Thursday, May 2, 2013

திருமணத்துக்கு ஜாதகப் பொருத்தம் அவசியமா? - சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

உலகம் முழுக்க மனிதர்கள் இடையே திருமணம் உண்டு. ஆணோ, பெண்ணோ தங்கள் விருப்பப்படி வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கச் சுதந்திரம் இருக்கிறது. நம் நாட்டில் ஜாதகம் பார்த்தல் என்ற கோணத்தில், அவர்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதாக உணர்கிறேன்.திருமணத்துக்கு ஜாதகம் பார்ப்பது கட்டாயமா?

தினமும் வேதம் ஓதுபவர்களைத் தவிர, மற்றவர்கள் தைவம், ஆர்ஷம், ப்ரஜாபத்யம், காந்தர்வம், ராக்ஷஸம், ஆசுரம், பைசாசம் ஆகிய 7 வகைத் திருமணங்களை ஏற்றனர். இவற்றில் எல்லாம் ஜாதகம் இல்லை; ஓர் ஒப்பந்தத்தில் நடைபெறும். வேதம் ஓதுபவர்களும் வேதம் சொல் லும் தகுதியை ஏற்பார்கள். ஜாதகத்துக்கு மதிப்பு இருக்காது. வயது வருவதற்கு முன்பே திருமணம் நடைபெறுவதால், தனியே தேர்ந்தெடுக்கும் தகுதி அவர்களிடம் இருக்காது. எனவே, அந்தப் பொறுப்பை அவர்களின் பெற்றோர் ஏற்றனர். இது, 'சார்தா' சட்டம் வரும் வரை தொடர்ந்திருந்தது.

அந்த நாட்களில் ஜாதகப் பிரிவு வளர்ந்தோங்கி இருந்தது என்றாலும், அதை நாடிப் போகவில்லை.

அதனால் மனத்தில் கலக்கம் தோன்றினால், தர்ம சாஸ்திரப்படி பரிகாரம் செய்து திருமணத்தை முடிப்பர். ஜாதகத்தைவிட வேதத்தில் நம்பிக்கை இருக்கும். 

'பிராம்ம விவாஹம்' அளிக்கும் உறுதியைவிட ஜாதகம் உறுதி அளிக்காது என்ற உண்மையை அறிந்தவர்கள், தெய்வ சந்நிதியில் சீட்டு எழுதிக் குலுக்கிப்போட்டு தெய்வத் தின் சம்மதத்தைப் பெறுவார்கள். 

வரன் தேடிக் கிளம்பும் தருணத்தில் சகுனம் பார்த்து முடிவெடுப்பார்கள். 

இருவரின் திருமணத்தை மனத்தில் நினைத்து ராமாயணம், பாரதம், பாகவதம் போன்ற புத்தகங்களைத் திறந்து பார்ப்பார்கள். அந்தப் பக்கங்களில் தென்படும் தகவல்கள்- நிகழ்வுகளை வைத்து முடிவெடுப்பார்கள். 

அத்தை மகன், மாமன் மகள், மாமன், மருமகள்... இப்படியான உறவுகளில் திரு மணம் நடத்துவது எனில், எதையும் பார்க்க மாட்டார்கள். 

முதல் மனைவி இறந்த பிறகு, 2-வது மனைவியை ஏற்க ஜாதகம் தடையாக இருக்காது. 

அரச பரம்பரையின் சுயம்வரத்தில் ஜாதகம் தடையாக இருக்காது. 

வியாபரத்தில் ஈடுபட்ட பரம்பரை, உடல் உழைப்பில் வாழ்க்கை அமைத்துக்கொண்ட பரம்பரை ஜாதகத்தை நினைத்துப் பார்க்காது. 

கடல் வாணிபத்தில் ஈடுபட்ட அரச குமாரர்களும், வணிகர்களும் அயல் நாட்டுப் பெண்ணையும் மணப்பது உண்டு. அங்கும் ஜாதகம் இருக்காது.

