வேலை பார்க்கும் இடத்தில் நீங்கள் சிறப்பானவராகத் திகழவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்கு பதில் தெரியாமல்தானே தவிக்கிறோம்; தெரிந்தால் ஜமாய்த்துவிடுவோமே என்றுதானே நினைக்கிறீர்கள்! கேரியர் வார்ஃபேர் என்கிற இந்தப் புத்தகத்தைப் படித்தால், உங்கள் பாஸை உங்களை நோக்கி நிச்சயம் திரும்பிப்பார்க்க வைப்பீர்கள்.
வெற்றிச் செருக்கு எதுவுமில்லாமல், அலங்காரமற்ற, அனுபவப்பூர்வமான யோசனைகளுடன் பிராக்டிக்கலாக எழுதப்பட்ட இந்தப் புத்தகம் உங்களுக்கு சொல்லும் முதல் விஷயம், நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் உங்களை மதிப்பீடு செய்பவர்களின் பார்வையிலேயே நீங்கள் பார்த்துச் செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் பிராண்டை நீங்கள் வளர்த்துக்கொள்வதன் மூலம் ஆபீஸ் வேலையில் ஜெயிக்க, நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை ஆசிரியர் இந்தப் புத்தகத்தில் விலாவாரியாகப் பட்டியல்போட்டுச் சொல்லி இருக்கிறார்.
'ஸாரி' சொல்லாதீர்கள்!
அலுவலகப் பணியில் வெற்றி பெற 'ஸாரி' சொல்வதை முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள். 'ஸாரி சார், நாளைக்குத் தருகிறேன்', 'ஸாரி சார், இன்றைக்கும் முடியவில்லை', 'ஸாரி சார், அடுத்தமுறை சரி பண்றேன்' என்று நீங்கள் சொல்லும் ஒவ்வொரு 'ஸாரி'யும் நீங்கள் என்ன மாதிரியான நபர் என்பதை உங்கள் அலுவலகம் முடிவு செய்ய தோதுவானதாக இருக்கிறது. அதனால் குறைந்த அளவு 'ஸாரி' சொல்லுங்கள்.
மாத்தி யோசியுங்க!
நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் பணிகள் சிறப்பாக நடக்க ஏதாவது ஒன்று குறையும். அது என்ன என்று ஆராய்ந்து கண்டுபிடித்து அதை நீங்கள் செய்யுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், அது மேலிடம் மதிக்கக்கூடிய விஷயமாகவும் இருக்கவேண்டும் என்கிறார். அப்படி ஒரு விஷயம் ரொம்ப கஷ்டமான செயலாகவல்லவா இருக்கும் என்பீர்கள். அது இல்லவேயில்லை என்று சொல்லும் ஆசிரியர், அலுவலகத்தில் பெயரெடுக்க மிகவும் சவாலான மற்றும் பாப்புலரான வேலைகளைச் செய்ய நிறையபேர் போட்டி போடுவார்கள். நீங்கள் இதற்கு மாற்று யோசனையாக யாருமே சிந்திக்காத, ஆனால் மிகவும் எளிமையான கட்டாயம் தேவையானது எது என்று பாருங்கள். பல விஷயங்கள் உங்கள் கண்ணுக்கு முன்னால் வரும். அவற்றை வரிந்துகட்டிக்கொண்டு எடுத்துப்போட்டு சிரத்தையுடன் செய்யுங்கள். வளர்ச்சி எப்படி வருகிறது என்று பாருங்கள்.
மாங்குமாங்கென்று உழையுங்கள்!
சிறுவயதில் வேலைக்குச் சேர்ந்தவுடன் உங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கப்போவது அலுவலகத்தில் பவர்ஃபுல்லான மனிதர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதுதான் என்று சொல்லும் ஆசிரியர், அதற்கான வழிகளையும் சொல்லியுள்ளார். பவர்ஃபுல்லான மனிதர்கள் கண்ணில்படுவதற்கு நிறைய பணம் சம்பாதித்துத் தரும் ஏரியாவிற்கு வேலையை மாற்றிக்கொண்டு (சேலஞ்ச் தான்!) மாங்குமாங்கென்று உழைப்பதும் ஓர் உத்திதான் என்கிறார் ஆசிரியர். இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்தால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி துணிச்சலான வாக்குறுதிகளைச் செய்து அவற்றை நிறைவேற்றியும் காண்பி யுங்கள். உங்கள் பிராண்ட் வேல்யூ எப்படி எகிறுகிறதென்று பாருங்கள் என்கிறார்.
தலைவனாகுங்கள்!
