பாரதயுத்தம் முடிந்ததும் கடைசியாக இறந்த துரியோதனனையும் சேர்த்து, தான் பெற்ற நூறு பிள்ளைகளையும் இழந்தாள் காந்தாரி. பெற்ற அவள் வயிறு எரிந்தது. நேராக கண்ணனிடம் வந்தாள். ஏ கண்ணா! என் மகன்களைக் கொன்றது பாண்டவர்கள் அல்ல. நீ தான். உன் ஆலோசனையின்றி, அவர்கள் என் மக்களை ஜெயித்திருக்க முடியாது. பல விஷயங்களிலும் அவர்களுக்கு உதவி, என் மக்களைக் கொன்ற கொலைகாரனாக என் முன்னால் நிற்கிறாய். நீ தெய்வபுருஷன். ஆனால், அதற்குரிய எல்லா இலக்கணங்களையும் மறந்து, என் மக்களைக் கொன்றாய். ஒரு சாராருக்கு ஆதரவாக நின்றாய். என் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டாய். நான் எப்படி என் மக்களை இழந்து துன்புறுகிறேனோ, அதுபோல் நீ பெற்ற பிள்ளைகளையும், துவாரகாவில் வசிக்கும் உன் மக்களும் மாண்டு அழிவார்கள். அப்போது உன் வயிறும் என் வயிறு போல் எரியும், என சாபமிட்டாள். அவள் பத்தினி. பெற்ற பிள்ளைகள் தான் தவறான பாதையில் போனார்களே தவிர, கணவனுக்காக கண்ணையே கட்டிக் கொண்ட உத்தமி. அப்படிப்பட்டவளின் சாபம் தன்னை என்றாவது சாய்த்து விடும் என்பதில் கிருஷ்ணன் நம்பிக்கை கொண்டிருந்தார். அதற்கேற்ற சமயமும் வந்தது.
கன்வர் (சகுந்தலையின் தந்தை), விஸ்வாமித்திரர், நாரதர் ஆகிய ரிஷிகள் ஒருமுறை கண்ணனைக் காண துவாரகாபுரிக்கு வந்தார்கள். பொதுவாக சாமியார்களைப் பார்த்தால் யாருக்கும் இளக்காரமாகத்தான் இருக்கும். அவர்களை சாதாரணமாகக் கருதிய அவ்வூர் மக்கள் சிலர், கண்ணனின் மகனான சாம்பன் என்பவனுக்கு பெண் வேடமிட்டு, வயிற்றில் ஒரு தலையணையை வைத்துக் கட்டி, அந்த முனிவர்கள் முன்னிலையில் நிறுத்தினர். முனிவர்களே! எங்கள் நகருக்கு வந்திருக்கும் தங்கள் வரவு நல்வரவாகட்டும். நீங்கள் முக்காலமும் அறிந்த ஞானிகள். இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும்? என்று அவர்களையே ஏமாற்றப் பார்த்தனர். அட கயவர்களே! எங்கள் பெருமையை மாசுபடுத்தும் விதத்திலா கேள்வி கேட்டீர்கள். இவன் சாம்பன் என்பது எங்களுக்கு தெரியும். ஒரு உலக்கை இவன் வயிற்றில் பிறக்கும். அது உங்கள் வம்சத்தையே அழிக்கும், என சாபமிட்டனர். பயந்து போனார்கள் அவர்கள். ஆனாலும், சாபப்படி உலக்கை பிறந்தது. அதை அரத்தால் அறுத்து பொடியாக்கினர். உலக்கையின் இரும்பு உருண்டையையும் சேர்த்து கடலில் போட்டு விட்டனர். தங்களை இனி உலக்கை ஏதும் செய்யாதென நினைத்தனர்.
அந்த இரும்பு உருண்டையை ஒரு மீன் விழுங்கியது. அம்மீனைப் பிடித்தவர்கள் இரும்புத்துண்டை வீசி விட்டனர். அதை கண்டெடுத்த ஒரு வேடன் அதை தன் வில்லில் வைத்து கட்டிக் கொண்டான். ஒருமுறை மான் என நினைத்து, தன் இரும்பு உருண்டையை அதன் மீது வீச, அது அவ்வழியே வந்த கண்ணன் மீது பட்டது. வேடன் பயத்துடன் மன்னிப்பு கேட்டான். கண்ணன் அவனுக்கு முக்தியளித்தார். அத்துடன் இரும்பு உருண்டை வலி தாளாமல் இறந்தார். தன் மனித அவதாரம் முடித்த திருப்தியில் வைகுந்தம் சென்றார். ஐந்து லட்சம் யாதவர்கள் போதைக்கு அடிமையாகி தங்களுக்குள் அடித்துக் கொண்டு இறந்தனர். பத்தினியின் சாபமும், முனிவர்களின் சாபமும் பலித்தது.
கடவுளே மனிதனாகப் பிறந்தாலும், தர்மத்திற்கு புறம்பாக அவரோ, அவரது வம்சத்தினரோ நடந்து கொண்டால் அழிவு நிச்சயம் என்பதை கிருஷ்ண பரமாத்மா இந்த நிகழ்ச்சியின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.