நடக்குமோ நடக்காதோ என்ற அரைகுறை நம்பிக்கையுடன் கோயிலுக்குப் போனால் நாம் வேண்டுவது நடக்கவே நடக்காது. பக்தியின் அடிப்படையே அதீத நம்பிக்கை தான். ஒரு சிவபக்தனுக்கு மகன் ஒருவன் இருந்தான். அவன் தீராத நோயால் கஷ்டப்பட்டான். எவ்வளவோ வைத்தியம் செய்தாயிற்று. பணமும் கரைந்துவிட்டது. இனி வைத்தியம் செய்ய வழியும் இல்லை. தன் மகன் பிழைக்க வேண்டுமென சிவனிடம் தினமும் பிரார்த்தனை செய்வான் பக்தன். சிவனே! உன்னை நினைக்காத நாளில்லை. பாடாத நாளில்லை, என் மகனுக்கு ஏதாவது ஒன்று என்றால், அதனால் எனக்கு அவமானமல்ல. இவ்வளவு காலமும் சிவனிடம் பக்தி செலுத்தினாயே. அந்த பக்தி என்னாயிற்று என யாராவது என்னைக் கேலி செய்தால், அந்தக் கேலி என்னைப் பாதிக்காது. அவர்கள் உன்னைத்தான் கேலி செய்கிறார்கள் என அர்த்தம், என கண்ணீர் வடித்தான். ஒருநாள் ஒரு துறவி வந்தார். அவரிடம், சாமி! என் மகன் பிழைக்க வழி சொல்லுங்கள். கடவுள் கண் திறப்பாரா? என்றான்.
துறவி அமைதியாக, மகனே! திக்கற்றவர்க்கு தெய்வமே துணை. உன் பக்தி உன் மகனை நிச்சயம் காப்பாற்றும். ஆனால், அதற்கும் தெய்வத்தின் கருணை வேண்டும். சில நிபந்தனைகளின் பேரில் உன் மகன் பிழைப்பான், என்றார். அது என்ன? எத்தகைய நிபந்தனை ஆயினும், கடவுளிடம் போராடி பலன் பெறுவேன், என்றான் பக்தன். உன் மகன் பிழைக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.சுவாதி நட்சத்திரத்தன்று மழை பெய்ய வேண்டும். அந்த மழைத்துளிகள் உன் பார்வையில் படும்படியாக ஒரு மண்டையோட்டில் விழ வேண்டும். அதை ஒரு தவளை தாண்ட வேண்டும். அந்தத் தவளையை ஒரு பாம்பு விரட்ட வேண்டும். அப்போது அதன் விஷம் மண்டையோட்டில் விழ வேண்டும். அந்த விஷநீரைக் கொண்டு சில மூலிகைகளுடன் கலந்து மருந்து தயாரித்து உன் மகனுக்கு கொடுத்தால் அவன் குணமாகி விடுவான், எனச்சொல்லி, அந்த மூலிகைகளின் பெயரையும் சொன்னார். மறுநாள் சுவாதி நட்சத்திரம். பக்தன் ஆழ்ந்த பிரார்த்தனை செய்தான். சிவனே! உன் கருணையிருந்தால் மழை பெய்யும், என்றான். மறுநாள் காலையிலேயே கடும்வெயில், ஆனாலும், நம்பிக்கை தளரவில்லை பக்தன். நீ நினைத்தால் மழை பெய்யும் என்று சிவனை வேண்டினான்.
என்ன ஆச்சரியம்! வானம் கறுத்தது. மழை பெய்தது. சுவாமி! உன் கருணையே கருணை. மண்டை ஓட்டில் மழைத்துளிகள் விழ வேண்டும் என இன்னும் உருக்கமாகப் பிரார்த்தித்தான். மழையின் வேகத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, என்றோ அவ்விடத்தில் புதைத்த பிணத்தின் மண்டையோடு வெளிப்பட்டது. அதில் தண்ணீர் துளிகள் விழுந்தன. ஆஹா! மஹானுபாவனே! ஒரு தவளை துள்ளி ஓடாதா? அதை ஒரு பாம்பு விரட்டாதா? இத்தனையும் நடந்த பிறகு, இதையும் நடக்கச்செய்வாய் தானே என மீண்டும் உருகினான் பக்தன். மழை பெய்ததால் கொண்டாட்டமான ஒரு தவளை வெளிப்பட்டு, மண்டையோட்டைத் தாண்டியது. அதை ஒரு பாம்பு விரட்டியது. தவளையை தீண்ட முயற்சித்தபோது, தவளை தப்பிவிட, அதன் விஷம் மண்டையோட்டு நீரில் விழுந்து கரைந்தது. நினைத்தது நடந்த மகிழ்ச்சியில், துறவி சொன்ன மூலிகைகளையும் கலந்து மருந்து தயாரித்து, மகனைக் காப்பாற்றினான் பக்தன்.
பக்தி நிஜமானதாக இருக்க வேண்டும். அந்தக் கடவுளே நினைத்தாலும் நடக்காது என்று இனிமேல் பேசவே கூடாது. கடவுளால் ஆகாதது ஏதுமில்லை. அதற்கு தேவை நிஜமான நம்பிக்கை.