ஒத்தை ஆளாக என்னதான் தலைகீழாக நின்றாலும் ஓர் அளவுக்கு மேல் சாதனை ஏதும் செய்ய முடியாது. அதனால் நல்லதொரு லீடராக மாறுவதற்கான முயற்சிகளை ஆரம்பத் திலிருந்தே எடுங்கள். அப்போதுதான், நீங்கள் நாளடைவில் மற்றவர்களிடமிருந்து வெற்றிகரமாக வேலைவாங்கி உங்கள் புகழை நிலைநாட்ட முடியும் என்கிறார் ஆசிரியர்.
அது எப்படிங்க லீடராகிறது என்கின்றீர்களா? மூன்றே விஷயம்தான் முக்கியம் என்கிறார் ஆசிரியர். தியரியை விட்டுவிட்டு பிராக்டிக் கலாக நடந்துகொள்ளுங்கள் (ஆபீஸ் பத்து மணிக்கு என்றால், முதல் நாள் இரவு 11 மணிக்கு வீட்டுக்குச் சென்றவரை அடுத்தநாள் காலை 9.59-க்கே சீட்டில் இருக்கவேண்டும் என்று கட்டாயம் செய்யாதீர்கள்). உங்களுக்கு எது தெரியாது என்று தெரிந்துகொள்ளுங்கள். சுற்றி இருப்பவர்களிடம் நியாயமாக நடந்து கொள்ளுங்கள். இந்த மூன்றும் உங்களை நிச்சயமாக லீடராக்கும் என்கிறார்.
பாஸைப் புரிந்துகொள்ளுங்கள்!
அடுத்தபடியாக, இளம்வயதில் நீங்கள் கம்பெனிக்காக உழைத்துக் கொட்டுவீர்கள். உங்கள் உயரதிகாரி ஏசி-ரூமில் உட்கார்ந்துகொண்டு இன்சென்டிவ் வாங்குவார். அவரும் உங்களைப் போல் எங்காவது உழைத்துக் கொட்டி விட்டுதான் இப்போது மேலே உட்கார்ந்திருக்கிறார் என்ற நிதர்சன உண்மையைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். இந்த நிலை குறித்து புலம்பாதீர்கள் என்று சொல்லும் ஆசிரியர், உங்களுடைய பாஸ் ஒரு முட்டாளாக இருந்தா லும் உங்கள் வேலை எப்படி சிறப்பாக இருக்கிறது என்பதை டாப்-மேனேஜ்மென்ட் பார்க்க அவரைத்தான் உபயோகிக்கும். அவர் முட்டாளாக இருந்தாலும் அவரிடத்தில் இருக்கும் பவர் நிஜமானது. எனவே, அவரை கவனமாகக் கையாளுங்கள் என்கிறார் ஆசிரியர்.
பாஸுக்கு வேண்டிய மூன்று!
பாஸின் அன்பைப் பெற என்னசெய்ய வேண்டும் என்று கேட்டீர்கள் என்றால், ஓர் அலுவலகத்தில் வேலை ரீதியாக உங்களிடமிருந்து பாஸிற்கு என்னென்ன விஷயங்கள் வேண்டும் என்று மூன்று விஷயங்களைப் பட்டியலிடுகிறார். ஒன்று, உங்களுடைய நன்றி விசுவாசம். இரண்டு, நீங்கள் தரும் உருப்படியான அட்வைஸ். மூன்று, அவருடைய மதிப்பை நீங்கள் கூட்டும் வகையில் நடப்பது. இந்த மூன்றையும் சரிவரச் செய்யத் தவறினால் தேறுவது கடினம் என்று சொல்லும் ஆசிரியர், இந்த மூன்றாவது காரணத்தால்தான் ஒரு முட்டாள் பாஸைக்கூட நீங்கள் மற்றவரிடத்தில் முட்டாள் என்று விமர்சிக்கக்கூடாது என்கிறார்.
பாஸ் பற்றி புகார் வேண்டாமே!
முட்டாள்களிடம் நிஜமான அதிகார ஆயுதம் இருக்கிறதே! எனவே பாஸைப் பற்றி அவரின் பாஸிடம் புகார் சொல்லாதீர் கள் (அவராகக் கேட்டால் தவிர - அப்போதும் ரொம்பவும் யோசனைக்கப்புறம் சொல்வதைப்போல் சொல்லவேண்டும்) என்று சொல்லும் ஆசிரியர், அது நீங்கள் நன்றி விசுவாசம் இல்லாத ஆளென்ற தோற்றத்தைக் கொண்டுவந்துவிடும் என்று சொல்கிறார். மிக மிக முக்கியமாக பாஸின் திறமைக்கு மெருகேற்றுவது உங்களுடைய கடமை என்பதை மனதில் வையுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், பாஸை மட்டம் தட்டி உங்கள் திறமையை வெளிக்காண்பிக்கும் நிகழ்வுகள் எதையுமே தப்பித்தவறிக்கூட நடத்திவிடாதீர்கள் என்கிறார்.
