சொந்த வீட்டுக்கான நமது திட்டமிடுதலின் முதல்படி, பத்திரப்பதிவுதான். நமது சொந்த வீட்டு கனவின் முதல்கட்ட செயல்வடிவம் பத்திரப்பதிவுதான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இப்போது நாம் வாங்கப்போகிற மனையில்தான் நமது கனவு வீடும், நமது வாழ்வின் சந்தோஷங்களும், துக்கங்களும் நிலைத்திருக்கப்போகிறது.
நமது அடையாளத்தின் அஸ்திவாரம் இந்த மனைதான் என்பதால் பத்திரப்பதிவும் பக்காவாக இருக்கவேண்டும். இத்தனைநாள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் இதற்காகத்தான் என்பதால் இப்போது நாம் சந்தோஷமாகவும், பெருமையாகவும் உணர்வோம். அதேசமயத்தில், இந்தப் பதற்றம் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், தெளிவாகவும் மிகுந்த நிதானமாகவும் இருந்து பத்திரப்பதிவு வேலைகளைச் செய்துகொள்ள வேண்டும்.
விலையை இறுதி செய்துவிட்டோம் என்றாலும், இடத்தின் வழிகாட்டி மதிப்பு அடிப்படையில்தான் நாம் பத்திரப்பதிவு செய்துகொள்ள வேண்டும். எனவே, வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் பதிவு செய்யவேண்டிய நடைமுறைகள் என்ன என்பதை இந்த வாரம் பார்ப்போம்.
இடத்தை முடிவு செய்துவிட்டோம்; அதை வாங்குவதும் உறுதியாகிவிட்டது எனில் அடுத்து பதிவு செய்யவேண்டியதுதான் என்பதால் நம்பிக்கையோடு பணத்தைத் தந்துவிடுவார்கள் சிலர்.
அப்படி செய்வது சரியானதல்ல. பத்திரப்பதிவு செய்வதற்கு அன்று ஒன்றிரண்டு மணி நேரத்துக்கு முன்புதான் பணத்தை செட்டில் செய்யவேண்டும். இதற்கு முன்பு அட்வான்ஸாகத் தந்த பணத்தைக் கழித்துக்கொண்டு பணத்தைத் தரவேண்டும்.
பண விவகாரங்கள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, பத்திரப்பதிவுக்கான வேலைகளும் ஒருபக்கம் நடக்க வேண்டும். இடம் அமைந்துள்ள பகுதிக்குட்பட்ட பத்திரப்பதிவு பதிவாளர் அலுவலகம் சென்று நீங்கள் வாங்க உள்ள இடத்தின் அளவுக்கு ஏற்ப, அந்த இடத்துக்கான வழிகாட்டி மதிப்பு என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் எவ்வளவு ரூபாய்க்கு முத்திரைத்தாள் வாங்கவேண்டும் என்பதில் குழப்பம் இருக்காது.
முத்திரைத்தாள் வாங்குவது நமது பொறுப்புதான் என்பதால் அரசு அங்கீகாரம் பெற்ற முத்திரைத்தாள் முகவரிடம் முத்திரைத்தாள் வாங்கவேண்டும்.
சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், ''சார், நாங்க கொடுக்கிறதை அப்படியே ஸ்டாம்ப் பேப்பர்ல ஏத்திக் கொண்டாங்க' என்று தவறான வழியைக் காட்டுவார்கள். அவர்கள் சொல்லும் எந்த நடைமுறையையும் அப்படியே பின்பற்றத் தேவையில்லை. நன்கு விஷயம் தெரிந்த ஒரு பத்திர எழுத்தரைப் பார்த்து நம்மிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் என்னென்ன சங்கதிகள், வார்த்தைகள் இடம் பெறவேண்டும் என்பதைத் தெளிவாக எழுதி வாங்கவேண்டும்.
ரியல் எஸ்டேட் துறையில் அனுபவம் வாய்ந்த ஒரு வழக்கறிஞர் மூலமாக பத்திரத்தை எழுதுவதும் பாதுகாப்பானதாக இருக்கும். இப்படி எழுதி வாங்கியதை டைப் செய்து எல்லா விஷயங்களும் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்தப் பின்னரே முத்திரைத்தாளில் ஏற்ற வேண்டும். இதுதான் சரியான நடைமுறை.
விற்பவரது தெளிவான பெயர், தெளிவான முகவரி, தகப்பனார் பெயர், வருவாய்த் துறையில் ஆவணங்கள்படி அந்த நிலத்தின் விவரங்கள், அந்த இடத்தை விற்பதற்கு அவருக்கு உள்ள அதிகாரம் போன்றவையும் அந்த இடத்தை வாங்க சம்மதிக்கிற நமது பெயர், தெளிவான முகவரி, தகப்பனார் பெயர், அந்த இடத்தை விற்க/வாங்க சம்மதித்த விவரம், அதற்கு பரிமாற்றிக்கொண்ட தொகை, சாட்சிகளது பெயர் முகவரி விவரம் போன்றவை அனைத்தும் முத்திரைத்தாளில் இடம் பெறவேண்டும்.
