சாக்லேட் பாதுஷா
தேவையானவை: மைதா மாவு - 150 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, உப்பு - அரை சிட்டிகை, சர்க்கரை - 250 கிராம், பால் - ஒரு டீஸ்பூன், சாக்லேட் துருவல் (கடைகளில் விற்கும் காபி சாக்லேட் போதுமானது) - 3 டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ, நெய் - 2 டீஸ்பூன், கலர் கொப்பரைத் துருவல் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், தயிர் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:சர்க்கரையில் ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு ஒரு டீஸ்பூன் பால்விட்டு, மேலே படியும் அழுக்கை நீக்கவும். நன்கு கொதிக்கும்போது துருவிய சாக்லேட் சேர்த்து கரையவிட்டு இறக்கவும் (பிசுக்கு பதம் வரவேண்டும்). சமையல் சோடா, உப்பு, 2 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு நுரைக்க கையால் தேய்த்து... மைதா, தயிர், சிறிதளவு நீர் சேர்த்து பூரி மாவு போல் பிசையவும். மாவை பெரிய எலுமிச்சை சைஸ் உருண்டைகளாக உருட்டி தட்டி, எண்ணெயில் பொரிக்கவும். பொரித்தவற்றை சாக்லேட் - சர்க்கரைப் பாகில் போட்டு எடுத்து, தாம்பளத்தில் வைத்து, மேலே கலர் கொப்பரை துருவல் தூவி பரிமாறவும்.
குறிப்பு: பொரித்த பாதுஷாவை சூடான சர்க்கரைப் பாகில் போட்டால் விரைவில் கெட்டுவிடும். பாகு சற்றே ஆறியபின் பாதுஷாவை சர்க்கரைப் பாகில் போட்டு எடுக்கவும்.
மைதா குஜியா
தேவையானவை:சர்க்கரை - 250 கிராம், எண்ணெய் - 300 கிராம்.
மேல் மாவுக்கு: மைதா - ஒரு கப், சோடா உப்பு - ஒரு சிட்டிகை, சாதாரண உப்பு - அரை சிட்டிகை, நெய் - ஒரு டீஸ்பூன்.
பூரணத்துக்கு: பால்கோவா - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி, உலர் திராட்சை - சிறிதளவு.
செய்முறை:சர்க்கரையில் ஒரு கரண்டி நீர் விட்டு, கெட்டி பாகு காய்ச்சவும். பூரணத்துக்கான பொருட்களை நன்கு கலந்து எலுமிச்சம்பழ அளவு உருண்டைகள் செய்யவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக பிசைந்து, சிறிய அப்பளமாக இட்டு, பூரணம் நிரப்பி, சோமாசி போல மடிக்கவும். எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சோமாசி போல் மடித்து வைத்துள்ளவற்றை சிவக்க பொரித்து, தட்டில் வைக்கவும். ஒவ்வொன்றின் மீதும் ஒரு டீஸ்பூன் சர்க்கரை பாகு விட்டு ஒன்றுடன் ஒன்று இடிக்காத வண்ணம் வைக்கவும். டபுள் தித்திப்புடன் இருக்கும் இந்த மைதா குஜியா.
கேரட் பனீர் லட்டு
தேவையானவை:துருவிய கேரட் - ஒரு கப், துருவிய பனீர் - அரை கப், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, உலர் திராட்சை - சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை:நெய்யில் கேரட்டை நன்கு வதக்கி, சர்க்கரை சேர்த்து கெட்டியாக கிளறி இறக்கவும். துருவிய பனீரில் உள்ள அதிகப்படியான நீரை கையால் பிழிந்து நீக்கி, கேரட் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறி, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, உலர் திராட்சை சேர்த்து லட்டு பிடிக்கவும்.
குறிப்பு: சத்துமிக்க இந்த லட்டை 2, 3 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
சக்கர் பாரா
தேவையானவை: மைதா, சர்க்கரை - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, கேசரி கலர் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 250 கிராம், நெய் - அரை டீஸ்பூன்.
