Saturday, July 2, 2011

பள்ளிக்குழந்தைகளுக்கு ஜீரணக்கோளாறுகள்‏

பள்ளிக்குழந்தைகளுக்கு ஜீரணக்கோளாறுகள்


பள்ளிக் குழந்தைகள் பெரும்பாலும் ஜீரணக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கான காரணத்தையும் நிவாரணத்தையும் இங்கே காணலாம்


காலை உணவு கட்டாயம்


பள்ளி செல்லும் நிறைய குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். அல்லது அவசர அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். இந்த இரண்டுமே அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.


காலை உணவுதான் அந்த நாள் முழுவதும் உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. மூளையும், உடலும் சிறப்பாக இயங்க உதவுகிறது. எனவே காலை உணவைத் தவிர்க்கக்கூடாது. காலை உணவு சாப்பிடாவிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.


பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும்பாலும் 6 முதல் 7 மணிக்குள்ளாக காலை உணவை சாப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த நேரத்தில் வயிறு பசிப்பதில்லை என்று குழந்தைகள் சாப்பிடாமல் செல்கிறார்கள். பெற்றோரும் குழந்தை சாப்பிட மறுக்கிறது என்று நினைத்து அவர்கள் சாப்பிடாமல் சென்றாலும் கண்டு கொள்வதில்லை.


உண்மையில் உடலானது குறிப்பிட்ட நேரத்துக்கு பசிக்கத் தொடங்கும். அதேபோல குறிப்பிட்ட நேரத்தில் உணவு கொடுத்து பழக்கம் ஏற்படுத்திவிட்டால் சில நாட்களில் அதே நேரத்தில் பசிக்கத் தொடங்கிவிடும். எனவே குழந்தைகள் காலையில் சாப்பிட மறுத்தாலும் சில நாட்களுக்கு பழக்கம் வருவதற்காக கட்டாயமாக சாப்பிட வைத்தால் பிறகு தானாகவே காலை 7 மணிக்குள் வயிறு பசிக்கத் தொடங்கிவிடும். சாப்பிடத் தொடங்கி விடுவார்கள்.


நிதானமாக சாப்பிடுதல்


காலையில் ஏதாவது `ஹார்ன்' சத்தம் கேட்டாலே பள்ளி பஸ் வந்துவிட்டதோ என்று எண்ணும் குழந்தைகளும், பெற்றோரும் ஏராளம். அதனால் அவசரம் அவசரமாக சாப்பிட்டு விட்டு பள்ளி வாகனத்தைப் பிடிக்க கிளம்பிவிடுகிறார்கள்.


அவசர கோலத்தில் சாப்பிடுவது அஜீரணத்திற்கு காரணமாகிறது. உணவை நன்கு மென்று நிதானமாக சாப்பிடும்போதுதான் ஜீரணம் எளிதாக நடைபெறுகிறது. உணவானது உமிழ் நீருடன் சேர்க்கப்பட்டு பற்களால் அரைக்கப்படுவதுதான் ஜீரண பணியின் தொடக்கம். மீதி செரிமானம்தான் வயிற்றில் நடைபெறுகிறது. அப்படி இருக்கும்போது வேக வேகமாக சாப்பிடுவதால் எளிதில் அஜீரணம் தொற்றிக் கொள்கிறது.


செலியாக் நோய்


அஜீரணத்தை உருவாக்கும் ஒரு நோய் செலியாக். கோதுமை மற்றும் கோதுமை உணவுகள், பால் மற்றும் பால் உணவுகளில் `குளூட்டன்' என்ற புரதம் இருக்கிறது. இது ஜீரண பிரச்சினையை உருவாக்கும் புரதமாகும். இந்த புரதத்தால் உருவாகும் நோய் `செலியாக்' எனப்படுகிறது.

இதன் அறிகுறிகளாக அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். மலம் கெட்டவாடை வீசும். வயிறு உப்புசம் உருவாகும். இவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தைகளின் வளர்ச்சி தடைபடும். உடல் எடை குறையும். இந்தப் பிரச்சினையை தவிர்க்க அந்த புரதம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

வயிற்றுப்போக்கு

அஜீரணத்தால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. உணவு சாப்பிடும் பழக்கம் மற்றும் சீதோஷ்ண நிலை மாறுபாடு ஆகியவை வயிற்றுப்போக்கிற்கு காரணமாகிறது. கோடைகாலங்களில் அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. கோடையில் சுத்தம், சுகாதாரமற்ற பழச்சாறு, பானங்கள் பருகுவது, சுகாதாரமற்ற உணவுகளைச் சாப்பிடுவது போன்றவை வயிற்றுப்போக்கை உருவாக்குகிறது.

