சினிமா பார்த்துவிட்டுத் திரும்பும்போது, நானும் நண்பனும் சிறிது நேரம் மௌனமாகவே இருந்தோம். முதியவர்களின் மன வலியை அழுத்தமாகச் சித்திரித்த அந்தத் திரைப்படம் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. நண்பனுக்கும் அப்படித்தான் என்பதை அவன் கண்களில் எட்டிப் பார்த்த நீர்ப் பரப்பும், அடுத்து அவன் உதிர்த்த வாக்கியமும் காட்டிக்கொடுத்தன. 'பெற்றவர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்புவது பெரும் பாவம்'' என்றான் நண்பன். ஆமோதிப்பாகத் தலையசைத்தேன். தொடர்ந்து, அவனே சொன்னான்...
'முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களைப் பற்றி நான் நிறைய யோசித்துப் பார்ப்பேன். மாதம் ஒரு முறையாவது ஏதாவது முதியோர் இல்லத்துக்கு இனிப்பு, பலகாரங்கள் வழங்க வேண்டும்; அதைவிட முக்கியமாக, அவர்களுடன் ஆறுதலாகப் பேச வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை!''
'நல்ல எண்ணம்'' என்றேன்.
மேலும் நடந்தபோது, சாலையில் ஒரு மரத்தில் ஆணியடித்து விளம்பரப் பலகை ஒன்று மாட்டியிருந்தது கண்ணில் பட்டது. அது ஒரு தனியார் மருத்துவமனையின் விளம்பரப் பலகை.
நண்பனின் முகத்தில் கோபம் தெரிந்தது. 'இதயம் இல்லாதவர்கள். சமூகப் பொறுப்பு கொஞ்சம்கூட இல்லை'' என்று எரிச்சல் வார்த்தைகளை வெளிப்படுத்தினான்.
'ஏன், உனக்குத் தெரிந்த யாராவது அந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கிட்டாங் களா? மருத்துவக் கட்டணம் மிகவும் அதிகமாக இருந்ததா?'' என்று கேட்டேன்.
'அதெல்லாம் இல்லை. நமக்கு நிழல் தரும் மரங்களை நாம் பாதுகாப்பதுதான் நியாயம். அதற்கு மாறாக அந்த மரங்களிலேயே ஆணி அடிப்பதும், விளம்பரப் பலகையை மாட்டுவதும் எவ்வளவு தப்பு! போன மாதம் ஒரு சமூக அமைப்பிலிருந்து அழைப்பு ஒன்று வந்தது; ஞாயிற்றுக்கிழமைகளில் இதுபோன்ற சாலையோர மரங்களின் மீதுள்ள விளம்பரப் பலகைகளையும், ஆணிகளையும் நீக்க 'வாலண்டியர்கள்' தேவை என்று! என் பெயரைக் கொடுப்பதாக இருக்கிறேன்'' என்றான்.
சில நாட்களுக்கு முன்னால், இறந்த பின்பு என் கண்களைத் தானமாக அளிக்க ஒரு மருத்துவமனையில் என் பெயரை ஐந்து மாதங்களுக்கு முன்பு பதிவு செய்து கொண்டதைச் சொன்னபோது, தானும் அப்படிப் பதிவு செய்துகொள்ளப் போவதாக நண்பன் உறுதிபடக் கூறியது சட்டென்று என் நினைவுக்கு வந்தது.
'கண் தானத்துக்குப் பதிவு செஞ்சாச்சா?'' என்று கேட்டேன்.
'இன்னும் இல்லை. கூடிய சீக்கிரம் செஞ்சுடுவேன்'' என்றான். அதே உறுதி!
'வீட்டுக்குப் போக இன்னும் 10 நிமிடமாவது ஆகும். அதுக்குள்ளே உனக்கு ஒரு கர்ண பரம்பரைக் கதை சொல்லட்டுமா?'' என்றேன்.
ஆவலுடன் நண்பன் தலை அசைக்க, சொல்லத் தொடங்கினேன்.
'நீதி தவறாதவர் என்று பெயர் எடுத்திருந்த தருமரிடம் வழக்கு ஒன்று வந்தது. அவரிடம் இரண்டு பேர் முறையிட்டார்கள்.
'மன்னா, ஒரு மாதத்துக்கு முன் இவருக்கு என் நிலத்தை விற்றேன். இரண்டு நாட்களுக்கு முன் இவர் அந்த நிலத்தைத் தோண்டிப் பார்த்தார். அதில் ஒரு புதையல் இருந்தது. இது தொடர்பாகவே வழக்கு!' என்றார் ஒருவர்.