தர்ம சாஸ்திரம் ஜாதகத்தை ஏற்க நிர்பந்திக்காது. அது, திருமணத்தில் இணைவதற்கு உகந்த தகுதிகளை வரையறுக்கும். அத்துடன், தம்பதியின் ஒற்றுமையை வலுப்படுத்த மற்ற சாஸ்திர வல்லுநர்களின் பரிந்துரை யையும் ஏற்கலாம் என்று சொல்லும். ஸனாதனத்தின் கண்ணோட்டத்தில் திருமணத்துக்கு ஜாதகம் கட்டா யம் இல்லை. பிராம்ம விவாஹம் இருவரின் மன ஒற்றுமையை உறுதி செய்வதால், ஜாதகம் தேவை இல்லாமல் போய்விட்டது. இரு மனம் ஒரு மனமானால் திருமணம் (திரு-மனம்)!
வேதாங்கத்தில் குறிப்பிடும் ஜோதிடம் வான சாஸ்திரத்தைக் குறிக்கும். நமது கடமைகளின் காலத்தை எடுத்துக் கூறும் பஞ்சாங்கம், முகூர்த்த சாஸ்திரம் முதலானவை வேதாங்கத்தில் இருக்கும். பலன் சொல்லும் பகுதிக்கு வான சாஸ்திரம் ஆதாரம் ஆனதால், வான சாஸ்திரத்தின் பெயரான ஜோதிடம் என்பதை, பலன் சொல்லும் பகுதிக்கும் சூட்டி விட்டார்கள். வாழ்வில் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், இடையூறை விலக்கி முன்னேறவும் வேதமும், அதை ஒட்டிய தர்மசாஸ்திரமும் போதுமான தாக இருந்ததால், ஜோதிடப் பகுதியில் நாட்டம் இருக்கவில்லை. ஆக, பண்டைய நாட்களில் திருமணத்துக்கு ஜாதகம் பார்ப்பது கட்டாயமாக இருக்கவில்லை. பிற்பாடு ஏற்பட்ட ஜோதிட பரம்பரை, அதை ஏற்கும்படி நிர்பந்தித்தது. எனவே, ஜாதகம் பார்ப்பது சுதந்திரத்தைப் பறிக்கவில்லை.

இந்த விளக்கம் எல்லோரும் ஏற்கும்படியாக இல்லை. முற்பிறவியின் கர்மவினை, இந்தப் பிறவி யில் அனுபவத்துக்கு வரும். அது எப்போது, எப்படி, எந்த அளவுக்கு, துயரமா, மகிழ்ச்சியா, இழப்பா, செழிப்பா... என்பதான தகவல்களை கிரகங்கள் வாயிலாக ஜாதகம் வெளியிடும் என்கிறது ஜோதிடம் (யதுபசிதமன்யஜன்மனி...). காலத்துடன் இணைந்த நவக்கிரகங்கள், காலம் வாயிலாக நாம் அனுபவிக்கவேண்டிய கர்ம வினையை இணைத்து உணர வைக்கிறது. நமது சிந்தனை அதை ஏற்கும் அளவில் செயல்பட்டு, ஏற்கச் செய்கிறது. இருவரது மணவாழ்க்கை அவர்களின் சிந்தனையைப் பொறுத்து இன்பமாகுமா அல்லது துன்பமாக அமையுமா என்பதை ஜாதகத்தின் மூலம் அவர்களது கர்மவினையை ஆராய்ந்து, அவர்களின் சிந்தனையை வரையறுத்தால், தாம்பத்தியத்தின் பலனை முன்னரே தெரிந்துகொள்ளலாம். இந்த வகையில், ஜாதகம் ஒரு வரப்பிரசாதம்.


