Friday, July 8, 2011

தாம்பத்தியம் - 20

தாம்பத்தியம் - 20


முந்தைய பதிவில் பெண்கள் சம்பந்த பட்ட உச்சகட்டம் என்ன என்பதை பற்றி சிறிது சொல்லி  இருந்தேன். பதிவை பற்றி வந்த மெயில்களில் பல சந்தேகங்களை கேட்டு இருந்தனர், இதனை பற்றி இவ்வளவு சந்தேகங்களா என்று ஆச்சரியம் வரவில்லை மாறாக ஏன் இப்படி தெளிவில்லாமல் இருக்கிறோம் என்ற ஒரு ஆதங்கம் தான் இருக்கிறது. படித்த கணவன்  மனைவிக்கு இடையில் கூட இதனை பற்றிய தெளிவு இல்லை என்பதை என்னவென்று சொல்வது...?! எது பரவச நிலை என்பது தெரியாமல் அல்லது உணராமல் இருக்கும் போது, தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாட்டுக்கு காரணம் எந்த புள்ளியில் தொடங்கியது என்பதை எப்படி புரிந்து கொள்ளமுடியும்....?? 

திருமணம் முடித்தோம், பிள்ளை பெற்றோம், பள்ளிக்கு அனுப்பினோம், சம்பாதிக்கிறோம், பேங்க்கில் (Bank Balance)  சேமிப்பை அதிகரித்தோம் என்று வாழ்வது எப்படி ஒரு நிறைவான வாழ்வாகும்...?? கடைசிவரை ஒன்றாக எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் சுகமாக ஒருவருக்கு ஒருவர் அன்பாக வாழ்ந்து முடிப்பது தானே ஒரு நிறைவான வாழ்க்கையாகும்...!! அப்படி வாழ்கின்ற பெற்றோர்களால் தான் இந்த சமூகத்திற்கு சிறந்த சந்ததியினரை விட்டு செல்ல முடியும்.      

ஒரு பெண்  தான் விரும்பியதை சொல்ல கூடாது மீறி சொன்னால் அவளது அடிப்படை வளர்ப்பின் மீதே சந்தேகம் வர கூடிய அளவிற்கு தான் நம் கலாசார கணிப்பு இருக்கிறது....!!? ஆனால் நம் கலாசாரம்  என்றோ மாற தொடங்கி விட்டது பல விசயங்களில்...?! இன்னும் மாறி கொண்டிருக்கிறது...இல்லை மாற்றிக் கொண்டிருக்கிறோம்....! மாறும் காலத்திற்கு ஏற்ற  மாதிரி கணவனும் தன் மனைவியின் விருப்பம்  என்ன என்று தெரிந்து அதற்கு மதிப்பு கொடுக்கும் நிலை வர வேண்டும்...கட்டாயம் வந்துதான் ஆக வேண்டும் இந்த அந்தரங்க விசயத்தில்...! கணவன், மனைவி இருவருமே ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் இது வெறும் உடல் சார்ந்தது என்பது மட்டும் இல்லை.  உடல், மனம் இரண்டுக்குமான ஆரோக்கியம் இதை வைத்துதான் இருக்கிறது.  

ஆணின் ஆசை விரைவில் அடங்கிவிடும் பெண்ணின் ஆசை தொடர்ந்து வரும் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஆண் தனது தேவை முடிந்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தூங்கிவிடுவான். ஆனால் அவனுக்கு தெரியாது அதற்கு  பிறகு தான் அந்த மனைவிக்கு கணவனின் அணைப்பு தேவைப்படும் என்று ,  இதை உணர்ந்த கணவர்களின் எண்ணிக்கை மிக சொற்பம் தான்...!?  இந்த மாதிரியான சிறிய அளவிலான ஒரு அணைப்பு கூட மறுக்கப்படும்போது தான், இயலாமையால் மனதிற்குள் புழுங்க தொடங்குகிறாள். இதற்கு ஆண்களையும்  குறை சொல்ல முடியாது அவர்களின் உடல் அமைப்பு அப்படி....! அதனால் மனைவியை முதலில் திருப்தி அடைய வைத்துவிட்டு பின்னர் ஆண்  தங்கள் தேவையை கவனிப்பது ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

