நமது இலக்கை நோக்கிய முன்னேற்றத்தில் சில தருணங்களில் ஏற்படும் சறுக்கல்களுக்கும் தடைகளுக்கும் பல காரணிகள் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கது, ஒருவரைப் பற்றிய தவறான மதிப்பீடு. நல்லாரைப் பொல்லார் என்றும், பொல்லாரை நல்லார் என்றும் ஏதோ காரணத்தால் தவறாக மதிப்பிட்டுவிடுகிறோம்.
சாது ஒருவர் ஊர் ஊராகச் சென்று பிக்ஷை ஏற்று வாழ்ந்து வந்தார். அப்படி ஓர் ஊருக்கு அவர் செல்லும் வழியில், ஒற்றையடிப் பாதையில் எதிரில் செம்மறிக் கடா ஒன்றைக் கண்டார். இவரைப் பார்த்ததும் அந்த முரட்டுக் கடா சில அடிகள் பின்னால் போய் நின்று தலை தாழ்த்தியது.
சாதுவுக்குப் பரம சந்தோஷம்!
'அடடா... இதுவல்லவோ புத்திசாலி! எனது மகிமைகளை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறது. அதனால்தான் என்னைக் கண்டதும் பின்னால் நகர்ந்து தலை வணங்குகிறது!' என்று எண்ணிப் பெருமிதம் கொண்டார்.
அடுத்த கணமே, பெரும் பாய்ச்சலாகப் பாய்ந்து வந்த அந்த முரட்டுக் கடா, சாதுவை அடி வயிற்றில் பலமாக முட்டித் தள்ளியது. தன் மீது பாய்ந்து முட்டுவதற்கு ஏதுவாகவே அது பின்னால் நகர்ந்து தலை தாழ்த்தியது என்பது அந்தச் சாதுவுக்குப் பிறகுதான் உறைத்தது.
பாண்டிச்சேரி அரவிந்த அன்னை சொன்ன அற்புதமான கதை இது. இப்படித்தான் தகுதியற்ற ஒருவரை மரியாதைக்கு உரியவராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் நம்பி ஏமாந்து போகிறோம். இப்படி வெளித்தோற்றத்தைக் கண்டு சிலரை நல்லவர்கள் என்று தவறாகப் புரிந்துகொள்வது போலவே, தகுதியான ஒருவரைக் குறைத்து மதிப்பிட்டுவிடுவதும் உண்டு. ஆக, இரண்டையுமே தவிர்த்து, ஒருவரை அல்லது ஒரு விஷயத்தை சரியாகக் கணிக்கக் கற்றுக்கொண்டுவிட்டால், நம் வெற்றிக்குத் தடையே இல்லை.
நண்பன் ஒருவன், கொஞ்சம் ஏடாகூடமான பேர்வழி! ஒருநாள், காலைக் கெந்தியபடி நடந்து வந்தான். காரணம் கேட்டால், நாய் கடித்துவிட்டதாகச் சொன்னான்.
''ஏம்பா... தெருவில் போகும்போது பார்த்துப் போகக்கூடாதா?'' என்று கேட்டேன்.
''கடிச்சது தெரு நாய் இல்லேப்பா! வீட்டு நாய்தான். காலைல நம்ம புரொஃபஸர் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர் வீட்டு நாய்தான் கடிச்சு வெச்சிடிச்சு!'' என்றான் பரிதாபமாக.
''அடப்பாவி! அவர் வீட்டு கேட்லதான் 'நாய்கள் ஜாக்கிரதை'ன்னு பெரிசா போர்டு மாட்டியிருக்குமே, கவனிச்சதில்லையா நீ?'' என்றேன்.
''கவனிச்சேன். ஆனா, அது நாய்களுக்கான எச்சரிக்கையோன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டேம்ப்பா!'' என்று சொல்லிச் சிரித்தான். இப்படியானவர்களைப் புரிந்துகொள்வதும் கொஞ்சம் கஷ்டம்தான்!