வெகுநாட்கள் கழித்து நண்பன் ஒருவனைப் பார்க்க, அவனது வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
''வாயை மூடிக்கிட்டு உங்க வேலையைப் பார்த்துட்டுப் போங்க!'' என்று நண்பன் யாரிடமோ கத்திக் கொண்டிருந்தான். அவனது கூச்சலைக் கேட்டு, அழைப்பு மணியை அழுத்துவதற்குத் தயங்கியபடி, சில கணங்கள் வெளியிலேயே நின்றேன். ஏதாவது அசந்தர்ப்பமான வேளையில் நாம் குறுக்கிடக்கூடாதே!
நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, மேலும் குழம்புவதற்குத் தேவையில்லாமல் கதவு திறக்கப்பட்டது. வேகமாக ஒருவர் வெளியேறினார். போகும் போதே... 'எனக்கென்ன போச்சு? இவன் நல்லதுக்குச் சொன்னேன்' என்று முணுமுணுத்தபடி சென்றார்.
நான் உள்ளே நுழைந்ததும், வரவேற்கும்விதமாக நண்பன் தலையாட்டினான். இரண்டு நிமிடங்கள் வரை எதுவும் பேசவில்லை. பிறகு, நானே மௌனத்தைக் கலைத்தேன். கொஞ்ச நேரத்துக்குப் பொதுவான விஷயங்களாகப் பேசினேன். அவனோ சுரத்து இல்லாமல் பேசிக்கொண்டிருந்தான். எனக்குச் சங்கடமாக இருந்தது. ''அப்ப... நான் கிளம்பறேன்'' என்று எழுந்தேன்.
''ஸாரிடா..! என்னாலே நம்ம பேச்சிலே கான்சன்ட்ரேட் பண்ண முடியலே. இப்ப வந்துட்டுப் போனவர், எதிர் ஃபிளாட் ஆசாமி...'' என்றவன், ஓரிரு நிமிடம் மௌனமாக இருந்தான். பிறகு, பெருமூச்சு விட்டபடி பேசத் தொடங்கினான்.
''உன்கிட்டே சொல்றதுக்கு என்ன? நான் தினமும் காலைல எட்டு மணிக்கெல்லாம் கம்பெனிக்குக் கிளம்பிடுவேன்னு உனக்குத் தெரியும். கடந்த ரெண்டு வாரமா தினமும் இளைஞன் ஒருவன் காலைல 11 மணிக்கு இங்கே வரானாம். அப்போ, சங்கீதா மட்டும்தான் வீட்டில் இருப்பா. 11 மணிக்கு வர்றவன், ஒரு மணி நேரம் கழிச்சுதான் போறானாம். இதைத்தான் எதிர் ஃப்ளாட்காரரு சொல்லிட்டுப் போறாரு'' என்றான்.
''என்னடா சொல்றே? நீ உன் மனைவியை சந்தேகப்படறியா?'' என்று கேட்டேன்.
''இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொன்னாலும், அது முழு உண்மையா இருக்காது'' என்றான் தரையைப் பார்த்தபடி.
''இப்படி மனசுல சந்தேகத்தை வளரவிடாதே! சாயந்திரமே இதைப் பத்தி அவள் மனம் புண்படாத விதத்தில் கேட்டுத் தெளிவடைஞ்சுக்கோ'' என்றேன்.
நண்பன் நகங்களைக் கடிக்கத் தொடங்கினான். அவன் டென்ஷனாக இருப்பது புரிந்தது.
''நாலு நாளைக்கு முன்னால, கிரெடிட் கார்டை வீட்டுலேயே மறந்துவெச்சிட்டுப் போயிட்டேன். அதை எடுக்கிறதுக்காக வீட்டுக்கு வந்தேன். அப்ப, அந்த இளைஞனோடு சிரிச்சுப் பேசிட்டிருந்தா சங்கீதா. என்னைப் பார்த்ததும், அவ முகத்துல அதிர்ச்சி! அந்த ஆள் என்னவோ சொல்ல வந்தான். ஆனா, இவ ஜாடை காட்டி, அவனைப் பேச வேணாம்னு சொல்லிட்டா. அவன் கிளம்பிப் போயிட்டான். அதுக்குப் பிறகு இன்னிக்கு வரைக்கும் சங்கீதா என்கிட்டே இதைப் பத்தி வாயே திறக்கலை. என் நிலைமையில் நீ இருந்தா என்ன செய்வே?'' என்று கேட்டான்.
எனக்குக் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருந்தது. என்றாலும், இந்த விஷயத்தை நண்பன் பொறுமையாகவும் விவேகமாகவும் அணுகவேண்டும் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது. அதற்கு உபயோகமாக, புராணக்கதை ஒன்றை அவனிடம் பகிர்ந்துகொண்டேன்.
காஸ்யபருக்கு வினதா, கத்ரு என இரண்டு மனைவிகள். வினதா, தன் சகோதரி கத்ருவிடம் பாசமாக இருந்தாள். ஆனால், கத்ருவுக்கு ஏனோ வினதாவிடம் பாசம் இல்லை. பொறாமையும் வெறுப்பும்தான் மண்டிக் கிடந்தன. இந்த நிலையில், கத்ருவுக்கு ஆயிரம் நாகங்களும், வினதாவுக்கு அருணன், கருடன் என இரண்டு குழந்தைகளும் பிறந்தனர்.