செய்முறை:மைதாவை, அரை டீஸ்பூன் நெய் விட்டு, சிறிதளவு நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, அப்பளமாக இட்டு விருப்பமான வடிவில் (சதுரம்/நீள்சதுரம்/டைமண்ட்) 'கட்' செய்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் சேர்த்து, கேசரி கலரும் சேர்த்து, பாகு காய்ச்சவும். பாகு நன்கு பூத்து வரும் நிலையில் இறக்கி, பொரித்த மைதா துண்டுகளைப் போட்டு நன்கு கிளறி எடுக்கவும். மேலே ஏலக்காய்த்தூள் தூவவும். ஓரிரு நிமிடங்களில் பாகு நன்கு படிந்ததும்... கலர்ஃபுல் சக்கர் பாரா ரெடி.
கொப்பரை வெல்ல அதிரசம்
தேவையானவை: பச்சரிசி மாவு - ஒன்றரை கப், பாகு வெல்லம் - 2 கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, துருவிய கொப்பரை - 4 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:பச்சரிசி மாவில் ஏலக்காய்த்தூள், துருவிய கொப்பரை சேர்த்து நன்கு கலக்கவும். வெல்லத்தில் ஒரு கப் நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி மீண்டும் அடுப்பில் ஏற்றி ஒரு கொதி வரவிட்டு, இறக்கவும். பாகில் அரிசி மாவு கலவையை சேர்த்து கைவிடாது கிளறி, இறக்கி மூடி வைக்கவும். மறுநாள் மாவில் சிறிது எடுத்து வாழை இலை/ பிளாஸ்டிக் தாளில் அதிரசமாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும். அதிரசத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை ஜல்லி கரண்டியால் அழுத்தி எடுத்தால்... சுவையில் ஊரைக்கூட்டும் கொப்பரை - வெல்ல அதிரசம் தயார்.
கோகனட் கேரட் ஸ்வீட்
தேவையானவை: துருவிய கேரட் - ஒரு கப், ஓடு நீக்கி வெள்ளையாக துருவிய தேங்காய் - ஒரு கப், சர்க்கரை - 2 கப், நெய் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை:அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு... கேரட், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். பாதி வதங்கிய பின் சர்க்கரை சேர்க்க... கலவை இளகும். இதை கை விடாது நன்கு கிளறி, கையில் ஒட்டாத பதத்துக்கு கலவை இறுகி வரும்போது இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டுக்கு மாற்றி வில்லைகள் போடவும்.
முந்திரி நொக்கல்
தேவையானவை: முழு முந்திரி (பூச்சி/புழு இன்றி பார்த்து வாங்கவும்) - 100 கிராம், சர்க்கரை - 75 கிராம், நெய் - அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: சர்க்கரையை சிறிதளவு நீர் விட்டு நன்கு காய்ச்சவும். பூத்து வரும் சமயத்தில்... நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, முந்திரியும் சேர்த்து வேகமாகக் கிளறி... முந்திரி மீது சர்க்கரை பாகு படிந்து மொறுமொறுவென ஆகும்போது, தட்டில் எடுத்து வைக்கவும்.
சர்க்கரை - முந்திரி அதிரசம்
தேவையானவை:பச்சரிசி மாவு - 2 கப், சர்க்கரை - 3 கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பொடித்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 300 கிராம், பால் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: சர்க்கரையில் முக்கால் கப் நீர் விட்டு, 10 நிமிடம் கொதிக்கவிட்டு, ஒரு டீஸ்பூன் பால் விட்டு, மேலே படியும் அழுக்கை நீக்கி... இளம் கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். அதில் அரிசி மாவு, பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூளை சேர்த்து நன்கு மாவிளக்கு மாவு போல் கலந்து வைக்கவும். சிறிது மாவை எடுத்து, வாழை இலையில் வைத்து தட்டவும். எண்ணெயை காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, தட்டி வைத்த அதிரசத்தை பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், வெள்ளை எள் சிறிது சேர்த்தும் செய்யலாம். சர்க்கரை அதிரசம் 'வெள்ளை வெளேர்' என்று இருக்க வேண்டும்.
