'உடனே கடற்கரைக்கு வா. கண்ணகி சிலைக்குப் பக்கத்துல நிற்பேன்' என்று நண்பன் சொன்னதும், அங்கே புறப்பட்டுச் சென்றேன். நான் சென்ற நேரம் மாலை சுமார் 4 மணி. கூட்டம் அதிகம் இல்லை.
'என்ன இந்த நேரத்திலே? வேலை முடிஞ்சிடுச்சா? இல்லை... ஆஃப் எடுத்திருக்கியா?'' என்று கேட்டேன்.
'வேலைக்கு நடுவே பர்மிஷன் போட்டு வந்திருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்திலே திரும்பிப் போய், என் ராஜினாமா லெட்டரை அவங்க மூஞ்சியிலே விட்டெறிஞ்சுடுவேன். அதுக்கு முன்னே உன்னைப் பார்த்துப் பேசணும்னுதான் வரச் சொன்னேன்'' என்று நண்பன் சொன்னபோது, அவன் முகத்திலும் குரலிலும் கொந்தளிப்பு. பின்பு, கோபம் மாறாத குரலில் நடந்ததை விளக்கினான்.
நண்பனைப் பற்றி எனக்குத் தெரியும். வேலையில் மிகவும் சின்ஸியரானவன். தன்னை மிகவும் வருத்திக்கொண்டு, கடுமையாக உழைத்து, நேர்மையாகச் செய்துமுடித்த ப்ராஜக்ட் ஒன்றில் அவனது மேலதிகாரி வேண்டுமென்றே குறை கண்டுபிடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, நண்பனைவிடச் சற்றுக் குறைவான புத்திசாலித்தனமும், திறமையும் கொண்ட வேறொரு ஊழியரோடு ஒப்பிட்டு, இவனை மட்டம் தட்டியிருக்கிறார்.
'அப்பவே, அவர் முகத்திலே ராஜினாமா கடிதத்தை விட்டெறிஞ்சிருப்பேன். அவர் அதுக்குள்ள அவசரமா வெளியே போயிட்டார். ஆறு மணிக்குதான் வருவார். வந்ததும் நறுக்குனு நாலு கேள்வி கேட்டுட்டு, என் ராஜினாமா லெட்டரை அவர் மூஞ்சியிலேயே கடாசலாம்னு இருக்கேன்'' என்றான், ஆவேசமாக.
எனக்குத் திகைப்பாக இருந்தது. 'நல்லவேளை! அதுக்கு முன்னே என்னிடம் ஆலோசனை கேட்கணும்னு உனக்குத் தோணித்தே!'' என்றேன். 'ஸாரி! உன்னை ஆலோசனை கேட்கக் கூப்பிடவில்லை. தகவல் சொல்லத்தான் கூப்பிட்டேன். என்னைப் பொறுத்தவரை ராஜினாமா முடிவை எடுத்தது எடுத்ததுதான்!'' என்றான்.
'சரி, அது உன் விருப்பம். நான் தடுக்கலை. அதுக்கு முன்னே கசன், தேவயானி கதையைச் சொல்றேன், கேளு!'' என்றேன்.
அவன் சுவாரஸ்யம் காட்டவில்லை. எனினும், நான் சற்றும் சளைக்காமல் கதையைச் சொல்லத் தொடங்கினேன்.
அசுரர்களின் குரு சுக்ராச்சார்யர். அவருக்கு இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்ஜீவினி மந்திரம் தெரியும். தேவர்கள் அசுரர்களை அழிக்கும் போதெல்லாம், இந்த மந்திரத்தின் மூலமாகத்தான் அவர்களை உயிர்ப்பித்து வந்தார்.
இதனால் தேவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சஞ்ஜீவினி மந்திரம் தங்கள் தரப்பில் யாருக்கும் தெரியாதது அவர்களை வாட்டியது. தங்கள் குலகுருவான பிரஹஸ்பதியின் மகன் கசன் என்பவரை அணுகினர்.
'நீ மாறுவேடத்தில் சுக்ராச்சார்யரிடம் சென்று, அவரின் சீடனாகச் சேர்ந்துகொள். மெள்ள மெள்ள அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, சஞ்ஜீவினி மந்திரத்தைத் தெரிந்துகொண்டு வந்துவிடு!'' என்றனர்.
கசனும் சுக்ராச்சார்யரிடம் சென்றான். ஆனால், தான் யார் என்பதை மறைக்காமல் கூறி, அவரிடம் சீடனாகும் விருப்பத்தை வெளிப்படுத்தினான். சுக்ராச்சார்யரும் பெருந்தன்மையுடன் அவனைச் சீடனாக ஏற்றுக்கொண்டார். அவருக்குச் சேவைகள் செய்துவந்தான் கசன். சுக்ராச்சார்யரின் மகளான தேவயானி, கசனின் அழகாலும், இசைத் திறமையாலும் கவரப்பட்டு, அவனைக் காதலிக்கத் தொடங்கினாள்.
இதற்கிடையில், தங்கள் குருவிடம் கசன் சீடனாகச் சேர்ந்ததை அறிந்த அசுரர்கள் அதிருப்தி அடைந்தனர். எதிரணிக்குக் குருவானவரின் மகன் தங்கள் குருவிடம் சீடனாகச் சேர்ந்திருக்கிறானே, இவன் நமது குருவிடம் இருந்து சஞ்ஜீவினி மந்திரத்தைத் தந்திரமாகத் தெரிந்துகொண்டுவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தனர்.