வீடு பற்றி எரியும்போது கிணறு தோண்ட முற்பட்டால் பலன் இருக்குமா? ஆறறிவு பெற்றவன் ஆராய்ந்து செயல்பட வேண்டும். ஆயுள், குழந்தை பாக்கியம், மாறாப்பிணி, பிணி தோன்றும் வேளை, பொருளாதாரத்தில் செழிப்பு ஆகியவற்றை நமது சிந்தனையால் அறிய இயலாது. துறவறம், நைஷ்டிக பிரம்மசாரி நிலை போன்றவையும் நம் சிந்தனைக்கு எட்டாது. அதுமட்டுமா? இன்றையச் சூழலில் நெருக்கமான மனைவி, சொல் பேச்சை மதிக்கும் புதல்வன் முதலானவை பாக்கியம் இருந்தால் தான் கிடைக்கும். அகால மரணம், ஆபத்தில் சிக்கி மரணம், தற்கொலை போன்றவை குறித்த விஷயங்களும் நம் சிந்தனைக்கு எட்டாது. ஜாதகம் தகவல் தரும். வேலை இழப்பு, மனைவியின் இழப்பு, குறிப்பிட்ட வயதில் தோன்றும் வியாதிகளின் வலிமை போன்ற வையும் ஜாதகத்தை ஆராய்ந்தால் தெரியவரும்.
குழந்தை இருக்காது என்பதை முன்னரே தெரிந்துகொண்டால், அதைப் பெறுவதற்கான பரிகாரத்தில் இறங்கி வெற்றி பெற ஜாதகம் உதவும். அடுத்த நொடியில் நமது சிந்தனை எப்படி இருக்கும் என்று அளவிட முடியாது. ஆனால், அதை ஜாதகம் சொல்லும். பல வருடங்கள் காதலித்துத் திருமணத்தில் இணைவர். ஆனால், அடுத்த ஆறே மாதத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பிப்பார்கள். முன்னதாகவே இருவரது சிந்தனையை ஜாதகம் வாயிலாக அறிந்திருந்தால், இந்த விபரீதத்தைத் தடுக்க இயலும். சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மனமானது சிந்தனையை மாற்றிக்கொள்ளும். அந்த மாறுதலை ஜாதகத்தின் மூலம் அறியும்போது, துயரத்தைச் சந்திக்காதவாறு முடிவெடுக்கலாம்.

படிக்காதவன் செல்வந்தனாகவும், படித்தவன் அன்றாட வாழ்க்கைக்கு அல்லாடுபவனாகவும் இருப்பார்கள். சிந்தனை வளம் பெற்றவன் சிக்கலில் தவிப்பான்; பாமரன் ஒருவன் பேரும் புகழுடன் விளங்குவான். எல்லோரும் ஆறறிவு பெற்றவர்கள். ஆனால், அனைவருக்கும் நிம்மதி அளிப்பதான வாழ்க்கை இல்லை. அசட்டுக்கு அழகான மனைவி; அறிஞனுக்கு அசட்டு மனைவி. பீஷ்மருக்குத் தகுதி இருந்தும், தன்னை பிரம்மசாரியாக்கிக் கொண்டார். ஆனால், விருப்பம் இருந்தும் எவரும் பெண் தராததால், சகுனி பிரம்மசாரியா னான். யுதிஷ்டிரன் திறமையானவன். ஆனாலும் அரசாள வேண்டிய வேளையில் காட்டுக்குக் குடியேறினான். அரசாளத் தகுதியில்லை என்று முடிவு கட்டிய திருதராஷ்டிரன் வாழ்க்கை முழுவதும் அரசனாகவே இருந்தான். சிலருக்குத் திருமணம் எட்டாக்கனியாக இருக்கும். ஆனால் சிலருக்கு இரண்டாவதாகவும் ஒருத்தி மனைவியாகத் தேடி வருவாள். பிறப்பு ஓர் இடம், வாழ்க்கை மற்றோர் இடம், மரணம் வேறொரு இடம்! ஆறாவது அறிவு இருந்தும் இத்தனை அவலங்கள் ஏன்? இதற்கு ஜாதகம் பதில் சொல்லும்.

ஆசைகள் பொங்கி வழியும் இன்றைய இளைஞர்களின் போக்கை ஆராய ஜாதகம் உதவும். இன்றைய மனித சிந்தனை கணினி வழி செயல்பட்டு பிரமிக்க வைக்கிறது. முக்காலமும் அறிந்த முனிவர்களது சிந்தனையில் தோன்றிய ஜோதிடம், மனித மனத்தின் போக்கை படம் போட்டுக் காட்டும் என்பதில் சந்தேகத் துக்கு இடமில்லை. ஜோதிடத்தில் மனவியல் பெரும் பங்கு வகிக்கிறது. ஜாதகம் பார்ப்பதை அலட்சியப்படுத்தினால் இனிமையான வாழ்க்கை கேள்விக்குறியாகும். எனவே, ஜாதகம் பார்ப்பது இன்றையச் சூழலில் கட்டாயம் வேண்டும். அது சுதந்திரத்தைப் பறிக்கவில்லை. நிம்மதியை அளிக்கிறது.

