கொஞ்சம் கஷ்டம் வந்தாலும் போதும்; அப்படியே துடித்துத் துவண்டு, தண்ணீரில் நனைந்த காகிதமாகப் போய்விடுகிறோம். இத்தனைக்கும் மன நிம்மதி அளிப்பதற்குக் கோயில்கள் இருக்கின்றன. நமக்கு நல்வழி காட்ட, இதிகாச- புராணங்கள் உள்ளன. தெய்வீக நூல்களைப் பாராயணம் செய்யும் வழக்கமும் மக்கள் மத்தியில் நன்றாகவே பரவி இருக்கின்றது. இருந்தாலும், நாம் எதிர்பார்க்கும் நிம்மதியும் மகிழ்ச்சியும் பூரணமாகக் கிடைத்ததாகச் சொல்லமுடியவில்லை. நமது எதிர்பார்ப்பில் எங்கேயோ ஓட்டை விழுந்திருக்கிறது. அதைப் பிறகு பார்க்கலாம். அதற்குள் ஸ்ரீராமரையும் ஸ்ரீகண்ணனையும் தரிசித்துவிட்டு வரலாம், வாருங்கள்!
ஸ்ரீராமருக்கு இரண்டு குழந்தைகள். அந்த இரு குழந்தைகளையும் அவர் எடுத்துக் கொஞ்சியதாகத் தகவல் இல்லை. ராமராவது குழந்தைப் பருவம் முதல் பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்தார். ஆனால் கண்ணனோ அவதரித்ததுமே அன்னை- தந்தையைப் பிரிந்தார். பெற்றோர்களான வசுதேவர்- தேவகியின் அரவணைப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
இவ்வாறு அவதாரங்களே அனுபவிக்காத பல மகிழ்வுகளை நாம் அனுபவிக்குமாறு தெய்வம் நமக்கு அருள்புரிந்திருக்கிறது.
மகாபாரதத்தில் தர்மத்தை விட்டு விலகாத பஞ்சபாண்டவர்கள் அனுபவிக்காத துயரங்களா?
யாகத் தீயில் இருந்து தோன்றியவள் திரௌபதி. யாக பத்தினியாக இருந்தவள் அவள். வீரர்களும் ஆற்றல் நிறைந்தவர்களுமான பஞ்ச பாண்டவர்களின் மனைவியும்கூட!
இவ்வளவு இருந்தும், பலர் முன்னிலையில் ராஜ சபையில் துச்சாதனனால் அவமானப்படுத்தப்பட்டாள் அவள். காட்டுக்குப் போனபோதும், அங்கே ஜயத்ரதனால் தூக்கிச் செல்லப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டாள்.
அஞ்ஞாத வாசம் என்னும் யார் கண்ணிலும் படாமல் மறைந்திருக்கும் ஒரு வருட காலத்திலாவது அவள் சற்று நிம்மதியாக இருந்தாளா என்று பார்த்தால், அங்கேயும் இல்லைதான்! பஞ்சபாண்டவர்களும் திரௌபதியும் விராட நகரில் மறைந்திருந்து வசிக்கும்போது, கீசகன் என்பவன் திரௌபதியின் முடியைப் பிடித்து இழுத்து, இழிவாகப் பேசி, அவமானப்படுத்தினான். அவளுக்குத்தான் எத்தனை துயரம்... எத்தனை துயரம்!
ராமாயணம், பாரதம், பாகவதம் முதலான நூல்களில் காணப்படும் தகவல்கள் இவை.
இப்போதே, ஓரளவுக்கு உங்களுக்குப் புரிந்திருக்கும். புரியாவிட்டால் என்ன? கீழ்க்காணும் கதையைப் படித்தால் புரிந்துவிடப் போகிறது.
ஒருவன் வீட்டில் பசு கன்று போட்டது. அப்போது இடி இடித்து, மின்னல் மின்னி, மழை கொட்டியது. அந்தப் பெருமழையால் அவன் வீடு இடிந்து விழுந்தது. அந்த நேரம் பார்த்து, அவன் மனைவிக்குத் திடீரென்று பிரசவ வலி உண்டாகிவிட்டது. அந்தத் தகவலை அந்த மனிதனிடம் சொல்லலாம் என்று போன அவனது வேலைக்காரன் திடீரென இறந்துபோய்விட்டான்.