கணவன் மனைவி உறவில் முழு திருப்தி அடையாதவர்கள்  நிச்சயமாக மன அழுத்தத்தில் விழுவார்கள். சமீப காலமாக ஒவ்வொருவரும் தங்களது சந்தோசம் தங்களது நிம்மதி என்று பிரித்து சுயநலமாக வாழ தொடங்கிவிட்டார்கள். வாழும் காலம் குறைவுதான் என்பது போலவும் அதற்குள் அனைத்தையும்  அனுபவித்து விட வேண்டும் என்ற குறுகிய எண்ணங்கள்  பெருகி விட்டன. இந்த மாதிரியான சூழ்நிலைகள் ஏற்பட போய் தன் மனதை ஒரு நிலைபடுத்த என்று யோக நிலையங்களும், தியானம் செய்யுங்கள் என்ற போதனைகளும் அதிகரித்துவிட்டன. இயன்றவர்கள் மன நல  மருத்துவரை நாடுகின்றனர். 'கவுன்செலிங்' என்ற வார்த்தைகூட இப்போது நாகரீகமான வார்த்தையாக மாறிவிட்டது.  மனதை தடுமாற செய்ய கூடிய காரணிகள் அதிகம் இருக்கிறது என்பதை அறிந்ததால்தான் 'மனதை ஒரு நிலை படுத்துங்கள்' என்ற கோஷமும் வலுக்கிறது...வேறு சிலரோ ஆன்மீகத்தை நோக்கி சென்று தங்களை காத்து கொள்ள போராடுகின்றனர்.  

திருமணம் முடிந்தவர்கள் இல்லறத்தை நல்லறமாக மாற்ற அந்தரங்கத்தை அவசியமானதாக எண்ணுங்கள். அதற்கு தேவையான நேரத்தை ஒதுக்குங்கள் உறவையும் முழுமையாக நிறைவேற்றுங்கள்..அந்த நேரம் முழுவதும்  உங்களுக்கான  நேரம் என்பதை மறவாதீர்கள். அந்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் பெற கூடிய உற்சாகம் பல மடங்காய் அதிகரித்து தொடரும் நாட்களில் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதை  உணருவீர்கள். இந்த உறவு சரியாக இருக்கும் பட்சத்தில்,  தேவை இல்லை யோகாவும், தியானமும் இதைவிட சிறந்த உடற்பயிற்சியும் வேறில்லை....என்று நான் சொல்லவில்லை மருத்துவர்கள் சொல்கிறார்கள் .

உறவு என்ன என்று தெரியவைக்க இப்போது மீடியாக்கள் முக்கியமாக இணையம் இருக்கிறது. ஆண்கள் மட்டும் தான் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று சொல்ல இயலாது கணவன் மூலமாக அல்லது காதலன் மூலமாக சில பெண்களும் தெரிந்து வைத்திருக்கலாம். இந்த பட்சத்தில் மன அளவில், உடல் அளவில் அதை உணர , அனுபவிக்க விரும்புவது  இயல்புதான். முறையாக கிடைக்க வேண்டிய ஒன்று முறையற்ற  விதத்திலாவது கிடைத்துதானே ஆகும், அதுதானே நியதி....?! சந்தர்ப்பம் வாய்த்தவர்கள்  பெறுகிறார்கள், முடியாதவர்கள் மருகுகிறார்கள். மற்றபடி  மனதை சமாதானப்படுத்திக்   கொண்டு வாழ்கிறார்கள் என்பது குறிப்பிட்ட அளவு வரை தான். (இந்த அளவு நல்ல குடும்ப உறவில் இருப்பவர்களை குறிப்பிடாது.)