பால் மற்றும் பால் உணவுப் பொருட்கள் சில குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். பாரம்பரியமாகவே சில குழந்தைகளுக்கு பால் பிடிக்காது. அவர்கள் பசும்பால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக அவர்களுக்கு சோயா பால் கொடுக்கலாம். இப்படி பால் ஒத்துக் கொள்ளாத பிரச்சினையை `லாக்டோஸ் இன்டால ரன்ஸ்' என்று குறிப்பிடுவார்கள்.

வயிற்று வலி

நாம் பொதுவாக வயிற்றில் எங்கு வலித்தாலும் வயிற்று வலி என்று சொல்கிறோம். ஆனால் வயிற்றின் ஒவ்வொரு பாகத்தில் ஏற்படும் வலிக்கும் வேறுவேறு காரணங்கள் உண்டு. அதிக பசியாலும், வயிற்று எரிச்சலாலும் தொப்புள் பகுதிக்கு மேல்புறமாக வலிக்கும். காலை உணவு சாப்பிடாவிட்டாலும், அதிக காரம் உள்ள உணவுகளை சாப்பிடு பவர்களுக்கும் மேற்கண்டதுபோலவே வலி ஏற்படும்.

அஜீரண கோளாறாலும் வயிற்று வலி ஏற்படும். பயறு, கோஸ், பீன்ஸ் போன்ற உணவுகள் நைட்ரஜன் சத்து அதிகம் கொண்டவை. இவை அஜீரணத்தை ஏற்படுத்தும்.

காரம் அதிகம் உள்ள உணவுகளை குறைத்துக் கொண்டு, வாயு தொந்தரவு தரும் உணவுகளை தவிர்த்தால் வயிற்று வலியை தவிர்க்கலாம். அஜீரணத்தை தடுக்கலாம்.

துரித உணவுகள்

குழந்தைகளுக்கு பசியின்மை இப்போது அதிகமாக உள்ளது. காய்ச்சல் இருக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக பசிக்காது. அதேபோல `ஜங் புட்' எனப்படும் உணவுகளை சாப்பிடும் குழந்தைகளுக்கும் அதிகம் பசி வராது. துரித உணவுகள் எளிதில் வயிற்றை நிரப்பிவிடும். எனவே வழக்கமாக சாப்பிடும் நேரத்தில் சாப்பிட முடியாது. மேலும் ஜீரணத்தை சிதைத்துவிடும். எனவே அஜீரணம் ஏற்படுகிறது.

குழந்தை பசியின்மையாக இருந்தால் பிரச்சினைக்கான காரணத்தை தெரிந்து சரி செய்யப் பாருங்கள். உங்களுக்கு காரணம் தெரியாவிட்டால் மருத்துவரை அணுகுங்கள்.

பெரும்பாலும் குழந்தைகளை அடிக்கடி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட்டு பழக்கப்படுத்தாதீர்கள். அவர்கள் அந்த உணவின் ருசிக்கு அடிமைப்பட்டுப் போய்விடுவார் கள். அதனால் வீட்டில் எவ்வளவு ருசியாக உணவு சமைத்தாலும் அதை விரும்பமாட்டார் கள். எனவே எப்போதாவது ஓட்டல் உணவு, எப்போதுமே வீட்டு உணவு என்று பழக்கப் படுத்துங்கள்.

தண்ணீர்

தண்ணீர் பருகுவது பலவித பிரச்சினைகளை தடுக்கும். போதுமான தண்ணீர் பருகா விட்டால் ஜீரணம் பாதிக்கும். ஜீரணம் சரியாக இல்லாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படும். மலச்சிக்கல் அதிகரித்தால் மலத்தோடு கோடுபோல ரத்தம் வெளியேறும். இது மல துவாரத் தின் கீழ்ப்பகுதி கிழிவதால் ஏற்படுகிறது. இதனால் `ஆனல் பிஷர்' நோய் உண்டாகும்.

தண்ணீர் அதிகம் குடிக்காமல் சாப்பிடுவது, பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடு வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளை தினமும் குறிப்பிட்ட நேரத்தில் `டாய்லெட்' செல்லப் பழக்க வேண்டும். பழங்கள், நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிகம் சாப்பிட வைக்க வேண்டும்.