அசுரன் கேட்ட வரம்!
வருண பகவானின் வெண்குடை, தேவேந்திரனின் குண்டலங்கள் என தேவர்களின் உடைமைகளை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகின் நிம்மதி யும் பறிபோனது நரகாசுரனால். துயரத்தில் தவித்த தேவேந்திரன் உள்ளிட்ட தேவர்கள் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் சரண்புகுந்தார்கள்.
சத்தியத்தின் துணையோடு புறப்பட்டார் பகவான். ஆமாம்! சத்யபாமா தேரோட்ட நரகாசுரனின் தலைநகர் ப்ராக்ஜோதிஷபுரத்தை நோக்கிக் கிளம்பினார். கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் ஆகிய கோட்டைகளை அழித்து நகருக்குள்ளும் புகுந்தார். கணப்பொழுதில் நரகனின் படைகள் அழிக்கப் பட்டன. கடைசியில் நரகாசுரனே போர்க்களம் வந்தான். ஆனால், அவனது ஆயுதங்கள் எல்லாம் கண்ணனின் முன்னால் வலுவிழந்து போயின. நரகன் வீழ்த்தப்பட்டான். அப்போது பூமிப்பிராட்டி ''இந்த மரண காலத்தில் இவனுக்கு ஞான உபதேசம் செய்ய வேண்டும்'' என்று வேண்டினாள். அதன்படியே கண்ணனின் கருத்தும் கண்களும் நரகாசுரனின் பக்கம் திரும்பி அருள் மழை பொழிந்தன.
தெளிவு பெற்ற நரகாசுரன், ''பரந்தாமா! நான் மறையும் இந்த நாளை எல்லோரும் நல்ல நாளாகக் கொண்டாட வேண்டும். அன்று எண்ணெயில் லட்சுமிதேவியும், தண்ணீரில் கங்காவும் வாசம் செய்ய வேண்டும். அனைவரும் எண்ணெய் தேய்த்து, புத்தாடை உடுத்தி, விளக்கேற்றி வழிபட்டு, நல்லுணர்வைப் பெற வேண்டும். அவர்களுக்கு எல்லாவிதமான மங்கலங்களையும் நீங்கள் அருள வேண்டும்'' என்று பிரார்த்தித்தான் (இந்த வரத்தை பூமிதேவி கேட்டதாக பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது). கண்ணனும் வரம் தந்தார். நரகாசுரன் முக்தி பெற்ற அந்த நாளே தீபாவளி. நம்மிடம் உள்ள குறைகளை நீக்கி கண்ணன் நம்மை ஆட்கொள்வதையே இந்தக் கதை உணர்த்துகிறது.