பால் குவளைகளை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள் பால் பண்ணை ஆட்கள். அப்போது, அருகில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் தாவிக் குதித்துக்கொண் டிருந்த இரண்டு தவளைகள், உற்சாக மிகுதியில் கொஞ்சம் அதிகமாகவே எகிறியதில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு பால் குவளையில் விழுந்துவிட்டன. பால் பண்ணை ஆள் இதைக் கவனிக்காமல் குவளைகளை மூடி சீல் வைத்து வண்டியில் ஏற்றிவிட்டான். தவளைகளின் பயணம் தொடங்கியது.
முதல் குவளையிலிருந்த தவளை, தான் ஒரு குவளையில் அடைக்கப் பட்டுள்ளதை உணர்ந்தது. தப்பிக்கத் துடித்தது. வேகமாக மேல் நோக்கிப் பலமுறை தாவியதில், மூடியில் அதன் தலை பலமாக அடிபட்டு, பாலிலேயே அது தன் உயிரைத் துறந்தது.
இரண்டாவது குவளையில் உள்ள தவளையும் தப்பிப்பதற்காக முதலில் மேலே தாவிக் குதித்தது. அதன் தலை மூடியில் இடித்தபோது அதற்கு வலித்தது. அது வெளியேறும் வழியல்ல என்று சுதாரித்து, வேறு வழியைப் பற்றிச் சிந்தித்தது. தன் பலம் என்ன என்பதை ஆராய்ந்தது. தனக்கு நீந்தும் சக்தி உண்டு என்பதை நினைவுகூர்ந்து, பாலில் நீந்தத் தொடங்கியது. அதன் வேகமான கால் அசைவினால் பால் கடையப்பட்டு, வெண்ணெய் திரண்டு பாலில் மிதக்கத் தொடங்க, தவளை அந்த வெண்ணெய் உருண்டையின் மேல் அமர்ந்து களைப்பாறியது. குவளைகள் கீழே இறக்கப்பட்டு, பண்ணை ஆட்கள் மூடியைத் திறந்ததுமே அந்தத் தவளை தாவி, வெளியே குதித்தது. ஆக... தவளையும் பிழைத்தது. பாலும் பிழைத்தது.
நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ நம்முள்ளே அடங்கியிருக்கும் சக்தி வெளிப்படும்போது, வெற்றி கிட்டுகிறது!