இவ்வளவு களேபரத்தின் நடுவில் அந்த மனிதன், மழை ஈரம் போவதற்குள் விதை விதைத்து விடலாம் என்று விதையைத் தூக்கிக்கொண்டு, வயலுக்கு ஓடிக்கொண்டிருந்தான். அவனை வழியில் கடன்காரன் மடக்கி, ''நீ எனக்குத் தர வேண்டிய கடனைக் கொடு!'' என்று நிர்பந்தப்படுத்தினான்.
அது போதாதென்று அரசாங்கப் பணியாளர் ஒருவர் வந்து, ''உன் வயலிலே ஏற்கெனவே விளைந்த தானியங்களுக்காக நீ அரசாங்கத்துக்குத் தீர்வை கட்ட வேண்டும். அதை உடனே கட்டு!'' என்றார்.
அந்த நேரத்தில் கோயில் குருக்களும் அங்கே வந்து சேர்ந்தார். ''அப்பா! நான் உனக்காகச் செய்து வைத்த ஹோமம் முதலானவைகளுக்காக நீ எனக்குக் கொடுக்கவேண்டிய தட்சிணையை உடனே கொடு!'' எனக் கேட்டார்.
ஆக மொத்தத்தில், அந்த மனிதனைச் சுற்றி ஒரு சின்ன கும்பலே கூடிவிட்டது. அதைப் பார்த்த புலவர்கள் சிலர், ''இவனைச் சுற்றி இவ்வளவு கூட்டமா? ஆஹா!'' என்று ஆச்சரியப்பட்டு, அவனைப் புகழ்ந்து பாடிப் பரிசு கேட்டு நச்சரிக்கத் தொடங்கினார்கள்.
என்னத்தைச் சொல்வது? இதைப் படிக்கின்ற நமக்கே ஒரு மாதிரி கிறுகிறுப்பாக இருக்கிறதே! அந்த மனிதனின் நிலை எப்படி இருந்திருக்கும்?
அனைத்தையும் ஒவ்வொன்றாக அவன் எதிர்கொண்டான். வேறு வழி? அனுபவித்துதானே ஆகவேண்டும்? இந்தத் தகவலைச் சொல்லும் பாடல்...
ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
அகத்து அடியாள் மெய் நோவ அடிமை சாவ
மாவீரம் போகுது என்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள
கோ வேந்தர் உழுது உண்ட கடமை கேட்க
குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்
பாவாணர் கவி பாடிப் பரிசில் கேட்கப்
பாவி மகன் படுந்துயரம் பார்க்கொணாதே
அகத்து அடியாள் மெய் நோவ அடிமை சாவ
மாவீரம் போகுது என்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள
கோ வேந்தர் உழுது உண்ட கடமை கேட்க
குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்
பாவாணர் கவி பாடிப் பரிசில் கேட்கப்
பாவி மகன் படுந்துயரம் பார்க்கொணாதே
(பாடல் எண் 77)
ஒன்று நடந்துதான் தீரும் என்றால், அதை மாற்ற நாம் யார்?
''தெய்வமே! இந்தத் துயரத்தைத் தாங்கும்படியான ஆற்றலைக் கொடு!'' என வேண்டி, அதை எதிர்கொள்ள வேண்டியதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டுமே தவிர, தப்ப முயல்வதில் பலன் இல்லை. தப்ப முயன்றால், பழைய பிரச்னைகளுடன் வேறு ஒரு புதுப் பிரச்னையும் சேர்ந்து கொள்ளும்.
நமது பிரச்னைகளுக்கெல்லாம் முக்கியக் காரணம் அல்ப புத்திதான். நாம் இதை ஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ, இந்த நூலின் மற்றொரு பாடல் அதையும் ஓர் அழகான கதையாகத் தந்து அறிவுறுத்துகிறது.