ரங்கீலா மிக்ஸர்
தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 20 கிராம், சோடா உப்பு - ஒரு சிட்டிகை, சாதாரண உப்பு - சிறிதளவு, வாழைக்காய் சிப்ஸ் - 50 கிராம், மைதா மாவு - 50 கிராம், காய்ந்த பட்டாணி - 50 கிராம், அரிசி மிட்டாய் - 50 கிராம், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப் பிடி அளவு, வறுத்த அவல் - 100 கிராம், வறுத்த வேர்க்கடலை - 50 கிராம், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 250 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, சிறிய (காசு அளவு) பிஸ்கட் - 50 கிராம்.
செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, சோடா உப்பு... இவற்றுடன் சிறிதளவு நீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து, பூந்தி செய்யும் கரண்டியை உபயோகித்து மாவை தேய்த்து, சூடான எண்ணெயில் காராபூந்தியாக பொரிக்கவும். மைதா, உப்புடன் சிறிதளவு நீர் சேர்த்துப் பிசைந்து அப்பளமாக இட்டு சிறிய துண்டுகளாக 'கட்' செய்து பொரிக்கவும். பட்டாணியை ஊற வைத்து, நீர் வடித்து துணியில் போட்டு, உலர்ந்த பிறகு சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பிறகு, இவற்றை ஒன்று சேர்த்து... மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கினால்... ரங்கீலா மிக்ஸர் ரெடி.
புதினா - வேர்க்கடலை தட்டை
தேவையானவை:பச்சரிசி மாவு - 2 கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், உளுத்தம் மாவு (வீட்டில் வறுத்து பொடித்தது) - கால் கப், புதினா விழுது - 2 டீஸ்பூன், வறுத்த வேர்கடலை - 50 கிராம், வெண்ணெய் - 15 கிராம், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை: வேர்க்கடலையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஒன்றிரண்டாக பொடிக்கவும். பச்சரிசி மாவை சிவக்க வறுத்து, ஆறவிட்டு, பொட்டுக்கடலை மாவு, உளுத்தம் மாவு, புதினா விழுது, பொடித்த வேர்க்கடலை, உப்பு, மிளகாய்த்தூள், வெண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்து, நீர் விட்டு கெட்டியாக பிசையவும். மாவை வெள்ளைத் துணியில் சிறிய தட்டைகளாக தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
தேங்காய் ஏலக்காய் முறுக்கு
தேவையானவை: பச்சரிசி - 150 கிராம், பாசிப்பருப்பு - 35 கிராம், கடலைப்பருப்பு - 25 கிராம், தேங்காய்ப் பால் - அரை கப், ஏலக்காய்த்தூள், உப்பு - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து பச்சரிசியுடன் சேர்த்து மாவாக்கவும். இதனுடன் உப்பு, ஏலக்காய்த்தூள், தேங்காய்ப் பால் சேர்த்து (தேவையெனில் சிறிது நீரும் சேர்த்து) பிசையவும். மாவை சூடான எண்ணெயில் முள்ளு முறுக்காக பிழியவும்.
குறிப்பு: தேங்காய்ப் பால் சேர்ப்பதால் முறுக்கு சிவப்பாக வரும். ஆனால், இதை ருசியில் மிஞ்ச முடியாது.
மசாலா ஓமப்பொடி
தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், சோம்பு பொடி (சேர்த்து) - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, ஓம வாட்டர் - 2 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு.
