நவீன வாழ்க்கைக்குத் தகுந்த மாதிரி, நமது பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். முன்னறிவிப்பு இல்லாமல் திடீர் திடீரென்று யார் வீட்டுக்கு வேண்டுமானாலும் போவது, முன்னர் இருந்த பழக்கம். அதை இப்போதும் பின்பற்றுவது சரியல்ல.
காரணம், இன்றைய வாழ்க்கை முறை மாறுபட்டது. திடீரென்று யாராவது வந்துவிட்டால், வீட்டில் உள்ள எல்லோருக்கும் ரத்த அழுத்தம் எகிறுகிறது. நேர நிர்வாகத்தில் சிக்கல் உண்டாகி, வேலைகள் கெடுகின்றன. இதனால், வந்தவரை வரவேற்று உபசரிக்கவும் இயலாமல் போகிறது. எனவே, யார் வீட்டுக்குப் போவதானாலும், நம் வருகையைத் தொலைபேசி மூலம் அறிவித்துவிட்டுச் செல்வதே நாகரிகம்.
இன்று ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் கணவன் - மனைவி இருவருமே வேலைக்குப் போகிறார்கள். குழந்தைகளைப் பள்ளிக்குத் தயார் செய்து அனுப்பிவிட்டு, பெற்றோர் அலுவலகம் புறப்படுவதற்குள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இதில் எதிர்பாராத விருந்தாளி வேறு வந்தால், அவர்கள் பாவம், என்னதான் செய்வார்கள்?
என் நண்பர் ஒருவர், 'ஞாயிறு அல்லாத நாட்களில், காலை நேரங்களில் வீட்டுக்கு வருவதைத் தயவுசெய்து தவிர்க்கவும்' என்று வீட்டு வாசலில் அறிவிப்பே எழுதி வைத்திருந்தார். இது கொஞ்சம் இங்கிதக் குறைவு போல் தோன்றினாலும், யதார்த்த நிலைமை இதுதான்!
நாகரிக வளர்ச்சி அடைந்ததாகச் சொல்லிக்கொள்ளும் நமது காலத்தில்தான், சொல்லாமல் கொள்ளாமல் யார் வீட்டுக்கேனும் திடுதிப்பென்று போய் நிற்கிறோமே தவிர, புராண காலங்களில் இப்படி யாரும் செயல் பட்டதாகத் தெரியவில்லை. முன்னறிவிப்பின்றி ஒருவரைத் தேடிச் சென்றுவிட்டால்கூட, சந்திக்கச் சென்றவர்களின் அனுமதி பெற்றுத்தான் அவர்களைச் சந்தித்தார்கள்.
விஸ்வாமித்திரர் தசரத குமாரர்களை அழைத்துச் செல்வதற்காக வந்தபோதுகூட, முறைப்படிதான் எல்லாம் நடந்தது. விஸ்வாமித்திரர் வெளியே காத்திருக்க, வாயில்காப்போர் அவரது வருகையை தசரத மாமன்னருக்கு அறிவித்தார்கள். அதன்பின்தான் அவர் உள்ளே சென்று, தசரதரைச் சந்தித்தார். இதுதான் அக்கால வழக்கம்.
கண்ணன் பாண்டவர்களுக்காகத் தூது சென்ற போது அறிவித்துவிட்டே செல்கிறான். 'இது உன் இல்லம் கண்ணா!' என, அவனை அன்போடு தன் வீட்டுக்கு அழைக்கிறார் விதுரர். அந்த அழைப்பை ஏற்கிறான் கண்ணன். ஆடம்பர அரண்மனைகளைத் தவிர்த்துவிட்டு, பக்தன் விதுரரின் எளிய குடிலுக்குள் நுழைகிறான். விதுரரின் மனைவி ஓடோடிச் சென்று, தோட்டத்திலிருந்து வாழைப்பழங்கள் பறித்து வருகிறாள். பக்திப் பரவசத்தோடு கண்ணனைப் பார்த்தவாறே, வாழைப்பழத்தின் தோலை உரிக்கிறாள். பக்தி மேலிட, தன் நினைவு இழந்தவளாய், பழத்தைத் தூரப் போட்டு விட்டுத் தோலை கண்ணனிடம் தருகிறாள். கண்ணனும் அதைப் புன்னகையோடு வாங்கி, முகச் சுளிப்பின்றி உண்கிறான். பக்தியை மெச்சிய பரந்தாமன்!
கோவலன் கொலையுண்ட போது, நீதி கேட்கப் பாண்டிய மன்னனின் அரசவைக்குச் சென்ற கண்ணகி, நேரே உள்ளே செல்ல முடியவில்லை. காவலர்கள் அவளைத் தடுத்து, அவள் பற்றிய விவரங்களை மன்னனிடம் போய்ச் சொன்ன பிறகுதான், அவள் அரசவையில் அனுமதிக்கப்படுகிறாள்.
எல்லா இடங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. அப்படிப் பின்பற்றப்படாத சந்தர்ப்பங்களில் எல்லாம் சங்கடங்கள்தான் நேர்ந்தன.