கணவர்களின் புரிதலுக்காக

குழந்தை பெற்று தர வேண்டும், ஆணின் சந்தோசத்திற்கு என்று மட்டும் எண்ணாமல் அவளது உணர்வுகளுக்கும் ஒரு வடிகாலாய் அந்த பெண்ணின் கணவன் இருந்தாக வேண்டும். கணவனால் முழு  இன்பம் கிடைக்க பெறாதவர்கள் அல்லது அந்த உச்சகட்டம் என்ற நிலையை அறியாதவர்கள் தான் வெகு சுலபமாக தவறான உறவில் விழுகிறார்கள். ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்பு கொள்ள நேரிடும் போது அந்த ஆண் முதலில் இந்த பெண்ணை தனது பிடிக்குள் அல்லது கட்டுபாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தான் விரும்புவான். முழுவதுமாக அவள் மனதை தானே ஆக்கிரமிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவன் கையாளும் முக்கியமான ஒன்று தான் இந்த கிளைமாக்ஸ் உணர்வை அந்த பெண்ணை அடைய செய்வது. ஒரு முறை இதை உணர்ந்த பெண் (தனது கணவனால் கிடைக்காத அல்லது இதுவரை சரியாக உணராத அந்த ஒன்றை ) இவன் தன்னை எவ்வளவு சந்தோசமாக வைத்திருக்கிறான் என்று எண்ணி முழுவதுமாக புதியவனை விரும்ப தொடங்கி விடுகிறாள். (தவறுகள் தெய்வீகமாகி விடுகின்றன....!?) 

மனைவியரின்  புரிதலுக்காக

ஆண் மட்டுமே இயங்க வேண்டும் என்பதுதான் இந்திய பெண்களின் மனோபாவம் !? ஆனால் இந்த மனோபாவம் சிறிது மாற வேண்டும். மனைவியரும் தங்கள் கணவனின் விருப்பம் அறிந்து நடந்து கொண்டால் நன்றாக இருக்கும். (இதை பற்றி ஏற்கனவே முந்தைய பல பதிவுகளிலசொல்லி விட்டேன்)   வீட்டில் கிடைக்காத ஏதோ ஒன்று (மனம்  அல்லது உடல்  சம்பந்த பட்டதாக இருக்கலாம்) வெளியே  கிடைக்கிறது என்று தான் பல நல்ல கணவர்களும் தவறுகிறார்கள்....அது என்னவென்று அறிந்து சரி செய்து கொள்ளவேண்டியது அந்த மனைவியின் கடமைதான். ஒரு முறை தவற விட்டுவிட்டால் திரும்ப பெறுவது மிக கடினம் என்பதை பெண்கள் (மனைவியர் ) மறந்து விட கூடாது. 

பெண்கள் நடுத்தர வயதை கடந்தாலும் இன்னும்  சொல்ல போனால் மெனோபாஸ் நிலை வந்த பின்னரும் கூட உறவில் முழுமையாக ஈடுபட முடியும். பெண்களின் (மனைவியரின்) ஒத்துழைப்பு கிடைக்காததால் தான் நடுத்தர வயதை தாண்டிய பல ஆண்களும் தவறான வேறு வழிகளை எண்ண தொடங்குகிறார்கள்.

அதிலும் பெண்களின் முழு ஒத்துழைப்பும் இருந்தால் தான் இருவருமே உச்சகட்டத்தை அடைய முடியும் என்பதை பெண்கள் மறந்து விட கூடாது. உடலும்  மனமும் இணைந்து
ஈடுபடும் போது தான் பெண்களுக்கும் இன்பம் அதிகரிக்கிறது.

ஒரு கருத்து

கணவன், மனைவி  இருவரும் பொதுவான ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தவறு செய்யும் யாரும் கணவன்/மனைவி பிடிக்க வில்லை என்பதற்காக மற்றொரு உறவை ஏற்படுத்திக்  கொள்வதில்லை.....'வேறொரு நபரையும் பிடித்து இருக்கிறது' என்பதற்காகத்  தான் தவறுகிறார்கள்....??!! 

கணவன் அல்லது மனைவி பாதை தவறுவது எதனால்.....??!

எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் சொல்ல இயலாது ஆனால் பொதுவாக சில காரணங்களை கூற முடியும் அதில் முக்கியமான ஒன்று....


ஒருத்தருக்கு மற்றொருவர் மீதான அதிகபடியான பொசசிவ்னெஸ் என்கிற அதீத அன்பு (தமிழில் அர்த்தம் சரியா என்று  தெரியவில்லை மன்னிக்கவும்) ....!!


* ஒருவர் மீது ஒருவருக்கு அதிகபடியான காதல் இருப்பது எப்படி தவறாகும்....?

* அதீத அன்பு எப்படி பாதை மாற காரணம் ஆகும்....??

இப்படி நீங்கள் யோசிக்கலாம். ஆனால் உண்மைதான்...அது எப்படி என்று அடுத்த பதிவில் பாப்போம்....