ஒரு நாள் வினதாவும், கத்ருவும் தோட்டத்துக்குச் சென்றனர். தொலைதூரத்தில் தெய்வீகக் குதிரையான உச்சைச்ரவஸ் தென்பட்டது. ''ஆஹா, என்ன அழகான வெண்குதிரை!'' என்று வியந்தாள் வினதா. கத்ரு அதை முழுமையாகப் பார்ப்பதற்குள், அது மறைந்துவிட்டிருந்தது. என்றாலும், வினதாவின் கருத்தை மறுக்கவேண்டும் என்பதற்காகவே, ''அது முழுக்க முழுக்க வெள்ளை என்று சொல்லிவிட முடியாது. அதன் வால் பகுதி கறுப்பாகத்தான் இருந்தது'' என்றாள். ஆனால், வினதா அதை ஒப்புக்கொள்ளவில்லை. வாக்குவாதம் நீடித்தது. அது சவாலாக மாறியது. இறுதியாக, இருவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
'நாளையும் இதே நேரம் இங்கு வருவோம். அந்தத் தெய்வீகக் குதிரையும் வரும். அப்போது அதன் வால் பகுதி வெள்ளையா, கறுப்பா என்று தெரிந்துகொள்வோம். வெள்ளையாக இருந்தால், வினதாவுக்கு கத்ரு வாழ்நாள் முழுவதும் அடிமையாக இருக்க வேண்டும்; கறுப்பாக இருந்தால் வினதா கத்ருவுக்கு அடிமையாக வேண்டும்' என்று ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர்.
கத்ரு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாள். அவள்தான் அந்தக் குதிரையைச் சரியாகப் பார்க்கவில்லையே! குதிரையின் வால் வெண்மையாக இருந்துவிட்டால், ஆயுள் முழுக்க வினதாவுக்கு அடிமையாக இருக்க நேரிடுமே என்று கலங்கினாள். தனக்குத் தெரிந்த சிலரிடம் குதிரையைக் குறித்து விசாரித்தாள். அவர்கள் அனைவரும், உச்சைச்ரவஸ் முழுக்க முழுக்க வெண்மையானது என்றே சொன்னார்கள். கத்ருவின் கலக்கம் அதிகமானது. அதன் விளைவு... அவள் மனத்தில் சதித்திட்டம் ஒன்று உருவானது. தன்னுடைய பாம்புப் புதல்வர்களில் சிலரை அழைத்து, அடுத்த நாள் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டாள்.
மறுநாள், வினதாவும் கத்ருவும் தோட்டத்துக்குச் சென்றனர். தெய்வீகக் குதிரையும் வந்து சேர்ந்தது. அதன் வாலைக் கவனித்தனர். அது கறுப்பாக இருந்தது. ஆமாம்! தன் தாயின் உத்தரவுப்படி, கத்ருவின் நாகக் குழந்தைகள் அதன் வாலைச் சுற்றிக்கொண்டிருந்ததால், அது கறுப்பாகத் தென்பட்டது. உண்மையை அறியாத வினதா கத்ருவுக்கு அடிமையானாள்.
பற்பல வருடங்களுக்குப் பிறகு, தேவலோக அமிர்தத்தைக் கொண்டு வந்து கொடுத்து, தன்னுடைய தாயின் அடிமைத்தளையை அகற்றினார் கருடன்.
இந்தக் கதையை நினைவுபடுத்திவிட்டு, ''கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பது உனக்குத் தெரியாதா? அதனால், உன் மனைவியிடமே விளக்கம் கேள். ஆனால், உனது கேள்விகள் அவளை எந்த விதத்திலும் புண்படுத்தும்படியாகவோ, அவளைச் சந்தேகப்படும்படியாகவோ இருந்துவிடக்கூடாது!'' என்றேன்.
மறுநாள் அவனைப் பார்க்கச் சென்றபோது, அவனுடைய முகம் பிரகாசமாக இருந்தது. அடுத்த மாதம் குடும்பத்தோடு பிரான்ஸுக்குச் செல்வதாக இருக்கிறான் அவன். அதற்குள்ளாக அவனுக்குத் தெரியாமல் பிரெஞ்ச் கற்றுக்கொண்டு, அவனை அசத்தவேண்டும் என்று திட்டம் போட்டிருக்கிறாள் சங்கீதா. அதற்காகவே அந்த இளைஞனை வீட்டுக்கு அழைத்து, அவனிடம் பிரெஞ்ச் கற்று வந்திருக்கிறாள் அவள். பாதி கற்றுக்கொண்டிருக்கும்போதே கணவனுக்குத் தெரிந்துவிட்டதில், அவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான். ஆனால், எப்படிப்பட்ட தவறான பழியிலிருந்து அவள் தப்பித்திருக்கிறாள் என்பது அவளுக்குத் தெரியாது, பாவம்!