கட்டற்ற மென்பொருள் செலவற்ற கல்வி
நமது செயல்களை எளிமையாக்க ஏராளமான மென்பொருள்கள் கிடைக்கின்றன. அவற்றை நாம் விலை கொடுத்து வாங்கினாலும்கூட, அவற்றை நிறுவும்போது சில கட்டுப்பாடுகளுக்கு ஒத்துக்கொள்கிறோம். எடுத்துக்காட்டாக "I agree" என்ற பொத்தானுக்கு மேலே உள்ள கட்டுப்பாடுகளைப் பெரும்பாலும் படிக்க மாட்டோம். அதில் கீழ்காணும் சில கட்டுப்பாடுகள் இருக்கலாம்.
'இந்த மென்பொருளை ஒரே ஒரு கணினியில் மட்டுமே நிறுவுவேன். வேறு யாருக்கும் தர மாட்டேன். நிறுவனத்தின் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் ஏற்கிறேன்,' என்ற கட்டுப்பாடுப்பாடுகள் இருக்கும்.
இந்தக் கட்டுப்பாட்டுக்கு முடிவு கட்ட வந்தவையே 'கட்டற்ற மென்பொருள்கள்' (Free / Open Source Software ). இங்கு Free என்பதை இலவசம் என்று மட்டும் புரிந்துகொள்ளக் கூடாது. Freedom எனும் அடிப்படைச் சுதந்திர உரிமை அது. இவை நமக்கு 4 உரிமைகளைத் தருகின்றன.
1. எங்கு வேண்டுமானாலும் மென்பொருளைப் பயன்படுத்தும் உரிமை.
2. எவரிடமும் பகிர்ந்துகொள்ளும் உரிமை.
3. மூல நிரலை (source code) பெறும் உரிமை.
4. மூல நிரலை மாற்றி வெளியிடும் உரிமை.
குனூ / லினக்ஸ் இயங்குதளம் முழுவதும், அதில் இயங்கும் பல்லாயிரம் மென்பொருள்களும் இந்த உரிமைகளுடன் வெளிவருகின்றன. தனியார் நிறுவனத்தில் உருவாக்கப்படாமல், பொதுமக்களால் இவை உருவாக்கப்படுவதால் இந்த உரிமைகள் நமக்குக் கிடைக்கின்றன. இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் கட்டற்ற மென்பொருள்கள் கிடைக்கின்றன.
பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும் GCompris எனும் மென்பொருள் பற்றி இங்கு காண்போம்.
GCompris என்பது தமிழகத்தின் பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருளுக்கு இணையானது. இது 2 முதல் 10 வயதுவரையிலான குழந்தைகளுக்கானது. 100க்கும் மேற்பட்ட பல்வேறு விளையாட்டுகள், செயல்பாடுகள் மூலம் கணிதம், ஆங்கிலம், எண்கள், வடிவங்கள், நிறங்கள், புவியியல், அறிவியல், இயற்பியல், அல்ஜீப்ரா, ஒவியம் வரைதல், நேரம் அறிதல் எனப் பல்வேறு விஷயங்களை இந்த வலைத்தளம் கற்றுத் தருகிறது.
இதை உபுண்டு லினக்ஸில், "Ubuntu Software Center" என்ற மென்பொருளில் தேடி நிறுவிக்கொள்ளலாம்.
அதன் பிறகு நம் குழந்தைகளுக்கு வண்ணமயமான புதியதொரு உலகு அறிமுகமாகும். இந்த வலைத்தளம் குழந்தைகளுக்குப் புரியும் வகையில், பாடமாக அல்லாமல் புதியபுதிய விளையாட்டுகள் மூலம், அறிவியலை அறிமுகம் செய்கிறது. இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதேநேரம் உங்களுக்கு மென்பொருள் அறிமுகமும் அடிப்படைத் தேர்ச்சியும் இருந்து, Python Programming என்ற மென்பொருள் மொழியும் அறிந்தோர் உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டுகளையும், செயல்பாடுகளையும் இந்த வலைத்தளத்தில் எளிதாக உருவாக்கலாம். கட்டற்ற உரிமையுடன் வருவதால், இந்த மென்பொருளை எந்த மொழியிலும் மொழிமாற்றமும் செய்ய முடியும். இந்த வலைத்தளத்துக்கு மொழி எந்த வகையிலும் ஒரு தடையல்ல. இதுபோன்ற வலைத்தளங்களை தமிழில் மொழிமாற்றம் செய்ய ஆர்வமுள்ளவர்கள் எங்களையும் அணுகலாம்.
பயனுள்ள இணைப்புகள்:
ஸ்ரீனிவாசன் - தொடர்புக்கு: editor@kaniyam.com