தன்னைக் காந்தர்வ மணம் செய்து கொண்டு, பின்னர் கைவிட்டுச் சென்ற துஷ்யந்தன் நினைவாகவே அமர்ந்திருக்கிறாள் சகுந்தலை. அங்கே முன்னறிவிப்பே இல்லாமல் திடீரென்று வருகிறார் துர்வாசர்.
அவர் வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தால், சகுந்தலை அவரை முறைப்படி வரவேற்க ஆயத்த மாக இருந்திருக்கக்கூடும். ஆனால் அவரோ, சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்கிறார். சகுந்தலை அவர் வந்ததைக் கவனிக்கவே இல்லை. துஷ்யந்தன் நினைவிலேயே ஆழ்ந்திருந்தாள்.
தமக்கு மரியாதை தரவில்லை என்ற கடும் கோபத்தில், ஞான திருஷ்டியால் பார்க்கிறார் முனிவர். துஷ்யந்தன் நினைவாக அவள் அமர்ந்திருப்பதை அறிகிறார். துஷ்யந்தன் மனத்திலிருந்து அவள் நினைவு அகலட்டும் என்று சபிக்கிறார் (பிறகு, சகுந்தலையின் தோழிகள் வேண்டியதன்பேரில், துஷ்யந்தனுக்கு தான் அளித்த நிரந்தர அம்னீஷியா என்கிற சாபத்தைத் தற்காலிக அம்னீஷியாவாக மாற்றி அருளினார்).
துர்வாசர் சபித்தது சரிதானா? ஞான திருஷ்டி மூலம், அவள் தன் காதலன் நினைவில் தோய்ந்திருந் தாள் என்பதைத்தான் அவர் அறிந்துவிட்டாரே? அதனால்தான் தன்னை அவள் கவனிக்கவில்லை என்பதையும், உண்மையிலேயே அவள் தன் மீது மிகுந்த மரியாதை கொண்டவள்தான் என்பதையும் உணர்ந்திருப்பாரே? அவர் ஏன் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென்று வந்தார்? அவர் தரப்பிலும் தவறுள்ளதே? சொல்லப்போனால், தவறு அவர் தரப்பில் மட்டும்தானே உள்ளது? ஒரு பெண், கணவன் நினைவாக இருப்பது எப்படிக் குற்றமாகும்? அப்படியிருக்க ஏன் இந்தக் கோபம்? எதற்கு இந்தச் சாபம்? விடை காணவியலாத கேள்விகள்...
ராமபிரானின் அவதாரத்தில், இறுதிக் காலம். ராமபிரானைச் சந்திக்க காலதேவன் வந்திருக் கிறான். 'நாம் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது, அனுமதியில்லாமல் யாரும் உள்ளே நுழையக்கூடாது. அப்படி நுழைந்தால், அவர்கள் மரணத்தை ஏற்கவேண்டும். இந்த நிபந்தனைக்கு உட்பட்டு, அறைக் கதவை மூடு!' என்கிறான் காலதேவன். ஸ்ரீராமன், லட்சுமணனை கதவை மூடிவிட்டுக் காவல் இருக்கச் சொல்கிறான்.
அங்கேயும் திடீரென முன்னறிவிப் பில்லாமல்தான் வருகிறார் துர்வாசர். லட்சுமணன் தடுத்ததும், 'நான் ஸ்ரீராமனைச் சந்திப்பதை நீ தடுத்தால், அயோத்தி அழியுமாறு சபிப்பேன்!' என்று உறுமுகிறார். அயோத்தியா, தானா... இரண்டில் எதன் அழிவு தேவலாம் என்று சிந்திக்கிறது லட்சுமணனின் உள்ளம். அயோத்தி அழியலாகாது என்கிற எண்ணத்தில், துர்வாசர் வருகையை அறிவிக்கவேண்டி, அறைக் கதவைத் திறந்துகொண்டு ராமன் முன் சென்று நிற்கிறான் லட்சுமணன். அதுவே, பின்னர் அவன் சரயூ நதியில் இறங்கி, உயிர் துறக்கக் காரணமாகிறது.
எங்கே செல்வதானாலும், அறிவித்துவிட்டே செல்லவேண்டும் என்பதற்கு, இப்படி நம் புராணங்களில் ஏராளமான சான்றுகளைக் காண முடியும்.
நண்பர் ஒருவர் என்னிடம், 'நேற்று ஓர் உறவினர் வீட்டுக்குக் காலை 9 மணிக்குச் சென்றேன். அவர் அலுவலகம் போவதற்குள் அவரைப் பிடிக்கவேண்டும் என்பதற்காகத்தான் அந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்தேன். கதவைத் திறந்த அவர், 'என்ன, திடீரென்று வந்துவிட்டீர்களே? தொலைபேசியில் தொடர்புகொண்டு, பிறகு வரக்கூடாதா?' என்று அங்கலாய்த்தார். எனக்குச் சங்கடமாக இருந்தது. 'ஏண்டா இங்கே வந்தோம்' என்றாகிவிட்டது. நம் உறவினர் வீட்டுக்குப் போகக்கூட அப்பாயின்ட்மென்ட் வாங்கவேண்டுமா, என்ன? ஹூம்... மனிதர்கள் மனம் ஏன் இத்தனைக் குறுகிப் போய்விட்டது!' என்று சலித்துக்கொண்டார்.