இரண்டுவிதமான விளக்கங்களைப் பார்த்தோம். மூன்றாவது கோணமும் உண்டு. சிந்தனைக்கு எட்டாத விஷயத்துக்கு ஜோதிடத்தை அணுகலாம். ஆனால், உலகவியல் சுகபோகங்களுக்கு நமது சிந்தனை போதுமானது. பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் தாம்பத்திய இணைப்புக்கு ஜோதிடத்தின் பரிந்துரை அவசியமில்லை. அத்தனை உயிரினங்களிலும் இணை சேருவது நிகழும். ஒவ்வோர் உயிரினத்தையும் இயற்கை இயல்பாகவே இணைய வைக்கும்.

கல்வியில் எந்தப் பிரிவைத் தேர்வு செய்வது, எந்தக் கல்லூரியில் சேர்வது, எங்கு வேலை பார்ப்பது என்பதற்கெல்லாம் ஜாதகம் பயன்படாது. சூழலுக்கு ஏற்ப நமது சிந்தனையே இவற்றைத் தேர்ந்தெடுத்துவிடும். வீடு, வாகனம் ஆகியவற்றை நமது பொருளாதாரம் வரையறுக்கும். மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை அவனது ஆசை இறுதி செய்யும். குழந்தைகள் வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து அந்தத் தம்பதியின் மனமே முடிவெடுத்துவிடும். பண்பு, அடக்கம் மற்றும் ஒழுக்கத்துடன் இருப்பவனுக்கு எல்லா மகிழ்ச்சியும் கிடைத்துவிடும். விட்டுக்கொடுக்கும் எண்ணமும் வாழ் வில் பிடிப்பும் இருந்துவிட்டால் விவாகரத்து வராது. அடக்கம், அர்ப்பணிப்பு, பெரியோரை மதித்தல், அன்பு, பண்பு, அரவணைப்பு ஆகிய குணங்கள் இணைந்து, இன்பமாக வாழும் சூழலை உருவாக்கும்.

ஜாதகம் பார்த்து முடிவெடுத்தாலும், ஒரு தம்பதியின் தாம்பத்திய வெற்றிக்குக் காரணம் அவர்களின் நல்ல எண்ணங்கள்தான்; ஜாதகத்தின் பங்கு காரணம் அல்ல. ஒழுக்கம் மேலோங்கியிருக்கும் இருவரின் காதல் திருமணம் வெற்றி பெறும். அதேநேரம், ஒழுக்கம் இல்லாதவர்களின் ஜாதகப் பொருத்தம் தோல்வியுறும். வயது வந்த பிறகு (உரிய வயதுக்குப் பிறகு) திருமணம் செய்வதால், அவர்களில் ஏற்படும் எதிரிடையான ஆசைகள் விவாகரத்துக்குக் காரணமாகிவிடும். ஆக, ஜாதகப் பொருத்தமின்மை விவாகரத்தை அளிக்க வில்லை; அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கக்கூடாது!
மனத்தையும் சிந்தனையையும் ஆராயாமல், நட்சத்திரத்தையும் ஜாதகத்தில் 7, 8 வீடுகளையும் ஆராய்வதில் பலன் இல்லை. இருவரின் இணைப்பை உறுதிசெய்ய அது பயன்படாது.திருமணத்துக்குப் பொருத்தம் பார்ப்பது என்பது, அன்றும் இன்றும் என்றும் தேவையற்றது. உடலும் உள்ளமும் வலுவாக இருந்தால், குழந்தை பிறக்கும். அது ஜாதகத்தின் வேலை அல்ல. பண்டைய நாட்களில் பலாத்காரத்தில் குழந்தை பிறப்பது உண்டு. பீஜமும் சோணிதமும் தகுதி இழக்காமல் இருந்தால் குழந்தை உண்டு. அதற்கு மருத்துவரிடம் அணுகினால் போதும். பொருத்தம் பார்க்கும் முறையும் ஜோதிடருக்கு ஜோதிடர் மாறுபடும். 'தோஷ ஸாம்யம்' என்ற கோட்பாட்டுக்குச் சான்று இன்னமும் கிடைக்க வில்லை. பொருத்தத்தை வரையறுப்பதில் ஜோதிடர்களிடம் ஒத்தக்கருத்து இன்றும் இல்லை.
விதவைத் திருமணத்தையும் விவாகரத்தையும் நாம் ஏற்றுக் கொண்டுவிட்டோம். பீஜ வங்கியை அணுகினால் செயற்கை முறையில் குழந்தைகளும் கிடைத்துவிடும். வாடகைத் தாய்களும் தயார் நிலையில் உண்டு. விவாகரத்து ஆனவர்கள் குழந்தையுடன் வந்தாலும், திருமணம் செய்துகொண்டு அவர்களை ஏற்பது உண்டு. இருவரும் வேலையில் இருப்பதால் பொருளாதாரமும் போதுமான அளவு இருக்கும். பதிவுத் திருமணத்தை ஏற்ற பிறகு, சம்பிரதாயத் திருமணத்தில் நாட்டம் இல்லாமல் இருப்பவர்களும் உண்டு. இப்படியாக... ஜாதகத்தில் தென்படும் குறைகளை வேறு வழியில் நிறைவாக்கிக்கொள்ள முடிவதால் ஜாதகம் பார்ப்பது கட்டாயம் இல்லை. தம்பதி ஒற்றுமைக்கு இதய பரிவர்த்தனமே சிறந்த மருந்து.

