முளைக்கட்டிய வெந்தய தோசை
செய்முறை: கால் கப் வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைத்து, முளைக்கட்டியதும், தோசை மாவுடன் சேர்த்து அரைத்து வார்க்கலாம்.
பலன்கள்: உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். வயிற்றுக்கடுப்பு, வயிற்று வலி குணமாகும். மாதவிடாய்க் கோளாறைச் சரிசெய்யும். இரும்புச் சத்து இருப்பதால், ரத்த சோகை வராமல் தடுக்கும்.
ராகி பக்கோடா
செய்முறை: கடலை மாவுக்குப் பதிலாகக் கேழ்வரகு மாவைப் பயன்படுத்தியும் செய்யலாம். வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்கீரை சேர்த்து தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவேண்டும்.
பலன்கள்: கேழ்வரகில் இரும்புச் சத்து, புரதச் சத்து, நார்ச் சத்துகள் இருக்கின்றன. மலச்சிக்கல் வராது. உடல் இளைக்கும்.
வாழைப் பூ வடை
செய்முறை: வாழைப்பூவைப் பொடியாக நறுக்கி மூழ்கும் அளவுக்குத் தண்ணீர்விட்டுக் கொதித்ததும், வடிகட்டி, பிழிந்து தனியாக வைக்கவும். ஊறவைத்த கடலைப்பருப்புடன், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சோம்பு, பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்து, வேகவைத்த வாழைப்பூவைப் போட்டு ஓரிரு சுற்றுகள் சுற்றி எடுத்துக்கொள்ளவும். அத்துடன் நறுக்கிவைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, வேகவைத்து வடித்த வாழைப்பூவைச் சேர்த்துப் பிசைந்து காயும் எண்ணெயில் வடைகளாகத் தட்டி பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
பலன்கள்: உடல் சூட்டைக் குறைக்கும். வயிற்றுக்கடுப்பு, அஜீரணக் கோளாறு மற்றும் வறட்டு இருமலைப் போக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
தண்டை
செய்முறை: பால், கசகசா, மிளகு, சோம்பு, குங்குமப்பூ, பாதாம் மற்றும் ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
பலன்கள்: இந்த ஊட்டச்சத்து பானம் வட நாட்டில் மிகப் பிரபலம். வளரும் குழந்தைகளுக்கு நல்ல எனர்ஜியைக் கொடுக்கும். எடை குறைந்த குழந்தைகளுக்கு தினமும் இரண்டு வேளை இந்த பானத்தைக் கொடுக்கலாம்.
நவதானிய அடை
செய்முறை: அரிசி, பருப்பு வகைகள், எள், கொள்ளு, கொண்டைக்கடலை, காராமணி, நிலக்கடை, மசூர் தால் என விரும்பிய தானிய வகைகளை தண்ணீரில் ஊறவைத்து, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அடை பதத்தில் அரைத்துக்கொள்ளவும். இதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து தோசைக்கல்லில் அடையாக வார்க்கலாம்.
பலன்கள்: புரதச் சத்து அதிகம் இருக்கிறது. உடலை நல்ல திடமாக வைத்திருக்கும். வளரும் பிள்ளைகளுக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.