செய்முறை:கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள்தூள், பட்டை - லவங்கம் - சோம்பு பொடி, நெய்... இவற்றோடு ஓம வாட்டர் சேர்த்து, மேலும் சிறிதளவு நீர் சேர்த்துப் பிசையவும். மாவை முறுக்குக் குழாயில் ஓமப் பொடி அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
ஆலு அல்வா
தேவையானவை: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 200 கிராம், மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன், பால்கோவா - 50 கிராம், சர்க்கரை - 100 கிராம், வறுத்த முந்திரி, உலர் திராட்சை - சிறிதளவு, நெய் - 100 கிராம், பச்சைக் கற்பூரம் (பொடித்தது) - துளி அளவு.
செய்முறை:சர்க்கரையில் சிறிது நீர்விட்டு காய்ச்சி... இளகி முத்து கொதி வருகையில் (பாகு கொதிக்கும்போது முத்து முத்தாக நுரைத்து வரும்), மசித்த உருளைக்கிழங்கு, பால் கோவா உதிர்த்து சேர்த்துக் கிளறவும். அவ்வப்போது நெய் சேர்த்துக்கொண்டே கிளறவும். அல்வா பதம் வரும்போது மில்க்மெய்ட் சேர்த்து நன்கு கிளறி இறக்கி, மீண்டும் கிளறி... வறுத்த முந்திரி, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம் சேர்த்தால்... சப்புக் கொட்ட வைக்கும் சுவையில் ஆலு அல்வா தயார்.
கார்ன்ஃப்ளார் அல்வா
தேவையானவை: கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 100 கிராம், சர்க்கரை - 150 கிராம், நெய் - 100 கிராம், கேசரி பவுடர் - சிறிதளவு, வறுத்த முந்திரி, உலர் திராட்சை, வெள்ளரி விதை - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை:சோள மாவில் கேசரி பவுடர் கலந்து, சிறிதளவு நீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். சர்க்கரையில் ஒரு கரண்டி நீர் விட்டு முத்து பாகு வருகையில் (பாகு கொதிக்கும்போது முத்து முத்தாக நுரைத்து வரும்) கரைத்த சோள மாவு, நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும். கலவை வெந்து 'பள பள'வென கிளாஸ் போல் வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, உலர் திராட்சை, வெள்ளரி விதை சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய பின் வில்லைகள் போடவும்.
மைதா வெனிலா கேக்
தேவையானவை: மைதா - 150 கிராம், சர்க்கரை - 200 கிராம், நெய் - 100 கிராம், வெனிலா எசன்ஸ் - 2 சொட்டு (அதிகம் விட்டால் கசப்பாகிவிடும்).
செய்முறை: வாணலியில் நெய்யை சூடாக்கி, மைதா சேர்த்து பச்சை வாசனை போக வறுத்து இறக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் சேர்த்து முத்து கொதி வரவிடவும் (பாகு கொதிக்கும்போது முத்து முத்தாக நுரைத்து வரும்). பின்னர் அடுப்பை அணைத்து, மைதா மாவு கலவையை சர்க்கரைப் பாகில் சேர்த்து நன்கு வேகமாக கிளறவும். இறுகும் சமயம் வெனிலா எசன்ஸ் சேர்த்து, நெய் தடவிய தட்டுக்கு மாற்றி, வில்லைகள் போடவும்.
ரோஸ் ஜிலேபி
தேவையானவை: மைதா மாவு - 100 கிராம், சோள மாவு - 25 கிராம், கடலை மாவு - ஒரு டீஸ்பூன், கடைந்த தயிர் - 50 கிராம், சர்க்கரை - ஒரு கப், ரோஸ் எசன்ஸ் - சில துளிகள், ஆரஞ்சு அல்லது மஞ்சள் ஃபுட் கலர் - தேவையான அளவு, சோடா உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 250 கிராம்.
