Wednesday, May 1, 2013

கணவருடன் அல்லது மனைவியுடனான உறவு - சுயப் பரிசோதனை


ணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் ஒருவருக்கு ஒருவர் பேசுவதற்குக்கூட நேரம் இல்லாத நிலை. ஆணுக்குப் பெண் சமம் என்று கூறினாலும், மனைவி என்று வரும்போது தன்னிடம் ஓரளவுக்காவது பணிந்து போக வேண்டும் என்ற கணவன்மார்களின் எதிர்பார்ப்பு, குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாத நிலை... போன்ற பல்வேறு காரணங்களால் உறவுகளுக்குள் விரிசல்கள் உருவாவதைத் தவிர்க்கவே முடிவதில்லை. 

வாழ்க்கைத் துணையுடன் கனிவு, அன்பு, அக்கறை கலந்த கலந்துரையாடல்கள்தான் குடும்ப உறவை மேலும் பலப்படுத்தும்.

உங்கள் கணவருடன் அல்லது மனைவியுடனான உறவு எப்படி இருக்கிறது என்று உங்களை நீங்களே சுயப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்...

திருமணம் ஆனவர்கள் மட்டும் அல்ல; திருமண வயதை நெருங்கியவர்கள்கூட 'என் வாழ்க்கைத் துணைவருடனான உறவு எப்படி இருக்கும்'' என்ற அடிப்படையில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கலாம்.

கீழே கேட்கப்பட்டுள்ள கேள்விகளை ஒப்புக்கொண்டாலோ அல்லது கிட்டத்தட்ட ஒப்புக்கொள்கிறேன் எனக் கருதினாலோ 'ஆம்' எனக் குறித்துக்கொள்ளுங்கள். இதை மறுக்கிறேன், கிட்டத்தட்ட மறுக்கிறேன் அல்லது பதில் கூற விரும்பவில்லை என்று கருதினால் 'இல்லை' என்ற பதிலை டிக் செய்துகொள்ளுங்கள். உங்கள் விடைகளைத் தனியாக ஒரு தாளில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளை உங்கள் வாழ்க்கைத் துணைக்குக் கொடுத்து அவரையும் தனியாக ஒரு தாளில் பதில்களை எழுதும்படி கூறுங்கள். எந்த அளவுக்கு நீங்கள் இருவரும் நெருக்கமாக இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே புரிந்துவிடும். இருப்பினும் மதிப்பெண்கள் கடைசியில்...

1 முக்கிய முடிவுகள், துணைவருடன் கலந்து பேசி ஒருமித்து எடுக்கப்படுகிறதா?

ஆம் / இல்லை

2 ஒருவர் உணர்வை மற்றவர் புரிந்துகொள்கிறீர்களா?

ஆம் / இல்லை

3 உங்களைப் புறக்கணிக்கவில்லை என நினைக்கிறீர்களா?

ஆம் / இல்லை

4 ஒருவர் பேசுவதை மற்றவர் காதுகொடுத்துக் கேட்பவரா?

ஆம் / இல்லை

5 இருவரது எண்ணங்களையும் மதிப்பவரா?

ஆம் / இல்லை

6 ஒருவர் மீது ஒருவர் அதிக அன்பு கொண்டு இருக்கிறீர்களா?

ஆம் / இல்லை

7 என் வாழ்க்கைத் துணைவர் என் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என நினைக்கிறீர்களா?

ஆம் / இல்லை

8 முடிவு எடுப்பதில் நானும் முக்கிய பங்கு வகிக்கிறேன் என்று கருதுகிறீர்களா?

ஆம் / இல்லை

9 இருவர் உடனான உறவில் அதிகப்படியான அன்பு உள்ளது  என நினைக்கிறீர்களா?

ஆம் / இல்லை

10 வாழ்க்கைத் துணையுடன் நேரம் செலவிடுவதில் அதிக நாட்டம்கொண்டு இருக்கிறீர்களா?

ஆம் / இல்லை

11 இருவரும் நல்ல நண்பர்களா?

ஆம் / இல்லை

12 கஷ்டமான நேரத்தில், ஒருவரை ஒருவர் புரிந்து நடப்பவர்களா?

ஆம் / இல்லை

13 உங்கள் தரப்பு யோசனைகளையும் பரிசீலிப்பவரா?

ஆம் / இல்லை

14 உங்கள் துணைவரின் வாழ்க்கையில் ஒன்றாகக் கலந்துவிட்டதாக உணர்கிறீர்களா?

ஆம் / இல்லை

15 வாழ்க்கைத் துணைவர் உங்களில் பெருமிதம் கொள்பவரா?

ஆம் / இல்லை

(மதிப்பெண்கள் ஆம் - 1, இல்லை - 0)

*  15க்கு 15 மதிப்பெண் பெற்றவர்கள் என்றால் நீங்கள் மிகச் சிறந்த தம்பதியர்.

*  10- 14 மதிப்பெண்கள் எனில், நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையோடு எந்த அளவுக்கு வலுவான உறவுகொண்டு இருக்கிறீர்கள் எனக் காட்டுகிறது. இருப்பினும் சில குறைபாடுகள் உள்ளன. எந்த எந்த விஷயங்களில் இருவருக்கும் இடையே இடைவெளி ஏற்படுகிறது என்பது இந்தக் கேள்விகள் மூலம் ஓரளவுக்கு உங்களுக்குத் தெரிந்திருக்கும். இருவரும் கலந்துபேசி இதைச் சரி செய்துவிட முடியும்.

*  9 மற்றும் அதற்கு கீழ் என்றால், நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்புமிக்க, மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழவில்லை என்பதை உங்கள் பதில்கள் காட்டுகின்றன. இருவர் உடனான உறவில் தடைகள் பல உள்ளன. சரிபடுத்த முயற்சி மேற்கொள்ளுங்கள்.

கணவன் - மனைவி உறவு மேம்பட, மனநல மருத்துவர்கள் காட்டும் மகிழ்ச்சியான வழி!

உங்கள் துணைவருக்கு உண்மையானவராக இருங்கள். உங்களைக் கஷ்டப்படுத்தும் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் கலந்துபேசுங்கள். பிரச்னையை வெற்றிகரமாக தீர்க்கும்வரை, அதுபற்றிய தகவல்களைப் பரிமாறுங்கள். பிரச்னை முற்றும் வரை காத்திருக்காமல், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதைச் சரிப்படுத்தப் பாருங்கள். ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். ஒவ்வொரு வளர்ச்சி மற்றும் மாற்றம் வரும்போதும் உற்சாகப்படுத்துங்கள். உங்கள் வாக்குறுதிகளை எப்படியாவது நிறைவேற்றுங்கள். உங்கள் பலவீனங்களை ஒப்புக்கொள்ளுங்கள்.