மூன்றுவிதமான மனிதர்கள்!
அண்டிப்பிழைப்பவர்கள், எப்போதும் எதிர்க்கருத்து சொல்பவர்கள், நடுநிலை யாளர்கள் என்ற மூன்றே விதமான மனிதர்களே அலுவலகத்தில் இருப்பார்கள் என்று சொல்லும் ஆசிரியர், அண்டிப்பிழைக்கின்றவனை ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் பாஸிற்கு பிடிக்காமல் போகும் என்று சொல்கிறார். எதிர்க்கருத்து பாஸிற்கு அவ்வப்போது தேவைப்பட்டாலும் அவரால் பெரிதும் ரசிக்கப்பட்டாலும்கூட எதிர்க்கருத்து நபர் என்ற கவர்ச்சிகரமான பாதாளத்தில் விழுந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கிறார். நல்ல சமயோசிதமான யோசனைகளைச் சொல்லும் நடுநிலையாளர் என்ற நிலைப்பாட்டை நீங்கள் எடுப்பது மட்டுமே உங்களை எப்போதும் சமமான மற்றும் சரியான பாதையில் எடுத்துச் செல்லும் என்கிறார் ஆசிரியர்.
பலனை எதிர்பாருங்கள்!
எல்லா பாஸும் உங்களை உபயோகித்து ஆதாயம் தேடவே முயல்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனாலும், வெளிப்படையாகத் தெரியாமல் உங்கள் பாஸை உபயோகித்து நீங்கள் முன்னேறிக்கொள்வதில்தான் உங்களுடைய திறமையே இருக்கிறது என்கிறார் ஆசிரியர். உங்கள் பாஸிடம் நீங்கள் இரண்டே விஷயங் களை எதிர்பார்க்க வேண்டும். ஒன்று, உங்கள் மீது அவர் வைக்கும் நம்பிக்கை. இரண்டு, உங்கள் வேலைக்கு அவர் தரும் மரியாதை மற்றும் பலன் இந்த இரண்டையும் தாண்டி அவருக்கும் உங்களுக்கும் வேறு எந்த இணைப்புப்பாலமும் இருக்க வாய்ப்பே இல்லை என்று அட்வைஸ் செய்கிறார்.
பாஸை மட்டும் நம்பாதீர்கள்!
பாஸ் உங்கள் மீது வைக்கும் நம்பிக்கையே உங்களை அட, இவன் கொஞ்சம் வேலை பார்ப்பான்போல என டாப்-மேனேஜ்மென்ட் கண்ணில் படவைக்கும் என்று சொல்லும் ஆசிரியர், ஆரம்பகால வேலையில் பணத்தை விட அனுபவம் பெறுவதே முக்கியம் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள் என நறுக்கென்ற உண்மையைச் சொல்கிறார். 'பாஸ், எனக்கு தகப்பன் மாதிரி' என்கிற உடான்ஸெல்லாம் வேண்டாம். ஏனென்றால் உங்கள் பெற்றோர்கள் உங்கள் வளர்ச்சிக்காக தியாகம் பலவற்றைச் செய்வார்கள். உங்கள் பாஸ் நிச்சயம் அதில் ஒரு துளிகூடச் செய்ய மாட்டார் என்கிறார். உங்கள் பாஸ் உங்களுக்குச் செய்யும் நல்லது எல்லாமே அவருடைய பிராண்டை வளர்க்கக் கொஞ்சமாவது உதவுவதாக இருக்குமே தவிர, தன்னலமற்ற தியாகமாக இருக்க வாய்ப்பேயில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என்று சொல்கிறார் ஆசிரியர்.
கடைசியாக..!
இருக்கும் வேலையில் உங்களால் புதிதாய் ஒன்றும் கற்றுக்கொள்ளவும் முடியவில்லை, அலுவலகத்தில் உங்கள் பிராண்டை பில்ட் செய்யவும் முடியவில்லை என்றால் உடனடி யாக அந்த வேலையிலிருந்து கிளம்பவும் என்று அலாரம் அடிக்கின்றார் ஆசிரியர்.
நம்மில் பெரும்பாலானோருக்கு வேலையில் வெற்றியே வாழ்வின் வெற்றி. அதனால் அனைவருமே படிக்கவேண்டிய சரியான புத்தகம் இது.
Book download link:
http://avaxhome.ws/ebooks/business_job/Davi7Updated.html
.