Saturday, July 30, 2011

'தள்ளிப் போடும்' மனநிலையை தள்ளிப் போடுங்கள்

 'தள்ளிப் போடும்' மனநிலையை தள்ளிப் போடுங்கள்


உங்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும் சிந்தனை எது தெரியுமா? "அப்பறமா செய்யலாம்," என்பது தான்.


நேரம் இருக்கும்போதே வேலையை செய்து முடிக்காமல், தள்ளிப் போட்டு தள்ளிப் போட்டு, பிறகு கடைசி நாள் வந்ததும் டென்ஷனாகும் பலரை நாம் சந்தித்திருப்போம். ஏன்.. நாமே கூட அப்படி சில நேரம் தவித்திருப்போம்.


கடைசி நேரத்தில் வேலை செய்தால் அதில் நம் கவனம் தவறிப் போக சாத்தியக்கூறுகள் அதிகம். அந்த நேரம் பார்த்து செல்போன் இடைஞ்சல்கள், கணினிக் கோளாறுகள், பிரிண்டர் பிரச்னைகள், இணையம் இணையாமை, தேனீர் குடிக்க நண்பர்கள் அழைப்பு, ஒத்துழைக்க சக ஊழியர் மறுப்பு என பல ரூபங்களில் தடைகள் நம்மைத் தாக்கும்.


நம் அவசரத்துக்கு எதுவும் சரியாக வேலை செய்யாது. செய்த வேலையை சரிபார்க்கக் கூட நேரமின்றி அப்படியே முடித்து விடுவோம்.


வேலை தவறானால், அதையே மறுபடியும் செய்ய வேண்டிய நிர்பந்தம் நேரலாம். அல்லது, அது போன்ற பொறுப்பான வேலைகளை மேலதிகாரிகள் நம்மிடம் தர மறுக்கலாம். பொறுப்பான வேலைகள் செய்யவில்லை எனில் முன்னேற்றம் எப்படி வாய்க்கும் ?


சரி.. வேலைகளை தள்ளிப் போடுவதற்குக் காரணம் சோம்பேறித்தனம் மட்டும் தானா? இல்லை. அது நம் மனநிலை சார்ந்தது. குறிப்பிட்ட வேலையை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் என்கிற திடமான மனோபாவம் இல்லாமை, பொறுப்பின்மை, 'சென்றமுறை இப்படித் தானே கடைசி நேரத்தில் வேலையை முடித்தோம்' என்கிற தேவையில்லாத தன்னம்பிக்கை, பிரச்னை வரும்போது பாத்துக்கலாம் என்கிற விட்டேத்தியான மனநிலை.. இப்படி பல விஷயங்கள் நம் முட்டுக்கட்டைக்கு பலம் சேர்க்கின்றன.


'தள்ளிப் போடும் குணம்' என்ற மிருகத்தின் குட்டி 'வேலையை செய்யாமல் விட்டுவிடுதல்'.  கடைசி நேரம் நெருங்க நெருங்க, பதற்றம் அதிகமாகி, அந்த வேலையை செய்யாமலேயே விட்டுவிடும் நபர்கள் ஏராளம்.

தவிர்க்க இயலாத காரணங்களால், ஒரு வேலையைத் தள்ளிப் போடுவதில் தவறில்லை. ஆனால், நேரம் இருக்கும் போது ஒரு காரணமும் இன்றி வேலையை தள்ளிப் போடுவது டென்ஷனை வெல்கம் சொல்லி வரவேற்கும்.


சனிக்கிழமை செய்து முடிக்க வேண்டிய வேலை ஒன்று இருந்தால், அதை எதற்காக திங்கட்கிழமையே முடிக்க வேண்டும் என்ற நினைப்பு நியாயமானது தான். ஆனால், சனிக்கிழமைக்குள் எப்படியும் அதை செய்து முடித்தாக வேண்டும் என்னும் பட்சத்தில், திங்கட்கிழமை அதை முடித்துவிட்டால், மற்ற நாட்களில் அதைப் பற்றி நாம் யோசிக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதுமட்டுமல்லாமல், செய்த வேலையை மெருகேற்றவோ, மாற்றவோ நமக்கு போதுமான அவகாசம் கிடைக்கும்.


