கடைசி வரை யாரோ?
சித்தண்ணன் பெரிய வியாபாரி. வியாபாரத்தில் ஏராளமான லாபம். ஆனால், சுத்த கருமி. இவரது பால்ய நண்பர் வெங்கண்ணன். எளிமையானவர். பிறவாநிலை அடைய இறைவனிடம் வேண்டிக் கொண்டிருப்பவர். இருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். ஒருமுறை, சித்தண்ணனின் வீட்டு திண்ணையில் வெங்கண்ணன் அமர்ந்தார். வீட்டுக்குள் எட்டிப்பார்த்தார். முன் பக்கத்தில், சித்தண்ணனின் பெரிய ஓவியம் வரைந்து வைக்கப்பட்டிருந்தது. ஆஹா...இது நம் நண்பனின் வீடு போல இருக்கிறதே. பார்த்து ரொம்ப நாளாயிற்று. ரெண்டு வார்த்தை பேசி விட்டு போவோமே, என நினைத்து, வீட்டுக்குள் சென்றார். ஐயா, ஐயா, என அழைத்தார். உள்ளிருந்து சித்தண்ணன் வந்தார். அவருக்கு வெங்கண்ணனை அடையாளம் தெரியவில்லை. ஏ பிச்சைக்காரா! உன்னை யாரடா வீட்டுக்குள் விட்டது. இங்கே ஏதும் இல்லை. ஓடு, என்றார். வெங்கண்ணன் சிரித்துக் கொண்டார்.
தன்னிடமிருந்த சில வெற்றிலைகளை எடுத்து கையில் வைத்துக் கொண்டு சுண்ணாம்பு தடவி, பாக்கை போட்டு மெல்ல ஆரம்பித்தார். அந்த தளிர் வெற்றிலையைப் பார்த்ததும், ஏ பிச்சைக்காரா, நில்லு. உனக்கு கூட நல்ல தளிர் வெற்றிலை கிடைச்சிருக்கே. இதை எந்தக் கடையிலே வாங்கினே, என்றபடியே சித்தண்ணன் வெளியே வந்தார். உனக்கும் வேணுமா சித்தண்ணா! இந்தா பிடி, என சில வெற்றிலைகளை அவனிடம் நீட்டினார் வெங்கண்ணா. சித்தண்ணாவுக்கு வந்தது ஆத்திரம்...அடேய்! பிச்சைக்காரனான நீ என்னை எப்படி பெயர் சொல்லி அழைக்கலாம். என் பெயர் உனக்கு எப்படி தெரியும்? என்று கத்தினார். சித்தண்ணா! ஏன் கத்துறே! என்னை உனக்கு அடையாளம் தெரியலியா? நான் தோழன் வெங்கண்ணா. இப்ப புரியுதா? என்றார் வெங்கண்ணா.
சித்தண்ணன் உற்றுப் பார்த்து விட்டு, மன்னிச்சிடப்பா! உன்னை அடையாளமே தெரியலே! ஏதும் நெனச்சுக்காதே, என்ற சித்தண்ணா, வெங்கண்ணாவிடம் வெற்றிலையை வாங்கி சுவைத்தார். இதன் பின் தினமும் வெங்கண்ணா வெற்றிலை கொண்டு வர, காசே கொடுக்காமல், ஒருவேளை வெற்றிலை செலவைக் குறைத்து விட்டார் சித்தண்ணா. தன் நண்பனின் பணத்தாசைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த வெங்கண்ணா, சித்து! நீ, மனைவி, மக்களுக்காக தானே பொருள் சேர்க்கிறாய்? என்றார். ஆமாம்! அவர்கள் என் மீது வைத்துள்ள பாசத்திற்காக சேர்க்கிறேன், என்றார் சித்தண்ணா. சரி..நீ இன்று ஒருநாள் மட்டும் இறந்தவன் போல நடி. உன் மீது உன் உறவுகள் கொண்டுள்ள பாசத்தை நான் பரீட்சிக்க வேண்டும், என்றார் வெங்கண்ணா.
சித்தண்ணாவும் அப்படியே செய்ய, அவரது மனைவி, வயதான அம்மா, குழந்தைகள், உங்களுக்கு பதில் எங்கள் உயிரை கடவுள் எடுத்துக் கொள்ளட்டுமே, என கதறி அழுதனர். வெங்கண்ணா அவர்களிடம், யாரும் அழ வேண்டாம். இறந்தவர்களை பிழைக்க வைக்க எனக்கு தெரியும். உங்களில் ஒருவருக்கு இதோ இந்த மருந்தை தருவேன். அதை யார் குடித்தாலும், இவர் எழுந்து விடுவார். ஆனால், குடிப்பவர் இறந்து விடுவார், என்று சொல்லி மருந்தை மனைவியிடம் நீட்டினார். அவள், ஐயா! நான் இல்லாட்டி என் பிள்ளைகளுக்கு யார் சமைச்சு கொடுப்பா, அவங்களை கவனிக்க ஆள் இல்லையே, என சொல்லி பின் வாங்கி விட்டாள்.
முதிய தாயிடம் அதை நீட்டிய போது, அடப்பாவி! என்னை கொல்லவா பாக்கிறே. செத்தவன் எப்படி எழுவான்? என சொல்லி ஒதுங்கி விட்டாள். பிள்ளைகளோ அந்த பக்கமே நில்லாமல் ஓடிவிட்டனர். கடைசியில் வெங்கண்ணா அவர்களிடம், சரி..என் நண்பனுக்காக நானே இதை குடித்து உயிரை விடுகிறேன், என சொல்லி தன் கையில் இருந்த சர்க்கரை கலந்த நீரை குடித்தார். சித்தண்ணன் எழுந்து உட்கார்ந்தார். அவருக்கு அதிர்ச்சி. வெங்கண்ணா! எனக்கு உலகம் புரிந்து விட்டது. மனைவி, மக்கள், ஏன்...மரணம் என்றால் பெற்ற தாய் கூட பயப்படுகிறாள். இவர்களுக்காகத்தான் இப்படி ஓடி ஓடி சம்பாதித்தேனா? சரி... வா! நாம் இருவருமே இமயத்துக்கு போய் மனதை இறைவனிடம் ஒப்படைப்போம், எனச் சொல்ல இருவரும் புறப்பட்டனர்.