Friday, July 8, 2011

தாம்பத்தியம் - 15

தாம்பத்தியம் - 15


அந்தரங்கம்

தாம்பத்தியம் சீர்குலைய பல காரணிகள் இருக்கிறது என்று இதுவரை பார்த்தோம், மற்றொரு முக்கியமான காரணம்  ஒன்றும் உள்ளது, அதுதான் கணவன், மனைவி இருவருக்கும் இடையிலான அந்தரங்கம். 

கடந்து போன கவலைகளிலும் வர இருக்கிற சிந்தனைகளிலும் மூழ்கி, நிகழ்கால ஆனந்தங்களை அனுபவிக்காமலேயே இருக்கிறார்கள். இதை அவர்கள் புரிந்து கொள்ளும் முன்பே இளமை முடிந்து முதுமை வந்து வாழ்க்கை அவர்களை தாண்டி  போயே விடுகிறது.

வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்க வேண்டும் என்பதை விட, சிக்கல் இல்லாமல் ஒவ்வொரு நாளையும் எப்படி ஓட்டி செல்வது என்பதே பலரது கவலையாக இருக்கிறது. 

அந்தரங்கம் என்று சொல்லிவிட்டு அதை எப்படி வெளியில் விவரமாக சொல்வது...? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் இதுதான் பல குடும்பங்கள் பிரிவதற்கு மிக மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. பல சண்டைகளின் ஆரம்ப  அடிப்படை காரணமே இதுதான் என்று என்னால் உறுதியாக கூற முடியும். என்னவொன்று கணவன், மனைவி இருவருமே இதுதான் எங்களுக்குள் பிரச்சனை என்று வெளிபடையாக சொல்வது இல்லை. 

ஒரு ஆணின் அந்தரங்கம் வீட்டில் சரியாக இருக்காத  பட்சத்தில் வெளியில் மாற்று இடம் சுலபமாக தேடிவிட முடியும் அது மற்றொரு பெண்ணை தேடும் வழி என்று சொல்லவில்லை... தங்களை நண்பர்கள், வேலை, பொழுது போக்கு என்ற விதத்தில் ரிலாக்ஸ் செய்து கொள்ளமுடியும் .   ஆனால் பெண்கள், தங்களின் ஆசை நிராசையாக போய்விட்டால் அது வார்த்தைகளில் எரிச்சலாக, கோபமாக, ஆத்திரமாக வெளிபடுகிறது. நாளடைவில் மன அழுத்தம், மனதெளிவின்மை, ரத்த அழுத்தம், தலைவலி போன்றவற்றில் கொண்டுபோய் விட்டு விடுகிறது..... ஆனால் இதுதான் பிரச்சனைக்கான சரியான  காரணம் என்று அந்த பெண்ணுக்கே சில நேரம் புரிவது இல்லை.

" பொருளாதார ஏற்றதாழ்வுகள் மற்றும் செக்ஸ் உறவு வெற்றி " இவை இரண்டும் ஒரு மனிதனின் ஆயுள் காலத்தை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றனவாம், என்பது க்ரூகர் என்பவரின் கூற்று.  ஆனால் இதனால் பெண்களை விட ஆண்கள் தான் பெரும்பாலும் பாதிக்க படுகிறார்களாம்...??!!



கல்யாணம் முடிந்தவர்களில் எத்தனை பேர்கள் முழுமையான தெளிவை இந்த விசயத்தில் பெற்று இருக்கிறார்கள்..?? மிக சொற்பமே..!!?? குடும்பத்தில்  சண்டை என்று சொல்பவர்களிடம் ஆழமாக விசாரித்து பார்த்தால் தான் தெரிகிறது...பிரச்சனையின் வேர் படுக்கை அறையில் இருக்கிறது என்பது...!!? 

வெளியில் பேசகூடாத ஒரு விசயமாக தானே இன்றும் இருக்கிறது. காரணம் நாம் வாழும் சமூதாயத்தில் இருக்கும் கட்டுபாடுகள். மற்றவர்களுடன் பேச கூடாத ஒரு அருவருப்பான ஒன்றாகத்தான் பார்க்கபடுகிறது.  கட்டுபாடுகள் இருப்பது நல்லதுதான். ஆனால் ஆரம்ப தெளிவு கூட இல்லாமல் போய்விடுவதுதான் சோகம்.

இதனாலேயே தான் வெளியில் சொல்ல முடியாத சிக்கல்கள் குடும்பத்தில் ஏற்படுகின்றன.