ஒருநாள், காட்டுவழியாகத் தனியாக வந்துகொண்டிருந்த கசனைக் கொன்றுவிட்டனர். மாலை நேரமாகியும் கசன் வீடு திரும்பாததால், அவனைத் தேட ஆரம்பித்தார் சுக்கிராச்சார்யர். ஓரிடத்தில் உயிரற்று விழுந்துகிடந்த கசனைக் கண்டு, சஞ்ஜீவினி மந்திரத்தின் மூலம் அவனுக்கு உயிர் கொடுத்தார். ஆனாலும், கசனுக்கு எதிரான முயற்சிகளை விடவில்லை அசுரர்கள். ஆனால், எல்லாமே தோல்வியில்தான் முடிந்தன.
இதனால் வெறுத்துப் போன அசுரர்கள், அப்படியரு விசித்திரமான முடிவுக்கு வந்தனர். கசனைக் கொன்று அவன் உடலை வெளியே வீசினால்தானே, தங்கள் குரு உயிர் கொடுப்பார்? அதற்குப் பதிலாக, அவன் உடலை எரித்து, அந்த சாம்பலைப் பாலில் கலந்து, தங்கள் குருவுக்கே கொடுத்துவிட்டால் என்ன? இப்படியரு சதித்திட்டத்தை நிறைவேற்றியே விட்டார்கள் அசுரர்கள். நடந்ததை அறியாத சுக்ராச்சார்யரும் அந்தப் பாலைக் குடித்துவிட்டார்.
அன்றைய தினம், பொழுது சாய்ந்தும் கசன் திரும்பாததால், அவனைத் தேடினார் சுக்ராச்சார்யர். எங்கு தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தேவயானி தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டாள். அதற்குப் பிறகுதான் சுக்ராச்சார்யர் தன் ஞானக் கண்ணால் பார்த்தார். கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து திடுக்கிட்டார்.
'இவனை நான் உயிர்ப்பித்தால், என் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்துவிடுவான். நான் இறந்துவிடுவேன். இப்போது என்ன செய்யலாம்' என்று ஒரு கணம் யோசித்தார்.
பின்பு, 'சீடனே! இதுவரை யாருக்குமே உபதேசிக்காத சஞ்ஜீவினி மந்திரத்தை இப்போது உனக்கு நான் உபதேசிக்கிறேன். அதன்பின் உன்னை உயிர்ப்பிக்கிறேன். நீ வெளியே வந்ததும், இதே மந்திரத்தைக் கூறி, எனக்கு உயிர் கொடு!'' என்றார். அதன்படியே, சுக்ராச்சார்யரின் வயிற்றுக்குள் இருந்து கசன் வெளியே வந்ததும், அந்த மந்திரத்தை கூறி குருவுக்கு உயிர் தந்தான் (இந்தக் கதை வேறுவிதமாகவும் சொல்லப்பட்டுள்ளது). ஆக, இருவரும் உயிர் பிழைத்தனர். அதேநேரம், கசனுக்கு அவன் அங்கே வந்த காரியமும் தானாகவே கைகூடியது. அசுரர்கள் அவசரப்படாமல் இருந்திருந்தால், சஞ்ஜீவினி மந்திரத்தை கசன் அறியாமலேயே போயிருக்கலாம். சுக்ராச்சார்யர் அவனுக்கு அதை உபதேசிக்க மறுத்திருக்கலாம். எதைத் தடுக்க நினைத்தார்களோ, அதைத் தங்கள் அவசரத்தால் நடைபெறச் செய்துவிட்டனர் அசுரர்கள்.
இந்தக் கதையை கூறிவிட்டு, 'நீயும் அந்த அசுரர்களைப் போல, ஆத்திரத்தில் அவசரத்தில் முடிவு எடுக்காதே! நீ வேலை செய்வது உன் மேலதிகாரிக்காக அல்ல; உனது நிறுவனத்துக்காக. உன் அதிகாரியும் உன்னைப் போலவே ஒரு பணியாள்தான். அவர் பணியும் நிரந்தரமானது என்று எப்படிச் சொல்லமுடியும்? நாளைக்கே அவர் பேரில் ஏதேனும் புகார் வந்து வேறு கிளைக்கு மாற்றப் படலாம். அல்லது, பணி நீக்கம் செய்யப்படலாம். வேறு ஒரு சிறந்த மேலதிகாரி உனக்கு வாய்க்கலாம். அல்லது, அடுத்து நீயே இந்தக் கிளைக்கு அதிகாரி ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும், அடுத்த மாதம் உனக்குக் கல்யாணம். இந்த நிலையில், நீ வேலையை ராஜினாமா செய்தால், அதன் விளைவுகள் என்னவாக இருக்குமென்று யோசித்துப் பார்த்தாயா? அப்படியே நீ இந்த வேலையை விடத் தீர்மானித்தாலும், வேறொரு நல்ல வேலையைத் தேடிக்கொண்ட பிறகு அல்லவா இதை விடவேண்டும்?'' என்று கேட்டேன்.
நண்பனின் முகத்தைப் பார்த்தபோது, அவனிடம் வேகம் தணிந்து விவேகம் நிரம்பியிருந்ததை உணரமுடிந்தது.