செய்முறை: சர்க்கரையில் அரை கப் நீர் சேர்த்து, சிறிதளவு ஃபுட் கலர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, கம்பிப் பதம் வந்தபின் இறக்கி, ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும். மைதா மாவு, சோள மாவு, கடலை மாவு தயிர், சோடா உப்பு, சிறிதளவு ஃபுட் கலர் ஆகியவற்றை சிறிதளவு நீர் சேர்த்து இட்லி மாவு போல் கரைக்கவும். பால் கவரில் மாவை நிரப்பி, ஒரு மூலையில் சிறிய துளையிட்டு, சூடான எண்ணெயில் சிறிய வட்டமாக 3 அல்லது 4 முறை சுற்றி பிழிந்துவிட்டு பொரித்தெடுக்கவும். இதை சர்க்கரை பாகில் முக்கி எடுத்து, ஒன்றின் மீது ஒன்று படாதவாறு தட்டில் வைக்கவும்.
ஓமவல்லி துளசி லேகியம்
தேவையானவை: ஓமவல்லி இலை - 10, துளசி இலைகள், - 10, இஞ்சி - ஓர் அங்குல நீள துண்டு (சுத்தம் செய்து, தோல் நீக்கவும்), லவங்கம் - 3, நெய் - 2 டீஸ்பூன், மிளகு - 10, தேன் - 4 டீஸ்பூன்.
செய்முறை: மிளகு, லவங்கத்தை வறுத்துப் பொடிக்கவும். ஓமவல்லி, துளசி, இஞ்சியை விழுதாக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, நெய்யை விட்டு சூடாக்கி... அரைத்த விழுது, பொடித்த பொடி சேர்த்து நன்கு வதக்கவும். லேகியம் போல் ஆனதும் இறக்கி ஆற வைத்து, தேன் சேர்க்கவும். இந்த லேகியம் ஜீரணத்துக்கு உதவும்.
சுருள் போளி
தேவையானவை: மைதா - ஒரு கப், - கடலை மாவு - ஒரு கப், சர்க்கரை (பொடித்தது) - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொடியாக நறுக்கிய டிரைஃப்ரூட்ஸ் - கால் கப், துருவிய கலர் கொப்பரை - 2 டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: கடலை மாவை நெய்யில் சிவக்க வறுத்து... பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பொடியாக நறுக்கிய டிரைஃப்ரூட்ஸ் சேர்த்து பூரணம் தயாரிக்கவும். மைதாவை உப்பு, தேவையான நீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து மெல்லிய, சற்றே பெரிய பூரி போல் இடவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை சிறுதீயில் வைத்து, பூரிபோல் இட்டு வைத்ததை போட்டு பாதி வேகவிட்டு (மொறுமொறு என்று ஆகிவிடாமல்) எடுத்து, சூட்டோடு இருக்கும்போதே அதில் பூரணம் தூவி, உடனே பாய் போல் சுருட்டி, மேலே கலர் கொப்பரை தூவவும்.
பனீர் ஜாங்கிரி
தேவையானவை: முழு உளுத்தம்பருப்பு - 200 கிராம், சர்க்கரை - 200 கிராம், துருவிய பனீர் - 100 கிராம், பச்சரிசி - ஒரு டீஸ்பூன், ஏலக்காய் எசன்ஸ் - 2 சொட்டு, ஃபுட் கலர் (கேசரி (அ) மஞ்சள்) - தேவையான அளவு, நெய் - 100 கிராம், எண்ணெய் - 200 கிராம்.
செய்முறை: சர்க்கரையுடன் ஃபுட் கலர், சிறிதளவு நீர் சேர்த்து, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, ஏலக்காய் எசன்ஸ் சேர்த்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, அரிசியை சேர்த்து, அரை மணி நேரம் ஊற வைத்து... நன்கு கெட்டியாக, மையாக அரைத்து சிறிதளவு கலர் சேர்க்கவும். நெய் - எண்ணெயை கடாயில் சேர்த்து சூடாக்கவும். பால் கவரில் மாவை நிரப்பி, ஒரு மூலையில் சிறிய ஓட்டை போட்டு, கொதிக்கும் நெய் - எண்ணெயில் ஜாங்கிரிகளாக பிழிந்து, பொரித்தெடுக்கவும். அதை சர்க்கரை பாகில் போட்டு எடுத்து, பாகு உலரும் முன் துருவிய பனீர் சேர்க்கவும்.