நான் அவரைக் கூர்மையாகப் பார்த்தேன். பிறகு, 'என்றைக்கு நீங்கள் போனீர்கள்? உங்களுக்கு எப்படி அவகாசம் கிடைத்தது?' என்று கேட்டேன்.
'நான் அன்றைய தினம் அலுவலகத்துக்கு விடுப்பு போட்டிருந்தேன். அன்று சில உறவினர்களைச் சந்திக்கலாம் என்று புறப்பட்டேன். உறவினர்களைச் சந்திக்க நினைப்பது தவறா? இப்படியெல்லாம் முகம் சுணங்கினால், உறவு எப்படித் தழைக்கும்?' என்று கேட்டார் அவர்.
'உறவு தழைக்கவேண்டியது அவசியம்தான். நீங்கள் உங்கள் உறவினர்களைச் சந்திக்க நினைத்ததிலும் தவறில்லை. அப்படிச் சந்திக்க நேரம் வேண்டும் என்றால், நீங்கள் அலுவலகத்துக்கு விடுப்பு போட வேண்டியிருக்கிறது. ஆனால், நீங்கள் யாரைச் சந்திக்கச் செல்கிறீர்களோ, அந்த உறவினரும் அன்று விடுப்பில் இருந்தால்தானே உங்களுடன் பேச அவருக்கு நேரம் இருக்கும் என்பது ஏன் உங்களுக்குப் புரியவில்லை? நகர வாழ்க்கையில், நேர நிர்வாகம் எத்தனை முக்கியம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இந்தச் சாதராண நாசூக்கைக்கூட நீங்கள் அனுசரிக்கா விட்டால் எப்படி?' என்று அவருக்கு விளக்கினேன். தன் உறவினர் தரப்பில் எந்தத் தவறுமில்லை என்று உணர்ந்துகொண்ட அவர், தன் செயல் பற்றித் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார்.
நாம் யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தொந்தரவு செய்யலாம் என்று முடிவு செய்து வைத்திருக்கிறோம். அதற்கு நட்பு ரீதியாகவும், உறவு ரீதியாகவும் நமக்கு உரிமை உண்டு என்றும் கருதுகிறோம். நாம் சந்திக்கச் சென்றவர்கள் சற்றுச் சிணுங்கினால்கூட, அது நல்ல பண்பாடு இல்லை என்று கருதுகிறோம். இந்தப் போக்கு இப்போதைய வாழ்வுமுறைக்குச் சரியல்ல!
எல்லோரும் நாள்தோறும் காலில் வெந்நீர் கொட்டிக்கொண்டு பறந்துகொண்டிருக்கும் அவசர யுகம் இது. இந்த யுகத்திற்கான சட்ட திட்டங்கள் வேறுதான். 'அந்தக் காலத்தில் நாம் அப்படி இருந்தோமே' என்று இந்தக் காலத்தில் அங்கலாய்ப்பதில் பயனில்லை. எந்தவிதமான அறிவிப்பும் தராமல் திடீரென்று ஒருவரின் வாழ்க்கைப் போக்கில் இன்னொருவர் குறுக்கிடுவது என்பது, இந்தக் காலத்தில் நிச்சயம் உரிமையை மீறிய செயல்தான்.
நம் இந்தியாவில்தான் இப்படிப்பட்ட நபர்கள், திடீர் திடீரென வீட்டுக்குள் வந்து, நாம் கடுமை யாகப் பணியில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில், அல்லது அவசரமாக எங்கேனும் வெளியே புறப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், அதைச் சற்றும் லட்சியமே செய்யாமல், நம் நேரத்தைச் சாப்பிட்டுவிட்டுச் செல்கிறார்கள்.
வெளிதேசங்களில் இத்தகைய அநாகரிகம் கிடையாது. யார் வீட்டுக்குச் செல்வதாக இருந்தாலும், முன்கூட்டியே சொல்லிவிட்டுத்தான் செல்லவேண்டும் என்பதை அவர்கள் ஒரு பண்பாடாகப் பின்பற்றுகிறார்கள்.
பேன்ட், ஷர்ட், கோட், டை என்று வெளி நாட்டினரின் குளிர் சூழ்நிலைக்கே உரிய உடை நாகரிகத்தை நமது வெயில் தேசத்தில் விழுந்து விழுந்து பின்பற்றும் நாம், ஒருவரின் இல்லத்துக்குச் செல்வதாக இருந்தால் முன்கூட்டியே சொல்லிவிட்டுச் செல்லவேண்டும் என்கிற அவர்களுடைய உயர்ந்த நாகரிகத்தையும் பின்பற்றினால் என்ன?