இந்த விவரங்கள் எதிலும் தகவல் பிழையோ, பொருள் பிழையோ இருக்கக் கூடாது. அதனால்தான் முத்திரைத்தாளில் எழுதுவதற்கு முன் சாதாரண வெள்ளைப் பேப்பரில் பிரின்ட் எடுத்து சரிபார்க்கவேண்டும் என்பது கட்டாயம்.
கண்ணன் என்கிற பெயரை கன்னண் என்று எழுதலாம்; அல்லது முழுப் பெயரையும் குறிப்பிடாமல் முன்பக்கம் பின்பக்கம் சுருக்கி எழுதுவது, ஓர் இடத்தில் இன்ஷியலோடும், மற்றொரு இடத்தில் இன்ஷியல் இல்லாமல் எழுதுவதும் நடக்கும்.
குறிப்பாக, டி.கல்லுப்பட்டி வருவாய் கிராமத்தில் என்கிற வாசகம் எழுதவேண்டும். ஆனால், கல்லுபட்டி என்று எழுதிவிடுகிறோம் என்றால் அதனை திருத்தம் செய்யவேண்டும். இந்த அலைச்சலைத் தவிர்க்க, ஒவ்வொரு விஷயத்திலும் தெளிவாக ஒன்றுக்கு இரண்டு முறை சோதித்த பின்னரே இறுதி செய்ய வேண்டும்.
பத்திரப்பதிவு செய்யப்போகும் நாளுக்கு முன்னர் இந்த வேலைகளை முடித்துக்கொள்ள வேண்டும். பத்திரப்பதிவு செய்யப்போகும் நாளில் இந்த வேலைகள் எதுவும் வைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால், அவசரகோலத்தில் செய்யும் வேலைகளில் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது.
பத்திரப்பதிவு வேலைகளை காலை நேரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். வாங்குபவர், விற்பவர் மற்றும் சாட்சிகள் அனைவரும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கட்டாயமாக இருக்கவேண்டும் என்பதால், குறிப்பிட்ட நேரத்தில் எல்லோரும் வந்துவிடுவதுபோல திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
பத்திரப்பதிவு நாளில் செட்டில்மென்ட் செய்யவேண்டிய தொகை மீதம் இருந்தால் இந்த நேரத்தில் முடித்துக்கொண்டு, பதிவு அலுவலகம் செல்லவேண்டும். பதிவு செய்வதற்காக ஆவணங்களை அலுவலகத்துக்குள் தந்த பின்னர், அலுவலகத்தில் காத்திருப்பதுதான் சரியான நடைமுறை. பக்கத்தில்தான் இருக்கிறேன், சரியான நேரத்தில் வந்துவிடுகிறேன் என்றோ, டீக்கடைக்குச் சென்று வருகிறேன் என்றோ கிளம்பக்கூடாது. சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இருந்து பதிவாளரிடத்தில் சரியான நேரத்தில் ஆஜராகி பதிவு மாற்ற ஆவணங்களில் கையப்பம் இட வேண்டும்.
பத்திரத்தில் இடம்பெறும் விற்பவர், வாங்கு பவர்களின் புகைப்படங்கள் தெளிவாகவும் சமீபத்தில் எடுக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். பழைய புகைப்படங்களைப் பயன்படுத்தக்கூடாது.
பத்திரப்பதிவுக்காக கொடுத்துள்ள அனைத்து ஆவணங்களின் ஒரிஜினலும் விற்பவர் கைவசம் வைத்திருக்கவேண்டும். அதேபோல, புகைப்படத்துடன்கூடிய ஏதாவது ஓர் அடையாள ஆவணம் கொடுத்திருப்போம். அதிவும் ஒரிஜினலை அவசியம் வைத்துக் கொள்ளவேண்டும்.
இரண்டு தரப்பும் நேரடியாக பதிவாளர் முன் நின்று கொடுக்கல், வாங்கல் நடைமுறைகள் முடிந்துவிட்டதா, வாங்க, விற்க சம்மதம் என்பதை உறுதிபடுத்திக்கொண்ட பின்னர், பதிவாளர் நமது ஆவணங்களைச் சரிபார்த்து ஒப்புதல் வழங்குவதோடு, பத்திரப்பதிவு நடைமுறை முடிவடைகிறது. பத்திரப்பதிவு முடிந்ததும் உரிய ரசீது கேட்டு வாங்கவேண்டும்.
பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை நீங்கள் நேரடியாகச் சென்று வாங்குவதற்கு நேரமில்லை, அல்லது வெளியூர் செல்ல வேண்டிய வேலை இருந்தால், பதிவு ஆவணங்கள் வாங்க வருபவரது பெயரை முன்கூட்டியே தெரிவித்தால் பத்திரப்பதிவு ரசீதில் அவர் பெயரையும் குறிப்பிடுவார்கள். இந்த ரசீதின் அடிப்படையில்தான் நமது பெயருக்கு மாற்றப்பட்ட பத்திரம் கிடைக்கும்.
ஆயிரத்தெட்டு குழப்பங்களோடும், கேள்வி களோடும் தொடங்கிய நமது மனை தேடும் படலம், ஒரு வழியாக முடிவுக்கு வந்தது பெரிய பாரத்தை, பயத்தை இறக்கிவைத்த திருப்தியோடு மனையை விற்பனை செய்தவர்களுடன் தேநீர் அருந்திவிட்டு விடை பெறலாம்.