கிரவுண்ட்நட் கிரிஸ்பீஸ்
தேவையானவை: முழு வேர்க்கடலை (வறுத்தது) - 200 கிராம், கடலை மாவு - 50 கிராம், சோள மாவு - 2 டீஸ்பூன், சிவப்பு மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:அனைத்து பொருட்களையும் சிறிதளவு நீர் விட்டு பிசிறி, சூடான எண்ணெயில் உதிர்த்தாற்போல் போட்டு எடுக்கவும்.
குறிப்பு: கடலை மாவுக்குப் பதிலாக பொட்டுக்கடலை மாவும் சேர்க்கலாம்.
ஆரஞ்சு கேக்
தேவையானவை: மைதா - 100 கிராம், கமலா ஆரஞ்சு சாறு - 50 மில்லி, சர்க்கரை - 100 கிராம், நெய் - 50 கிராம், ஆரஞ்சு ஃபுட் கலர் - சிறிதளவு.
செய்முறை: நெய்யை உருக்கி அதனுடன் மைதா, ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையில் கமலா ஆரஞ்சு சாறு சேர்த்து, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, மைதா கலவையை சேர்த்துக் கிளறவும். கலவை இறுகும்போது நெய் தடவிய தட்டுக்கு மாற்றி, சற்றே ஆறியபின் வில்லைகள் போடவும்.
பாதாம் மைசூர் பாக்
தேவையானவை: பாதாம் - 4 டேபிள்ஸ்பூன், கடலை மாவு - 100 கிராம், நெய் - 200 கிராம், சர்க்கரை - 200 கிராம்
செய்முறை:பாதாம் பருப்பை தோல் நீக்கி மிக்ஸியில் தூள் செய்யவும். இதை கடலை மாவுடன் நன்கு கலக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரையோடு சிறிதளவு நீர் சேர்த்து பாகு காய்ச்சவும். வேறொரு கடாயில் நெய்யை உருகவிடவும். சர்க்கரைப் பாகு ஒற்றை கம்பி பதம் வரும்போது பாதாம் - கடலை மாவு கலவை சிறிதளவு, சூடான நெய் சிறிதளவு என்று மாற்றி மாற்றி சேர்த்து... கலவை ஒட்டாமல் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டுக்கு மாற்றி, விருப்பம்போல் வில்லைகள் போடவும்.
மிளகு மைதா சிப்ஸ்
தேவையானவை: மைதா - 2 கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:மைதாவுடன் உப்பு, மிளகுத்தூள், சிறிதளவு எண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து, கனமான பூரிகளாக தேய்க்கவும். இதை டைமண்ட், சதுரம் என்று விரும்பிய வடிவில் 'கட்' செய்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பனீர் குலோப் ஜாமூன்
தேவையானவை: துருவிய பனீர் - 50 கிராம், மைதா - 100 கிராம், ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, சர்க்கரை - 200 கிராம், எண்ணெய் - 200 கிராம்.
செய்முறை:சர்க்கரையுடன் சிறிதளவு நீர் சேர்த்து, ஒற்றைக் கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். மைதாவுடன் பனீர், ஆப்பசோடா, சிறிதளவு நீர் சேர்த்து மிகவும் மிருதுவாக பிசைந்து (அடித்து / அழுத்தி பிசையக்கூடாது), சிறிய கோலி உருண்டைகள் போல் உருட்டவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, செய்து வைத்த உருண்டை களைப் பொரித்தெடுத்து பாகில் போட்டு, கொஞ்சம் ஊறிய பின் சாப் பிடக் கொடுக்கவும்.
இஞ்சி எள் ரிப்பன் பக்கோடா
தேவையானவை: அரிசி மாவு (களைந்து, நிழலில் உலர்த்தி அரைத்தது) - 150 கிராம், கடலை மாவு - 50 கிராம், பொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், பொடித்த வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், இஞ்சிச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:எண்ணெயைத் தவிர மற்ற பொருட்களை நன்கு கலந்து, ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
இஞ்சிச் சாறு அஜீரணத்தை தடுக்கும் குணமுள்ளது.
