியும் வரை சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்... அல்லது குறைக்கலாம்!

  இளநீர் நல்லதுதான் என்றாலும், வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கக் கூடாது.  

 வெளியில் அலையும்போது உடலின் நீரிழப்பு உண்டாக்கும் அதீத தாகத்தால், தவிர்க்க முடியாமல் சுகாதாரமற்ற சாலையோரக் கடைகளில் குளிர்பானங்களை அருந்துவது கூடாது. பாட்டில் குளிர்பானங்களாலும் பயன் இல்லை. நுங்கு, பதநீர், தர்பூசணி போன்ற நீர்ச்சத்து மிக்க பழங்களைச் சாப்பிடுவது ஆரோக்கியமான தீர்வு.

 கோடைக் காலத்தில் அதிக நேரம் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பது நல்லது அல்ல. வெயிலில் அலைந்து திரிந்து வியர்வையுடன் உடனடியாகக் குளிரூட்டப்பட்ட அறைகளில் தஞ்சம்புகுவதும் நல்லதல்ல! 


வெயிலின் புற ஊதாக் கதிர்கள் எடுத்த எடுப்பில் தாக்குதல் தொடுப்பது நம் சருமத்தின் மீதுதான். சருமம் சிவந்துபோகுதல், கொப்பளங்கள், கட்டிகள் போன்றவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள ஆலோசனை

 வெயிலில் அலைந்து திரிந்து வீட்டுக்கு வந்து சற்றே வியர்வை அடங்கிய பிறகு, வியர்வையில் குளித்த சருமப் பகுதிகளை நல்ல தண்ணீரில் நன்கு கழுவவும். இது அரிப்பு, வியர்க்குரு, சொறி, சிரங்கு போன்ற அபாயத்தில் இருந்து நம்மைக் காக்கும்.

 நேரடி வெயிலில் வேலை செய்ய வேண்டிய அவசியத்தில் இருப்பவர்கள், கதராடை மற்றும் இறுக்கம் இல்லாத உடை களை அணியலாம். தொப்பி, குளிர்க் கண்ணாடி மூலம் வெப்பப் பாதிப்பைத் தவிர்க் கலாம்.

 உடலை முழுக்க மறைக் கும் பருத்தி ஆடைகளை அணியலாம். பருத்தி ஆடை கள் வியர்வையை உறிஞ்சி உடனடியாக உலரும் தன்மைகொண்டவை.

 சின்னச் சின்ன டிஷ்யூ பேப்பர்கள் எப்போதும் கைவசம் வைத்திருங்கள். வியர்வை, தூசி, அழுக்கு ஆகியவற்றை அந்த ஈரப்பதம் நிரம்பிய டிஷ்யூவால் ஒற்றி எடுக்கவும். ஆனால், ஒரு முறை பயன்படுத்திய டிஷ்யூவை அடுத்த முறை பயன்படுத்தக் கூடாது.

 உங்கள் பயண நேரத்தின் தன்மைக்கேற்ப வெயிலில் பயணிக்கும்போது முகத்தில் சன்ஸ்க்ரீன் லோஷன் தடவிக்கொள்ளவும். சன்ஸ்க்ரீன் கலந்த க்ரீம், பவுடர்களை மட்டுமே பயன்படுத்துவது சிறந்தது.

 அதிக வாசனை உள்ள பவுடர்கள், சோப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. வாசனைப் பொருட்களுக்கு சூரியனின் புற ஊதாக் கதிர்களை ஈர்க்கும் ஆற்றல் இருப்பதால் அவை அலர்ஜி ஏற்படுத்தும்.

 இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு வெயில் பட்டு முழங்கை வரை சருமம் கறுத்துவிடும். சன்ஃப்ளவர் ஆயிலில் கொஞ்சம் எலுமிச்சைச் சாறு, கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கைகளில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவிவந்தால், கைகள் இழந்த நிறத்தை மீட்கும்.

மழை எந்த அளவுக்கு உலக உயிர்களுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு வெயிலும் அவசியம்தான். அதனால், வெயிலைச் சபிக்காமல் அதிலிருந்து தற்காத்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.  

கோடையைக் கொண்டாடுவோம்!