கடைசியாக இந்திய மருத்துவப் பூனைகளுக்கு ஒரு மருத்துவரே மணியைக் கட்டிவிட்டிருக்கிறார் - குணால் சாஹா.
அமெரிக்காவில் எய்ட்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்ட குணால் சாஹா, குழந்தைகள் மனநல நிபுணரான மனைவி அனுராதாவுடன் கொல்கத்தாவுக்கு 1998-ல் விடுமுறைக்காக வந்தார். அப்போது அனுராதாவுக்குத் தோலில் கொப்புளங்கள் ஏற்பட்டன. உள்ளூர் மருத்துவர் சுகுமார் முகர்ஜியிடம் சென்றனர். முதலில் ஓய்வெடுக்கச் சொன்ன அவர், நோய் தீவிரமானதும் 'டெபோமெட்ரால்'ஊசி மருந்தை 80 மி.கி. அளவுக்கு நாளுக்கு இரு முறை பரிந்துரைத்தார் (இது தவறு என்று பின்னாளில் உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு கூறியது). தொடர்ந்து, கடுமையாகப் பாதிக்கப்பட்ட அனுராதாவை கொல்கத்தா ஏ.எம்.ஆர்.ஐ. மருத்துவமனையில் தன் மேற்பார்வையில் சேர்த்தார் முகர்ஜி. அங்கும் நிலைமை மோசமாக, மும்பை 'பிரீச்கேண்டி' மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அனுராதா அங்கு இறந்தார். அவர் 'நெக்ரோலிசிஸ்' பாதிப்புக்குள்ளானதாகவும் 'ஸ்டெராய்டு' மருந்துகள் அதிகம் செலுத்தப்பட்டதால் இறந்ததாகவும் சொல்லப்பட்டது.
கொல்கத்தா, மும்பை மருத்துவமனைகள் - மருத்துவர்களின் அலட்சி யத்தாலேயே அனுராதா இறந்ததாகக் குற்றம்சாட்டி வழக்குத் தொடர்ந்தார் சாஹா. 2004-ல், இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், அனுராதாவுக்குச் சிகிச்சை அளித்த நான்கு மருத்துவர்களில் சௌதுரி மீது குற்றமில்லை என்றது; கொல்கத்தா உயர் நீதிமன்றம் முகர்ஜி, ஹால்தர் மீது குற்றமில்லை என்றது; தேசிய நுகர்வோர் குறைகேட்பு மன்றமோ சாஹாவின் புகாரையே தள்ளுபடி செய்தது. சாஹா மனம் தளராமல் உச்ச நீதிமன்றம் சென்றார். அங்கும் படிப்படியாகவே முன்னேறினார்.
கடந்த 2009-ல், "சாஹா இழப்பீடு பெறத் தகுதி உண்டு" என்றது உச்ச நீதிமன்றம். தொடர்ந்து, "நோயாளிகளுக்கு அதிகமாக மருந்துகளை உள்செலுத்துவது, மருந்துகளின் பக்கவிளைவுகள்குறித்துத் தெரிவிக்காதது, மரணத்தை ஏற்படுத்தும் நோய்கள் விஷயத்தில் அதிக அக்கறையுடன் செயல்படாமல் இருப்பது, அடிப்படை வசதிகளைக்கூடச் செய்யாமலிருப்பது அனைத்துமே மருத்துவச் சேவையில் அலட்சியங்களாகக் கருதப்பட வேண்டும்" என்றது. 2011-ல் சாஹாவின் மனுவை நுகர்வோர் குறைகேட்பு மன்றத்திடம் மீண்டும் விசாரிக்கச் சொன்ன அது, இப்போது "கொல்கத்தா மருத்துவமனையும் மூன்று மருத்துவர்களும் சேர்ந்து சாஹாவுக்கு ரூ.5.96 கோடி இழப்பீடு; அதுவும் 6% வட்டியோடு சேர்த்து ரூ. 11 கோடியாகத் தர வேண்டும்" என்று உத்தரவிட்டிருக்கிறது.
இந்திய வரலாற்றில் மருத்துவத் தவறுகளுக்காக விதிக்கப்படும் அதிக பட்ச அபராதத் தொகை இது. மேலும், நோயாளிகளின் அடிப்படை உரிமை களைக்கூடப் புறக்கணித்து மருத்துவத்தை முழுக்க வியாபாரமாகப் பார்க்கும் மருத்துவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கையும்கூட. இப்படி ஒரு தீர்ப்புக்காகத் தொடர்ந்து 15 ஆண்டுகள் போராடியிருக்கிறார் சாஹா. "நோயாளிகளைச் சோதனை எலிகளைப் போலக் கையாளும் மருத்துவத் துறை அலட்சியத்துக்கு இது அதிர்ச்சி வைத்தியம்" என்று அவர் சொல்லியிருக்கிறார். சாஹாவை நாம் வழிமொழிகிறோம். உங்கள் போராட்டத்தின் வெற்றி நல்ல மருத்துவச் சேவைக்கு ஒளி காட்டும். நன்றி சாஹா!