ஜாதகப் பொருத்தம் அவசியமா என்பது குறித்து 3 கோணங்களைச் சிந்தித்தோம். இனி, உங்கள் சிந்தைக்கு...

பழைய பண்புகள் சில இடத்தில் செயல்படாமல் இருப்பதை வைத்து ஜாதகம் பார்ப்பதைக் குறை கூறுவது அறியாமை. பண்பான வாழ்க்கை முறை நிலைத்திருக்க பொருத்தம் பார்த்தல் அவசியம். முனிவர்களது வாக்கு பொய்யாகாது. பிச்சை கேட்க வருவான் என்பதால், சமையல் செய்யாமல் இருப்பது இல்லை. பயிரை மாடு மேய்ந்துவிடும் என்பதால், பயிர் வளர்க்காமல் இருப்பதில்லை. குறை தென்படுகிறது என்பதால், அதை ஒதுக்கக்கூடாது. ஆழமாக சிந்தித் தால் ஜாதகம் மிகவும் தேவை என்று விளங்கும். குறைகளை அகற்றி ஜாதகத்தின் தேவையை மக் களுக்கு உணர்த்த வேண்டும். முனிவர்கள் உரைத்த நல்லுரைகள், நடைமுறைகள் என்றும் நன்மையைச் செய்யும். நாம் அறியாமையால் உண்மையைத் திருத்திக் கூறுகிறோம்.

சிகிச்சை பலனின்றி இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயருகிறது. அதற்காக மருத்துவத்தைக் குறை சொல்ல இயலுமா? தொடர்வண்டிப் பேருந்து, விமானம் ஆகியவை விபத்துக்கு உள்ளாவதுண்டு. அதற்காக அவற்றை ஒதுக்க இயலுமா? எல்லா சட்ட திட்டங்களுக்கும் விதிவிலக்கு உண்டு. சட்டங்கள் ஏற்கத் தக்கதல்ல என்று சொல்ல இயலுமா?
காலத்தின் மாசு ஜோதிடத்தில் படியாது, நமது சிந்தனையில் படியும். சிந்தனை மாற்றம் நிச்சயமாக விளையும். ஆதவன் உருவாக்கிய மேகம் அவனையே மறைத்துவிடும். ஆனால், அது நிரந்தர மாக இருக்காது. சிந்தனை மாற்றமும் நிரந்தரம் இல்லை. எனவே, ஜாதகப் பொருத்தம் பார்ப்பதை சுதந்திரத்தின் இழப்பாக எண்ணாமல், வாழ்வின் உயர்வுக்கு அவசியமானதாக ஏற்க வேண்டும்.