அதே வேலையை சனிக்கிழமை வரை தள்ளிப் போட்டால், திங்கள் முதல் வெள்ளி வரை 'இன்னும் அந்த வேலை பாக்கி இருக்கிறது' என்கிற உருவமில்லா உருண்டை மனதில் அங்குமிங்கும் உலவிக் கொண்டே இருக்கும். அது தேவையா..?


சந்தோஷமாக சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது அநாவசியமாக 'பாக்கி வேலை' நினைவுக்கு வரும். அந்த வேலையை முடிக்கச் சொன்னவர் (மேலதிகாரி / சக ஊழியர்) நம்மிடம் பேசும்போது, அதுகுறித்து பேசினாலோ ஞாபகமூட்டினாலோ கோபம் வரும். "எங்கிட்ட சொல்லிட்டீங்க இல்லை.. நான் பாத்துக்கறேன்," என்று சொல்ல வைக்கும். அது கேட்டவரைக் காயப்படுத்தும். தேவையில்லாமல் அவருக்கு மனக்கஷ்டம்; நமக்கும்.


வேலை செய்யும் இடத்தில் சுமுகமான சூழ்நிலையை பெரும்பாலும் உடைய வைப்பது இந்த 'கடைசி நேர கொந்தளிப்புகள்' தான்.


அப்படி கடைசி நேரத்தில் பரபரப்பாக அவசரகதியில் இயங்கும் போது, அந்த நண்பரோ / உயரதிகாரியோ "அதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன்," என்று தன் பங்குக்கு தன் ஈகோவை திருப்தி செய்து கொள்ள முயல்வார். அந்த வாக்கியத்தின் பின் விளைவு என்னவாக இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். அவர் மீது வைத்திருக்கும் மரியாதையை நாமும், நம் மீது வைத்திருக்கும் மரியாதையை அவரும் பரஸ்பரம் குறைத்துக் கொள்வோம். இது தேவையா ?


வேலையை தள்ளிப் போடும் விஷயத்தில் மிக முக்கியமானது பில்லுக்கு பணம் செலுத்துவது.

பணம் கட்ட ஏதேனும் பில் வந்தால், கடைசி நாள் எது என்பதை பார்த்து வைத்துக் கொள்கிறோம். நல்ல விஷயம் தான். அதற்காக, கடைசி நாள் தான் போய் பணம் கட்ட வேண்டும் என்பதில்லை. கடைசி நாள் அன்று கூட்டத்தில் கஷ்டப்பட்டு, மற்ற வேலைகளை தாமதப்படுத்தி, அதற்காக பொய்கள் சொல்லி... ஏன் இந்த குளறுபடி ? முன்பாகவே பணத்தை கட்டிவிட்டால், இந்தத் தொல்லைகள் இல்லையே!


கடைசி நாள் அன்று வேறு ஏதேனும் முக்கிய வேலையும் இருந்தால், அன்று நம் பாடு திண்டாட்டம் தான். அதற்கு முதல் நாள் இரவு தூக்கம் கெடும். டென்ஷன் தலைக்கேறி, வீடு காலையிலேயே போர்க்களம் ஆகும். அலுவலகத்திலும் சிடுசிடுப்பு தொடர்ந்து, அந்த நாள் நமக்கு இருண்ட நாள் ஆகும்.. எதற்காக இப்படி நமக்கு நாமே கரி பூசிக் கொள்ள வேண்டும்? முன்பே பணத்தைக் கட்டியிருந்தால் இந்த இம்சை வந்திருக்காதே!


வீட்டில் உள்ள பெரியவர்கள் அன்றாட விஷயங்களில் எதையும் பொதுவாக தள்ளிப் போட மாட்டார்கள். டிவி பார்த்தாலும், பேப்பர் படித்தாலும், அந்தந்த வேலைகளை அவ்வப்போது செய்துவிட அவர்கள் உள்ளுணர்வு அவர்களை இயக்கிக் கொண்டிருக்கும். ஏன் அப்படி? அனுபவம் அவர்களுக்கு அதை கற்றுக் கொடுத்திருக்கிறது. அடுத்தவரின் அனுபவத்தில் நாம் பாடம் கற்றுக் கொள்வது புத்திசாலித்தனம்.