உடனே இரண்டாமவர், 'நான் நிலத்தைதான் விலை கொடுத்து வாங்கினேனே தவிர, அதிலுள்ள புதையலை அல்ல. அது இவருக்கே சொந்தம்' என்றார்.
தருமர் முகத்தில் புன்னகை. நிலத்தை விற்றவரிடம், 'இதில் என்ன வழக்கு இருக்கிறது? நீங்கள் அந்தப் புதையலைப் பெற்றுக்கொள்ள வேண்டியதுதானே?' என்றார்.
'அதெப்படி? நான் எப்போது நிலத்தை விற்றுவிட்டேனோ அப்போதே அந்த நிலத்துக்குள் இருக்கும் அத்தனையும் அவருக்குத் தானே சொந்தம்? எனவே, அந்தப் புதையலை நான் பெற்றுக்கொள்ள மாட்டேன்!' என்றார் பிடிவாதமாக.
தருமருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தன் தேசத்து மக்கள் எவ்வளவு நியாயவான்களாக இருக்கிறார்கள் என்று! அதேநேரம், அவர்களுக்கு எப்படி உடனடியாகத் தீர்வு சொல்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. அதனால் நான்கு நாட்கள் கழித்து அவர்களை வரச்சொன்னார்.
நான்கு நாட்கள் கழித்து, இருவரும் அரண்மனைக்கு வந்தனர்.
நிலத்தை விற்றவர் பேசத் தொடங்கினார்... 'மன்னா! நான் நிலத்தை மட்டும்தான் இவருக்கு விற்றேன். எனவே, அதற்குள் கண்டெடுக்கப்பட்ட புதையலை இவர் என்னிடம்தான் தரவேண்டும். இவரே அனுபவிக்கப் பார்க்கிறார்! இதென்ன நியாயம்?' என்றார்.
நிலத்தை வாங்கியவரோ, 'அதெப்படி? நிலத்தை வாங்கியபோதே அதிலுள்ள எல்லாப் பொருள்களும் எனக்குத்தான் சொந்தம் என்றாகிவிடுகிறது. எனவே, அந்தப் புதையலை இவருக்குக் கொடுக்கவே மாட்டேன்' என்றார்.
தருமர் அதிர்ச்சியடைந்தார். 'இந்த நான்கு நாட்களில் என்ன ஆயிற்று? இவர்கள் ஏன் இப்படி முறைத்துக் கொள்கிறார்கள்?' என்று யோசித்தார். அவருக்கு ஓர் உண்மை புரிந்தது. ஆம்... கலியுகம் பிறந்துவிட்டது என்கிற உண்மைதான் அது!'
நான் கதையைச் சொல்லி முடித்ததும், 'கதை நல்லாத்தான் இருக்கு. பின்னே, கலிகாலம்னு சும்மாவா சொல்றாங்க?'' என்றான் நண்பன்.
'அதிருக்கட்டும்... நீ புத்திசாலியாச்சே! நான் எதற்காக இந்தக் கதையைச் சொன்னேன்னு உனக்குப் புரியலையா?'' என்று கேட்டேன்.
சில நொடி அமைதிக்குப் பிறகும் நண்பன் குழம்புவதைக் கண்டு, நானே விளக்கினேன்.
'தருமருக்கு வந்த வழக்கின் மூலம் கலியுகத்தின் தன்மை மட்டுமல்ல, மனித மனத்தின் தன்மையும் வெளிப்படுகிறது. நல்லது செய்யவேண்டும் என்று நினைத்தால், அதைத் தள்ளிப் போடுவதில் ஒரு 'ரிஸ்க்' இருக்கிறது. அதைச் செய்யாமலே போய் விடுவோம். அல்லது, நம் மனம் தேவையில்லாத வேறு விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, செய்யணும்னு நினைக்கிற நல்ல காரியங்களை பின்னுக்குத் தள்ளிவிடும். அதனால...''
நான் முடிப்பதற்குள் நண்பன் குறுக்கிட்டுச் சொன்னான்.. 'நாளைக்குக் காலையிலே முதியோர் இல்லத்துக்கும், கண்தானப் பதிவுக்கும் போகப்போறேன். நாளை மதியம் நீ இங்கே வந்தால், மரங்கள் தொடர்பான சேவையில் நான் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்!'' என்றான்.
'ஒன்றே செய்யவும் வேண்டும் ஒன்றும்
நன்றே செய்யவும் வேண்டும் நன்றும்
இன்றே செய்யவும் வேண்டும் இன்றும்
இன்னே செய்யவும் வேண்டும்' என்கிற கபிலரின் பாட்டுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. நல்ல விஷயத்தை இன்றேகூட இல்லை, இப்போதே செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறார் கபிலர்.