வெற்றிக்கனி உங்கள் கையில்
என்ன வேலை செஞ்சு என்ன பிரயோஜனம்! கஷ்டப்பட்டு உழைச்சேன்! பத்து பைசா வருமானம் உண்டா! உம்...'' என்று பெருமூச்சுடன் "உச்' கொட்டுபவர்கள் ஏராளம்.
இப்படிப்பட்ட நபர்களைப் பார்த்தார் ராபர்ட் ரிப்ளி என்னும் எழுத்தாளர். அமெரிக்காவைச் சேர்ந்தவர். "பீலிவ் இட் ஆர் நாட்' (நம்பினால் நம்புங்கள்) என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதினார்.
அதில் அவர் சொல்கிறார். நான்கு பேர் ஆளுக்கொரு இரும்புத்துண்டை 250 ரூபாய்க்கு வாங்கினர்.
ஒருவன், அதை ஏதோ சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தினான். இன்னொருவன் அதை உருக்கி, குதிரைக்கு லாடம் செய்தான். அதை 2500 ரூபாய்க்கு விற்றான். இன்னொருவன் தையல் இயந்திரத்துக்கு தரமான ஊசிகள் செய்தான். அவை 2.5 லட்சம் ரூபாய்க்கு விலை போயின. இன்னொருவன் அதையே சக்தி வாய்ந்த இயந்திரம் ஒன்றுக்கு ஸ்பிரிங்குகளாகச் செய்து இரண்டரை கோடிக்கு விற்று லாபம் சம்பாதித்தான்.
ஆக, இரும்புத்துண்டு ஒன்று தான். அதை விதவிதமாக வடிவமைக்கும்போது, அதன் மதிப்பு பலமடங்கு பெருகுகிறது. இரும்பை வாங்கிய ஒருவன் அதைப்பற்றி சிந்திக்கவே இல்லை. எதற்காக வாங்கினானோ, அந்த வேலையை மட்டும் செய்து விட்டு ஒதுங்கி விட்டான். அதேபோன்ற இரும்புத்துண்டை வாங்கிய மற்ற மூவரும் அவரவர் சிந்தனை, திறமையைப் பொறுத்து ஆயிரம், லட்சம், கோடிகளாக மாற்றினர்.
நம் எல்லாருக்கும் திறமை ஒளிந்து கிடக்கிறது. அதை நாம் தான் வெளிப்படுத்த வேண்டும். சிந்திக்கும் திறன் மட்டும் வாழ்வை மாற்றிவிடாது. சிந்தனையை தைரியத்துடன் செயல்படுத்துவனே வாழ்வில் வெற்றி பெறுகிறான். இதற்கு கடவுளின் அனுக்கிரகமும் தேவை.
எனவே, காலையில் எழுந்ததும், ""நான் இன்று இன்ன வேலை செய்யப்போகிறேன், அதை நிறைவேற்ற நீ என்னோடு இரு,'' என்று கடவுளை வேண்டியபிறகு பணிகளைத் துவக்குங்கள்! கடவுள் உங்கள் பக்கம் நிச்சயம் இருப்பார். நீங்கள் வெற்றிக்கனிகளைப் பறித்து தள்ளூவீர்கள்