ஸ்வீட் காராசேவ்
தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 50 கிராம், பொடித்த மிளகு - அரை டீஸ்பூன், சர்க்கரை - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு, பெருங் காயத்தூள் - சிறிதளவு.
செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, சிறிதளவு நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாக பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கவும். மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி காராசேவ் தட்டு (அ) பெரிய கண் ணுள்ள கேரட் துருவி கொண்டு காயும் எண்ணெயில் நன்கு தேய்த்து போட்டு, காராசேவுகளாக பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, சர்க்கரை கரைந்து பாகு வரும்போது தொடர்ந்து வேகமாக கிளற, சர்க்கரை பனிபோல் பூத்து வரும். அப்போது பொரித்த காராசேவ், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து நன்கு புரட்ட... ஸ்வீட் காராசேவ் தயார்.
மைதா கோகோ கேக்
தேவையானவை: மைதா - 100 கிராம், சர்க்கரை - 150 கிராம், நெய் - 100 கிராம், கோகோ பவுடர் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:வாணலியில் நெய்யை உருக்கி மைதா சேர்த்து இட்லி மாவு போன்ற பதம் வந்ததும் இறக்கவும். மற்றொரு வாணலியில் சர்க்கரை, கோகோ பவுடர் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். இதனுடன் மைதா கலவையை சேர்த்து நன்கு கிளறி கெட்டியாகும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியபின் துண்டுகள் போடவும்.
வெல்ல திரட்டுப் பால்
தேவையானவை: ஃபுல் க்ரீம் பால் - ஒரு லிட்டர், பொடித்த பாகு வெல்லம் - 200 கிராம், நெய் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் பாலை விட்டு, அடுப்பில் ஏற்றி... பால் நன்கு சுண்டி, கெட்டி பதம் வரும் வரை அடிப்பிடிக்காதபடி கிளறி நன்றாக காய்ச்சவும். இதனுடன் துருவிய வெல்லம், நெய் சேர்த்து மணல் மணலாக வரும்போது இறக்கி ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
வெல்லம் சேர்ப்பதனால், நிறைய இரும்புச் சத்து உடலில் சேரும். சுவை... சொல்லி மாளாது!
பொட்டேட்டோ ஃபிங்கர் ஃப்ரை ஸ்நாக்ஸ்
தேவையானவை: ஊட்டி உருளைக்கிழங்கு (செம்மண்ணில் விளைந்தது. கிழங்கில் செம்மண் ஒட்டியிருக்கும்) - 250 கிராம், வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், முந்திரி - 25 கிராம், உலர் திராட்சை - 25 கிராம், பாதாம் - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், எண் ணெய் - 200 கிராம்
செய்முறை: உருளைக்கிழங்கை தண்ணீரில் நன்கு கழுவி, தோல் நீக்கி, பெரிய துளையுள்ள கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும். அதை சிறிது நேரம் உலர விட்டு, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வறுத்த முந்திரி, திராட்சை, வறுத்த பாதாம், வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள், சர்க் கரை ஆகியவற்றை பொரித்த உருளை யுடன் சேர்த்துப் பரிமாறவும்.
ஆப்பிள் ரவா கேக்
தேவையானவை: துருவிய ஆப்பிள் - ஒரு கப், ரவை - அரை கப், சர்க்கரை - முக்கால் கப், நெய் - தேவையான அளவு, கிரீன் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை.
செய்முறை:வாணலியில் நெய் ஊற்றி, ரவையை நன்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர், ரவையுடன் ஆப்பிள், சர்க்கரை மற்றும் ஃபுட் கலர் சேர்த்து, கையில் ஒட்டாத பதம் வரும் வரை நன்கு கிளறவும். பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி துண்டுகளாக்கவும்.