காட்டில் ஒரு வேடன், யானை ஒன்றின் மீது அம்பு எய்தான். யானை இறந்து கீழே விழுந்தது. அதே நேரத்தில், வேடனைப் பாம்பு ஒன்று தீண்டியது. நஞ்சின் வேகம் தாங்காமல் வேடன் மயங்கி, அந்தப் பாம்பின் மேலேயே விழுந்து இறந்தான். அவன் உடலுக்கு இடையில் அகப்பட்ட பாம்பும் நசுங்கி இறந்துபோனது.
இப்படி ஒரே நேரத்தில் யானை, வேடன், பாம்பு ஆகிய மூவரும் இறந்து கிடப்பதை, அந்த வழியாகப் போன ஒரு நரி பார்த்தது. அந்த நரிக்கு ஆனந்தம் தாளவில்லை.
''ஆஹா... ஆஹா..! இன்று எனக்கு யோகம்தான்! இறந்து கிடக்கும் இந்த யானையின் உடல், எனக்கு ஆறு மாத காலத்துக்கு உணவாக ஆகும். வேடன் உடல், எனக்கு மூன்று நாட்களுக்கு உணவாகும். பாம்பின் உடல், இன்று ஒரு நாளைக்கு உணவாக ஆகும். ஆனால், இப்போதே சாப்பிடத் தகுந்த உணவு எது என்றால், அது இந்த வேடனின் வில்லில் இருக்கும் நரம்புதான் (நாண் கயிறு)'' என்று சொல்லியபடியே, வில்லில் கட்டியிருந்த நரம்பைக் கவ்விக் கடித்தது. நரம்பு அறுந்தது. வளைத்து, இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்த வில், நாண் அறுபட்டதும் 'படார்' என்று வேகமாக நிமிர்ந்து, நரியின் தலையில் விசையுடன் மோதியது. அந்த அடியின் வேகம் தாங்காமல் நரி சுருண்டு விழுந்து இறந்தது.
அல்ப புத்தியால் அற்பமான நரம்புக்கு ஆசைப்பட்டு அழிந்தது நரி. அதுபோல, அற்ப விஷயங்களில் ஆசைகொண்டு செயல்படுபவர்கள் துன்பத்தையும் துயரத்தையுமே அடைவார்கள் என இந்தக் கதையின் மூலம் நம்மை எச்சரிக்கும் அந்தப் பாடல்...
கரி ஒரு திங்கள் ஆறு, கானவன்
மூன்று நாளும்
இரிதலைப் புற்றில் நாகம் இன்று
உணும் இரை ஈதென்று
விரிதலை வேடன் கையில் விற்குதை
நரம்பைக் கவ்வி
நரியனார் பட்டபாடு நாளையே
படுவர் தாமே!
மூன்று நாளும்
இரிதலைப் புற்றில் நாகம் இன்று
உணும் இரை ஈதென்று
விரிதலை வேடன் கையில் விற்குதை
நரம்பைக் கவ்வி
நரியனார் பட்டபாடு நாளையே
படுவர் தாமே!
(பாடல் எண் 92)
கதை சொல்லிக் கருத்தை விதைக்கும் இந்தப் பாடல்கள் 'விவேக சிந்தாமணி' என்ற அற்புத நூலில் இடம்பெற்றுள்ளன.
135 பாடல்களைக் கொண்ட இந்த நூலின் பாடல் ஒவ்வொன்றும் 4 வரிகள், 8 வரிகளுக்குள் அடங்கிவிடுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தேவையான கருத்துக்களைக் கதையாகவே சொல்லும் பாடல்கள் இவை.
அரும்பெரும் தகவல்கள் நிறைந்த பழைமையான இந்த நூலின் தொகுப்பாசிரியர் யார் என்பதை இன்று வரை ஆராய்ச்சியாளர்களால் அறியமுடியவில்லை.
விவேகசிந்தாமணி புத்தகத்தை தரவிறக்கம் செய்ய http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0059.pdf
,