தன் பிள்ளைகளுக்கு ஆன்லைனில் ஒரு போட்டோ ஆல்பம் ஏற்படுத்தி அதில் போட்டோக்கள் மட்டுமின்றி, அவர்களின் அன்றாட சேஷ்டைகளையும், நிகழ்வுகளையும் குறித்து வைக்க வசதிகளுடன் இருக்க வேண்டுமா? இந்த வசதிகளுடன் உள்ளது Little Albums என்னும் அருமையான இணைய தளம். எந்தச் செலவும் இல்லாமல் இதில் உங்கள் குழந்தைக்கான டயரி போன்ற ஆல்பத்தினை ஏற்படுத்தலாம்.
இதனை ஏற்படுத்த, குறிப்பிட்ட தளத்திற்குச் (http://www.littlealbums.com/) சென்று, உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரியுடன் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்குங்கள். எல்லாம் சரியாக இருந்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு, ஆல்பம் உருவாக்கப்பட்ட இழையுடன் கூடிய அஞ்சல் செய்தி கிடைக்கும். தொடர்ந்து நீங்கள் ஆல்பம் தரும் தளம் சென்று கீழ் வலது பக்கத்தில் குழந்தையின் பெயர், பிறந்த நாள், போட்டோ மற்றும் சில தகவல்களைத் தர வேண்டும். அந்தக் குழந்தைக்கான ஆல்பம் புக் உருவான பின்னர், நீங்கள் குழந்தையின் வாழ்க்கை நிகழ்வுகளைப் பதியலாம்; போட்டோக்களை இணைக்கலாம். இந்தக் குழந்தையுடன் இணைந்திருக்கும் இன்னொரு குழந்தையையும் இணைக்கலாம். சில நிகழ்வுகளை இணைத்த பின்னர், குழந்தைக்கான ஆல்பம் புக்கை இயக்கலாம்.
இந்த தளத்திலிருந்து உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வாரம் ஒரு முறை மெயில் அனுப்பப்படும். அதில் உங்கள் குழந்தை இந்த வாரம் என்ன செய்தது என்று கேட்டு பதில் அனுப்பும்படி கேட்கும். உடன், நீங்கள் அனுப்பும் பதிலைக் கொண்டு, ஆல்பம் புக் அப்டேட் செய்யப்படும். பின்னர், நீங்கள் விரும்பும் நாளில் ஆல்பம் புக் உள்ள தளம் சென்று, உங்கள் குழந்தைக்கான ஆல்பம் புக்கினைக் காணலாம்.
இதன் மூலம் நாம் நம் குழந்தையின் வாழ்நாளில் ஏற்படும் சின்ன சின்ன நிகழ்வுகளைக் கூட பதிந்து ஒரு நூலாக அமைக்க முடியும். பின்னாளில், குழந்தை வளர்ந்து பெரியவனானவுடன், இதனை அவனிடம் காட்டலாம். இது அனைத்தும் இலவசமாகவே நமக்குக் கிடைக்கிறது என்பது இதன் தனிச்சிறப்பு. இத்தகைய ஆல்பம் புக் தருவது இந்த தளம் மட்டுமே எனத் தெரிகிறது.