முடிக்க வேலையை கடைசி நாள் வரை தள்ளிப் போட்டுவிட்டு, பிறகு அரக்கபரக்க அதை முடிப்பதில் என்ன பயன். BP, கொலஸ்ட்ரால், மேலதிகாரி என எல்லாம் ஏறி நாம் நொந்து போவதில் என்ன பயன்?


"அடுத்த முறை எல்லா வேலையையும் சீக்கிரமாவே முடிச்சிடணும்" என்ற 'பிரசவ கால வைராக்கியம்' பலமுறை நமக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால் வழக்கம் போல நாம் அதை செயல்படுத்த முயற்சிக்க மாட்டோம். மீண்டும் மீண்டும் அதே தவறை செய்துவிட்டு, "ச்சே.. அடுத்த முறை சீக்கிரமாவே வேலைய முடிச்சிடணும்" என்கிற ரிப்பீட்டு தான் நமக்கு ரிவீட்டு !


சரி.. தவறு எங்கே என்று தெரிகிறது. இதிலிருந்து எப்படி மீளுவது? இதற்கு என்ன தான் தீர்வு?


உங்களை சரி செய்து கொள்ள உங்களால் மட்டுமே முடியும். எப்படி?


'இன்று எந்த வேலையையும் தள்ளிப் போட மாட்டேன்' என்று திடமாக முடிவெடுங்கள். அதை நடைமுறைப்படுத்த முடியாமல் தடங்கல்கள் வரும். மனது அலைபாயும். விடாதீர்கள். அன்றைய வேலைகளை அன்றே முடியுங்கள். அன்று உங்கள் மீது உங்களுக்கு லேசான நம்பிக்கை பிறக்கும்அதைத் தொடர விடாமல், நண்பர்கள், குடும்பத்தினர், டிவி, பேப்பர், செல்போன், இணையதளங்கள், சினிமா போஸ்டர் என பலவிதங்களில் உங்களை பலவீனப்படுத்த முயற்சிகள் நடக்கும். ம்ஹூம்.. விடாதீர்கள்.


ஒரு முறை, இரு முறை, மூன்று முறை.. என்று தொடர்ந்து சில முறை 'தள்ளிப் போடும்' மனநிலையை தள்ளிப் போடுங்கள். வேலையை குறித்த நேரத்திலோ அல்லது அதற்கு முன்பாகவோ செய்து முடித்துவிடுங்கள். வேலை முடிந்ததும் மனதில் எழும் சந்தோஷத்தை, திருப்தியை நன்றாக அனுபவியுங்கள். அதற்காக உங்களுக்கு நீங்களே பார்ட்டி வைத்துக் கொள்ளுங்கள்..!


அடுத்தவருக்காக அல்ல, உங்களுக்காக நீங்கள் இதைச் செய்து பாருங்கள். வாழ்க்கை ஒரு ஒழுங்குக்குள் வரும். வேலைகளில் முனைப்பு கூடும். உங்கள் தனித்தன்மை அதில் பளிச்சிடும். உங்கள் மீது உங்களுக்கே மரியாதை வரும். அதன் பிறகு, நீங்கள் எந்த வேலையையும் தள்ளிப் போட மாட்டீர்கள். தள்ளிப் போட உங்கள் மனம் அனுமதிக்காது. அதன் ருசி உங்களை விடாது!


உங்கள் மாற்றம் அடுத்தவரையும் மாற வைக்கும்; உற்சாகப்படுத்தும். நிறைய நேரம் மிச்சமாகும். வேலைகள் தடையில்லாமல் நடக்கும்.


வேலை பார்க்கும் இடம் இதமானால், வாழ்வில் நாம் அடுத்த கட்டத்திற்கு நகர வாய்ப்பு கூடும். முன்னேற்றம் தரும் சந்தோஷத்துக்கு  ஈடு உண்டா என்ன..!

 

By பிரிட்டோ

Vikatan.com