துணிந்து வெளியில் சொல்லமுடியாத நிலையில் இதனை பற்றிய சந்தேகங்களும், கேள்விகளும் விடை தெரியாமல் ஒரு தொடர்கதை போல் போய் கொண்டே  இருக்கிறது. இம்மாதிரியான பதில் இல்லா கேள்விகள் பலரை  மனதளவிலும், உடலளவிலும் பயங்கரமாக பாதிக்கிறது. 

 " இதனால்  அவர்களின் வாழ்க்கை தரமே குறைந்து போக கூடிய நிலையில் தான்  இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும் " என்கிறார்கள் மருத்துவர்கள்.

முக்கியமான விஷயம்  என்னவென்றால் , பலரின், குறிப்பாக பல பெண்களின் கேள்வியே, " இதை விட வேற ஒன்றும்  முக்கியம் இல்லையா ? இது மட்டும் தான் வாழ்க்கையா? "  அப்படி உள்ளவர்களுக்கே இந்த பதிவு என்று நினைக்கிறேன். 

'அதற்காக எல்லாம்  எங்களால் நேரம் ஒதுக்க முடியாது' என்று அலட்சியமாக சொல்லும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணம், புகழ், பெயர் இவற்றை சம்பாதிக்க அவைகளின் பின்னால் ஓடவே நேரம் சரியாக இருக்கிறது. அப்படியே நேரம் கிடைத்தாலும் அந்த நேரத்தை 'தகவல் தொழில் நுட்பங்களும்', 'பொழுதுபோக்கு அம்சங்களும்' விழுங்கி விடுகின்றன.  

தனது வீட்டில் என்ன நடக்கிறது என்றே பலருக்கும் தெரிவது இல்லை. அந்த 'பொன்னான நேரத்தை' எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்ப பெற இயலாது என்பதை பலரும் உணருவதே இல்லை.  

அந்த நாலு சுவற்றுக்குள் ஒரு கணவனும் மனைவியும்  இருப்பதை பொறுத்துதான் அவர்களின் வெளி உலக நடவடிக்கை இருக்கும்.

'செக்ஸ்' என்பதின் அர்த்தம்தான் என்ன ??

உடலுறவு என்பது அறிவியல்/மருத்துவரீதியாக சொல்லவேண்டும் என்றால், "உடலின் பல்வேறு தசைகள், நரம்புகள், ரத்த நாளங்கள் இப்படி எல்லாம் ஒரே நேரத்தில் அதிகபடியாக வேலை செய்யும் , சக்தி விரயம் நிறைந்த ஒரு மிதமான நல்ல  உடற்பயிற்சி என்பதே".

" பொதுவாக மூளை வளர்ச்சியை பாதிக்ககூடிய சில ஹார்மோன்களின் தன்மையை மகிழ்ச்சித் தரக்கூடிய (உடலுறவு) அனுபவங்களின் மூலம் மாற்றியமைக்க முடியும் " என்கிறது பிரின்ஸ்டன் பல்கலைகழக ஆய்வாளர்களின் அறிக்கை.

'காதல் உணர்வு' என்பது ஹார்மோன் செய்யும் வேலை என்று சொல்வது உண்டு. அதன் பெயர்தான் 'ஆக்சிடோசின்'. இது பொதுவாக  பிரசவ நேரத்திலும் , உடலுறவு சமயத்திலும் அதிகமாக சுரக்க கூடியது. 'இதுதான் அடிப்படை'

இதை பற்றி அரிய அதீத ஆர்வம், இனம் புரியாத தயக்கம், ஒரு புத்துணர்ச்சி என பலவகையான உணர்வுகள் நம்மை ஆட்க்கொண்டு விடுகின்றன. 

கணவன் , மனைவிக்கு இடையில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, கோபதாபங்கள் அனைத்தும் இங்கே தான்  மறக்கப்படுகின்றன(மறக்கடிக்க படுகின்றன). 

பின்குறிப்பு

தாம்பத்தியத்தில் முக்கியமான பகுதியான இதை கொஞ்சம் விளக்கமாக விவரிக்க சொல்லி, பலர் கேட்டதின் காரணமாக பதிவு விரிவாக இருக்கும்...பதிவை பற்றிய சந்தேகங்கள்  மட்டும் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். உங்கள் பெயர் வருவதை நீங்கள் விரும்பவில்லை என்று குறிப்பிட்டால் பின்னூட்டம் பப்ளிஷ் பண்ணபட மாட்டாது என்பதை சொல்லி கொள்கிறேன்.